அ.தி.மு.க. ஆட்சியில் பதவி பறிக்கப்படாத அல்லது இலாகா மாற்றம் செய்யப்படாத ஒரு சில அமைச்சர்களில், போக்குவரத்துத் துறையைக் கவனித்துவரும் செந்தில் பாலாஜியும் ஒருவர். அவர் மீது, லேட்டஸ்ட்டாகக் கிளம்பி இருக்கிறது, பன்முக கேபிள் (எம்.எஸ்.ஓ.) அபகரிப்புப் புகார்!
கரூர் மாவட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அசோசியேஷன் தலைவரான சேரனிடம் பேசினோம். ''20 வருடங்களாக கேபிள் தொழில் நடத்துகிறேன். ஆகஸ்ட் 2011-ல் தமிழக அரசு கேபிள் கார்ப்பரேஷனில் முறைப்படி விண்ணப்பித்து, கரூர் மாவட்டத்துக்கான எம்.எஸ்.ஓ-வாக நியமிக்கப்பட்டேன். அதற்காக நகராட்சி வணிக வளாகத்தில் வாடகைக்கு இடம் பிடித்து, 80 லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி பக்காவான கன்ட்ரோல் ரூம் அமைத்தேன். 350 ஆப்ரேட்டர்கள் மூலம் கரூர் மாவட்டம் முழுக்க இரண்டு லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டன.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எம்.டி-யிடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது. 'அரசிடம் அனுமதி பெறாத உள்ளூர் சேனல் ஒளிபரப்பை உடனே நிறுத்த வேண்டும். இல்லை என்றால், உங்களின் எம்.எஸ்.ஓ. அனுமதி ரத்து செய்யப்படும்’ என்று அதில் சொல்லப்பட்டு இருந்தது. அதனால், அனுமதி பெறாமல் இயங்கி வந்த 'ஜெயம்’, 'சிட்டி’, 'வானவில்’ ஆகிய மூன்று சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தினேன். ஜெயம் சேனலை நடத்தி வந்த சந்திரசேகர் என்ற மூர்த்தி, 'இது, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சேனல். உடனே ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யலைன்னா, உன் தொழிலையே நாசமாக்கி விடுவோம்’ என்று மிரட்டினார். அடுத்த சில நாட்களில் சோதனை ஆரம்பம் ஆனது.
2012 ஜனவரி 11-ம் தேதி இரவு 11 மணிக்கு அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் எனக்கு போன் செய்து, 'கன்ட்ரோல் ரூமை பூட்டி சாவியை வாங்கி வரும்படி கலெக்டர் எனக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளார்’ என்றார். 'உள்ளே இருக்கும் பொருட்களின் விவரத்தை எழுதிக் கொடுத்து விட்டு பூட்டிக்கொள்ளுங்கள்’ என்றேன். அதன்படி எழுதிக் கொடுத்தவர், கன்ட்ரோல் ரூமைப் பூட்டி சாவியை எடுத்துச் சென்றார். உடனே, பதிவுத்தபால் மூலம் கலெக்டருக்குப் புகார் அனுப்பினேன். பதில் எதுவும் வராததால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தேன்.
