Tuesday, November 27, 2012

அருள்வாக்கு - சத்தியம்!



நடைமுறையில் செய்து காட்டுவதால் நல்லதை விளைவிக்கும் ஒழுங்குமுறைதான் தர்மம் என்பது. இந்த நடைமுறைக்கு ஆதாரதத்வமாக ஓர் அடிப்படை இருக்க வேண்டும்; ஓர் ஒழுங்கு என்றால் அது அப்படிப்பட்ட ஒழுங்கிலே இருக்கிறது என்பதை உணர்த்துவதாக ஓர் அடிப்படை உண்மை இருக்க வேண்டும். தீபாலங்காரம் செய்யும்போது வட்டமாக, சதுரமாக, கோணமாகப் பல வரிசைகளில் தீபங்களை வைத்தால் அந்த ஒழுங்கிலே மனஸுக்கு ஒரு நிறைவு தெரிகிறது. ஏதோ ஓர் ஒழுங்கிலே வளைத்தும் நீட்டியும் கோலம் போட்டிருந்தால் அதைப் பார்க்கிற போது ஒரு ஸந்தோஷம், எதுவோ ஒன்று ரொம்ப சரியாயிருக்கிறது என்ற ரசிப்பு உண்டாகிறது. வட்டமோ, சதுரமோ, வளைவோ, கோணமோ கொஞ்சம் கோணலாக இருந்தால் மனஸுக்கு என்னமோபோல் இருக்கிறது. எதனாலென்றால் இந்த வெளி ஒழுங்குகளுக்கு ஆதாரமாக ஏதோ ஓர் உள்ளொழுங்கான தத்துவம் இருக்கிறது. கண்ணுக்கு வெளியொழுங்கு தெரிகிற மாதிரி நம் உள்ளுக்குள்ளே, உள்ளத்துக்குள்ளே அந்தத் தத்துவத்தைப் பற்றி நமக்குத் தெரியாமலே ஒரு ஞானம் இருக்கிறது. எனவே, அதற்கு இது - வெளியிலே ஒழுங்கு செய்திருப்பது - ஒத்துப்போகிற போது மனஸில் நிறைவு உண்டாகிறது.

இதே மாதிரி சுத்தமான அந்த கரணமுள்ள ரிஷிகள் முதலான மஹான்களுக்கு உள்ளுக்குள்ளே ஸ்வச்சமாகத் தெரிந்த ஒரு அடிப்படைக்கு ஒத்துப் போவதாக வெளியிலே பின்பற்ற வேண்டிய அநேக ஒழுங்குகளைத்தான் ஒழுக்கம் என்று வைத்து தர்ம வாழ்க்கையை அமைத்திருக்கிறது. இதற்கு அடிப்படையாய் உள்ளே ஒரு தத்துவம் இருக்கிறது என்றேனே, அது என்னவென்றால், அதுதான் ‘ஸத்யம்’ என்பது. நம்முடைய வெளி அறிவுக்கும் புரிகிறமாதிரி இந்த ஸத்யத்தை எடுத்துச் சொல்பவையே வேத, உபநிஷத சாஸ்திரங்கள், ஒழுங்கு மாதிரி, தர்மம் மாதிரி வெளியிலே எத்தனை செய்தாலும் அந்த ஸத்யத்துக்கு இது ஒத்துப் போகாவிட்டால் இது மன நிறைவைத் தராது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment