"ரிலையன்ஸின் வளர்ச்சி... இந்தியாவின் வளர்ச்சி இல்லை!"
சமஸ்
படம் : கே.குணசீலன்
''ஆரம்ப காலத்தில் நீங்கள் ஒரு மார்க்சிஸ்ட் அல்லவா?''
''ஆமா, பள்ளிக்கூடக் காலத்துல. என் அப்பா விமான விபத்துல இறந்ததுக்குப் பிறகு, எங்க குடும்பம் இருந்த கஷ்டமான சூழல் எனக்குள்ளே நிறையக் கேள்விகளை எழுப்புச்சு. மார்க்ஸைப் படிச்சேன். ஆனா, இந்தியால இருந்த கம்யூனிஸ்ட்டு களின் நடவடிக்கைகள் அது எல்லாத்தையும் உடைச்சுடுச்சு. நேருவோட சோஷலிசம் பிடிச்சுது. அதே சமயம், நம்ம ஜனநாயகம் 'பூர்ஷ்வா ஜனநாயகம்’கிற எண்ணம் மட்டும் இன்னைக்கும் இருக்கு.''
''ராஜீவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் அவருடைய குடும்பத்துடனான உங்கள் உறவு எப்படி இருக்கிறது?''
''(பழைய நினைவுகளில் ஆழ்கிறார்) ராஜீவ்... என்னோட தம்பி முகுந்தோட வகுப்புத் தோழர். அப்போ பேச்சு, கட்டுரைனு டூன் ஸ்கூல்ல நான் பிரபலம். அதனால, ராஜீவுக்கு என்னைத் தெரியும். ஆனா, ஜூனியரான அவரை எனக்குத் தெரியாது. அதேபோல, கேம்பிரிட்ஜ்ல படிக்கும்போது நான் மாணவர்கள் பிரதிநிதித் தேர்தல்ல நின்னப்போ, அங்கே ஜூனியரா இருந்த ராஜீவ் எனக்காக சக இந்திய மாணவர்கள்கிட்ட ஆதரவு திரட்டி இருக்கார். ஆனா, அந்தச் சமயத்துல அதுவும் எனக்குத் தெரியாது. எனக்கும் ராஜீவுக்குமான இளவயதுப் பழக்கம் இப்படித்தான் இருந்துச்சு. நான் வெளியுறவுத் துறையில வேலை பார்த்துட்டு இருந்தப்ப, ஒரு மீட்டிங்ல ராஜீவும் நானும் சந்திச்சோம். அடையாளம் கண்டுக்கிட்டார்.
பொற்கோவில் தாக்குதல் நடந்த சமயத்துல பத்திரிகை தொடர்பு வேலையை அரசாங்கத்துல என்கிட்ட ஒப்படைச்சா. அந்தச் சமயத்துல தினம் நான் எழுதுற ரிப்போர்ட் ராஜீவ் கைக்குப் போகும்னு சொல்வா. பின்னாடி ராஜீவ் பிரதமர் ஆனப்ப, பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் ஆக்கினார். அவரோட அரசியல் நடவடிக்கைகளைப் பக்கத்துல இருந்து பார்த்ததால, அரசு வேலையைவிடவும் அரசியல் மூலமா மக்களுக்கு நிறையப் பண்ண முடியும்னு தோணுச்சு. 'நான் அரசியலுக்கு வந்துடலாம்னு நெனைக்கிறேன்.
நீங்க என்ன நெனைக்கிறேள்?’னு ஒருநாள் கேட்டேன். அவர் 'வேண்டாம்’னார். ஏன்னா, 'இங்கே உள்ள அரசியல் சூழல் உங்களை மாதிரி ஆளுங்களை அனுமதிக்காது’ன்னார். நான் பிடிவாதமா இருக்கவும், 'சரி, காங்கிரஸ்ல சேர்ந்துடுங்கோ, சேர்ந்து நல்லது பண்ணுவோம்’ னார். சேர்ந்தேன். ஆனா, அரசியல்ல நாங்க சேர்ந்து
சோனியாம்மாவுக்கு நான் ராஜீவுக்கு நெருக்கமானவன்னு தெரியும். கேசரியால் கட்சி சிதைஞ்சுக்கிட்டு இருந்த நேரம். அப்போ, சோனியாம்மாவைச் சந்திச்சேன். 'கேசரி இனியும் காங்கிரஸ் தலைவரா இருந்தா, கட்சி நாசமாயிடும்; நீங்க தலைவரா வாங்கோ’னு கூப்பிட்டேன். அவா 'முடியாது’னு சொல்லிட்டா. 'என்னை காங்கிரஸ்காரனா நீங்க பார்க்குறது இதுதான் கடைசி முறை’னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்போதான் மம்தா கூப்பிட்டதால, திரிணாமுல் காங்கிரஸ்ல சேர்ந்தேன். அடுத்த சில வாரங்கள்லயே சோனியாம்மா காங்கிரஸ் தலைவரானா... கூப்பிட்டா. நானும் காங்கிரஸுக்குப் போய்ட்டேன்.
