Wednesday, November 7, 2012

ஏட்டய்யாவுக்கு இறுதிச் சடங்கு... டி.எஸ்.பி-க்குத் தோப்புக் கரணம்!


ல்வின் சுதன் என்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் இப்போது வெளி வந்துள்ளன. அது, தற்செயலாக நடந்ததா? கொலையா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பதே பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது! 
நம்மிடம் பேசிய போலீஸ் நண்பர்கள் சிலர், ''எஸ்.ஐ. படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு சற்று முன்பாகவும் தொடர்ந்து பல மாதங்களாகவும் திருப்பாச்சேத்தி, மானாமதுரை சிப்காட் ஸ்டேஷன்களின் போலீஸாரை அந்த ரவுடிக்கும்பல் எந்த அளவுக்கு அசிங்கப்படுத்தி இருக்கு தெரியுமா? ஆல்வின் சுதனை குத்திக்கொலை செய்த பிரபு, புதுக்குளத்துக்காரன். சினிமா வில்லன் பாணியில் போலீஸை அடித்தும் மிரட்டியுமே சண்டியர் ஆனவன். சிப்காட் ஸ்டே ஷனில் மட்டுமே பிரபு மீது 17 வழக்குகள் இருக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து போலீஸை மிரட்டிக்கொண்டே இருந்துள்ளான்.
வழக்கமாக போலீஸ்தான் ரவுடிகளைத் துரத்தும். ஆனா, இங்கே ரவுடிகள்தான் ஆயுதங்களோடு போலீஸை அடிக்கடி துரத்துவாங்க. ஆறு மாசத்துக்கு முந்தி, மானாமதுரை இன்ஸ்பெக்டர் சுந்தரேசனும் சிப்காட் எஸ்.ஐ. அல்லிராணியும், பிரபுவைத் தேடி அவன் வீட்டுக்குப் போயிருக்காங்க. அங்கே அவன் இல்லைன்னதும் அவனோட அப்பா முத்துவை ஜீப்பில் ஏத்திருக்காங்க. அந்தநேரத்தில் வந்த பிரபு, ஜீப்புக்கு வெளியே நின்ற அல்லிராணியின் சட்டையைக் கிழித்து அவமானப்படுத்தி இருக்கிறான். 'இதுக்கு மேலயும் என்னை டார்ச்சர் பண்ணினா... ஸ்டேஷனுக்குள்ளயே வந்து உன்னை கற்பழிப்பேன்டி’னு மிரட்டிருக்கான். எஸ்.ஐ-யும் இன்ஸ்பெக்டரும் பயந்து திரும்பிட்டாங்க. தேவர் ஜெயந்திக்காக மூணு மாசத்துக்கு முந்தியே வேம்பத்தூர்ல ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருத்தரை பாதுகாப்புக்கு நிறுத்தினாங்க. பிரபு கோஷ்டி, அவரோட பைக்கைத் தூக்கி கண்மாய்க்​குள்ள போட்டுட்டானுங்க. இந்த விஷயம் எஸ்.பி. வரை போச்சு. அப்பவும் ஏ.ஆர். போலீஸைத்தான் கண்டிச்சாங்களே தவிர, ரவுடிகள் மீது நடவடிக்கை இல்லை. இப்படித்தான், 15 நாளைக்கு முந்தி, வேம்பத்தூர் அவுட் போஸ்ட்ல பணியில் இருந்த உதயகுமார்ங்கிற ஏட்டய்யாவையும் இவனுங்க போய் மப்புல மிரட்டி இருக்காங்க.
ஆல்வின் சுதன் இந்த ஸ்டேஷன்ல பொறுப்பேற்று சரியா 74 நாள்தான் ஆகியிருக்கு. 'பிரபு கோஷ்டி மோசமானவங்க’னு ஸ்டேஷன் போலீஸார் எச்சரிக்கை செஞ்சப்ப, 'போலீஸ் வேலைக்கு வந்துட்டு, பயந்துட்டு இருந்தா வேலைக்கு ஆகாது சார். போலீஸையே மிரட்டுறவனுங்க என் கையில சிக்கட்டும்; வெச்சிக்குறேன்’னு சொல்லியிருக்கார் ஆல்வின். வழக்கமா பிரபுவுக்குத் துப்புக்குடுக்கும் போலீஸ் கறுப்பு ஆடுகள், இதையும் அவன் காதுல போட்டுருக்காங்க.
20 நாளைக்கு முந்தி வேம்பத்தூர் ஏரியாவுக்கு நைட் ரவுண்ட்ஸ் போயிருக்கார் ஆல்வின். பைக்கை நிறுத்திட்டு ஊருக்குள்ள நடந்து போயிட்டு வர்றதுக்​குள்ள, அவரோட பைக் ஸீட்டை கத் தியால் குதறிப் போட்டுட்டாங்க. அவர் அந்த விஷயத்தைப் பெரிசா எடுத்துக்கலை.
