Thursday, November 15, 2012

'காதல் கசப்பு அல்ல... சாதி வெறுப்பு!'' தர்மபுரி ரியாக்ஷன்



தலித் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய அனைவரது கவனமும் அந்த இடத்தை நோக்கி குவிந்துள்ளது.  'தர்மபுரி நத்தம் காலனியில் நடந்த வன்முறை, திட்டமிட்டு நடத்தப்பட்ட சாதிய அடக்குமுறை. எந்த சிகிச்சைகளாலும் சீர்செய்ய முடியாத அளவுக்கு, அந்தக் கிராம மக்களின் மனங்களை நசுக்கிப் போட்டுள்ளது வன்முறைக் கும்பல்’ என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'இளம் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’ மாநில துணைச்செயலாளர் நந்தன். அவரைச் சந்தித்து நடந்த விஷயங்கள் குறித்துக் கேட்டோம். 
''காதல் திருமணம்தான் பிரச்னை என்றால் அது இரண்டு குடும்பங்களுக்கு இடையிலானது. ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும், அந்தக் குடும்பத்தின் மீது மட்டும் கோபத்தைக் காட்டி இருந்தால்கூட ஏதோ நியாயம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், ஊரையே எரிக்கத் தூண்டியது திட்டமிட்ட சாதிய ஒடுக்குமுறைதான். சம்பவம் நடக்கும்போது ஊருக்குள் வெளியாட்கள், போலீஸ், அரசு அதிகாரிகள் போன்றோர் விரைந்து வந்துவிடக் கூடாது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் வழிநெடுக பெரிய மரங்களை வெட்டிச் சாய்த்தது. மெஷின் மூலம் மரங்களை வெட்டிச் சாய்ப்பது, திட்டமிடாமலும், அதற்கான கருவிகளைத் தயார் நிலையில் 

