நடுங்க வைக்கும் நஷ்ட கணக்கு!
''தமிழகத்தில் வரலாறு காணாத மின்வெட்டு''. கேட்பதற்கு சாதாரணமாகத் தெரியும் இந்த வார்த்தைகளின் யதார்த்தம் மிகக் கொடுமையானது. ஒரு ஜெராக்ஸ் எடுக்க ஒன்பது கடை ஏறியிறங்க வேண்டிய கட்டாயம். பல நாட்களாக ஒழுங்காகத் தூங்கமுடியாத நிலைமை.
சாதாரண மக்கள் இப்படி பல அவஸ்தைகளை அனுபவித்துக் கொண்டிருக்க, தொழில் துறையினர் படும் சிரமம் இன்னும் மோசம். மனசுக்குள் கிடக்கும் சோகத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாத அவர்கள், தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்கிற கோரிக்கையோடு நாணயம் விகடனோடு பேசினார்கள்.
திருப்பூர் தொழிலதிபர் ஒருவர் இப்படி ஆரம்பித்தார்: ''மின்வெட்டு என்பது தமிழகத்திற்கு புதிதல்ல. 2007-ம் ஆண்டிலிருந்தே மின்வெட்டு இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அப்போது முறையாக அறிவிக்காமல் நினைத்த நேரத்தில் மின்வெட்டை அமல்படுத்தி வந்தார்கள். இப்படி முறையற்ற மின்வெட்டு இருப்பதால் மெஷின்கள் கெட்டுப் போகின்றன; பொருட்களின் தரம் குறைகிறது, அதனால் விற்க முடியவில்லை. மேலும், தொழிலாளர்களை சரிவர பயன்படுத்த முடியவில்லை.. என்பதையெல்லாம் சொல்லி முறையான மின்வெட்டினை கொண்டுவர தி.மு.க. அரசை வற்புறுத்தினோம். அப்படி அறிவித்தால் எங்களுக்கு கெட்ட பெயர் வந்துவிடுமே என்றார்கள் தி.மு.க.வினர். ஆனாலும், எங்கள் பிரச்னையை எடுத்துச் சொல்லி முறையான மின்வெட்டினை கொண்டு வந்தோம். ஆனால், இப்போதோ அந்த முறையான மின்வெட்டும் போய், மின்சாரம் வருவதில்லை என்று சொல்கிற அளவுக்கு கடுமையான மின்வெட்டை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்கு 13 மணி நேரம் மின் வெட்டு என்பது சர்வசாதாரணமாகி விட்டது. எப்படித்தான் இதை சமாளிக்கப் போகிறோமோ!'' என்று அழாதக் குறையாகப் பேசினார் அவர்.
கோவை பகுதியில் வார்ப்புத் தொழிலில் பல ஆண்டு காலமாக வெற்றிகரமாகச் செயல்பட்டுவந்த ஒரு தொழிலதிபருடன் பேசினோம். ''ஒரு உலைக்கு (ஃபர்னஸ்) 1,350 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவை. இவ்வளவு வெப்பநிலை அடைய வேண்டுமெனில் குறைந்தது ஒன்றரை மணி நேரத்துக்காவது மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வேண்டும். இரண்டு மணி நேரத்திற்குள் கரன்ட் போனால், ஃபர்னஸ் மீண்டும் செயல்பட நேரம் எடுக்கும். தவிர, ஜெனரேட்டர்களை கொண்டு ஃபர்னஸை இயக்கவும் முடியாது. அதையும் மீறி வேகமாகச் செய்ய ஆரம்பித்தால் தரமில்லாத உற்பத்தியே மிஞ்சும். இதனால் எங்கள் தொழிலாளர்களை எங்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. எத்தனை நாள் அவர்களுக்கு எந்த வேலையும் தராமல் எங்களால் சம்பளம் தரமுடியும்? இன்றைக்கு எங்கள் ஃபேக்டரியில் தொழிலாளர்கள் ஆடுபுலி ஆட்டம்தான் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதை தட்டிக் கேட்கவும் முடியவில்லை. காரணம், வேலை இல்லை என்றால் அவர்களும் என்னதான் செய்வார்கள்?'' என்று கேட்டார் அப்பாவித்தனமாக.
மதுரையைச் சேர்ந்த ஒரு மில் அதிபரிடம் பேசினோம். ''மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மின் திருட்டு குறைவு. (மின்சாரத்தைத் திருடுவதில் கில்லாடிகளாக இருப்பவை சில துறை நிறுவனங்கள்தான். காரணம், அந்த நிறுவனங்களின் உற்பத்திச் செலவில் மின்சாரக் கட்டணம் மட்டுமே 20 சதவிகிதத்துக்கு மேல். மற்ற தொழில்களுக்கு வெறும் 12 சதவிகிதம் மட்டுமே!) மேலும், மின்சாரக் கட்டணத்தை சரியாக செலுத்துபவர்களில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. கிட்டத்தட்ட
95 சதவிகித மின் கட்டணம் தமிழக மின்சார வாரியத்துக்கு வந்துவிடுகிறது. ஆனால், டெல்லியில் இது 60 சதவிகிதம் என்கிற அளவில்தான் வசூலாகிறது. அதிகரித்த மின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிமாநிலங்களில் இருந்து அதிக தொகைக்கு மின்சாரம் வாங்கியதால்தான் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 40,000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. இப்போது இந்தியாவிலே மிகவும் பரிதாபத்தில் இருப்பது தமிழ்நாடு மின்சார வாரியமும், உத்தரபிரதேச மின்சார வாரியமும்தான்'' என்றவர், ''இப்போதைய மின்வெட்டுக்குக் காரணம் தமிழகத்தை ஆண்டுவரும் இரண்டு அரசியல் கட்சிகள்தான்'' என்றார்.
''கடந்த இருபது வருடங்களில் எந்த பெரிய மின் திட்டங்களும் இல்லை. காரணம், கடந்த இருபது வருடங்களில் எந்த அரசும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கவில்லை. ஒரு அனல் மின் நிலையத்தை ஆரம்பித்து முடிக்க, ஐந்து வருடங்களுக்கு மேலாகும். இதில் சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவதற்கே இரண்டு வருடங்கள் ஆகிவிடும். இப்போது ஒரு மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி அடுத்துவரும் ஆட்சியில் துவங்கும்போது அவர்களுக்கு ஏன் நல்ல பெயர் சம்பாதித்துத் தரவேண்டும் என்கிற 'நல்ல’ எண்ணத்திலேயேதான் இதுவரை இருந்த அரசாங்கங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை'' என்றார்.
தென் இந்திய மில்களின் சங்க தலைவர் தினகரனிடம் பேசினோம். மின்வெட்டினால் டெக்ஸ்டைல் துறை சந்திக்கும் பிரச்னைகளை அவர் எடுத்துச் சொன்னார். ''இந்திய நூற்பாலை தொழிலில் 38 சதவிகித உற்பத்தி தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக கொஞ்சமும் வளர்ச்சி அடையாமல் இருக்கிறது தமிழக நூற்பாலை துறை. இதே நிலைமை இன்னும் சில ஆண்டுகளுக்குச் சென்றால் நாங்கள் தொழிலே நடத்த முடியாமல் போய்விடும். ஆனால், கடந்த ஐந்து வருடத்தில் ஆந்திரப்பிரதேசத்தில் நூற்பாலை துறை சுமார் 100 சதவிகித வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ இத்துறையில் புதிய முதலீடு எதுவும் வரவில்லை. உதாரணத்துக்கு, லஷ்மி மெஷின் வொர்க்ஸ் (எல்.எம்.டபிள்யூ.) நிறுவனம் உற்பத்தி செய்யும் மெஷின்கள் 60 சதவிகிதம் தமிழ்நாட்டிலேயே விற்பனை ஆகிவிடும். ஆனால், இப்போது எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விற்பனையில் 10 சதவிகிதம் மட்டுமே தமிழ்நாட்டில் நடக்கிறது.
தமிழ்நாட்டில் டெக்ஸ்டைல் துறையில் சுமார் 40 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். தினமும் மூன்று ஷிஃப்ட் நடக்கும் இடத்தில் ஒரு ஷிஃப்ட் நடக்கக்கூட வழியில்லை. சுமார் 10 லட்சம் முதல் 15 லட்சம் தொழிலாளர்கள் வரை வேலை இழந்திருக்கிறார்கள். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் இரண்டு லட்சத்துக்கு மேலானவர்கள் வேலையை விட்டு வேறு வேலைக்குப் போயிருக்கிறார்கள். இந்திய டெக்ஸ்டைல் துறையின் மதிப்பு சுமார் 75 பில்லியன் டாலர்கள். இதில் மூன்றில் ஒரு பங்கு தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கிறது. அதாவது, 25 பில்லியன் டாலர். 20 பில்லியன் டாலர் என்று வைத்துக்கொண்டால்கூட தமிழக டெக்ஸ்டைல் சந்தையின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய். ஆண்டு முழுக்க ஒரு ஷிஃப்ட் நடக்கவில்லை என்றால் சுமார் 35,000 கோடி ரூபாய் இத்துறை வருமானம் இழக்கும்.
2008-ம் ஆண்டு திருப்பூர் நகரம் ஏற்றுமதி செய்த தொகை 10,000 கோடி ரூபாய். இப்போதும் அதே 10,000 கோடி ரூபாய்தான். மின்சாரம் சரியாக இருந்திருந்தால் இந்த சமயத்தில் 20,000 கோடி ரூபாயை திருப்பூர் எட்டியிருக்கும். ஆனால், மற்ற மாநிலங்கள் இந்த ஏற்றத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டன.