அதற்குப் பிறகு, கட்சியோட அகில இந்தியச் செயலாளர் ஆக்கினா. அப்புறம், எம்.பி. வாய்ப்பு கொடுத்தா. அமைச்சர் வாய்ப்பு கொடுத்தா. ராஜீவோட கனவான பஞ்சாயத்து ராஜ் நனவாக அதுக்குனு ஒரு அமைச்சகத்தை உருவாக்கி என்கிட்ட கொடுத்தா. இன்னைக்கு ராஜ்ய சபா எம்.பி-யா இருக்குறதும் அவாளாலதானே? அதே போல ராகுல், பிரியங்காகூடவும் எப்பவும் நல்ல தொடர்புலதான் இருக்கேன்.''
''காமன்வெல்த் போட்டி ஊழல் பெரிதாக வெடிக்க முக்கியக் காரணங்களில் நீங்களும் ஒருவர். வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் அரசைக் காய்ச்சி எடுக்கிறீர்கள். காங்கிரஸ் தலைமை இதை எல்லாம் எப்படிப் பார்க்கிறது?''
''நேரு குடும்பமும் காங்கிரஸும் இல்லேன்னா, இந்தியா இருக்காதுனு நம்புற சராசரி காங்கிரஸ்காரன்தான் நானும். ஆனா, தவறுகளைச் சுட்டிக்காட்டுறது ஜனநாயகத்துல முக்கியமான கடமைனு நான் நெனைக்கிறேன். அதைத் தலைமை அனுமதிக்குறதாலதானே இன்னமும் கட்சியில் இருக்கேன்?''
''தமிழக காங்கிரஸில் உள்ள இரு பெரும் மூளைகள் என்று சிதம்பரத்தையும் உங்களையும் சொல்வார்கள். அடுத்த பிரதமர் வேட்பாளர் ஆக்கப்படலாம் என்கிற அளவுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் சிதம்பரம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு இருக்கிறார். நீங்களோ ஓரம்கட்டப்பட்டீர்கள். பெருநிறுவனங்களின் லாபிதான் இரண்டுக்கும் காரணமா?''
''கட்சியும் ஆட்சியும் இன்னைக்கு எது தன்னோட கொள்கைனு நெனைக்குதோ, அந்தக் கொள்கையோட ஆயிரம் சதவிகிதம் ஒட்டி இருக்கார் சிதம்பரம். நமக்கு சோஷலிசம் வேணாம்; அந்த வார்த்தையையே உபயோகம் பண்ணக் கூடாது; தனியாராலதான் நாட்டை முன்னேற்றத்துக்குக் கொண்டுபோக முடியும்கிறது அவரோட முழுமையான நம்பிக்கை. எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. நேரு, சோஷலிசம்... இதெல்லாம்தான் உண்மைனு இன்னும் நெனைச்சுக்கிட்டு இருக்கிறவன்.
என்னோட கொள்கை - சிதம்பரத்தோட கொள்கை ரெண்டுமே பிரதமருக்குத் தெரியும். இந்த மாதிரி சூழல்ல நம்ம கட்சி, ஆட்சி ரெண்டுமே அவருடைய கொள்கைதான் சரினு நம்புற நிலையில, அவரை வெச்சுக்கிறதுதான் முறை. என்னை வெச்சுக்கிட்டா, வீண் சண்டை போடுவேன்!''
''அமைச்சரவையைப் பெறுநிறுவனங்கள் தீர்மானிக்கின்றன என்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஜெய்பால் ரெட்டி இலாகா பறிப்புக்கு அதுதானே காரணம்?''
''நான் அப்படி நெனைக்கலை.''
''சரி, பெட்ரோலிய அமைச்சகம் உங்களிடம் இருந்து பறிக்கப்பட 'ரிலையன்ஸ்’ லாபிதானே காரணம்?''
