‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ மனஸு தளராமல், நம்மால் முடிந்த முயற்சியை விடாமல் பண்ணிக் கொண்டே போனால், எத்தனை காலமானாலும் ஸரி, முறையான முன்னேற்றம் காண ஆரம்பித்து முடிவிலே லக்ஷ்யத்தைச் சேர்ந்து விடலாம். நம்பிக்கை முக்யம். ச்ரத்தை என்பது அதுதான். ‘ஸ்வாமி கைவிட மாட்டார். சாஸ்த்ரமும் குருவும் காட்டும் வழி வீணாய்ப் போகாது’ என்ற த்ருடமான நம் பிக்கைக்குத்தான் ச்ரத்தை, ச்ரத்தை என்று பெயர்.
நாம் பேச்சுவழக்கில் ‘ச்ரத்தையாக ஒன்றை ஒருத்தர் பண்ணினார்’ என்று சொல்லும்போது ‘ஸின்ஸியராக, மனப்பூர்வமாக’ என்ற அர்த்தத்திலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறோம். வாஸ் தவத்தில் அது ‘நம்பிக்கை’ என்பதைத்தான் முக்யமான அர்த்தமாகக் கொண்டது. ஆழ்ந்த நம்பிக்கையால் ஏற்படுகிற ‘ஸின்ஸியாரிடி’யோடு ஒருத்தர் ஒன்றைப் பண்ணுவதே ‘ச்ரத்தையோடு பண்ணுவது.’
நேராக நமக்கு ப்ரூஃப் கிடைக்கும் விஷயங்களில் ‘நம்பிக்கை’ என்பது தேவையில்லை. ஆனால், மத சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கும் அநேக விஷயங்களுக்கோ இப்படி ப்ரத்யக்ஷ ப்ரூஃப் இருக்காது; சிலது ப்ரத்யக்ஷத்துக்கு நேர்மாறாகக் கூடத் தோன்றும். ‘புண்யம் பண்ணினால் நல்லது கிடைக்கும், பாபம் பண்ணினால் கெட்டது கிடைக்கும்’ என்று எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஆனால், ப்ரத்யக்ஷத்தில் அநேக பாபங்கள் பண்ணுபவர்கள் நல்லபடி வாழ்வதையும், புண்ய கர்மாக்கள் பண்ணுபவர்கள் கஷ்டப்படுவதையும் பார்க்கிறோம். இப்படியிருக்கிறதே என்றால், அதற்கு நம் ஹிந்து சாஸ்திரத்தில், ‘ஒரு ஜன்மாவுக்குள்ளேயே பாப - புண்ய பலன்கள் தெரிந்தாக வேண்டுமென்றில்லை. அநேக ஜன்மாக்களில் பலன்கள் தொடரும். இன்றைக்கு ஒரு பாவி ஸுகப்படுகிறான், புண்யவான் கஷ்டப்படுகிறான் என்றால் ஜன்மாந்தரத்தில் இந்தப் பாவி புண்யம் பண்ணியிருக்கிறான். அந்தப் புண்யவான் பாவம் பண்ணியிருக்கிறான் என்று அர்த்தம்’ என்று சொல்லியிருக்கிறது. இதை நாம் ப்ரூஃப் பண்ணிக் கொள்ள முடியாது. இங்கேதான் நம்பிக்கை - அதாவது ச்ரத்தை - தேவைப்படுகிறது. இதே மாதிரி இன்னும் அநேகம் ச்ரத்தையின் மேலேயே ஒப்புக் கொள்ள வேண்டியதாயிருக்கிது.
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment