அஜ்மல் கசாப்பின் கடைசி நிமிடங்கள்!
டெல்லி, மும்பை அரசு மேல்மட்ட அதிகாரிகள் கடந்த வாரம் ரொம்பவே பிஸி. 'சி- 7096' என்று குறிப்பிட்ட ஃபைல் அதிரகசியமாக பல இடங்களுக்கும் சென்றுவந்தது. அது, அஜ்மல் கசாப் ஃபைல் என்பது, அவர் தூக்கில் போடப்பட்ட பிறகுதான் மற்றவர்களுக்குத் தெரியவந்தது.
மும்பைத் தாக்குதல் தீவிரவாதி கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது நீதிமன்றம். அதன் பிறகு, பல்வேறு கட்டங்களைக் கடந்து, தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யும் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இந்தத் தகவலை கசாப்பிடம் சிறைச்சாலை அதிகாரி பக்குவமாக எடுத்துச்சொல்லி, மரண அறிவிப்பு அறிக்கையில் கையெழுத்து வாங்கினார். 'குப்'பென்று வியர்த்துக்கொட்ட, கைகள் நடுங்க அந்த வாரன்ட்டில் கையெழுத்துப் போட்டாராம் கசாப்.
அந்த நிமிடம் முதல் மரண பீதி அவர் முகத்தில் தொற்றிக்கொண்டது. அதையடுத்து, அவ்வப்போது பிதற்ற ஆரம்பித்தாராம். கடந்த நான்கு வருடங்களாக கசாப்புடன் நன்கு பழகிய சிறைச்சாலை அதிகாரிகளிடம் அவர் சொன்ன விஷயங்களின் சாராம்சம் இதுதான். 'என்னுடன் சேர்த்து 10 பேர் கடல் வழியாக படகில் மும்பைக்குள் நுழைந்தோம். அவர்கள் அனைவரும் 26/11 தாக்குதலில் இறந்துவிட்டனர். அவர்களின் உடல்களை என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. என் உடலையும் அதுபோல செய்துவிடாதீர்கள்!’ என்று கெஞ்சி இருக்கிறார்.
ஏன் என்பதற்குக் காரணம் இருக்கிறது.
மும்பையில் 2008-ம் வருடம் நவம்பர் 26-ம் தேதி திடீரென எட்டு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது ஒன்பது தீவிரவாதிகள் 60 மணி நேரத் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டார். இறந்த ஒன்பது தீவிரவாதிகளின் உடல்களை ரகசியமாக எடுத்துச் சென்று கடலில் அடக்கம் செய்துவிட்டதாக போலீஸ் சொல்கிறது. அது போலவே, தனது உடலையும் கடல் சமாதி செய்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார் கசாப். மதரீதியாக சடங்குகள் செய்யப்பட வேண்டும் என்பது அவரது விருப்பம். அப்படித்தான் நடந்தது என்று இப்போது சிலர் சொல்கிறார்கள்.
கசாப்பைத் தூக்கில் போடும் ஆபரேஷன் 'எக்ஸ்'ஸின் முதல் கட்டமாக, அவருக்கு டெங்குக் காய்ச்சல் என்று செய்தி பரப்பப்பட்டது. மின்னல் வேகத்தில் அவரின் ரத்த சாம்பிள்கள் சிறைச்சாலைக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக எந்த நேரமும் சிறைக்கு வெளியே காரில் அழைத்துச் செல்லக்கூடும் என்ற தகவலையும் கசியவிட்டனர்.
நவம்பர் 19-ம் தேதி இரவு. ஆர்தர் ரோடு சிறைச்சாலை. தூங்கப்போவதற்கு முன், கசாப் எப்போதும் பிரபல பாடகர் முகேஷ் பாடிய பாடலை தனக்கே உரித்தான குரலில் பாடுவாராம். 'நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என்னை நினைப்பதாக இருந்தால், தயவுசெய்து எனக்காக அழக் கூடாது' என்கிற பாடல் அது.