''அப்படின்னு பலரும் சொல்றா. ஆனா, ஒரு விஷயம்... என்கிட்ட பெட்ரோலிய அமைச்சகத்தைக் கொடுத்தப்ப, தற்காலிகமான பொறுப்புலதான் கொடுத்தா. ஆனா, உலகமே பேசுற மாதிரி ஒரு காரியத்தை அதில் நான் பண்ணினேன். ஈரான்லேர்ந்து பாகிஸ்தான் வழியா இந்தியாவுக்கு எரிவாயு கொண்டுவர்ற திட்டத்தை ஆரம்பிச்சேன்.
விலை நிர்ணயத்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் கைகோத்து நின்னப்ப, எல்லோருமே அசந்துபோனா. பெட்ரோலிய அமைச்சகத்தை நானே தொடர்ந்து பார்க்குற முடிவை அரசு எடுக்கும்னு நிறையப் பேர் எதிர் பார்த்தா. ஆனா, ஆச்சர்யமா பெட்ரோலியத் துறை அப்போதான் என்கிட்டே இருந்து இன்னொருத்தர் கைக்குப் போச்சு. அப்படி மாத்தின நேரத்துல என்னை மட்டும் மாத்தினா. அதுதான் இந்தப் பேச்சுக்குக் காரணமாச்சு.''
''ஓர் அமைச்சராக உங்களை முகேஷ் அம்பானி சந்தித்து இருக்கிறாரா?''
''ரெண்டு முறை சந்திச்சு இருக்கார். முதல் முறை மரியாதை நிமித்தமா; ரெண்டாவது முறை ஜாம்நகர் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் சம்பந்தமா பேச வந்தார். ரிலையன்ஸ் சம்பந்தமா அவர் சில கோரிக்கைகளை வெச்சார். நான் முடியாதுனு சொல்லி அனுப்பிச் சுட்டேன்.''
''நீங்கள் நீக்கப்பட்ட பிறகு, பெட்ரோலிய அமைச்சகத்தில், 'ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்குச் சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டன அல்லவா?''
''ஆமாம். ஆனா, முரளி தியோரா மட்டும் எடுத்த முடிவு இல்லை அது. ஒரு அமைச்சரவைக் குழு அந்த முடிவை எடுத்தது.''
''ஒருவேளை நீங்கள் அமைச்சராகத் தொடர்ந்திருந்தால், 'ரிலையன்ஸ்’ விஷயத்தில் உங்கள் முடிவு என்னவாக இருந்திருக்கும்?''
''நான் எதிர்த்து இருப்பேன்.''
''இந்த நிலைப்பாடே உங்களை அந்தப் பதவியில் இருந்து அகற்றக் காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா?''
''தெரியலை. இப்படி யூகமாவே கேட்டா, எப்படி?''
''இந்தியாவில் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''உலகத்துல எந்த நாட்டுல ஊழல் நடந்தா லும் அதோட அடிப்படை தொழில் துறைதான். ஒரு நாட்டோட பொருளா தாரம் அந்த நாட்டோட தொழில் துறை சார்ந்து தான் இயங்கும். சுதந்திர இந்தியாவோட முதல் 45 வருஷங்கள்ல பொதுத் துறை நிறுவனங்களை நம்பி இருந்துச்சு தொழில் துறை. அவாளுக்கு ஏத்த முடிவுகளை எடுத்தோம். அப்புறம், தனியார் துறையைச் சார்ந்ததா நம்ம தொழில் துறையை மாத்தி அமைச்சோம். இப்ப இவாளுக்கு ஏத்த முடிவுகளை எடுக்குறோம்.
இப்ப நம்ம நாட்டோட தொழில் துறையைப் பத்துப் பதினஞ்சு பெரிய நிறுவனங்கள்கிட்ட ஒப்படைச்சுட்டோம். அப்படின்னா, அவங்க சொல்றதைக் கேட்டுத்தானே ஆகணும்? நாட்டுலயே அதிகமா முதலீடு பண்ற நிறுவனம் 'ரிலையன்ஸ்’. அது சொல்றதைக் கேட்டுதானே ஆகணும்? இந்த அளவுக்குத் தனியார் நிறுவனங்களைச் சார்ந்தவங்களா நாம மாறிட்டா, அவா செய்ற தப்புகள் அரசாங்கத்தை வந்துதானே சேரும்? ஆனா, ரிலையன்ஸின் வளர்ச்சி... இந்தியாவின் வளர்ச்சி இல்லையே?''
''உங்கள் பார்வையில் இதற்கு எதைத் தீர்வாகப் பார்க்கிறீர்கள்?''
''நேரு பாதையில் போறது. அப்படி ஒரு காலம் திரும்ப வரும்.''
