Wednesday, November 7, 2012

எனது இந்தியா (முதல் உலகப் போர்!) - எஸ். ராமகிருஷ்ணன்....


யுத்தம் என்பது மிகப் பெரிய வணிகச் சந்தை என்று எழுத்தாளர் ஆர்தர் கோஸ்ட்​லர் குறிப்பிடுகிறார். அது முற்றிலும் உண்மை. ஆயுதங்கள், கனரக வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், அதற்கான எரிபொருள், பல்லாயிரக்​கணக்கான ராணுவ வீரர்களுக்கான உடைகள், உணவு மற்றும் குடிநீர், மருந்து, இறந்த உடல்களை அப்புறப்படுத்தும் உதவியாட்கள், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், தொலைத் தொடர்புக் கருவிகள், ரசாயனப் பொருட்கள் என்று கோடிக்கோடியாகப் பணம் சம்பாதிக்கும் சந்தையாக யுத்தம் திகழ்கிறது. ஆகவே, உலகில் ஏதாவது ஒரு நாட்டில் யுத்தம் நடந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த யுத்த முதலாளி​களால் தங்​களுடைய கொள்ளை வணிகத்தில் வளம் கொழிக்க முடியும். யுத்தம் என்பது தானே ஏற்படு​வது இல்லை. அது உருவாக்கப்படுகிறது. அதற்கான காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன. போர்ச் சூழல், வணிகத்தின் அடிப்​படைத் தந்திரம். இந்த யுத்த வணிகத்தில் ஈடுபடுவது தனிநபர்களாக இருந்தாலும், அவர்களை ஊக்கப்படுத்தி தன்னை வளர்த்துக்​கொள்வது நாடுகளே. யுத்தம் வணிகமாகக் கடைவிரிக்கப்பட்டதுதான் முதல் உலகப் போர். இன்று வளர்ந்து விஸ்வரூபம் எடுத்துள்ள ஆயுத விற்பனைச் சந்தைக்கு அதுவே முதல் புள்ளி.
 

தனக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத முதல் உலகப் போரில் 1.3 மில்லியன் இந்திய வீரர்களும் தொழிலாளர்களும், ஐரோப்பா, ஆப்பி​ரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கில் போரிட்​டனர். இப்படி, லட்சக்கணக்கான இந்திய வீரர்கள் ஆவேசமாகச் சண்டை​யிட்டு உயிர்த் தியாகம் செய்தது, ஒட்டுமொத்த இந்தியாவை அடிமையாக வைத்திருந்தாலும் நாங்கள் பிரிட்டனின் நலனுக்​காக என்றும் விசுவாசமாக இருப்போம் என்ற அடிமைப் புத்தியையே காட்டியது. இது, எஜமானின் சந்தோஷத்துக்காக அடிமைகள் சண்டை​யிட்டு சாகும் அவலத்தின் மறு வடிவமே. முதல் உலகப் போர் முடிந்து 94 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் அது, உலக அரங்கில் உருவாக்கிய தவறான முன்மாதிரிகள், ஏற்படுத்திய அரசியல் குழப்பங்கள், தந்திரங்கள் ஆகியவை, ஆழமான பாதிப்பை இன்றும் ஏற்படுத்திவருகின்றன. குறிப்பாக, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது, யுத்த நியதிகளை மீறிய கடற்படைத் தாக்குதல்கள், கணக்கில் அடங்காத ஆயுதங்களாலும், அதன் பின் விளைவுகளாக உருவான நோயாலும் பல லட்சம் சாமான்ய மக்களைக் கொன்று குவித்த அவலம் இன்றும் குருதி கசியும் ஆறாத வடுக்களாகவே இருக்கின்றன.

