சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதம் அளவுக்கு அனுமதிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் பெரிய கம்பெனிகள் இந்தியாவுக்குள் கடை விரித்தால், சின்ன சின்னதாக கடை வைத்திருப்பவர்கள் காணாமல் போய்விடுவோம் என்று அஞ்சுகிறார்கள் பலர்.
இந்த பயம் ஒருபக்கமிருக்க, சூப்பர் மார்க்கெட்டுகளின் ஆதிக்கம் என்பது கடந்த அறுபது ஆண்டு கால சமாசாரம்தான். இந்த சூப்பர் மார்க்கெட்டுகள் வருவதற்கு முன்பு உலக அளவில் சிறிய கடைகள்தான் இருந்தன. பெரிய கடைகள் வழக்கத்திற்கு வந்தபோது இந்த சின்னக் கடைகள் எப்படி ஈடு தந்து வியாபாரம் செய்தன? இது தொடர்பாக அமெரிக்கா முதல் சீனா வரை உள்ள அனுபவங்களையும் படிப்பினையையும் கொஞ்சம் தேடிப் பார்ப்போமா..?
அமெரிக்கா!
செப்டம்பர் 1, 1945 சாம் வால்ட்டன் தனது 27-வது வயதில் அமெரிக்காவின் அர்கன்சாஸ் நகரில் பட்லர் பிரதர்ஸ் நஷ்டத்தில் நடத்திவந்த பென் ஃபிராங்க்ளின் என்கிற கடையை 25 ஆயிரம் டாலருக்கு வாங்கி நடத்த ஆரம்பித்தார்.
நான்கே ஆண்டுகளில் அதை பென் ஃபிராங்க்ளின் கடைகளிலேயே முதலாவதாக மாற்றிக் காண்பித்தார். இந்த வெற்றிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு 1962 ஜூலையில் தனது முதல் வால்மார்ட் கடையை அதே அர்கன்சாஸ் நகரில் ஆரம்பித்தார் சாம் வால்ட்டன்.
வருமானத்தில் இன்று உலகிலேயே நம்பர் ஒன் இதுதான். இதன் வருமானம் 421 பில்லியன் டாலர்கள். இதன் மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் 21 லட்சம் பேர். கிட்டத்தட்ட 15 நாடுகளில் 8,900 கடைகளுடன் தனது வளர்ச்சியைப் பறைசாற்றி வருகிறது. இதனுடன் அமெரிக்காவில் கிரோஜர், டார்கெட், காஸ்ட்கோ என பல கடைகள் போட்டி போடுகின்றன.
எங்கெல்லாம் வால்மார்ட் கடைகள் ஆரம்பிக்கப்பட்டனவோ, அங்கெல்லாம் இருந்த 'மாம்-பாப்’ என அழைக்கப்படும் சிறிய கடைகள் 'நடையை’க் கட்ட ஆரம்பித்தன என்று உலகம் முழுவதும் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. இதுகுறித்து அயோவா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பொருளாதார பேராசிரியராக வேலை பார்க்கும் கென்னத் ஸ்டோன் என்பவர் ஒரு ஆய்வு நடத்தினார். அதன்படி வால்மார்ட் ஆரம்பித்த பத்தாண்டுகளில் அந்த பகுதியில் இருந்த பல சிறிய கடைகள் நடையைக் கட்டத்தான் செய்தன. ஆனால், வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்ட கடைகள் நன்றாகவே 'கடை’ கட்டின என்கிற உண்மையை எடுத்துச் சொன்னார்.
தென் கொரியா!
இந்தோனேஷியாவில் 1990-களில் மாடர்ன் ரீடெயில் தலையெடுக்க ஆரம்பித்தது. எத்தனை கடைகள் வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாம் என நூறு சதவிகிதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. இருந்தாலும், இன்றைக்கு பெரிய ரீடெயில் நிறுவனமாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருப்பது 'மாட்டாஹரி’ என்கிற உள்ளூர் ரீடெயில் நிறுவனம். 'மாட்டாஹரி’ என்றால் 'சூரியன்’ என்று அர்த்தம். சூரியனுக்கு நிரந்தர அஸ்தமனம் உண்டா என்ன?! ஆரம்பத்தில் அரசு சிறு வணிகர்களுக்குப் பாதுகாப்பு தரும் பொருட்டு சில வரைமுறைகளை அறிவித்தது. அதற்குப் பிறகு அவைகள் தளர்த்தப்பட்டன.
சீனா!
1992-ல் சில்லறை வணிகத்தில் 49 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதித்தது. அதன்படி அந்நிய நிறுவனங்கள் ஆறு பெரிய நகரங்களிலும், ஐந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் தங்களது கடைகளை ஆரம்பிக்கலாம் என அறிவித்தது. அதன்பிறகு சீனா டபிள்யூ.டி.ஓ. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபின் 2002-ல் 100 சதவிகித முதலீட்டை அனுமதித்தது. இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 600 ஹைப்பர் மார்க்கெட்டுகள் (வால்மார்ட், கார்ஃபோர், மெட்ரோ மற்றும் சீன ரீடெயில் நிறுவனங்கள்) ஆரம்பிக்கப்பட்டன. இதனால் சிறுவணிகர்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடவில்லை. மாறாக 19 லட்சம் சிறு கடைகள் 25 லட்சமாக வளர்ந்தது. ரீடெயில் மற்றும் மொத்த விற்பனையில் வேலை வாய்ப்பு 2.8 கோடியிலிருந்து 5.4 கோடியைத் தொட்டது. எப்படி இது சாத்தியமானது?