''முதல் முறையாக, வட கிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டுக்காக அமைச்சராக நியமிக்கப்பட்டவர் என்கிற முறையில் சொல்லுங்கள்... பழங்குடியின மக்கள் ஆயுதம் தூக்க என்ன காரணம்? அவர்களின் கோரிக்கைகளுக்கு நம்முடைய அரசு நேர்மையாக நடந்துகொள்கிறதா?'
'
''இந்தக் கேள்விக்கு என் பதிலைவிட முக்கியம், அந்த மக்களோட பதில். அவாளோட எண்ணம். அரசாங்கம் தங்களுக்கு நியாயமா நடந்துக்குறதா அவா நெனைக்கலை.''
''அதிகாரத்தைப் பரவலாக்க உதவும் என்று பஞ்சாயத்து ராஜைப் பற்றி நினைத்தோம். ஆனால், அது ஊழலை அல்லவா பரவலாக்கி இருக்கிறது?''
''பல லட்சம் பேருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிச்சு இருக்கு பஞ்சாயத்து ராஜ். முக்கியமா பெண்கள், தலித்துகள் கைக்கு அதிகாரம் போய் இருக்கு. இது எல்லாத்தையும் நீங்க கணக்கில் எடுத்துக்கணும். எல்லாருமே ஊழல்வாதிகள்னு பொதுவாச் சொல்லிடக் கூடாது.''
''வெளியுறவுத் துறையில் கால் நூற்றாண்டுக்கு மேல் பணியாற்றியவர் என்கிற முறையில் சொல்லுங்கள்... இந்தியப் பிரதமர்களிலேயே யாருடைய காலத்தில் வெளியுறவுக் கொள்கை சிறப்பாக இருந்தது?''
''நேருவைத்தான் சொல்லணும். அவர்தானே இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு முகமே கொடுத்தார்?''
''ஆனால், அவர் வகுத்த கொள்கை சீனா முதல் இலங்கை வரை நமக்குத் தோல்விகளைத்தானே தந்திருக்கின்றன?''
''வெளியறவு நலன்கிறது ஒரே விஷயம்தான். பிற நாடுகளோட நல்ல உறவைப் பராமரிக்கிறது. அதை நாம செய்றோம்.''
''நீங்கள் நழுவுகிறீர்கள்... இலங்கை விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். நம்முடைய நிலைப்பாடு சரியா?''
''நூறு சதவிகிதம் சரி.''
''அதாவது, உங்கள் நண்பர் ராஜபக்ஷேவை நம்புவது சரி என்கிறீர்கள்?''
''நீங்க உள்நோக்கத்தோடு கேட்கிறேள். நான் வெளியுறவுத் துறையில் இருந்தவன். எல்லாரோடும் பழகுறவன். ராஜபக்ஷே இல்லை; சந்திரிகாகூடத் தான் எனக்கு நண்பர். அது வேற விஷயம். அதை வெச்சு என் தமிழ் உணர்வை நீங்க கேள்விக்கு உள்ளாக்க வேணாம். இலங்கை விவகாரத்துல சரியான பாதையில அரசு போகுதுனு நம்புறேன்.''
''டூன், கேம்பிரிட்ஜ் என்று படித்து இருக்கிறீர்கள். மார்க்ஸிசம், சோஷலிசம் என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால், பெயருக்குப் பின் சாதி ஒட்டிக்கொண்டு இருக்கிறதே?''
''ஆரம்ப காலத்துல நான் மணி சங்கர்தான் டெல்லி பல்கலைக்கழகத்துல, பரீட்சையில முதல் மாணவனா என் பேரை மணி சங்கர் அய்யர்னு பத்திரிகைல போட்டா. 'ஏன் அய்யர் சேர்த்து இருக்கு?’னு கேட்டப்ப, 'அப்பதான் நீ தெற்கே இருந்து வந்தவன்னு தெரியும்; இல்லேன்னா, இந்தப் பேரைப் பார்த்து உத்தரப்பிரதேசக்காரன்னு நெனைச்சுக்குவா’னு சொன்னா.
ஒரு தமிழனா என்னைக் காட்டிக்க இது உதவும்னு நெனைச்சுதான் அய்யரைச் சேர்த்துக்கிட்டேனே தவிர, சாதி மேல எல்லாம் துளியும் நம்பிக்கை இல்லாதவன் நான். நம்பிக்கை இல்லேன்னா, ஒரு குண்டான்ல சிக்கன் பிரியாணியை எடுத்துக்கிட்டு வாங்கோ, யார் நிறையச் சாப்பிடறா நீங்களா... நானானு பார்த்துடலாம்!''
நன்றி - விகடன்
No comments:
Post a Comment