Wednesday, November 21, 2012

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆறு மாதங்களில் தீர்ப்பு? வந்தார் புதிய பாலகிருஷ்ணா



ஜெயலலிதாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மனிதராக இப்போது பாலகிருஷ்ணா!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விறுவிறுவென வழக்கை நடத்திவந்த நீதிபதி மல்லிகார்ஜுனையா, கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வு பெற்றார். அதன் பிறகு, இடைக்கால சிறப்பு நீதிபதியாக சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி சோமராஜு நியமனம் செய்யப்பட்டார். 'நீதிபதி சோமராஜு மிகவும் கண்டிப்பானவர்; மல்லிகார்ஜுனையா போல விட்டுப்பிடிக்க மாட்டார். மொத்தத்தில் அதிரடி ஆட்டக்காரர்’ என்று கோர்ட் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியது. அந்த சமயத்தில், 'வழக்கின் அன்மார்க்டு ஆவணங்களைப் பார்க்க வேண்டும்’ என்று, உச்ச நீதிமன்​றத்தில் மனுப்போட்டு அனுமதி வாங்கினார் சசிகலா. அதனால், ஜெட் வேகத்தில் க்ளைமாக்ஸ் நோக்கிப் பற‌ந்த வழக்கு, கடந்த இரண்டு மாதங்களாகவே மீண்டும் நொண்டி அடித்தது.

இந்த நிலையில், 'சொத்துக் குவிப்பு வழக்கை ஆறே மாதங்களில் முடிக்க வேண்டும்’ என்ற கண்டிஷனோடு நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா பெயரை டிக் செய்தது கர்நாடக உயர் நீதிமன்றம். அதற்கான அறிவிப்பை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் கிருஷ்ணா பட் கடந்த 12-ம் தேதி அறிவித்தார். ஜெயலலிதா வழக்கை மீண்டும் அதிரடி வேகத்தில் விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்றமும் கர்நாடக உயர் நீதிமன்றமும் தீவிரமாக ஆலோசனை நடத்தி, பாலகிருஷ்ணாவை நியமனம் செய்திருப்பதாக, சிறப்பு நீதிமன்ற வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

புதிதாக நியமிக்கப்பட்டு இருக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா குறித்து சிறப்பு நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தோம். ''பல்வேறு பரிந்துரைகளுக்குப் பிறகே, இவரை நீதிபதியாக நியமித்து இருக்​கிறார்கள். கர்நாடக மாநிலத்தின் தும்கூர் மாவட்டம் துருவகெரேவைச் சேர்ந்தவர் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா. கல்லூரிப் படிப்பை பெங்களூருவில் முடித்தார். ரத்ததானம் செய்வது, எய்ட்ஸ் விழிப்பு உணர்வு முகாம்களில் பங்கேற்பது, அரசுப் பள்ளி மாணவர்களைச் சந்தித்து ஆலோசனைகள் வழங்குவது என்று பொதுநல சேவையும் முற்போக்கு முகமும் கொண்டவர். இருப்​பினும் காலம், நேரம், நட்சத்திரம் போன்றவை மீது ஆழமான நம்பிக்கை கொண்டவராம். அதனால்தான், கடந்த 16-ம் தேதி வளர்​பிறை காலத்தில், சரியாக மதியம் 3.30 மணிக்கு நல்ல நேரம் பார்த்து, கையெழுத்துப் போட்டார்.

இதற்குமுன், பாலகிருஷ்ணா பணியாற்றிய‌ பெல்காம் மாவட்ட அமர்வு மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில், இவரை மிகவும் கண்டிப்பான‌வர் என்றும் நேர்மையானவர் என்றும் சொல்கிறார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன், பெங்களூரு கஸ்தூரி நகரில் உள்ள தொழிற்சாலைகளுக்கான நடுவர் நீதிமன்றத்தில் பணியாற்றினார். அப்போது அவர் விசாரித்த அத்தனை வழக்குகளிலும், மிகக்குறுகிய காலத்தில் விசாரணை நடத்தி, அதிரடித் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். சி.பி.ஐ. கோர்ட் வழக்குகளிலும் சொத்துக்குவிப்பு வழக்குகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இன்னும் ஒன்பது மாதங்களில் ஓய்வுபெறப் போகும் இவரை, 'நீண்ட காலமாக இழுத்துக்கொண்டே போகும் சொத்துக்குவிப்பு வழக்கை ஆறே மாதங்களில் முடிக்க வேண்டும்’ என்று கறாராகக் கட்டளையிட்டே உச்ச நீதிமன்றம் நியமித்தது என்றும் சொல்கிறார்கள்.

அதனால் இந்தச் சிறப்பு நீதிமன்றம், இதுவரை காணாத காட்சிகளையும் எதிர்பாராத அதிரடிகளையும் விரைவில் பார்க்கப்போகிறது. பாலகிருஷ்ணா பதவி ஏற்ற அன்றே பணியைத் தொடங்கி விட்டார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து முன்னாள் நீதிபதி மல்லிகார்ஜுனையா எழுதி வைத்து இருந்த, அனைத்து நோட்டுகளையும் கேஸ் புத்தகங்களையும் ஆழ்ந்து படித்தார். வழக்கின் சில முக்கியமான விஷயங்களை சிறப்பு நீதிமன்ற பதிவாளர் பிச்சமுத்துவிடம் விலா​வாரியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதனால், விரைவில் வழக்கை முடிப்பதற்கான முகாந்திரம் தென்படுகின்றன'' என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள்.

வழக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருப்பது குறித்து ஜெ. தரப்பு வக்கீல்களிடம் பேசியபோது, ''நாங்களா வழக்கை இழுத்தடிக்​கிறோம்? சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டவே போராடுகிறோம். நாங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முழுமையாக எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம். இறுதியில், அம்மா உள்ளிட்ட அனைவரும் குற்றம் அற்றவர்கள் என்று மாயாவதி வழக்கைப் போலவே தீர்ப்பு வரப்போகிறது'' என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே தீர்ப்பு வந்துவிட வேண்டும் என்பதில் மத்திய அரசும் தி.மு.க-வும் ஆர்வமுடன் இருக்கின்றன. ஆனால், 'இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் முட்டுக்கட்டை போட முடியும்’ என்பதே இந்தத் தரப்பினரின் ஆர்வமாக  இருப்பதால், கிடுகிடு மாற்றங்களை எதிர்பார்க்கலாம். 

No comments:

Post a Comment