நமக்கு எப்போதும் நல்லதையே நினைத்துக் கொண்டு, நம்முடைய சந்தோஷத்துக்காக எத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொள்கிற அன்பு நம் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இருக்கிறதல்லவா? நாம் நல்லவர்களாக வேண்டும்; புத்திசாலிகளாக வேண்டும்; நாம் வாழ்க்கையில் நன்றாக முன்னுக்கு வர வேண்டும் என்பதுதானே நம் பெற்றோரின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது? இதற்காகவேதான் அவர்கள் சில சமயங்களில் நம்மைத் தண்டிக்கிறார்கள், கண்டிக்கிறார்கள். இதைக் கொண்டு நாம் அவர்களிடம் கோபப்படக் கூடாது.
நம்முடைய நல்லதை நினைத்தே தான் அவர்கள் கண்டிக்கிறார்கள் என்று உணர வேண்டும். அவர்கள் கோபித்துக் கொண்டாலும் அதற்குக் கூடக் காரணம் நம்மிடம் அவர்களுக்குள்ள அன்புதான். இந்த அன்பினால்தான் அவர்கள் நம்மை வளர்த்துப் படிக்க வைத்து, நமக்கு உடம்புக்கு வந்தால் இரவெல்லாம் கண் விழித்துக் கவனித்து, எல்லாக் காரியங்களும் செய்கிறார்கள். இப்பேர்ப்பட்ட அன்பு அவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், இந்த அன்பு என்ற சரக்குக்கும் மூலம் ஸ்வாமிதான். ஸ்வாமியேதான் அப்பா, அம்மா என்கிற உருவங்களில் வந்து நம்மிடம் அன்பைச் செலுத்துகிறார்.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment