Wednesday, November 7, 2012

கலவரத்துக்குக் காரணம் அமைச்சரா? பரமக்குடி சிக்கலில் சுந்தரராஜ்



தங்கள் சமூக இளைஞர்கள் கொல்லப்பட்டதற்காக ஓர் அஞ்சலி ஊர்வலத்தையாவது பரமக்குடியில் நடத்திவிட வேண்டும் என்று ஒட்டுமொத்த தேவர் அமைப்புகளும் முடிவு செய்தன. ஆனால் காவல் துறை அனுமதி மறுக்கவே, அதற்குக் காரணம் அமைச்சர் சுந்தரராஜ்தான் என்று கொந்தளிக் கின்றனர்!

கடந்த 2-ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பந்த் நடத்தி அமைதி ஊர்வலம் நடத்தவும் திட்டம் போட்டிருந்தனர். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதைச் சுட்டிக்காட்டி போலீஸ், தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி ஊர்வலம் நடத்தியே தீருவோம் என்று அதற்கான ஆயத்தங்களில் சில அமைப்புகள் இறங்கின. அதனால் அதிகாலையிலேயே, கூட்டமைப்பின் தலைவர் வெள் ளைச்சாமி, செயலாளர் விஜயசாமி ஆகியோரைக் கைதுசெய்து பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விட்டனர். ஊர்வலம் புறப்படுவதாக இருந்த கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் தர்மபுரி எஸ்.பி. ஆஸ்ரா கர்க் தலைமையில் 1,000 போலீஸாரையும் அதிரடிப்படை போலீஸாரையும் குவித்தனர். ஐந்து முனை சந்திப்பு, ஓட்டப்பாலம், ஆத்துப்பாலம், ஆர்ச் போன்ற இடங்களிலும் போலீஸ் கூட்டம்தான். வாகன ஒலிபெருக்கி மூலம், 'நகரில் 144 போடப்பட்டு இருப்பதால், யாரும் வெளியே வர வேண்டாம்’ என்று எச்சரிக்கையும் விடுத்தபடி இருந்தனர்.



அதனால், பக்கத்து ஊர்களில் இருந்து பெருங்​கூட் டமாக ஆட்கள் திரள முடியவில்லை. ஒருசிலர் மட்டும் டூ வீலர்களில் போலீஸ் கண்களுக்குச் சிக்காமல் தேவர் மஹாலுக்கு வந்து சேர்ந்தனர். பக்கத்து ஊர்களான குமாரக்குறிச்சி, கமுதக்குடி, வேந்தோணி, உரப்புளி, பொதுவக்குடி, நைனார்கோவில், பெரும்பச்சேரி போன்ற ஊர்களில் இருந்து பலர் நடந்தே வந்து சேர்ந்தனர். தேவர் மஹாலில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவியத் தொடங்கவே... 'வெளியில் வந்தால் கைது. அதை மீறினால் லத்தி சார்ஜ்...’ என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர்.

கூட்டத்தை ஒருங்கிணைத்த மறத்​தமிழர் சேனை அமைப்பின் தலைவர் பிரபாகரன் நம்மிடம், ''நடந்த மோசமான சம்பவங்களுக்குக் காரணமே அமைச்சர் சுந்தரராஜ்தான். நாங்கள் பெருவாரியாக ஓட்டுப் போட்டதால்தான் அவர் ஜெயித்தார். ஆனால், அவர் தன்னை தலித்துகளின் பிரதிநிதியாகவே காட்டிக்கொள்கிறார்.



கொடூரமான முறையில் இறந்துபோனவர்​களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமைதி ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டோம். அதற்கே மறுக்கிறார்கள். இங்கே சுந்தர ராஜ் ஆட்சிதான் நடக்கிறது. இந்திய அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரே, 'தனித் தொகுதிகள் 10 வருடங்களுக்கு மேல் தேவைஇல்லை’ என்று சொன்னார். ஆனால், பரமக்குடி மட்டும் 46 வருடங்களாக தனித்தொகுதியாக இருக்கிறது. இதனால் மற்ற சாதியினர் விரக்தி மனநிலையில் இருக்கிறார்கள்.

தவறு செய்த குற்றவாளிகள் மீது காவல் துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. முக்குலத்து மக்கள் ஒட்டுமொத்தமாக ஓட்டுப் போட்டதால்தான் ஜெயலலிதா முதல்வராக இருக்கிறார். வரும் நாடா ளுமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் பெரும்பான்​மையாக இருக்கும் 16 தொகுதிகளில் அ.தி.மு.க. தோல் வியைத் தழுவும்'' என்று சீறினார்.

போராட்டத்தை கைவிடும்படி, அ.தி.மு.க-வின் வி.ஐ.பி-கள் பலர் பிரபாகரனின் செல்போன் லைனில் வந்து சமாதானப்படுத்தினார்களாம். மதியம் வரை, யாரும் தடையை மீறி ஊர்வலம் நடத்த மஹாலை விட்டு வெளியே வருவதாக இல்லை. ஓர் இளைஞர் கூட்டம் மட்டும் வெளியே வந்து ஆட்சிக்கு எதிராக கோஷம் போட்டுவிட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் '16-ம் தேதி ஊர்வலத்தை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்து இருப்பதால் அனைவரும் கலைந்து செல்லுங்கள்’ என்று நிர்வாகிகள் அறிவிக்க, அவர்களைக் கடுமையாகத் திட்டியபடியே கலைந்து சென்றது கூட்டம்.



இதற்கிடையில், கமுதி - கோட்டைமேடு பகுதியில் கூடிய மக்கள், அதி.மு.க. கொடி​யையும் கறை வேட்டியையும் அமைச்சர் சுந்தரராஜ் படத்தையும் எரித்தனர். சாயல்​குடி, முதுகுளத்தூர், நைனார்​கோவில் போன்ற ஊர்களிலும் இதே நிலைதான்.

இதுதொடர்பாக, அமைச்சர் சுந்தர ராஜிடம் பேசினோம். ''நான் எப்போதுமே சாதி மதத்துக்கு அப்பாற்பட்டவன். இந்தப் பிரச்னையில் ஏன் என் பெயரை இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தேவர் குருபூஜை சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி பசும்பொன் சென்று ஏற்பாடுகளைப் பார்வையிட்டு வந்தேன். அதுபோலவே, இமானுவல் விழாவுக்கு வருகிறவர்கள் மோதிக்கொள்ளக் கூடாது என்பதற்காக தனியாக சாலை ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தேன். அப்போது, தலித் அமைப்புகள் என்னைத் திட்டினர். இப்போது, தேவர் அமைப்பினர் என்னைத் திட்டுகின்றனர். இதற்குமேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. குறுக்கு வழியில் பதவியைப் பிடிக்க நினைக்கும் எங்கள் கட்சியினர்தான் என் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். எது உண்மை என்பது அம்மாவுக்குத் தெரியும்'' என்றார் மிகுந்த வருத்தத்துடன்.

16-ம் தேதி என்ன நடக்குமோ?

No comments:

Post a Comment