Thursday, November 1, 2012

கேப்டன் கப்பலை கவிழ்க்கும் நால்வர். இருட்டு அறையில் கறுப்பு எம்.ஜி.ஆர்



அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்ததால்தான், தே.மு.தி.க-வுக்கு 29 எம்.எல்.ஏ-க்கள் கிடைத்தனர். அதனால்தான் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தும் கிடைத்தது. இல்லை எனில், தே.மு.தி.க-வுக்கு ஒரு இடம் கூட கிடைத்திருக்காது. விஜயகாந்த்துடன் கூட்டணி சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். தே.மு.தி.க-வுக்கு வர வேண்டிய ஏற்றம், எங்களால் அவர்களுக்கு வந்து முடிந்து விட்டது. இனிமேல், அவர்களுக்கு இறங்குமுகம்தான். அதை சரித்திரம் சொல்லும்’ - கடந்த பிப்ரவரி 1-ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா உதிர்த்த வார்த்தைகள் இவை. இப்போது, தே.மு.தி.க-வின் எம்.எல்.ஏ-க்கள் திசை மாறுவதால், கட்சிக்கு 'இறங்கு’முகம்.

தொகுதிப் பிரச்னைக்காக(?) அடுத்தடுத்த நாட்கள், நான்கு எம்.எல்.ஏ-க்கள் ஜெயலலிதாவோடு நடத்திய சந்திப்புகள் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தே.மு.தி.க. உடைய இருப்பதை, 'தே.மு.தி.க-வை உடைக்கிறாரா விஜயகாந்த் நண்பர்? சுந்தர்ராஜனைச் சுற்றும் சர்ச்சைகள்’ என்ற தலைப்பில் 25.6.2012 தேதியிட்ட ஜூ.வி-யில் எழுதி இருந்தோம். அது இப்போது உண்மையாகி இருக்கிறது. முதலில் சென்றவரே இந்த சுந்தர்ராஜன்தான். நான்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களை ஆளும் கட்சி வளைத்த பின்னணி அதிர வைக்கிறது!

மாரத்தான் பாய்ச்சல்! 

நாக்கைத் துருத்தி உதட்டைக் கடித்து சட்டசபையில் விஜயகாந்த் காட்டிய ஆக்ரோஷத்துக்குப் பிறகு, அவரை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது தமிழக சட்டசபை. அதன்பிறகு, விஜயகாந்த்தைக் குறிவைத்து மாரத்தான் ரேஞ்சுக்கு சிக்கல்கள் அணிவகுத்தன. சட்டசபையில் விஜயகாந்த் பெயரைச் சொல்லாமல் மறைமுகமாக அவரைச் சீண்ட ஆரம்பித்தனர் ஆளும்

கட்சி எம்.எல்.ஏ-க்கள். 'சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் டெபாசிட் பறிபோன பிறகு கட்சியைத் தொடர்ந்து நடத்தலாமா அல்லது கலைக்கலாமா என்று ஆலோசனை நடக்கிறது’ என்று, கு.ப.கிருஷ்ணன் கொளுத்திப் போட்டார். 'சட்டசபைக்குச் சிலர் வராமலே வெளியில் இருந்து பேசுகின்றனர். எதிலும் இலவசம் கூடாது என்கிறார் ஒருவர். அவர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் வரை எதையும் அவர் இலவசமாகக் கொடுத்தது இல்லை’ என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சீறினார். 'தள்ளாடும் குடிகாரர், கட்டடத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்’ என கிண்டல் அடித்தார் விஜய பாஸ்கர். இப்படி அடுத்தடுத்து அவரை வறுத்தெடுத்தனர்.

பதவியைப் பறிக்கவும் முயற்சி!

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்ட சபை வளாகத்தில் விஜயகாந்த்துக்கு ஒதுக்கப்பட்ட அறையைப் பிரித்து காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஒதுக்கி அறையின் அளவு சுருக்கப்பட்டது. அதன் பிறகு, எப்படியாவது விஜயகாந்த்தின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிப்பதற்கு அடுத்தடுத்து காய்களை நகர்த்தியது அ.தி.மு.க. 'தனது வேட்பு மனுவை தள்ளுபடி செய்து விட்டதால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்பு பறிக்கப்பட்டது’ என்று, ரிஷிவந்தியம் தொகு தியில் விஜயகாந்த் வெற்றி பெற்றதை எதிர்த்து ஜெயந்தி என்பவர் கடந்த ஜூன் மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி விஜயகாந்த், நீதிமன்றப்படி ஏறினார். ஜெயந்திக்குப் பின்னால் ஆளும்கட்சியின் ஆதரவு இருந்தது என்று அப்போதே பேச்சுகள் கிளம்பின. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், விஜயகாந்த் பெருமூச்சுவிட்டார்.