இதற்கிடையே, எனது கட்டுப்பாட்டு அறையில் இருந்த பொருட்களை சிலர் திருடிச் செல்வதாக, மார்ச் 23-ம் தேதி தகவல் கிடைத்தது. அதுபற்றி எஸ்.பி. வரை புகார் செய்தும், ஒரு நடவடிக்கையும் இல்லை. அதனால், இந்த விவகாரத்தையும் நீதிமன்றத்தில் தெரிவித்தேன். இப்போது, கரூரில் அமைச்சருக்கு வேண்டியவர்கள் இரண்டு சேனல்களையும், எம்.பி. தம்பிதுரைக்கு வேண்டியவர் ஒரு சேனலையும் அரசுக்குப் பணம் செலுத்தாமலேயே நடத்துகின்றனர். ஒரு சேனலுக்கு மாதம் இரண்டே கால் லட்ச ரூபாய் என்று இதுவரை அரசுக்குச் செல்லவேண்டிய பணம் ஏப்பம் விடப்பட்டுள்ளது. உள்ளூர் சேனல்களில் செய்திகள் ஒளிப்பரப்பக் கூடாது என்ற அரசின் விதிமுறையை மீறி, ஒளிபரப்பு கின்றனர். எனது கன்ட்ரோல் ரூமில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களைக் கொண்டு அமைச்சரின் ஆதரவாளரான மூர்த்தி என்பவர், வேறு ஓர் இடத்தில் புதிதாக எம்.எஸ்.ஓ. நடத்துகிறார். மேலும், எனது கேபிள் நிறுவனத்தையும் எனக்கு நண்பர்களாக இருந்த சில ஆபரேட்டர்களின் கேபிள் இணைப்புகளையும் துண்டித்து, அந்தப் பகுதிகளில் வேறு நபர்களை உள்ளே வர அனுமதித்து, எங்களது வருவாயை முற்றிலுமாக சீர்குலைத்து விட் டார்'' என்றார் பரிதாபமாக.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான சந்திரசேகர் என்ற மூர்த்தியிடம் பேசினோம். ''நகராட்சிக் கட்டடத்துக்கு சேரன் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் இருந்ததால், அதைப் பூட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் தயாரானது. அப்படி பூட்டப்பட்டால் கேபிள் ஒளிபரப்பு பாதிக்கப்படுமே என்றுதான், அரசு கேபிளை வேறு இடத்தில் இருந்து ஒளிபரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். புதிய பன்முக ஒளிபரப்பை நடத்தி வருபவர் வேறொருவர். ஜெயம் சேனலை நடத்திவரும் நான் டெக்னிக்கல் விஷயம் தெரிந்தவன் என்பதால், பன்முக ஒளிபரப்பையும் கவனித்து வருகிறேன். எம்.எஸ்.ஓ. மற்றும் உள்ளூர் சேனல் ஆகியவற்றுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் அமைச்சரின் ஆதரவாளர் என்பதால் வீண்பழி சுமத்துகின்றனர். ஜெயம் சேனல் ஒளிபரப்பை நிறுத்தியதற்காக அமைச்சர் பெயரைச் சொல்லி மிரட்டினேன் என்பது பொய்.
ஜெயம் டி.வி-யை இதுவரை சோதனை ஒளிபரப்புதான் செய்துவந்தோம். அதனால் அரசுக்குப் பணம் செலுத்தவில்லை. இப்போது அரசு நிர்ணயித்த தொகையைச் செலுத்த, கேபிள் டி.வி. கார்ப்பரேஷனிடம் விண்ணப்பித்து உள்ளோம். கரூரில் இயங்கும் ஆறு உள்ளூர் சேனல்களுமே செய்திகளை ஒளிபரப்புகின்றனர். நாங்கள் அரசு நிகழ்ச்சிகள், திட்டங்கள் பற்றிய செய்திகளை மட்டுமே ஒளிபரப்புகிறோம். சேரன் மற்றும் அவரது நண்பர்கள் சுயலாபத்துக்காக இந்த பிரச்னையை அரசியல் ஆக்குகின்றனர்'' என்றார் நிதானமாக.
கரூர் கலெக்டர் ஜெயந்தியின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றோம். ''நான் பதவியேற்று சில நாட்கள்தான் ஆகின்றன. இந்த விவகாரம் என்னவென்றே எனக்குத் தெரியாது. தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.
அமைச்சரின் பெயரைச் சொல்லி அடாவடி நடக்கிறதா என்பதை அமைச்சர்தான் கண்டுபிடித்துத் தடுக்க வேண்டும்!
No comments:
Post a Comment