இளையராஜா மட்டும்தான் கம்போஸர்’ என்றதால் பிரச்சனையா? - யுவன் சங்கர் ராஜா பேட்டி
தினம் தினம் காதலில் விழுகிறேன் !
க.நாகப்பன்
இசை ராஜாவின் இளைய ராஜா, இன்றைய சினிமாவின் மினி மேஸ்ட்ரோ.
''பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்தைக் கனவு கண்டீங்களா?''
''எனக்கு இசை ஆர்வம் உண்டு. ஆனா, நான் இசையமைப்பாளர் ஆகணும்னு நினைச்சதே இல்லை. பைலட் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். 'கடவுளுக்குப் பாட்டு கேட்கப் பிடிக்கும். இசை மூலமா கடவுளைத் தரிசிக்கலாம்’னு அப்பா சொல்வார். அப்படித்தான் கடவுளுக்கு என்னைப் பிடிச்சு இந்த இடத்துக்குக் கொண்டுவந்திருக்கார்னு தோணுது.
'பில்லா 2’ ஆல்பம் வந்தப்போ, 'யுவனோட 100-வது படம்’னு ட்விட்டர்ல கமென்ட் போட்டாங்க. அது வரை எத்தனை படங்கள் பண்ணியிருக்கேன்னு எனக்கே தெரியாது. எண்ணிப் பார்த்துடலாம்னு உக்காந்தப்பதான், 'பிரியாணி’ 100-வது படம்னு தெரிஞ்சது. அப்பா 1,000 படங்கள் தாண்டியிருக்கார். அவர் மகனா நான் 100 படங்கள் பண்ணினது சந்தோஷம். ஆனா, இன்னும் ரொம்ப தூரம் கடக்கணும். இத்தனை வருஷத்துல ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விஷயம் கத்துட்டே இருக்கேன்.
எவ்வளவு நண்பர்கள் நான் வளரணும்னு நினைக்கிறாங்களோ, அதைவிட அதிகம் பேர் என் வளர்ச்சியில் பொறாமைப்படவும் செய்றாங்க. அவங்ககிட்ட இருந்து எப்படித் தப்பிக்கணும், விலகி இருக்கணும்னு கத்துக்கிட்டேன்!''
''ஆனா, இசையமைப்பாளர்கள்ல உங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்தானே ரொம்பப் பெரிசு?''
''ஆமாம். அது எனக்குப் பிடிக்கும். எப்பவும் என் ஃப்ரெண்ட்ஷிப் சர்க்கிள் பெருசா இருக்கணும். சந்திக்கிற எல்லா மனிதர்களையும் ஃப்ரெண்ட் ஆக்கிக்கணும்னு ஆசைப்படுவேன்.
இதனாலயே 'எனக்கு இவ்ளோ தெரியும், இவ்ளோ அனுபவம் இருக்கு’னு எந்தப் புது இயக்குநர்கிட்டயும் என்னை வெளிப்படுத்திக்க மாட்டேன். ஒருத்தர் கஷ்டப்படும்போது நாம உதவுனா, நாம கஷ்டப்படும்போது அவங்க உதவுவாங்கன்னு நம்புறேன். எனக்கு எல்லாருமே வேணும்!''
''அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ்னு எல்லார்கூடவும் ஒரே நேரத்துல எப்படி ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்க முடியுது?''
''ஒவ்வொருத்தர் நட்புக்கும் உண்மையா இருப்பேன். அஜித் பெர்சனலாப் பழகுறதுக்கு அவ்ளோ நல்ல மனுஷன். எதுவா இருந்தாலும் வெளிப்படையாப் பேசுவார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப் பழகுவார். ஹெலிகாப்டர் பத்தி டெக்னிக்கலா நாள் முழுக்கப் பேசிட்டே இருப்பார். மினி ஹெலிகாப்டரை பார்ட் பார்ட்டாப் பிரிச்சு, திரும்ப அசெம்பிள் பண்ணுவார். நான் புதுசா வாங்கியிருந்த என் ஆஸ்டன் மார்ட்டின் காரை அவரிடம் காண்பிச்சேன். 'சூப்பர்... சூப்பர்... ஆனா, சென்னைல இதுக்கேத்த ரோட்ஸ் இல்லை’னு சிரிச்சவர், அப்புறம் அந்த காரை எப்படிப் பராமரிக்கிறதுனு டியூஷனே எடுத்தார்.
சிம்புவும் அப்படித்தான். ரொம்ப நேர்மையா இருப்பார். மனசுல பட்டதைப் பளிச்னு சொல்லிடுவார். சூர்யா, கார்த்தி, விஷ்ணுவர்தன், கிருஷ்ணா எல்லாரும் ஒரே ஸ்கூல்ல படிச்சோம். தனுஷ், செல்வா, விஷால், அமீர் எல்லாம் என் குடும்பத்தைச் சேர்ந்தவங்க மாதிரி. எந்த விஷயமும் என்னைக் கட்டுப்படுத்தாது, அன்பைத் தவிர. இந்தப் பக்குவம் என் அம்மா கத்துக்கொடுத்தது. அப்பாகிட்ட டெடிகேஷன் கத்துக்கிட்ட மாதிரி, அம்மாகிட்ட கத்துக்கிட்டது இது!''
''அஜித்தை வெச்சு ஒரு படம் தயாரிக்கிறீங்கனு சொல்றாங்களே... உண்மையா?''
''ஸ்கூல் படிக்கும்போதே நான், அண்ணன் கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு எல்லாம் வீடியோ கேமரா எடுத்துட்டு வீட்டைச் சுத்திச் சுத்தி வந்து படம் எடுப்போம். அந்த ஆசையும் ஆர்வமும் இன்னும் அடங்கலை. ஸ்க்ரிப்ட் எழுதிட்டு இருக்கேன். டைரக்ஷனும் எனக்கு வரும்னு நம்புறேன்.
சீக்கிரமே தயாரிப்பாளரா, இயக்குநரா யுவனைப் பார்க்கலாம். ஃபேன்டஸி படங்களை இப்பல்லாம் ரசிக்க மாட்டாங்கனு நினைச்சுட்டு இருந்தோம். ஆனா, 'நான் ஈ’ எல்லாத்தையும் உடைச்சு ஹிட் அடிச்சது. ஹீரோயிசம் படங்கள் தாண்டி சஸ்பென்ஸ், த்ரில்லர், ஃபேன்டஸி, மியூஸிக்கல்னு எல்லா ஜானர்லயும் படம் பண்ணலாம்னு இருக்கேன். எங்க குடும்பத்துலயே பாட்டுக்கு கங்கை அமரன் சித்தப்பா, நடிப்புக்கு பிரேம்ஜி, டைரக்ஷனுக்கு வெங்கட் பிரபு, இசைக்கு அண்ணன், நான், அக்கா, காஸ்ட்யூமுக்கு வாசுகினு நல்ல டீம் இருக்கு. இவங்களைச் சரியா பயன்படுத்தினாலே போதும். ஆனா, அஜித்தை வெச்சு நான் எதுவும் படம் எடுக்கலை!''
'' 'அப்பா மட்டும்தான் கம்போஸர்’னு சொல்லி இருக்கீங்களே? மத்தவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா?''
''அப்பா என்பதையும் தாண்டி எனக்கு இன்ஸ்பிரேஷன், ரோல் மாடல், காட்ஃபாதர் எல்லாமே அவர்தான். எல்லாருக்கும் அப்பா மேல் இருக்கும் காதலைவிட எனக்கு ஒரு துளியாச்சும் அதிகமா இருக்கும். அந்தப் பாசத்துலதான் அப்படிச்
சொன்னேன். அப்பாவைப் புரிஞ்சவங்க, என்னைத் தெரிஞ்சவங்க அதுல எதுவும் தப்பு இருக்கிறதா நினைக்க மாட்டாங்க.''