வைக்காமலும் சாத்தியமாகாது. அதேபோன்று பேரல் பேரலாக மண்ணெண்ணெய், பெட்ரோல், தின்னர் ஆகிய பொருட்களை இரண்டு நாட்களாகவே சேகரித்து வந்திருக்கிறார்கள். அவற்றைச் சின்னச் சின்ன பாட்டில்களில் அடைத்தும் வைத்துள்ளனர். அந்த பாட்டில்களின் மூடியில் துளைபோட்டு எரிபொருளை பீய்ச்சி அடிக்கும்வகையில் தயார் செய்து இருக்கிறார்கள். ஆவேசத்தின் காரணமாக நடந்த தாக்குதலாக இருந்தால், இவற்றை எல்லாம் எப்படி தயார் செய்திருக்க முடியும்? நிச்சயமாக சாதிய ஒடுக்கு முறையைத் தவிர வேறு எதுவும் இல்லை. மீண்டும், தலித்துகளை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள். மற் றவர்களைப் போல் நாங்களும் வாழ நினைப்பது ஒரு தவறா? இன்று பல ஊர்களில் விவசாயம் திண்டாடுவதன் பின்னணி என்ன தெரியுமா? காலம் காலமாக விவசாயக் கூலிகளாக உழைத்த எங்கள் சமூக ஆட்கள் மாற்றுப் பொருளாதார வாய்ப்புகளைத் தேடிப் போய்விட்டனர். அதனால், ஆட்கள் கிடைக்கவில்லை. சாதி இந்துக்களால் எங்கள் ஆட்களைப் போன்று கடுமையாக உழைக்க முடியாத காரணத்தால்தான், விவசாயம் முடங்கிக் கிடக்கிறது. எங்கள் சமூகத்தினர் புதிய வாய்ப்புகளைத் தேடிப்போனது, பொருளாதாரத்தில் முன்னேறுவது, நல்ல வீடு, வாகனங்கள் வாங் குவதுபோன்ற அனைத்தும் அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. சுமார் 40 ஆண்டு கால உழைப்பில் கட்டிய வீடு, பொருட்களை சேதப்படுத்தி விட்டனர். இத்தனை நாள் சேகரித்த பணம், நகைகளைத் திருடி விட்டனர். பழைய தெம்போடு அந்த மக்கள் எழுந்து நடமாடவே பல மாதங்கள் பிடிக்கும். இந்தச் சூழலில் பழைய பொருளாதார நிறைவோடு நிமிர்ந்து நிற்க இன்னும் ஒரு தலைமுறை போராட வேண்டும். எங்கள் மக்களின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் சிதைத்து முடக்குவதே அவர்களின் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது.''
''சாதிய ஒடுக்குமுறை எண்ணம்தான் வன்முறை​யின் பின்னணி என்பதை உறுதியாகச் சொல்​கிறீர்களா?''
''உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுவிட்டால் சட்டத்​தின் பிடியில் வலுவாக சிக்க நேரிடும் என்பதைத் தெரிந்துகொண்டு, ஓர் எல்லையை வரையறுத்துக் கொண்டு, இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். ஒருவரின் சாவு ஏற்படுத்திய உணர்வு வேகத்தில் நடக்கும் பெரும் கலவரத்தை ஓர் உயிர்ச் சேதம்கூட இல்லாமல் மிகநேர்த்தியாக நடத்த முடியுமா? மன தளவில் எங்கள் மக்களைக் குன்றிப்போக வைத்து, பய உணர்வை ஏற்படுத்தி, காலம் முழுக்க அதிகாரம் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். இது சாதிய ஒடுக்குமுறைதான்.''
''சம்பவத்தின் பின்னணியில் யாரும் செயல்பட்​டதாக நினைக்கிறீர்களா?''
''கட்சிப் பாகுபாட்டை கடந்து 'வன்னியர்’ என்ற ரீதியில் அந்தப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து செய்துள்ளனர். அனைவரையும் வழி நடத்தியது உள்ளூர் பா.ம.க-வினர்தான். இவர்களைக் கடந்து வேறு ஏதேனும் பெரிய சக்திகூட அவர்களின் வெறி யாட்டத்தை ஆசீர்வதித்து அனுப்பி இருக்கலாம். குறிப்பாக, சாதி மறுப்பு திருமணத்துக்கு எதிரான, காடுவெட்டி குருவின் பேச்சு இந்த வன்முறைக்கு இன்னொரு முக்கியக் காரணம்.''
''சில தலித் இளைஞர்கள் காதலை கருவியாகப் பயன்படுத்தி பணம் பறித்ததும் இந்த வன்முறைக்கு முக்கியக் காரணம் என்கிறார்களே?''
''இது அப்பட்டமான பொய். தலித்கள் அனைத்து சாதியினருக்கும் எதிரானவர்கள் என சித்திரித்து சமூக தளத்தில் நாங்கள் இயங்க முடியாதபடி செய்யப்படும் சதி. சில நேரங்களில் அரசு வேலை வாய்ப்புகளை மனதில் வைத்து சொந்த விருப்பத்தின் பெயரில் கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. அதுபோக இயல்பான ஈர்ப்போடு பெரும்பாலான காதல் திருமணங்கள் நடக்கின்றன. காதல் திருமணம் நடக்கும் நேரங்களில், சாதி இந்துப் பெண்களின் பெற்றோர் பணத்தைக் காட்டி காதலை விலை பேசுகிறார்கள். எந்த தலித் இளைஞனும் தன்னை நம்பிவந்த பெண்ணைக் கைவிட்டது இல்லை. பெண் வீட்டில் பணம் பறித்ததும் இல்லை. மாறாக தலித் இளம்பெண்களை சீரழித்துப் பணம் கொடுத்துக் கைகழுவிய இதர சாதி இளைஞர்கள் பற்றிய பல தகவல்கள் என் கையில் இருக்கின்றன''
''இவற்றை சரிசெய்ய என்னதான் வழி?''
''சாதிகளைக் கடந்து, தமிழன் என்ற உணர்வோடு சமூகத்தில் அனைவரும் இயங்குவது மட்டுமே இதற்குத் தீர்வு. சூதுவாது இல்லாத உண்மையான நல்லிணக்க உணர்வை மீட்டு எடுக்காதவரை எங்கள் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு கிடையாது. அதை சாத்தியமாக்க முடியாது என்றால், பாதுகாப்பு கருதி அரசே ஒவ்வொரு தலித் வீட்டுக்கும் ஆயுதங்களைக் தந்து விடட்டும்.'

No comments:

Post a Comment