1857-ம் ஆண்டு ஏற்பட்ட சுதந்திர எழுச்சியால் கொந்தளித்துக்​ கிடந்த இந்தியா, எப்படி முதல் உலகப் போரில் பங்குபெற்றது? எதனால் இந்த முதல் உலகப் போர் நடந்தது? இதில், பிரிட்டனின் நிலைப்பாடு எப்படி இருந்தது? என்று தெரிந்துகொள்ளும்போதுதான், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை நாம் புரிந்து​கொள்ள முடியும். 1914-ம் ஆண்டு ஜுன் 28-ம் தேதி ஆஸ்திரிய இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவி சோஃபியாவும் போஸ்னி​யாவின் தலைநகர் செரஜிவோ நகரில் காரில் சென்றபோது, காவ்ரீலோ பிரின்சிப் என்ற செர்பிய நாட்டைச் சேர்ந்த இளைஞனால்  சுட்டுக் கொல்லப்பட்டதுதான் முதல் உலகப் போர் தொடங்குவதற்கான தொடக்கப் புள்ளி என்கின்றனர். ஆனால், இந்த ஒரு சந்தர்ப்பத்துக்காக மட்டுமே, பிரிட்டனும் பிரான்ஸும் ஜெர்மனியோடு யுத்தம் செய்வதற்காக நீண்ட காலமாகக் காத்திருந்தன என்பதே உண்மை. ஜெர்மனியின் தொழில் துறை முன்னேற்றமும், ஒருங்கிணைந்த ஜெர்மனியின் வளர்ச்சியும், பிரிட்டனை உள்ளூறக் கொதிப்படையச் செய்தது. 1914-க்கு முன்பே, கடற்படையின் பலத்தைப் பெருக்கிக்கொள்வதில் பிரிட்டனும் ஜெர்மனியும் போட்டியிட்டன. இதற்காக, இரண்டு நாடுகளும் போர்க் கப்பல்களைக் கட்ட நிறையப் பணத்தை செலவழித்தன. நீண்ட காலமாகவே பொருளியல், படைத் துறை, குடியேற்றங்கள் தொடர்பாக பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் மறைமுகப் போட்டிகள் நடந்துவந்த காலம் அது. அதன் உச்ச நிலையே, முதல் உலகப் போரில் பிரிட்டன் களம் இறங்கியது.


இன்னொரு பக்கம், ஜெர்மனியிடம் தங்களின் நிலப் பகுதிகளை இழந்ததில் பிரான்ஸ் உள்ளுக்குள் குமுறிக்கொண்டு இருந்தது. இன்று ஆஸ்திரியா, ஹங்கேரி இரண்டும் தனி நாடுகளாக இருக்கின்றன. முன்பு, அவை ஒன்றாக இருந்தன. ரஷ்ய எல்லையை ஒட்டி அமைந்த நாடு அது. அதன் எல்லைப் பகுதியில் போஸ்னியா இருக்கிறது. அதுவும் ஆஸ்திரியாவால் ஆளப்பட்டு வந்தது. போஸ்னியாவில் வாழ்ந்து வந்த ஸ்லாவ் இன மக்கள், ஆஸ்திரியா தங்களை ஆள்வதை பிடிக்காமல் கிளர்ந்து எழ முயன்றனர். இவர்களுக்கு செர்பியாவில் உள்ள ஸ்லாவியர்கள் துணையாக இருந்தனர். இது, முக்கியப் பிரச்னை ஆனது. இந்தச் சூழலில்தான், உலகப் போர் தொடங்கியது. நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே முதல் உலகப் போர் நடைபெற்றது. நேச நாடுகள் அணியில் பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் இருந்தன. மைய நாடுகளின் கூட்டணியில் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஓட்டோமான் பேரரசு மற்றும் பல்கேரியா ஆகியவை இடம்பெற்று இருந்தன. ஐரோப்பா கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் போர் நடந்தது. மேற்கு முனை முழுவதும் பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தன. கிழக்கு முனை பரந்த வெளியாக இருந்த காரணத்தாலும் முறையான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தாலும் யுத்தத்தில் சற்றுப் பின்தங்கி இருந்தது. பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளில்தான் கடும் சண்டை நடந்தது. எல்லைப் பிரச்னை, நாடு பிடித்தல், ஆக்கிரமிப்பு, பொருளாதாரப் போட்டிகள் மற்றும் ராணுவவாதம் போன்றவை இந்த யுத்தத்தின் பின்புலக் காரணிகளாக இருந்தன. புகைந்துகொண்டு இருந்த பகை, பற்றிக்கொள்வதற்கு இளவரசர் பிரான்சிஸ் பெர்டினாண்ட் கொல்லப்பட்டது தொடக்கமாக அமைந்துவிட்டது. ஹங்கேரிய இளவரசர் கொல்லப்​பட்டது, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். தெற்கு ஸ்லாவியப் பகுதிகளை ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரியின் பிடியில் இருந்து விடுவிப்பதை நோக்கமாகக்கொண்ட 'இளம் பாஸ்னியா’ எனும் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் அது. அந்தத் தாக்குதலை நடத்திய பிரின்சிப்-புக்கு வயது 19.