''எம்.எஸ்.வி-யுடன் இணைந்து வேலை பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கு?''
''ரொம்பப் பெரிய ஆசீர்வாதம். 'தில்லுமுல்லு’ ரீமேக் படத்துக்கு எம்.எஸ்.வி. சார் டியூன் போடுறார். நான் அதை ஒருங்கிணைக்கிறேன். என் பூரிப்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. வரம் வாங்கிட்டு வந்த மாதிரி இருக்கு!''
''மலேசியா இசை நிகழ்ச்சி, பாப் ஆல்பங்கள்னு பரபரப்பா இருக்கீங்க? சர்வதேச அங்கீகாரத்துக்கான முயற்சிகளா?''
''நூறாவது பட இசையைக் கொண்டாடணும்னு மலேசியா இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்றேன். மத்தபடி என் ஒவ்வொரு சாதனையையும் நானே முறியடிக்கணும்னு ஆசை. அதுக்காக நிறைய மெனக்கெட்டு உழைக்கிறேன். அதான் ஹாலிவுட் பட இசை, இங்கிலீஷ் ஹிப்ஹாப், சிம்புவுடன் லவ் ஆன்தெம். ஓய்வே இல்லாம, தூங்காம ஓடிட்டே இருக்கேன். இப்போ எல்லாம் படிப்பு பெரிய சுமையா இருக்கு. குழந்தைங்க ஸ்கூலுக்குப் போகப் பிடிக்கலைனு சொல்றாங்க. அவங்களோட மன அழுத்தத்தை ஜாலியா சொல்ல நினைச்சேன். அதைத்தான் 'ஃபர்ஸ்ட்டு லாஸ்ட்டு பாஸு ஃபெயிலு’னு பாட்டா எடுத்துட்டு இருக்கோம்!''
''இளம் இசையமைப்பாளர்கள்ல யார் கவனிக்கவைக்கிறாங்க?''
''ஜி.வி.பிரகாஷ், தமன், அனிருத்... மூணு பேரும் நல்லாப் பண்றாங்க. கார்ல போகும்போது எஃப்.எம்-ல நம்ம பாட்டு போடுறாங்களானு சேனல் மாத்திட்டே இருப்பேன். என் பாட்டுக்கு அடுத்து யார் பாட்டு நிறைய ப்ளே பண்றாங்கனு கவனிப்பேன். பாட்டு பிடிச்சிருந்தா, உடனே அந்த மியூஸிக் டைரக்டர்களுக்கு போன்ல வாழ்த்து சொல்லுவேன். இங்கே ஈகோ எல்லாம் கிடையாது. எல்லாருக்கும் ஸ்பேஸ் இருக்கு!''
''உங்க அளவுக்கு அண்ணன் கார்த்திக் ராஜாவுக்கு இன்னும் சரியான பிரேக் கிடைக்கலையே?''
''அவருக்கு என்னைவிட திறமை அதிகம். அப்பா மாதிரி வெறித்தனமா வேலை செய்வார். சமயங்கள்ல அவர் வேலை செய்றதைப் பார்த்து நானே மிரண்டுபோய் இருக்கேன். அண்ணன் டைரக்ஷனும் பண்ணுவான். நல்ல டீமும் இயக்குநரும் கிடைச்சா, அவன் லைஃப் கிராஃப் மாறிடும். வாழ்க்கையும் சினிமா மாதிரிதான். சிலருக்கு ஃபர்ஸ்ட் ஆஃப் நல்லா இருக்கும். சிலருக்கு செகண்ட் ஆஃப் நல்லா இருக்கும். கார்த்திக் அண்ணனுக்கு செகண்ட் ஆஃப் பிரமாதமா இருக்கும்!''
''கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?''
''இசைவசமானவனைத் தன் வசப்படுத்தத் தெரிஞ்சிருக்கு ஷில்பாவுக்கு. தினம் தினம் காதலில் விழுகிறேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!''
நன்றி - விகடன்
No comments:
Post a Comment