கறுப்புக் குத்தல்! 

சென்னை மாநகராட்சி தே.மு.தி.க. மேயர் வேட்பாளரும் தே.மு.தி.க. மாநில தொழிற்சங்கப் பேரவைத் தலைவருமான வேல்முருகன், மாநிலத் தேர்தல்பிரிவுச் செயலாளர் ஜெகவீர பாண்டியன், விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் சினிமா தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், தே.மு.தி.க. மகளிர் அணிச் செயலாளர் ரெஜினா பாப்பா என அடுத்தடுத்து பலர் அ.தி.மு.க-வில் ஐக்கியம் ஆனார்கள். அ.தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்களின் இல்லத் திருமணத்துக்குக்கூட போகாத ஜெயலலிதா, வேல்முருகனின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டது, விஜயகாந்த்தை எரிச்சல்படுத்தத்தானாம். இந்நிலையில்தான் 'முதல்வர் தனது அலுவலகத்துக்கு நீண்ட நாட்கள் வராமல் இருக்கிறார். அறிக்கைகள் மூலமே ஆட்சி நடத்துகிறார்’ என விஜயகாந்த் விட்ட அறிக்கையால், அவர் மீது அவதூறு வழக்குப் பாய்ந்தது. 'உள்ளத்திலும் உருவத்திலும் கறுப்பானவர்’ என விஜயகாந்த்தை பெயர் குறிப்பிடாமல் ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாவில் ஜெயலலிதா தாக்கினார். இப்படி தொடர் அதிரடிகள் நடந்து வந்த நிலையில்தான் க்ளைமாக்ஸ் அரங்கேறியது.

நட்புக்குள் விழுந்த விரிசல்!

கடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட தே.மு.தி.க. குழுவில் இடம்பெற்ற மூன்று பேரில் ஒருவர் மதுரை சுந்தர்ராஜன். சட்டசபையில் விஜயகாந்த் இருக்கைக்குப் பின்னால்தான் சுந்தர்ராஜனுக்கு ஸீட். அந்த அளவுக்கு விஜயகாந்த்தும் சுந்தர்ராஜனும் பால்ய நண்பர்கள். விஜயகாந்த்தின் ஆதிஅந்தங்கள் அனைத்தையும் அறிந்தவர்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் வேட்பாளர் பட்டியலில் மதுரை மத்திய தொகுதிக்கு ராஜன் செல்லப்பாவை வேட்பாளராக அ.தி.மு.க. அறிவித்தது. கடைசிவரை போராடி சுந்தர்ராஜனுக்காக அந்தத் தொகுதியை விஜயகாந்த் வாங்கிக் கொடுத்தார். சுந்தர்ராஜன் தனது காரில் 'கேப்டன்’ என்று கொட்டை எழுத்தில் எழுதி இருந்தார். மூன்று மாதங்களுக்கு முன் அதை அழித்து, 'அழகுமலையான் துணை’ என்று மாற்றினார். அப்போதே, தலைமை மீது அவர் வருத்தத்தில் இருப்பது வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்தது. தென்மாவட்டங்களில் விஜயகாந்த் சுற்றுப்பயணம் கிளம்பியபோது, சுந்தர்ராஜனின் தலை தென்படவே இல்லை.

