Monday, November 19, 2012

சிவப்பு விளக்கு கார்களுக்கு எவ்வளவு செலவு?


முன்னே தேசியக் கொடி படபடக்க... முகப்பில் சிவப்பு விளக்கு சுழல... பரிவாரங்கள் புடைசூழ... காக்கிகள் சல்யூட் அடிக்க... வெள்ளைக் கார்களில் வலம் வரும் அமைச்சர்களைத்தானே உங்களுக்குத் தெரியும்? இந்த அதிகார வர்க்கத்தைச் சுமந்து செல்லும் சிவப்பு விளக்கு கார்களுக்காகக் கொட்டப்பட்ட கோடிகள் எவ்வளவு தெரியுமா? 
சீனியர், ஜூனியர், ஸ்பெஷல், பொலிடிக்கல் என பி.ஏ-கள், தனிப் பாதுகாப்பு அதிகாரி, எஸ்கார்டு, சொகுசு பங்களா, ஆடம்பரப் பொருட்கள், டபேதார், எடுபிடி ஆட்கள் என்று அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள், சலுகைகள் ஏராளம். அந்த வரிசையில் அமைச்சர்கள் பயன்படுத்தும் அரசாங்க கார்களுக்குக் கொட்டப்படும் கரன்ஸிகள் கோடிகளில் புரள்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி நமக்குக் கிடைத்த தகவல்கள் இவை...  
2006 மற்றும் 2011 வகை மாடல் ஸ்கார்பியோ, இன்னோவா, சஃபாரி என மூன்று வகையான கார்களை தமிழக அமைச்சர்கள் பயன்படுத்திவருகிறார்கள். ஸ்கார்பியோ 4, இன்னோவா 14, சஃபாரி 12 என்று அமைச்சர்கள் பயன்படுத்தும் கார்களின் எண்ணிக்கை 30. 2006-ல் இரண்டு, 2008-ல் ஆறு, 2009-ல் ஏழு, 2012-ல் 15 கார்களும் அமைச்சர்களுக்காக வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த கார்களின் மொத்த மதிப்பு  2.45 கோடி.
இந்த சிவப்பு விளக்கு கார்களின் டிரைவர்களுக்கு, பணி மூப்பு அடிப்படையில் படிகள் எல்லாம் சேர்த்து  25 ஆயிரம் வரையில் மாதச் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் அரசு ஓட்டுனர்கள் தவிர, தனியார் டிரைவர்களும் உண்டு. இப்போது 28 அரசு டிரைவர்களும் 31 வெளி ஆட்களும் அமைச்சர்​களுக்காக கார் ஓட்டுகிறார்கள். முந்தைய தி.மு.க. ஆட்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்காக  53 அரசு டிரைவர்களும் 38 வெளி டிரைவர்களும் பணியாற்றினார்கள். இந்த டிரைவர்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகை  9.25 கோடி. அதற்கு முந்தைய 2001 - 2006 அ.தி.மு.க. ஆட்சியில் அரசு டிரைவர்கள் 39 பேர் உட்பட 61 டிரைவர்கள் பணியாற்றினார்கள். இவர்களுக்கு  3.22 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது.
அடுத்து எரிபொருள். பெட்ரோலோ அல்லது டீசலோ... அமைச்சர் காருக்கு மாதம் ஒன்றுக்கு 360 லிட்டர் எரிபொருள் வழங்கப்படுகிறது.  கார்களின் பராமரிப்புக்கு என மாதம்தோறும் சுமார்  71 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் எரிபொருள் மற்றும் பராமரிப்புக்குச் செலவழிக்கப்பட்ட தொகை,  3.21 கோடி. 2001 - 2006 அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் கார்களுக்கு எரிபொருள் மற்றும் பராமரிப்புக்குச் செலவான தொகை  2.36 கோடி.
2011 மே மாதம் ஆட்சிக்கு வந்த இன்றைய அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு இதுவரையில்
எரி​பொருளுக்கு  71.64 லட்சமும் பராமரிப்புக்கு  21.07 லட்சமும் செலவிடப்பட்டு உள்ளது.
அமைச்சர் கார்களை அரசின் பொதுத் துறைதான் கவனிக்கிறது. ஆரம்பத்தில் அம்பாசிடர் கார்களைத்தான் அமைச்சர்கள் பயன்படுத்தி​வந்தார்கள். சொகுசு கார்கள் வரத் தொடங்கிய பிறகு அமைச்சர்களுக்கும் அந்தக் கார்களை வாங்க ஆரம்பித்தது அரசு. 2001-ம் ஆண்டில் இருந்து இப்போது வரையில் 12 அம்பாசிடர், 14 ஸ்கார்பியோ, 14 சஃபாரி, 12 இன்னோவா உட்பட மொத்தமாக 85 கார்கள் அமைச்சர்களுக்காக வாங்கப்பட்டு இருக்கின்றன. அமைச்சர்கள் பயன்படுத்திய பழைய அம்பாசிடர் கார்கள் பலவும் பயனற்றுப் போய்விட்டன. ஒரு சில கார்களை மட்டும் கீழ்நிலை அதிகாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில்  12.46 கோடியும் அதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில்  5.59 கோடியும் கார்களுக்காக அரசு செலவழித்து இருக்கிறது. இதுதவிர கார்கள் வாங்கிய வகையில் செலவான உதிரி தொகை  2.45 கோடி. ஒட்டு​மொத்தமாகப் பார்த்தால்,  20.51 கோடி கடந்த 10 ஆண்டுகளில் செலவாகி இருக்கிறது.
ஏழை நாடு என்று நாம்தான் சொல்லிக்​கொள்கிறோம்.

No comments:

Post a Comment