27-ம் தேதி பிரபு கோஷ்டி, செல்லப்பாண்டியனை கத்தியால் குத்தின தகவல் கிடைச்சதுமே, டி.எஸ்.பி. கருணாநிதி தன்னோட காரை எடுத்துக்கிட்டுப் போனார். தன்னோடு, இன்ஸ்பெக்​டர் விஜய​குமார், ஏட்டய்யா கர்ணனையும் அழைத்துக்​கொண்டார். போலீஸைப் பார்த்து அவங்க பயப்படலை. டி.எஸ்.பி-​யோட காரை உடைச்சு சாய்ச்சிருக்​காங்க. அவனுங்க ஆவேசத்தைப் பார்த்து மிரண்டு​போன இன்ஸ்பெக்டர், காரைவிட்டு இறங்கி ஓடிட்டார். டி.எஸ்.பி-யை சுத்தி நின்னுக்கிட்டு, அவரை தோப்புக்கரணம் போடச் சொல்லிருக்காங்க. அவரு அசையலை. அதனால அவரை அட்டாக் பண்ணிருக்காங்க. தடுக்கப்போன உளவுப்பிரிவு ஏட்டய்யா கர்ண னையும் சிவக்குமார் ஏட்டய்யா​வையும் கத்தியால் குத்தியிருக்காங்க.
போதையின் பிடியில் இருந்த பிரபுவும் அவனது கூட்டாளிகளும் கர்ணனை பாடையில் கட்டிப் படுக்க வெச்சதுபோல் கிடத்தி அவருக்கு இறுதிச்சடங்கு செய்​றாப்புல சுத்தி வந்து ஆடி இருக்​காங்க. ஓடிப்போன இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி-யை காப்பாத்துறதுக்காக அப்போ வர, அவரையும் எட்டி உதைச்சுக் கீழே தள்ளிருக்காங்க. அப்பத்தான் எஸ்.ஐ. ஆல்வின் சுதன் வந்திருக்கார். இன்ஸ்பெக்டர் கீழே விழுந்து கிடந்ததைப் பாத்துட்டு ஓடிப்போய்த் தூக்கி இருக்கார். 'இவனைத்தாண்டா போட்டுத் தள்ளணும்’னு சொல்லிக்கிட்டே ஆல்வின் சுதனை நோக்கி கற்களை வீசியிருக்காங்க. கல்லால்அடிபட்டு மயங்கிப்போன ஆல்வின், பக்கத்தில் இருந்த வீட்டுச் சுவத்தில் சாய்ஞ்சதும், கத்தியை உருவிக்கிட்டு வந்த பிரபு, அவரோட வயித்தில் குத்தியிருக்கான். ரத்த வெள்ளத்தில் சரிந்தவரோட தலையை அந்த வீட்டுச் சுவத்தில் 'நங்’குனு இடிச்சிருக்கான். அடுத்து பிரபுவோட கூட்டாளி பாரதி, பாறாங்கல்லைத் தூக்கி அவரோட நெஞ்சில் போட்டிருக்கான். இத்தனை கொடுமைகளையும் செஞ்சுட்டு சர்வ சாதார​ணமா எஸ்கேப் ஆகிருக்காங்க'' என்று பதைபதைப்புடன் வர்ணிக்கிறார்கள்.
''உங்களுக்கு முன்கூட்டியே தகவல்கள் வந்தும் ரவுடிகளை ஒடுக்கும் விஷயத்தில் மெத்தனமாக இருந்த​தாகச் சொல்கிறார்களே?'' என்று சிவகங்கை எஸ்.பி. பன்னீர்செல்வத்திடம் கேட்டதற்கு, ''ஆர்.எஸ்.ஐ. ஒருவரை ரவுடிகள் துரத்தினதா முன்பு ஒரு தகவல் வந்தது. அதன்பிறகு, துடிப்பான எஸ்.ஐ-க்களை அந்தப் பகுதிகளுக்கு நியமித்தோம். ஆல்வின் சுதனையும் அப்படித்தான் நியமித்தோம். இருந்தாலும் எங்களையும் மீறி, நடக்கக் கூடாத சம்பவம் நடந்து விட்டது'' என்று வேதனைப்​பட்டார்.
ஆல்வின் சுதன் கொலை தொடர்பாக பாரதி, மணிகண்டன், ஐயனார், (இன்​னொரு) பிரபு, சோணைமுத்து உள்ளிட்ட ஐந்து நபர்களைக் கைது செய்துள்ளது போலீஸ். முக்கியக் குற்றவாளியான பிரபு, அவனது  கூட்டாளிகளான மாயக்கண்ணன், முத்துக்குமார் உள்ளிட்டோரைத் தேடி வருவதாகச் சொல்கிறார்கள். விருத்தாச்சலம் அருகே ராஜேந்திரபட்டணத்தில் பிரபுவின் செல்போன் இயங்குவதாகக் கிடைத்த தகவலை வைத்து அங்கு போனதாம் போலீஸ். ஆனால், அதற்குள் அவர்கள் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ''அதெல்லாம் கிடை​யாது, பிரபுவும் மாயக்கண்ணனும் போலீஸ் கஸ்டடியில்தான் இருக்கிறார்கள். இனியும் இவர்களை வெளியில் விடக்கூடாது என்பதற்​காக, என்கவுன்டருக்குத் தயாராகி விட்டது போலீஸ்'' என்றும் காவல்துறை வட்டாரத்தில் சொல்கின்றனர்.    
போலீஸ் போலீஸ் என்று பொத்தாம் பொதுவாக ஆயிரம் அவதூறுகளை அள்ளி வீசும் சமூகத்தில், காக்கிச்​சட்டைகளுக்கும் இதயம் உண்டு. குடும்பம் உண்டு. உயிர் வாழும் உரிமை உண்டு என்பதை எப்படிப் புரிய வைப்பது?