''ஜெயலலிதாவை சந்தித்ததன் மூலம் பழிவாங்கலை நடத்தி இருக்கிறார் சுந்தர்ராஜன்'' என்கிறார்கள் தே.மு.தி.க. மதுரைப் புள்ளிகள். ''காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விஜயகாந்த்துக்கு வேண்டப்பட்டவர்களின் நிலங்கள் மற்றும் சொத்துகளை சுந்தர்ராஜன்தான் பராமரித்து வருகிறார். அந்தச் சொத்துகள் அனைத்தும் சுந்தர்ராஜன் பெயரில்தான் இருந்தன. சுந்தர்ராஜன் மீது விழுந்த சந்தேகப் பார்வையால் இந்த பினாமி சொத்துகளை திடீரென்று மாற்றிக்கொடுத்து விடும்படி உத்தரவு வரவே, உடைந்தே போனார் சுந்தர்ராஜன். உடனே, விஜயகாந்த்தை சந்தித்துப் பேச முயன்றார். அதற்கும் முட்டுக்கட்டைகள் விழுந்தன. சந்திப்பு நடந்து விடா மல், கூடஇருந்தவர்களே தடுத்தனர். சின்ன வயதில் இருந்தே பழகிய நண்பனாகிய தன் மீது நம்பிக்கை இழந்ததை, சுந்தர்ராஜனால் ஜீரணிக்க முடியவில்லை. வேறுவழி இல்லாமல் அந்தச் சொத்துக்களை எல்லாம் விஜயகாந்த்தின் நிழலாக வரும் ஒரு புள்ளியின் பெய ருக்கு மாற்றிக்கொடுத்துவிட்டு, கட்சியின் பக்கம் தலைவைக்காமல் ஒதுங்கினார். 40 வருட நட்பின் மீது நம்பிக்கை வைக்காமல் நான்கு வருடங்களுக்கு முன் வந்த ஒருவர் பெயரில் சொத்தை மாற்றி எழுதியது நியாயமா? என்ற வருத்தத்தில் சுந்தர்ராஜன் இருந்தார்'' என்கிறார்கள். இந்த ஆத்திரத்தில் அவர் இருந்த நேரம் அ.தி.மு.க. வலைவிரிக்க, அதில் எளிதில் விழுந் தாராம்.

டூப்ளிகேட் விஜயகாந்த்!

சுந்தர்ராஜனோடு ஜெயலலிதாவைப் பார்த்த திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழ்அழகன், பார்க்க அச்சு அசலாக விஜயகாந்த்தைப் போலவே இருப்பார். ஹேர் ஸ்டைலும் நடை உடையும் விஜயகாந்த்தை ஞாபகப்படுத்தும். அந்த அளவுக்கு விஜயகாந்த் வெறியராகவே வலம் வந்தவர் தமிழ்அழகன். இவருடைய பிரச்னை வேறு. சில மாதங்களுக்கு முன், தமிழ்அழகனின் மகன் இன்னொருவர் தோட் டத்தில் புகுந்து மரவள்ளிக் கிழங்கு பறிக்க.. விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை போனது. வீறாப்பாக ஸ்டேஷனில் சண்டை போட்டு மகனை மீட்டு இருக்கிறார் தமிழ்அழகன். இதனால், அவர் மீது வழக்குப் பாய்ந்தது. காக்கிச்சட்டைகளின் பிடியில் சிக்காமல் ஒரு மாதத்துக்கும் மேல் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். முன்ஜாமீன் வாங்கிய பிறகுதான் வெளியே அவரால் தலைகாட்ட முடிந்தது. அந்த நேரத்தில், நிலஅபகரிப்புப் புகார் ஒன்றும் கிளம்பியது. இவ்வளவு நடந்தும் கட்சித் தலைமையில் இருந்து ஓர் அறிக்கை கூட வரவில்லை. நிர்வாகிகள் யாரும் வந்து பார்க்கவும் இல்லையாம். சட்ட ரீதியான உதவிகள் செய்யச்சொல்லி தலைமைக்கு எழுதிய கடிதமும் கண்டுகொள்ளப்படவில்லையாம்.

இந்த நேரத்தில்தான் நில அபகரிப்புப் புகாரில் சிக்கிக் கைதான திருத்தணி எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியத்துக்கு ஆதரவாக, விஜயகாந்த் அறிக்கை விட்டார். மேலும், சுதீஷ் உள்ளிட்ட முக்கிய நிர் வாகிகள் திரண்டு சென்று புழல் சிறையில் அருணைப் பார்த்த சம்பவமும் நடந்தது. இதைக் கேள்விப்பட்ட தமிழ்அழகன் நொந்துபோனாராம். ''வருடத்துக்கு 40 லட்சம் ரூபாய் கட்சிக்கு நிதி தருபவர் அருண் சுப்பிரமணியம். அதோடு, வன்னியர் வேறு. அதனால் அவரைப் பார்த்து ஆறுதல் சொன்னார்கள். தமிழ் அழகனும் வசதியானவர்தான். ஆனால், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தலைமை அவரைக் கண்டுகொள்ளவில்லை. கட்சிக்காக சொந்தப்பணத்தை வாரி இறைத்த தன்னை யாருமே கண்டுகொள்ளவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தார். இதுபோன்ற காரணங்களால்தான் புதிய முடிவெடுக்க அவர் தள்ளப்பட்டார்'' என்கிறார்கள் திட்டக்குடியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள்!

பில்லியர்ட்ஸ் புலி!

பில்லியர்ட்ஸ் விளையாட்டில் புகுந்து விளையாடு பவர் அருண்பாண்டியன். சரியாக குறி பார்த்து பந்துகளைத் தள்ளுபவரைக் குறிவைத்து வளைத்து ​விட்டனர். விஜயகாந்த்தின் நீண்ட காலத் திரையுலக நண்பர் அருண்பாண்டியன். அதனால் அவரை பேராவூரணி தொகுதியில் நிற்கவைத்து வெற்றி பெறவைத்தார் விஜயகாந்த். ''சென்னை லாயிட்ஸ் ரோட்டில் இருக்கும் தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் அசோசியேஷனுக்குத் தலைவராக சமீபகாலம் வரை இருந்தவர் அருண் பாண்டியன். அங்கு பார் நடத்தியதிலும் பிரச்னை ஏற்பட்டது. அதோடு பெரிய அளவில் பணம் கட்டி விளையாடும் சீட்டாட்டமும் நடந்ததாம். சீட்டு ஆடுவதற்கு அ.தி.மு.க-வின் பெரிய தலைகள் எல்லாம் வந்தபோது அருண்பாண்டியனுக்கு அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. ''அவர்கள் தயவால்தான் எந்தப் பிரச்னையும் அசோசியேஷனுக்கு வராமல் பார்த்துக்கொண்டார். அவர்களோடு இருந்த நட்பு விரிந்து பெரிய அளவில் பார்ட்டி வைக்கும் அளவுக்கு போனது. அதுவே, அ.தி.மு.க-வோடு ஐக்கியமாகவும் தூண்டியது. சசிகலாவை ஜெயலலிதா வெளியேற்றிய நேரத்தில், சசிகலாவுக்கு வேண்டப்பட்ட சிலரோடு இவர் நெருக்கமாக இருந்தார். சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் 20 அறைகளை புக் செய்து அ.தி.மு.க-வின் முக்கியத் தலைகளுக்கு விருந்து வைத்தார். சசிகலாவுக்கு நெருக்கமானவர்களும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் சிலரும் கலந்து கொண்டனர். சசிகலாவை முதல்வர் ஆக்கும் முயற்சியாகத்தான் அந்த விருந்து நடைபெற்றது. ஆனால், அதற்குள் சூழல் மாறியதால், அது அப்படியே அமுங்கிப்போனது'' என்றார்கள் அங்கு விளையாட வருபவர்கள்.

கட்சியின் முன்னேற்றம் தொடர்பாக சில ஆலோசனைகளை அருண்பாண்டியன் சொல்ல, அதைக் கண்டுகொள்ளாமல் சிலர் கிண்டல் அடித்து இருக்கிறார்கள். 'உங்களுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா?’ என ஏகத்துக்கும் அவரை கிண்டல் செய்தார்களாம் விஜயகாந்த்தைச் சுற்றி இருப்பவர்கள். அடுத்தடுத்து விழுந்த கேலிகளால் நொந்துபோனார். அதனால் சட்டசபைக்கு அவர் யாருடனும் சேராமல் தனியாகத்தான் வருவார். தனியாகவே போவார். சொந்தக் கட்சிக்காரர்களிடம்கூட அவ்வளவாக ஒட்ட மாட்டார். சட்டசபையில் சுந்தர்ராஜனுக்குப் பின்னால் அமர்ந்திருப்பார் அருண்பாண்டியன். கடைசியில் அவர் அடியற்றி அம்மா போற்றி பாட ஆரம்பித்து விட்டார்.

மாவட்டச் செயலாளர் அனுப்பி வைத்த மைக்கேல் ராயப்பன்!

கடந்த சட்டசபைத் தேர்தலில் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கணக்கை காட்டி அசத்தியவர் மைக்கேல் ராயப்பன். திரைப்படத் தயாரிப்பு உட்பட பல பிசினஸ் நடத்தி வருகிறார். 'தே.மு.தி.க-வுக்கு இவர் ஏ.டி.எம். எந்திரம்’ என கட்சிக் குள்ளேயே பெயர் இருக்கிறது.

''ராதாபுரம் தொகுதி முழுக்கவே ராயப்பனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் தே.மு.தி.க. நிர்வாகிகள். இது, மாவட்டச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தனை ரொம்பவே உறுத்தியது. கார்னர் பண்ணி ராயப்பனை ஒதுக்க ஆரம்பித்தார் மாவட்டச் செயலாளர். விஜயகாந்த்தைச் சுற்றி இருக்கும் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த மாவட்டச் செயலாளர் சொல்வதுதான் சட்டம். இதனால் அடுத்தடுத்து வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ராயப்பனுக்கு அவமரியாதைகள் நடந்தன. இதைத் தலைமையிடம் சொல்ல முயன்றபோது... சுற்றி இருந்தவர்கள் விடவில்லை. பெரிய கோடீஸ்வரரான ராயப்பன், பணத்துக்காக அங்கே நிச்சயம் போயி ருக்க மாட்டார். அதைவிடப் பெரிதாக மதிக்கும் தன் மானத்துக்கு இழுக்கு நேர்ந்திருக்கிறது. அதனால்தான் வேறுவழி இல்லாமல் முகாம் தாவினார்'' என்கிறார்கள் ராதாபுரத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்.

எம்.பி. ஸீட்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும்! 

விஜயகாந்த்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்கத்தான் இந்த அதிரடிகள் நடந்து இருக்கிறதாம். சட்டசபைத் தேர்தலில், தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. தே.மு.தி.க-வுக்கு அடுத்த இடத்தில் தி.மு.க. இருக்கிறது. தி.மு.க-வுக்கு 23 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதைவிட ஒரு தொகுதி தே.மு.தி.க. குறைந்தால், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து தி.மு.க-வுக்குப் போய்விடும். தேர்தல் நேரத்தில் தொகுதிப் பங்கீடு பிரச்னை ஏற்பட்ட நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் அனைவரும் விஜயகாந்த் அலுவலகத்துக்கு வந்து ஆலோசனை நடத்தினர். அப்போது மூன்றாவது அணி அமைய இருப்பதாக செய்திகள் கிளம்பின. இதையெல்லாம் அப்போது அ.தி.மு.க. ரசிக்கவில்லை. அதற்கும் சேர்த்துதான் இந்தப் பழிவாங்கல் படலமாம். குறைந் தது 7 எம்.எல்.ஏ-க்களையாவது இழுத்தால், எதிர்க் கட்சித் தலைவர் பதவி விஜயகாந்த்திடம் இருந்து பறிபோய்விடும். அதற்குத்தான் உடைப்புத் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்த உடைப்புத் திட்டத்தில் இன்னொரு மாங்காயும் அடிக்க நினைக்கிறார்கள். அதாவது அடுத்த ஆண்டு ஜூலை 24-ம் தேதியோடு ராஜ்யசபா எம்.பி-க்கள் இளவரசன், மைத்ரேயன், ஞானதேசிகன், கனிமொழி, திருச்சி சிவா, ராஜா ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் முடிகிறது. அதில் எப்படியாவது ஒரு சீட்டைப் பிடிக்க வேண்டும் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தது தே.மு.தி.க. அதற்கும் வேட்டு வைக்கப் போகிறார்களாம். ஒரு ராஜ்ய சபா எம்.பி-க்கு 39 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு வேண்டும். தன்னிடம் உள்ள 29 எம்.எல்.ஏ-க்களும் சி.பி.எம். கட்சியிடம் இருக்கும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடனும் எம்.பி. ஸீட்டைப் பெற நினைத்தனர். உள்ளாட்சித் தேர்தலில் சி.பி.எம். கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால், அவர்களின் ஆதரவு கிடைப்பதில் பெரிய சிக்கல் இருக்காது என்றே நினைத்தனர். இப்போது அந்தக் கனவில் மண் விழுந்திருக்கிறது.

நல்லதை மறைத்த நால்வர் அணி! 

நான்கு பேரும் திசை மாறுவதற்குக் காரணமே கட்சிக்குள் இருந்த நால்வர் அணிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ''தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ., கொறடா சந்திரகுமார், மாநில துணைச் செயலாளர் இளங்கோவன், விஜயகாந்த்தின் பி.ஏ.பார்த்தசாரதி ஆகிய நான்கு பேரை மீறி, கட்சியில் எதுவுமே நடக்காது. அவர்கள் வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது.