அன்றும் இந்தப் பாடலை கசாப் பாடி முடித்தவுடன், சிறைச்சாலை அதிகாரி அவரது செல் உள்ளே எட்டிப்பார்த்து, 'கசாப்... உன்னை புனேயில் இருக்கும் எரவாடா சிறைச்சாலைக்கு மாற்றும்படி மேலிடத்தில் இருந்து திடீர் உத்தரவு. அதிகாலை ரெடியாக இரு. இங்கே இருக்கும் உனது பொருட்களை விட்டுவிடு. இனி அவை உனக்குத் தேவைப்படாது' என்று சொல்லிவிட்டுப் போனார். கசாப்புக்கு நன்றாகவே தெரியும்... எரவாடா சிறைச்சாலையில் தன்னைத் தூக்கில் போடப்போகிறார்கள் என்பது.
நள்ளிரவு நேரம்...
ராணுவ ஹெலிகாப்டர் மத்திய மும்பையின் முக்கியமான இடத்தில் வந்து இறங்கியது. அதிரடித்தாக்குதலில் கில்லாடிகளான தேசியப் பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி) கமாண்டோக்கள் அதில் இருந்து குதித்தனர். மறு உத்தரவுக்காகக் காத்திருந்தனர்.
மரண பீதியில் தூங்காமல் தவித்த கசாப்பை, நள்ளிரவு நேரத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் தட்டி எழுப்பி காரில் ஏற்றினர்.
சீறிப் பாய்ந்து இருளில் மறைந்தது கார். இந்தோ-திபெத்தியன் போலீஸ் படையினரின் அணிவகுப்புத் தொடர்ந்தது. கசாப்புக்கு டெங்குக் காய்ச்சல் சிகிச்சைக்காக காரில் அழைத்துச் செல்கிறார்கள் என்ற தகவல் வெளியே கசியவிடப்பட்டது.
அதே நேரம், புனேயில் உள்ள எரவாடா சிறைச்சாலையில் ஏழு அதிகாரிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தனர். 'யாரோ ஒரு தீவிரவாதியை அழைத்துவரப் போகிறார்கள். அவரை சிறப்பு செல்லில் அடைக்கவேண்டும்' என்று சிறைச்சாலையின் உயர் அதிகாரி, சக அதிகாரிகள் ஆறு பேரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தனர். டாக்டர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள், வீடியோகிராஃபர், போட்டோகிராஃபர், நீதித் துறை அதிகாரி, புனே போலீஸ் கமிஷனர் ஆகியோர் அடுத்தடுத்து சிறைச்சாலைக்குள் வந்து சேர்ந்தனர்.
'ஒரு முக்கிய அசைன்மென்ட். நவம்பர் 21 காலை 7.45 வரை நீங்கள் யாரும் வெளியே போக முடியாது. இங்கேதான் இருக்கவேண்டும்’ என்று விவரங்களை அடுக்கினர். மேலும் அனைவரது செல்போன்களையும் வாங்கிக் கொண்டு, அசைன் மென்ட் முடிந்த பிறகு தருவதாகக் கூறினர்.
அந்த நேரத்தில், தூக்குத் தண்டனை நிறைவேற்றும் நபர் வந்து சேர்ந்தார். 'யாரை அவர் தூக்கில் போடப்போகிறார்?' என்பதைச் சொல்லாமல், ஒரு தீவிரவாதி என்று பொத்தாம்பொதுவாகச் சொன்னார்கள். இதே நேரத்தில், சிறைச்சாலை ஊழியர்கள் சிலர் ஆறு அடி நீளத்துக்கு குழி ஒன்றைத் தோண்டி இருந்தனர். சிறைச்சாலை முன்னேற்பாடுகளை டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகள் 'லைவ்'வாகப் பார்க்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது ஒருபுறம் இருக்க... கசாப்பின் குடும்பத்தினருக்கு கூரியரில் தபால் அனுப்பியது, பாகிஸ்தான் நாட்டுத் தூதரகத்துக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி உடலை வாங்கிக்கொள்வது பற்றி கருத்துக் கேட்டது போன்ற விவகாரங்களை, இந்திய வெளிவிவகாரத் துறை கனகச்சிதமாய் செய்தது.
