Thursday, November 15, 2012

தீபாவளி நேரத்தில் கொள்ளையோ கொள்ளை! ஆம்னி பஸ் தில்லுமுல்லு!



தீபாவளி நேரத்தில் கொள்ளையோ கொள்ளை!  ஆம்னி பஸ் தில்லுமுல்லு!

ண்டிகை தினங்களில் சொந்த ஊருக்குப் போக​வேண்டும் என்பதற்காகவே, ஆண்டு முழுவதும் உழைக்கிறார்கள் மக்கள். சொந்தங்களையும் நண்பர்களையும் பார்க்கத் துடிப்பவர்களின் ஆர்வத்​தையும் தேவையையும் புரிந்துகொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள், மெகா கொள்ளையை நடத்தி​னார்கள். 
ஆம்னி பஸ்களில் கொள்ளைக் கட்டணம் வசூலிக்கப்படுவது அறிந்ததும், அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார், தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. கடந்த 9-ம் தேதி இரவு கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பஸ் நிலையத்துக்குப் போனார். ஆம்னி பஸ்ஸுக்காகக் காத்திருந்தவர்கள், பஸ்ஸுக்குள் உட்கார்ந்து இருந்தவர்கள் என்று பலரிடமும் கட்டணம் பற்றி விசாரணை நடத்தினார். அதிகக் கட்டணம் வசூலித்த 11 பஸ்களின் உரிமத்தை அந்த இடத்திலேயே ரத்துசெய்து உத்தரவு போட்டார். உரிமம் ரத்து செய்யப்​பட்ட பஸ்ஸில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, அன்று மட்டும் பஸ்கள் இயங்குவதற்கு அனுமதி கொடுத்தார்.
அமைச்சர் விசிட் பற்றி தகவல் கிடைத்ததும் ஓடி வந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம், ''தீபாவளிக்கு மக்கள் சென்று திரும்பும் வரை, தினமும் கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பும் அனைத்து பஸ்களையும் பரிசோதனை பண்ணுங்க. ஒவ்வொரு பஸ்ஸுக்கும் உரிமம் சரியாக இருக்குதா... இன்சூரன்ஸ் கட்டி இருக்காங்களா... டிரை​வருக்கு லைசென்ஸ் சரியாக இருக்கிறதா... நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூல் பண்றாங்களா என்று செக் பண்ணிட்டு அனுப்புங்க. இதெல்லாம் முறையாக இல்லாத பஸ்கள் மீது உடனே நடவடிக்கை எடுங்க. அது யாரோட பஸ்ஸாக இருந்​தாலும் கவலைப்படாதீங்க'' என்று உத்தரவு பிறப்பித்தார்.
இப்போது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தினமும் ஆம்னி பஸ்களை சோதனை செய்துதான் வெளியில் அனுப்புகிறார்கள். ஆனாலும் கட்டணத்தை மட்டும் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் நிஜம்.
''திருநெல்வேலிக்குப் போறதுக்காக வந்தேங்க. 1,500 ரூபா கேட்கிறாங்க. ஊருக்குப் போயாகணும். வேற வழி இல்லாம பணத்தைக் கொடுத்து டிக்கெட் வாங்கிட்​டேன். அட்டையில ஊரு பேரையும் சீட்டு நம்பரையும் போட்டு, 450 ரூபான்னு எழுதிக் கொடுக்குறாங்க. கேட்டா, 'டிபார்ட்மென்ட் பிரச்னை’னு சொல்றாங்க. கவர்மென்ட் பஸ் ஸ்பெஷலா நிறைய விடுறதா சொன்னாங்க. ஆனாலும் இடம் கிடைக்கலை. வருஷத்துக்கு ஒரு தடவைதான் ஊருக்குப் போறோம். சம்பாதிச்சதை எல்லாம் இங்கேயே கொடுத்துட்டுப் போகணும்போல...'' என்று புலம்பியபடி நகர்ந்தார் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சரவணன்.
தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தின் சேர்மன் கே.பி.நடராஜனிடம் பேசினோம். ''எங்க அசோசியேஷனில் இருப்பவர்கள் யாரும் கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டார்​கள். சீஸன் சமயத்தில் புதிதாக உள்ளே வரும் பஸ்களில் அப்படி நடக்கலாம். பெரிய நிறுவனங்களின் பஸ்களில் ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவு முடிந்துவிடுகிறது. அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இல்லை. தவறு செய்யும் பேருந்துகள் மீது அமைச்சரோ, அதிகாரிகளோ தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். முறையாக ஓடும் ஆம்னி பஸ்களுக்கு வரி அதிகம் என்பதால், கட்டணமும் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அரசாங்கம் வரியைக் குறைத்தால், நாங்களும் கட்டணத்தைக் குறைக்கத் தயாராக இருக்கிறோம்.
பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சாதாரணக் கட்டணமும் மற்ற மூன்று நாட்கள் மட்டும் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கும் கலாசாரம் இருக்கிறது. அது தற்போது சென்னையிலும் பரவி வருகிறது'' என்றார்.
அரசு முன்னேற்பாடுகள் சரியாகச் செய்தால், இப்படி ஒரு நிலை ஏற்பட வாய்ப்பே இல்லை.

No comments:

Post a Comment