ராமு வசந்தன் பொதுச்செயலாளராக இருந்த வரை எல்லாப் பிரச்னைகளையும் அவர் பார்த்துக்கொண்டார். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் குறைகளை கேப்டனிடம் கொண்டு போனார். அவர் மறைவுக்குப்பிறகு, இந்த நான்கு பேரும் கேப்டனை சுற்றிக் கொண்டனர். மக்கள் பிரச்னை என்றால் வீதிக்கு வருவதுதான் கேப்டனின் ஸ்டைல். பெசன்ட் நகரில் குடிசைகள் எரிந்தபோது ஓடிப்போய்ப் பார்த்தார். திண்டிவனம் வெடிவிபத்து நடந்த நேரத்தில் உடனே சென்னையில் இருந்து கிளம்பிப் போனார். புயல், வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் அம்பத்தூரில் வெள்ள நீரில் நடந்து பார்வையிட்டார். இதெல்லாம் ராமு வசந்தன் இருந்த வரை நடந்தது. ஆனால், இப்போது கேப்டனை எங்கேயும் போகவிடாமல் இந்த நான்கு பேரும் தடுத்து வைத்திருக்கிறார்கள். 'நீங்கள்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். அதனால் அடிக்கடி உங்கள் முகத்தை மக்களிடம் காட்ட வேண்டாம்’ என்று சொல்லித் தடுத்து வைத்திருக்கிறார்கள்.

கேப்டன் வெளியே வந்தால் நிர்வாகிகளிடம் பேசுவார், அதனால் தங்களின் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று கணக்குப் போட்டுதான் இப்படி நடக் கிறார்களாம். கட்சியின் பிரச்னைகள், புகார்கள் எதுவும் இவர்களை மீறி கேப்டனிடம் போகாது. அதனால் எல்லா மாவட்டச் செயலாளர்களும் இவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளரைப்பற்றி எந்தப் புகாரும் விஜயகாந்த்தின் பார்வைக்குக் கொண்டுபோகாமல் பார்த்துக் கொள்வார்கள். முன்பெல்லாம் நிர்வாகிகளின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழ் வைத்தால் வர முடியாமல் போனாலும் போனில் வாழ்த்துச் சொல்வார். இப்போது நிர்வாகிகள் கேப்டனுடன் போட்டோ எடுக்கக்கூட முடிவது இல்லை. அந்த அளவுக்கு தொண்டர்களை விட்டு விலகி இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இந்த நால்வர்தான்.

காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சேகர், ஒரு பிரச்னைக்காக இவர்களிடம் சண்டை போட்டிருக்கிறார். உடனே, அதை விஜயகாந்த்திடம் வேறு மாதிரியாகத் திரித்துச்சொல்லி, மாவட்டச் செயலாளர் பதவியையே பிடுங்கி விட்டனர். இப்படி நிறைய விஷயங்கள் நடக்கின்றன. விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர் சுந்தர்ராஜனுக்கு இந்த நால்வர் அணியால் ஏற்பட்ட அவமானங்கள் அதிகம். அதை அவர் வெளியே சொல்ல முடியவில்லை. அருண் பாண்டியன், தமிழ்அழகன், மைக்கேல் ராயப்பன் என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டவர்கள், முகாம் மாறியதற்குக் காரணமே தலைமை மீது இருந்த கோபம் இல்லை. இந்த நால்வர் அணியின் அடாவடிகள்தான். அ.தி.மு.க-வினர் உண்மையில் இவர்களை வலைவீசிப் பிடிக்கவில்லை. நான்கு பேரும் சேர்ந்துதான் அ.தி.மு.க-வுக்குத் தள்ளிவிட்டு இருக்கிறார்கள்'' என்று கொதித்தனர்.

'கறுப்பு எம்.ஜி.ஆர். இருட்டு அறையில் இருக்கிறார்’ என்பதுதான் தே.மு.தி.க. தொண்டனின் வருத்தம். திசை மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் முன், விஜயகாந்த் விழித்துக்கொள்வது, அட்லீஸ்ட் அவருக்கு நல்லது!


'நாலு டெங்கு கொசு நம்மளவிட்டுப் போயிருச்சு...''

''நண்பர்களையும் எதிரிகளையும் பற்றி ஒரு மணி நேரம் கூட பேசலாம். ஆனால், துரோகிகளை பற்றிப் பேசி ஒரு நிமிடத்தைக் கூட நாம் வீணாக்கக் கூடாது'' - மதுரையில் நடந்த குர்பானி வழங்கும் விழாவில் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார் பிரேமலதா. ஜெயலலிதாவை, சுந்தர்ராஜன் சந்தித்த அன்று நடந்தது அந்தக் கூட்டம்!