சீனாவின் மக்கள் தொகை, நகர்ப்புறமாகிவரும் கிராமங்கள், பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படும் வேலைவாய்ப்பு வளர்ச்சி, ரீடெயில் நிறுவனங்கள் பொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்ததால் இடைத்தரகர்கள் அகற்றப்பட்டார்கள். இதனால், பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு விற்க முடிந்தது. வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையினால் விநியோகச் சங்கிலி மேலாண்மை (Supply Chain Management) மேன்மையடைந்தது; உற்பத்தித்திறன் அதிகரித்தது. இன்றைக்கு சீனாவில் மாடர்ன் ரீடெயிலின் பங்கு 20 சதவிகிதம். மீதி 80 சதவிகிதம் சிறு வணிகர்களின் கையில்.
இந்தியாவில்..?
இந்திய அரசும் சில்லறை வணிகத்தில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் திறந்துவிடவில்லை. பல வரைமுறைகளை விதித்தே அந்நிய நிறுவனங்களுக்கு தற்போது அனுமதி தந்திருக்கின்றன. அதன்படி, அவர்கள்,
1. மெட்ரோ நகரங்கள் என அழைக்கப்படும் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட 53 நகரங்களில் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) மட்டும்தான் கடைகளை நிறுவலாம்.
2. குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதில் 50 சதவிகிதம் பேக் எண்ட் உள்கட்டமைப்பு எனப்படும் பதப்படுத்துதல், உற்பத்தி, விநியோகம், தர நிர்ணயம், பேக்கேஜிங், லாஜிஸ்டிக், ஸ்டோரேஜ், குடோன், டிசைன் இன்ப்ரூவ்மென்ட் என பல துறைகளில் செலவிட வேண்டும்.
3. முப்பது சதவிகித பொருட்களை உள்நாட்டில் உள்ள 5 கோடி ரூபாய்க்கும் குறைவாக மூலதனத்தில் நடத்தப்பட்டு வரும் சிறிய, நடுத்தர நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டும்.
ஆரம்பத்தில் இந்தியத் தொழில் குழுமங்கள் ரீடெயில் துறையில் நுழைந்தபோது இதே மாதிரியான எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. ஆனால், 2008-09 பொருளாதார நெருக்கடி எனும் சுனாமியில் இந்த தொழில் குழுமங்களைச் சேர்ந்த சில கிளைகள் மூடின. இதனால் மாடர்ன் ரீடெயிலின் வளர்ச்சி சிறிது பாதிக்கப்பட்டது. ஆனால், சிறு வணிகர்கள் முன்பைவிட இன்றைக்கு தங்களது வியாபாரத்தைச் சிறப்பாகவே நடத்தி வருகிறார்கள்.
தவிர, மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி. போன்ற அமெரிக்க நிறுவனங்கள் வந்ததினால் உள்ளூரில் எந்த உணவு விடுதியும் மூடவில்லை. மாறாக, பலவிதமான ரெஸ்டாரன்ட்கள் திறக்கப்பட்டுதான் வருகிறது. பாரிஸ்டா, கோஸ்டா காபி, ஸ்டார்பக்ஸ் காபி கடைகள் வந்தாலும் நம்மூரில் டீ கடைகள் மூடப்படுமா என்ன?
வெளிநாட்டு நிறுவனங்கள் குட்டிக் கரணம் போட்டாலும் லோக்கல் கடைகளுடன் போட்டி போட முடியாது. உதாரணத்திற்கு, வீட்டிற்கு அருகில் கடை இருப்பதால் நமக்கு வேண்டிய சாமான்களை உடனடியாகச் சென்று வாங்கி வரமுடியும் அல்லது ஒரு போன் போட்டால் வீட்டுக்கே சரக்கு அனுப்பிவிடுவார் அண்ணாச்சி. தவிர, கடையில் கணக்கு வைத்துக்கொண்டு மாத இறுதியில் பணம் செலுத்தலாம். அரிசி, பருப்பு சரியாக அவியவில்லை என்றாலும் திரும்ப வாங்கிக்கொண்டு, மாற்றித் தருவார். இன்றைய தேதியில் மார்டன் ரீடெயிலின் பங்கு இந்திய நுகர்பொருள் சந்தையில் 6 சதவிகிதம்தான். மீதி 94 சதவிகிதம் அண்ணாச்சிகளின் கையில்தான்.
என்றாலும், வெளிநாட்டு ரீடெயிலின் வருகையால் வேலைவாய்ப்பும், உள்கட்டமைப்பு வளர்ச்சியும் கண்டிப்பாக இருக்கும். இதனால் குடோனில் வீணாகிக் கொண்டிருக்கும் அரிசி, கோதுமை, காய்கறி, பழங்கள் நுகர்வோர்களைச் சென்றடையும். இன்றைய நிலையில் நமது எதிர்கால வளர்ச்சிக்கு இது மிக மிக முக்கியம். எந்தவொரு துறையிலும் வளர்ச்சி என்று வரும்போது வீழ்ச்சியும் இருக்கத்தான் செய்யும். ஆனால், பொதுவாக வீழ்ச்சியை ஒப்பிடும்போது வளர்ச்சியே அதிகம் இருக்கும்.
உதாரணமாக, கம்ப்யூட்டர் அறிமுகமானபோது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் அதை எதிர்த்தார்கள். ஆனால், இன்று கம்ப்யூட்டர் நுழையாத துறையே இல்லை.
இதுபோல ரீடெயில் துறையிலும் வேலைவாய்ப்புகள் பன்மடங்கு பெருகவே வாய்ப்புண்டு.
No comments:
Post a Comment