கசாப் இருந்த கார் நேராக ஹெலிபேடுக்குச் சென்றது. அங்கே நின்ற ஹெலிகாப்டரில் கசாப் ஏற்றப்பட்டார். அங்கே இருந்து 120 கி.மீ தொலைவில் புனேயில் உள்ள எரவாடா சிறைச்சாலைக்கு அருகே ஹெலிகாப்டர் இறங்கியது. அங்கு தயாராக நின்ற காரில் கசாப் ஏற்றப்பட்டார். சிறைச்சாலை நோக்கி கார் சென்றது. சிறைச்சாலை வாசல் கதவு திறக்கப்பட்டு, உள்ளே நுழைந்தது கார். சிறப்பு செல் உள்ளே கசாப்பை அழைத்துச்சென்று அடைத்தனர். அங்கேயும், பிரபல பாடகர்கள் முகேஷ், ரஃபி இருவரும் பாடிய பாடல்களைப் பாடியபடி இருந்தார் கசாப்.
தூக்கிலிடுவதற்கு முன் மனம் வெறுத்த நிலையில், செல்லின் சுவரில் தலையை மோதியோ அல்லது வேறு வகையில் உடலில் காயம் ஏற்படுத்திக் கொண்டாலோ, அது சர்ச்சையைக் கிளப்பிவிடும் என்பதால், கசாப்பை அருகில் இருந்து கவனித்துக்கொண்டே இருந்தார் சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர். விடிய விடிய இவர் தூங்கவில்லை.
ஆனால், கசாப் தூங்கியதாகச் சொல்கிறார்கள். எரவாடி சிறைச்சாலைக்கு வந்தது முதல் கசாப்பை எந்தத் தொந்தரவும் செய்யாமல், மௌனம் காத்திருக்கிறார்கள் அதிகாரிகள். சில நேரம் ஏதோ யோசித்தபடி நடந்தாராம். சிறைச்சாலை சாப்பாடுகளை சரிவரச் சாப்பிடவில்லையாம். பசி இல்லை என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொண்டாராம். ஒரு தக்காளிப் பழம் உண்டதாகச் சொல்கிறார்கள்.
நவம்பர் 21. அதிகாலை நேரம்... கசாப்பை சிறைச்சாலை அதிகாரிகள் எழுப்பிவிட்டனர். பிரார்த்தனை செய்தார். டாக்டர்கள் உள்ளே நுழைந்தனர். அவரது உடலைப் பரிசோதித்தனர். 52.5 கிலோ எடை. ரத்த அழுத்தம் 120/80. ஆக, உடல்நிலை நார்மலாக இருப்பதாக சர்ட்டிஃபிகேட் தந்தனர். அதையடுத்து, சிறைச்சாலையில் அதிகாரி கசாப்பிடம் கடைசி ஆசை என்ன என்று விசாரித்தார். 'எதுவும் இல்லை' என்று சிம்பிளாகப் பதில் அளித்தாராம்
கசாப். அடுத்த சில நிமிடங்களில் தூக்கு மேடை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார். மேடையில் ஏற்றி நிற்கவைத்து, கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டினர். உயர் அதிகாரி சிக்னல் காட்டியதும், மேடையின் லீவர் திறக்கப்பட... ஒரே ஒரு துள்ளலுடன் அடங்கியது கசாப்பின் உயிர். 10 நிமிடங்கள் அதே கயிற்றில் தொங்கியபடி உடல் இருக்க... அதை இறக்கிப் பரிசோதித்த டாக்டர், கசாப் இறந்துவிட்டதாக அறிவித்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மதச் சடங்குகளின்படி சிறைச்சாலையின் உள்ளே அடக்கம் செய்து முடித்தனர் சிறைச்சாலை அதிகாரிகள். அதன் பிறகுதான், கசாப் எரவாடி சிறைச்சாலையில் தூக்கில் போடப்பட்டு இறந்த விஷயம் வெளி உலகுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சுமார் 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையின் முட்டை வடிவ செல், தற்போது கசாப் இல்லாமல் வெறுமையாகக் காட்சி அளிக்கிறது!
நன்றி - ஜூ வி
No comments:
Post a Comment