'குர்பானி வழங்கும் விழாவில் குமுறித் தீர்ப்பார் விஜயகாந்த்’ என்று சொல்லப்பட்டதால் லைவ் ரிலே ஏற்பாடுகளுடன் காத்திருந்தன மீடியாக்கள். அத்தனையையும் தகர்த்துப் போட்டது அழைக்காமல் வந்த மழை. முன்னதாக முழங்கியவர்கள், ஓடிப்போன எம்.எல்.ஏ-க்களை ராகு, கேது ரேஞ்சுக்கு திட்டித் தீர்த்தனர். தலைமை நிலைய பேச்சாளர் வலம்புரி சோழன், ''நாலு டெங்கு கொசு நம்மளவிட்டுப் போயிருச்சு. விடுங்க'' என்று சொல்லிக் கொண்டார்!

கடைசியாகப் பேசிய விஜயகாந்த், ''மக்களையும் தெய்வத்தையும் தவிர வேறு யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். வீட்டுக்கு வந்தா பிரச்னை ஆகிப்போகும்னு கோட்டைக்கு வந்து மனு குடுக்குற மாதிரி குடுக்க வெச்சு நாடகத்தை தொடங்கி இருக்கீங்க. இந்த நாடகத்தை நான் எப்படி முடிக்கிறேன்னு பாருங்க...'' என்று சஸ்பென்ஸ் வைத்து முடித்தார்!


''மக்களுக்குச் செய்யும் துரோகம்!''

திரைப்பட விநியோகஸ்தர், தயாரிப்பாளர், கணினி சார்ந்த தொழில்களை நடத்தி வருபவர் எனப் பெரும் தொழில் அதிபராக இருக்கும் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனிடம் பேசினோம்!

''விஜயகாந்த்துக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட நீங்களே முதல்வரைச் சந்தித்து பேசி இருக்கிறீர்களே?''

''இதில் என்ன தப்பு? ஒரு எம்.எல்.ஏ., தமிழக முதல்வரைச் சந்தித்து சில கோரிக்கைகளை வைக்கக்கூடாதா? ஆள்பவர்களைத் தேவை இல்லாமல் எதிர்த்தால் என்ன நடக்கும்? என் தொகுதிக்கு இதுவரை எந்த நன்மையும் செய்ய முடியவில்லை. அதனால்தான், வாக்களித்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் முதல்வரைச் சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தேன்''

''கட்சித் தலைமையின் விருப்பத்தை மீறி நீங்கள் அ.தி.மு.க-வுடன் நெருங்கிப் போவது சரியா?''

''கடந்த தேர்தலின் போது மக்கள் இந்தக் கூட்டணியை பார்த்துத்தானே ஓட்டு போட்டார்கள். 'இந்தக் கூட்டணிக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தால் நமக்கு நல்லது நடக்கும்’ என்று நம்பிய வாக்காளர்களுக்கு ஏமாற்றம் தராமல் இருக்கவே முதல்வரைச் சந்தித்து கோரிக்கைகளைத் தெரிவித்தேன். அவர்கள் இதுவரை மக்களுக்காக நல்லது செய்து வருகிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் நானும் அவர்களை சந்தித்து எனது தொகுதி மக்களின் குறைகளைச் சொன்னேன். உடனே கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதி கொடுத்திருக்கிறார்கள்''

''சட்டமன்றத்தில் இனி உங்களின் செயல்பாடு எப்படி இருக்கும்?

''நம்மை நல்லவர்கள் என நம்பி வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்பிய மக்களுக்கு நேர்மையாக செயல்பட வேண்டும். 'எனக்கு ஆள்பவர்களைப் பிடிக்கவில்லை’ என்று சட்டமன்றத்துக்குப் போகாமல் வீட்டில் இருந்துகொள்வது, நம்மை நம்பிய மக்களுக்கு செய்யும் துரோகம். புதிய சபாநாயகரை அவை முன்னவருடன் சேர்ந்து சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் அழைத்து வந்து ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்ப்பதுதான் மரபு. அதை மீறும் வகையில் விஜயகாந்த் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து இருக்கக்கூடாது என்பதுதான் என் தனிப்பட்ட கருத்து!''



''45 வருடங்கள் தூக்கிச் சுமந்த எனக்கு துரோகி பட்டமா?''