செர்பியர்கள் அதிகம் வாழ்ந்துவந்த போஸ்னியா ஹெர்சகொவினாவை 1878-ம் ஆண்டில் ஆஸ்திரியா ஹங்கேரி கைப்பற்றிக்கொண்டது. 1908-ம் ஆண்டில், செர்பியா முறையாக ஆஸ்திரியா ஹங்கேரியுடன் இணைக்கப்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த செர்பியர்கள், ஆஸ்திரியா  ஹங்கேரியின் பிடியில் இருந்து விடுபட வேண்டி போராடத் தொடங்கினர். அந்த எதிர்ப்பு அரசியல், செர்பியா முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இளைஞர்கள் குழுக்களாக செயல்படத் தொடங்கி, ஆஸ்திரியா ஹங்கேரியின் செயல்பாடுகளுக்குப் பதிலடி கொடுக்க முனைந்தனர். அதற்காக உருவாக்கப்பட்டதே இளம் பாஸ்னியா என்ற அமைப்பு.

பெல்கிரேடில் படித்த இளைஞனான காவ்ரீலோ பிரின்செப் இதில் தீவிரமாக செயல்படத் தொடங்​கினான். ஆயுதப் போராட்டத்தின் மூலம் தனது தேசத்தில் அரசியல் எழுச்சியை உருவாக்கிவிட முடியும் என்று பிரின்செப் நம்பினான். அந்த நம்பிக்கையை அவனுக்கு உருவாக்கியவன் ஜிராசிக். அவன் ஒரு ஆயுதப் போராளி. 1910-ம் ஆண்டு போஸ்னியாவில் உருவான விவசாயிகளின் எழுச்சி​யை அன்றைய போஸ்னிய கவர்னர் மர்ஜியேன் வரெஜனின் இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கினார். அந்த கொடுஞ்செயலுக்குப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக, கவர்னரைக் கொல்வதற்கு ஜிராசிக் முயன்றான். 1910-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி, கவர்னரை நோக்கி ஐந்து முறை சுட்டான் ஜிராசிக். ஆனால், அவர் தப்பித்துவிட்டார். கொலை முயற்சி தோல்வி அடைந்ததால், தன்னைத்தானே சுட்டுக் கொன்று செத்துப்போனான் ஜிராசிக். அந்தச் சம்பவம் தேசத்தை உலுக்கியது. பிரின்செப் தனது பதின் வயதில் ஜிராசிக்கின் கல்லறைக்குச் சென்று இரவு முழுவதும் அங்கேயே உட்கார்ந்து இருந்தான். ஜிராசிக்கைப் போல ஆஸ்திரேயாவின் அதிகாரத்தை எதிர்த்து ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் ஆழமாகப் பதிந்தது. அன்று முதல், அதற்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டு இருந்தான். பிளாக் ஹேண்ட் எனப்படும் ரகசிய இயக்கம் ஆஸ்திரிய மன்னர் ஃபிரடெரிக் ஜோசப்பைக் கொல்ல வேண்டும் என்று திட்டத்தில் இருந்தது. ஆனால், மன்னர் வயதாகி நோயுற்ற காரணத்தால் செர்பியப் பகுதிகளை ஆட்சி செய்துவரும் ஆஸ்கார் பொடியோரெக் என்ற போஸ்னி​யாவின் கவர்னரை அழித்து ஒழிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக இளைஞர்கள் சிலரை பெல்கிரேடில் சிறப்புப் பயிற்சி கொடுத்து போஸ்னி​யாவுக்குள் அனுப்பிவைத்தனர். அப்படி ஆயுதப் பயிற்சி பெற்ற ஒருவன் மெஹமெட்பாசிக். ஹெர்சகொவினா நகரைச் சேர்ந்த தச்சன். பிளாக் ஹேண்ட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த மெஹமெட்பாசிக், போஸ்னியாவில் அரசியல் மாற்றம் ஏற்படுவதற்காக தனது உயிரையும் தருவதாக சத்தியம் செய்து இருந்தான்.

கவர்னரைக் கொலைசெய்வதற்கான இடம் மற்றும் நாள் குறித்து முடிவு செய்தவுடன் தெரிவிப்​பதாகச் சொல்லி, தேவையான எறிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் மெஹமெட்பாசிக்கை ரயிலில் அனுப்பிவைத்தனர். ஆனால், அந்த ரயிலில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. ஒரு பயணி​யின் பணப்பெட்டியை யாரோ ஒருவன் திருடிச் சென்றுவிட்டான். காவலர்கள், மற்ற எல்லாப் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். தன்னிடம் உள்ள ஆயுதங்களைக் காவ​லர்கள் கண்டுபிடித்துவிடுவார்களோ என்று பயந்த மெஹமெட்பாசிக், ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாக அவற்றை வெளியே தூக்கி எறிந்துவிட்டான். ஆனால், காவலர்கள் அவனிடம் சோதனை நடத்தவில்லை. இதனால், ஏமாற்ற​மடைந்தான் மெஹமெட்பாசிக். மீண்டும் ஆயுதங்களை அனுப்பிவைப்பதற்கு பிளாக் ஹேண்ட் இயக்கத்துக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. இந்த நிலையில், போஸ்னியாவில் உள்ள ராணுவத்தின் செயல்பாட்டை அறிந்து வரும்படி இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாண்ட்டை, ஆஸ்திரிய மன்னர் அனுப்பிவைத்தார். பிரான்சிஸ் பெர்டினாண்ட் தனது மனைவி சோஃபியாவுடன் செரஜிவோ வந்து சேர்ந்தார். உள்நாட்டுப் பிரச்னையால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்ற தகவல் முன்கூட்டியே தெரிந்திருந்தபோதும் அது வெறும் வதந்தி என்றே நினைத்தார் இளவரசர். ஆனால், அவரது மனைவி சோஃபியா தன் கணவரைப் பாதுகாக்கும் பொருட்டு தானும் உடன்வந்தாள். செரஜிவோவில் இளவரசன் பிரான்சிஸ் பெர்டினாண்டின் முக்கிய வேலைகளில் ஒன்று, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மியூசியத்தைத் திறந்துவைத்துப் பார்வையிடுவது. அந்த விழாவுக்கு வரும்போது அவரைக் கொல்ல வேண்டும் என்று பிளாக் ஹேண்ட் இயக்கம் முடிவு செய்தது.

இதற்காக, ஆயுதப் பயிற்சி பெற்ற மூன்று இளை​ஞர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதில் ஒருவன் காவ்ரீலோ பிரின்செப். மற்றவன் கிராபெஸ். மூன்றாவது ஆள் காப்ரினோவிச். பெல்கிரேடில் வசித்த இந்த மூவரையும் ஸாவா ஆற்றின் வழியில் போஸ்னியாவுக்கு அனுப்பிவைத்தனர். எல்லை கடந்து வருவதற்கு அனுமதி அட்டைகள் வேறு பெயர்களில் வாங்கப்பட்டு இருந்தன. அத்துடன், செரஜிவோ பாதாளச் சுரங்கப் பாதைகளுக்குள் சென்று வருவதற்கும் விசேஷ அடையாள அட்டை ஒன்றும் அவர்களுக்குத் தரப்பட்டு இருந்தது. அந்தத் தாக்குதலுக்கு உதவி செய்வதற்காக, மெஹமெட்பாசிக் அவர்களுடன் இணைந்துகொண்டான்.

No comments:

Post a Comment