போலீஸுக்கு யார் பாதுகாப்பு?
'பரமக்குடி கலவரத்துக்குப் பிறகு, மிகவும் பதற்றமான இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் துப்பாக்கியை எடுத்துச் செல்லக்கூடாது என்று உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றனர். அதனால்தான் சம்பவத்தன்று சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன், துப்பாக்கி எடுத்துச் செல்லவில்லை. அதுதான் அவர் உயிரைக் குடித்து விட்டது’ என்று போலீஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. ஆனால், இதை மறுத்துள்ள டி.ஜி.பி.ராமனுஜம், 'அப்படி எந்த உத்தரவும் போடவில்லை’ என்கிறார். போலீஸார் ஆயுதங்கள் வைத்திருக்க வரையறுக் கப்பட்டுள்ள விதிமுறைகள் என்ன என்று ஒய்வு பெற்ற ஐ.ஜி. ராமநாதனிடம் கேட்டோம்.
''சட்டத்தை மதிக்கும் மனநிலை வேறு. சட்டத்துக்கு அஞ்சி அடங்கி நடக்கும் போக்கு என்பது வேறு. நம் நாட்டு மக்களைப் பொறுத்தவரை, அஞ்சி நடக்கும் மனப்போக்கு உடையவர்களே. சட்டத்தை மதிக்கும் மனநிலைக்கு அவர்கள் இன்னும் வரவில்லை. இவர்களைக் கட்டுப்படுத்தவும், கண்டிக்கவும் செய்யக்கூடிய போலீஸ்காரர்களுக்கு சுய பாதுகாப்பு என்பது மிகமிக அவசியம். அது இருந்தால் மட்டுமே, அவர்களால் அந்தப் பணியை திறமையாகச் செய்ய முடியும். அதனால்தான் போலீஸ்காரர்களுக்கு லத்தியும், துப்பாக்கியும் வழங்கப்பட்டன. அதுவும் சட்டத்தின் ஒப்புதலுடன், முறையான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகே, போலீஸ்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் போலீஸ்காரர்களின் பாதுகாப்புக்கு மட்டும் அல்ல, பொதுமக்களைப் பாதுகாக்கவும் சேர்த்துத்தான் வழங்கப்பட்டுள்ளன. அதை ஒரு சில போலீஸ்காரர்கள், தவறாகப் பயன்படுத்தினர் என்பதற்காக முற்றிலுமாக தடை செய்துவிட முடியாது. அப்படிச் செய்துவிட்டால், போலீஸ் காரர்களுக்கான மரியாதை மட்டுமல்ல, சமூகத்தின் சட்டம் ஒழுங்கும் முற்றிலுமாக சிதைந்து போகும்.
இதைப்புரிந்து கொள்ளாமல் போலீஸ் உயர் அதிகாரிகள் தடை விதித்து இருந்தால், அது முழுக்க முழுக்க சட்டத்தை மீறிய செயல். அப்படிச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு என்பது தனி ஒரு போலீஸ்காரர், தனியரு நபரைப் பழி வாங்குவதற்காக நடந்த துப்பாக்கிச் சூடு அல்ல. அது மிகப்பெரிய கலவரம். அப்பாவி மக்களையும், பணியில் இருந்த போலீஸ்காரர்களின் உயிரையும் காப்பாற்றவே அன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதுவும் போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்குப் பிறகே நடந்தது. லத் தியும், துப்பாக்கியும் போலீஸ்காரன் அணியும் சீருடையின் அங்கம், அதாவது தொப்பி மற்றும் ஷ§வைப் போன்றது. இதை நான் சொல்லவில்லை, நமது சட்டம் சொல்கிறது'' என்றார் காட்டமாக.

No comments:

Post a Comment