Thursday, November 15, 2012

வேட்டைக்குக் கிளம்பிட்டார், வெள்ளத்துரை! அதிர்ச்சியில் ரவுடிகள்... ஆனந்தத்தில் போலீஸ்



டங்காமல் சிலர் ஆடும் இடங்களுக்கு எல்லாம் போலீஸ் அனுப்பும் நவீன ஆயுதம்... டி.எஸ்.பி. வெள்ளத்துரை. ஆல்வின் சுதன் படுகொலை செய்யப்பட்ட மானாமதுரை சப்-டிவிஷனுக்கு வெள்ளத்துரை அனுப்பப்படவே, அலறுகிறார்கள் ரவுடிகள். 
'ஆல்வினை ரவுடிகளுக்குப் பலி கொடுத்திருக்​கோம்னா, அதுக்கு மாவட்ட உயர் அதிகாரிகளும் முக்கியக் காரணம். போலீஸ் அதிகாரிகளை ரவுடிகள் மிரட்டிய​போதும், ஆயுதங்களோடு துரத்தியபோதும் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், அநியாயமாய் ஆல்வின் உயிர் போயிருக்காது’ - இப்படி ஒரு முறையீட்டை, ஆல்வின் படுகொலைக்கு மறுநாள் திருப்பாச்சேத்திக்கு வந்திருந்த டி.ஜி.பி. ராமானுஜத்திடம் போலீஸ் தரப்பில் வைத்தார்களாம். அடுத்து, திருப்பாச்சேத்தி ஏரியாவில் போலீஸாரை ரவுடிகள் ஆயுதத்தோடு விரட்டிய சம்பவங்களை நிருபர்கள் அடுக்கியதைக் கேட்டு விக்கித்து நின்ற ராமானுஜம், 'அப்பல்லாம் ஏன் நடவடிக்கை எடுக்கலைன்னு கேக்குறாங்க... சொல்லுய்யா’ என்று அருகில் நின்ற எஸ்.பி. பன்னீர்செல்வத்தை வார்த்தைகளால் கடித்தார். 'இனிமே எனக்கு உண்மை சொல்றவங்களை வெச்சு வேலை வாங்கிக்கிறேன்’ என்று கிளம்பினார்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட கூடுதல் எஸ்.பி-யாக இருந்த கண்ணன் தூத்துக்குடிக்கும், மானாமதுரை டி.எஸ்.பி. கருணாநிதி மதுரை அண்ணாநகருக்கும் அதிரடியாய் டிரான்ஸ்ஃபர்
செய்யப்பட்டார்கள். எஸ்.பி. பன்னீர்செல்வத்துக்கு விரைவில் மாறுதல் வரலாம் என்கிறார்கள். இதை எல்லாம்விட, மானாமதுரை டி.எஸ்.பி-யாக வெள்ளத்​துரையை நியமனம் செய்திருப்பதுதான் போலீஸ் வட்டா​ரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆல்வின் சுதன் கொலையில் தொடர்புள்ள 24 பேரைக் கைது செய்துவிட்டது போலீஸ். ஆனால் மையப் புள்ளியான பிரபு உள்ளிட்ட சிலரைத் தவறவிட்டது. அவர்களைச் சுட்டுப் பிடிக்க உத்தரவு இல்லை என்றபோதும், ஆல்வின் கொலை செய்யப்பட்ட விதத்தைக் கேள்விப்பட்ட சில துடிப்பான எஸ்.ஐ. மற்றும் இன்ஸ்பெக்டர்கள், 'பிரபு கோஷ்டி கையில் கிடைத்தால் முடித்துவிடுவது’ என்ற முடிவோடு இருந்தார்கள். ஆளும் கட்சிக்குப் பிடிக்காத சாதிக் கட்சி தலைவர் ஒருவரின் கட்டுப்பாட்டில் கொலையாளிகள் இருப்பதாகக் கிடைத்த தகவலை வைத்து போலீஸ் நெருங்கிய வேளையில், பிரபுவும் அவனது கூட்டாளிகளான முத்துக்குமார், மங்களேஸ்வரன் ஆகியோர் 6-ம் தேதி திருப்பூர் கோர்ட்டில் சரண் அடைந்துவிட்டார்கள்.
''வெள்ளத்துரை வர்றார்னாலே வில்லங்கம் என்னன்னு எல்லாருக்கும் தெரி​யும். ராம​நாதபுரம் மாவட்டத்தைத்தான் 'கலவர பூமி’ன்னு சொல்வாங்க. ஆனால், இப்போது ராமநாதபுரத்தைவிட சிவகங்கையில்தான் அதிகப்படியான கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. ஆல்வின் கொலை அதன் உச்சம். இந்த சம்பவத்தினால் போலீஸார் விரக்தி அடைந்துவிட்டார்கள். அதனால்தான், தேவர் ஜெயந்திக் கலவரங்களில் போலீஸார் யாரும் ரிஸ்க் எடுக்கவே இல்லை. 'எவனோ வெட்டிக்கிட்டு சாகட்டும், பொணம் விழுந்தா போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்புவோம்’கிற மன நிலையில்தான் இருந்தாங்க. இந்த விரக்தி விஷயம் மேலே வரைக்கும் போயிருச்சு. அவங்களுக்கு உற்சாகம் கொடுக்கத்தான் வெள்ளத்துரை மானா​மதுரைக்கு வந்திருக்கிறார்'' என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
மானாமதுரை, திருப்பாச்சேத்தி ஏரியாக்களில் ரவுடிகள் ராஜ்ஜியத்துக்கு போலீஸிலும் சில கறுப்பு ஆடுகள் துணைபோனதாக ஏற்கெனவே நாம் எழுதி இருந்தோம். ஆல்வின் கொலைக்கு முன்பும் பின்பும் முக்கியக் குற்றவாளியான பிரபுவோடு சிவகங்கை எஸ்.ஐ. ஒருவர் சாதிப் பாசத்தில் செல்போன் தொடர்பில் இருந்திருக்கிறார். இவரை இப்போது கிடுக்கிப்பிடியில் வைத்திருக்கிறார்கள். இதனிடையே, திருப்பூரில் சரண்டர் ஆன முக்கியக் கொலையாளியான பிரபுவை மீண்டும் கஸ்டடி விசாரணக்கு எடுத்திருக்கிறது போலீஸ். 'விசாரணையில் ஏடாகூடமாக எது வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்று போலீஸ் வட்டாரத்திலேயே காத்துக்​கிடக்கிறார்கள்.
மானாமதுரை டி.எஸ்.பி-யாக பொறுப்​பேற்ற வெள்ளத்துரையிடம் பேசினோம். ''மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் கடமையை முறையாக செய்வதும், மானாமதுரை ஏரியாவில் பொது மக்களின் அச்சத்தைப் போக்குவதும்தான் என்னுடைய பணி. இந்த ஏரியாவில் ரவுடிகளோ, சண்டியர்களோ இருந்தால்... சத்தம் காட்டாமல் வெளியேறுவது அவர்களுக்கு நல்லது'' என்று வார்னிங் கொடுத்தார்.
அமைதி திரும்புமா சிவகங்கையில்?

No comments:

Post a Comment