1987-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இல்லை. அப்போது இந்தியாவில் இருக்கும் கிரிட்களை இணைக்கும் பணியை பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் செய்தது. ஆனால், தென் இந்தியாவில் இருந்த மாநில முதல்வர்கள், தங்கள் மாநிலங்களை நேஷனல் கிரிட்டுடன் இணைக்கத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதனால் வட மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் மின்சாரம் வாங்க முடியாத நிலை நமக்கு ஏற்பட்டுவிட்டது.
மின்சாரத்தின் நிலைமை மோசமடைகிறது; பவர் எக்ஸ்சேஞ்சுகளிலிருந்து நீண்ட காலத்துக்கு குறைந்த விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடுங்கள் என்று 2008-ம் ஆண்டே எங்கள் சங்கம் சொன்னது. ஆனால், தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரம் இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி தருகிறோம், கூடங்குளம் வருகிறது என்று சொல்லி பவர் எக்ஸ்சேஞ்சுகளில் ஒப்பந்தம் போடாமல் விட்டுவிட்டார்கள். ஆனால், பி.ஹெச்.இ.எல்.லிருந்து மின் தயாரிப்பு சாதனங்கள் கிடைக்கவே இரண்டு வருடங்களுக்கு மேலாகும் என்கிறபோது எப்படி இது சாத்தியம்? அதேசமயம் கர்நாடக அரசு அப்போது ஒரு யூனிட்க்கு 3.50 ரூபாய் ஒப்பந்தம் போட்டு, அதிக மின்சாரத்தை வாங்கி வருகிறது.
இப்போதுகூட அரசாங்கம் மட்டும் நினைத்தால் ஒரே ஒரு கையெழுத்தில் இந்த பிரச்னைக்கு முடிவு கண்டுவிடலாம். தமிழகத்தில் மட்டும் சுமார் 3,500 முதல் 4,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டீசல் ஜெனரேட்டர்கள் இருக்கிறது. தமிழகத்தின் மின் பற்றாக்குறையே சுமார் 3,500 மெகாவாட்தான். டீசல் மூலம் மின் உற்பத்தி செய்யும்பட்சத்தில் ஒரு யூனிட் 12.5 ரூபாய் ஆகும். ஆனால், இப்போது நாங்கள் செலுத்துவது சுமார் 7.32 ரூபாய். டீசலில் இருக்கும் 25 சதவிகித வரியை ரத்து செய்தாலே போதும். இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பில் பாதியை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம் என்றும் சொல்லிவிட்டோம். இதனால் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு 3,000 முதல் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம். ஆனால், தமிழக தொழில் துறை அழிவுப்பாதையில் இருந்து தப்பித்து, அரசாங்கத்துக்கு இன்னும் அதிகமாகச் சம்பாதித்துத் தரும் என்பது மட்டும் நிச்சயம்'' என்று முடித்தார் அவர்.
தொழில் பேதமில்லாமல் தலைவிரித்தாடும் மின்வெட்டு காரணமாக தமிழகத்தை விட்டே ஓடத் தயாராகி வருகிறார்கள் பல தொழிலதிபர்கள். இருக்கிற தொழிற்சாலைகளையே சரிவர இயக்க முடியாமல் இருக்கும் நிலையில், புதிதாக தொழிற்சாலைகளைத் தொடங்குவதோ அல்லது இருக்கிற தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதோ நடக்காத காரியம். ஆனால், மற்ற சில மாநிலங்களில் மின்வெட்டு பிரச்னையே இல்லை என்பதால், அங்கு சென்றுவிடலாமே என்பதுதான் அவர்களின் அடுத்த பிளானாக இருக்கிறது.
மின்வெட்டு பிரச்னை இப்போதைக்கு சரியாகாது என்று நினைத்த இருபது தொழில் நிறுவனங்கள் அண்மையில் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது அதிர்ச்சியான தகவல். செய்யாறில் ஆரம்பிக்க இருந்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலையை ஆந்திராவுக்கு கொண்டு சென்று இன்னும் சில மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கப் போகிறது. இந்த நிறுவனங்களைப் போல வேறு பல நிறுவனங்களும் வெளி மாநிலங்களில் இடத்தைத் தேடிச் செல்லும் நிலையில், வரும் நவம்பர்
6-ம் தேதி குஜராத் அரசின் உயரதிகாரிகள் கோவைக்கு வந்து அங்கிருக்கும் தொழிலதிபர்களைச் சந்திக்கப் போகிறார்களாம். அந்த அரசாங்கங்கள் நம் தொழில் நிறுவனங்களுக்கு இடம், சாலை வசதி உள்பட என்னென்ன சலுகைகள் வழங்கப் போகிறது என்பதை விலாவாரியாக எடுத்துச் சொல்லப் போகிறதாம். எல்லாவற்றுக்கும் மேல், மின்சாரம் ஒரு பிரச்னையே இல்லை என்றும் அந்த உயரதிகாரிகள் கேன்வாஸ் செய்யப் போகிறார்களாம்.
வெளியேற நினைக்கும் தொழில் துறை நிறுவனங்களை தமிழக அரசாங்கம் என்ன செய்து தடுத்து நிறுத்தப் போகிறது?
No comments:
Post a Comment