விஜயகாந்த்தும் பிரேமலதாவும் மதுரைக்கு வந்து 'துரோகி’ பட்டம் வழங்கிவிட்டுப் போன பிறகு, சுந்தர்ராஜனை சந்தித்தோம்.

''காரணமே இல்லாமல் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு இருக்கிறேன். நட்பை கடவுளா... காதலா நெனச்சு 45 வருடங்கள் அவரைத் தூக்கிச் சுமந்த எனக்குத் துரோகிப் பட்டமா? கட்சிப் பொருளாளராக இருந்து கட்சிப் பணத்தை கையாடல் செய்தேனா? காசு வாங்கிக்கொண்டு யாருக்கும் பதவி கொடுத்தேனா? எந்தத் தவறுமே செய்யாமல் நான் பல விதத்திலும் அவமானப்படுத்தப்பட்டேன். 'என் மூஞ்சியில் முழிக்காதே போ’ என்று துரத்தப்படும் அளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன் என்பதை அவர்தான் மக்களுக்குச் சொல்ல வேண்டும். நான், விஜயகாந்த், இப்ராகிம் ராவுத்தர், இன்னொரு நண்பர் ரவி நான்கு பேரும் சேர்ந்து 28 படங்களை விநியோகம் செய்தோம். ஆனால், அதில் வந்த லாபத்தை விஜயகாந்த்தும் ராவுத்தரும் மட்டுமே பங்கு போட்டுக் கொண்டனர். லாபப் பணத்தில் ஊத்துக்கோட்டை ஏரியாவில் 30 ஏக்கர் நிலத்தை என் பெயரில் வாங்கினார். அந்த இடம் இருப்பதைக் கூட நான்தான் அவருக்குச் சொன்னேன். அதை அண்மையில், அவருக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு கட்சியை அழிக்கும் இன்னொருவர் பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி என்னை நிர்பந்தித்தார். அவர் பெயரில் எதற்கு? உங்கள் மகன்கள் பெயரில் எழுதலாமே என்று கேட்டேன். அதையும்மீறி என்னை கட்டாயப்படுத்தியதால் சொத்தைவிட நட்பை பெரிதாக மதித்து எழுதிக்கொடுத்தேன். என்னை விட இன்றைக்கு வந்தவர்கள் அவருக்கு நம்பிக்கையானவர்களாக போனபிறகு நான் எதற்கு அங்கே? அன்னைக்கே இந்த சுந்தர்ராஜன் செத்துட்டானே! அப்படியும் மனசு கேட்காமல் மூன்று முறை அவரைத் தேடிப்போனேன்; முகம் கொடுத்துப் பேசவில்லை. மதுரைக்கு ஆகஸ்ட் 25-ல் வந்தபோது காலில் விழுந்தேன். 'வா’ என்று கூப்பிடவும் வாய் வரவில்லை. 'விமான நிலையத்துக்கு வழியனுப்பப் போ’ என்று சொன்னார்கள். அங்கேயும் போனேன். அப்போதும் உதாசீனப்படுத்தப்பட்டேன். நட்புக்காக எதை எல்லாம் தாங்கிக் கொள்வது?

ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பேன் என்கிறார் விஜயகாந்த். தனக்குப் பக்கத்திலேயே ஊழலை வைத்துக் கொண்டு அவர் இப்படிச் சொல்வது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. மாவட்டம்தோறும் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 லட்ச ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதாக கேப்டன் டி.வி-யில் விளம்பரம் செஞ்சாங்களே அத்தனையும் போலி நாடகம். எத்தனை மாவட்டங்களில் 20 லட்சத்துக்கு உதவிகள் செய்தனர். அதற்கு எங்கிருந்து வந்தது நிதின்னு கணக்குக் கொடுக்க முடியுமா? இந்த நிமிடம் வரை தே.மு.தி.க-வில்தான் இருக்கிறேன். அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பேன். எதிர்க்க வேண்டிய விஷயங்களில் எதிர்ப்பேன். கட்சிக்கொறடா போடும் உத்தரவுக்குக் கட்டுப்படுவேன். அதற்காக முதல்வர் எங்கள் மீது வருத்தப்பட மாட்டார்.

மூன்று முறை காலடியில் போய் விழுந்தவனை எட்டி எட்டி உதைத்து விட்டார். பந்தை உதைத்துக் கொண்டே இருந் தால் அது எங்காவது போய் விழத்தானே செய்யும்? நான் எட்டி உதைக்கப்பட்ட பந்து. கட்சியில் எனக்கே இந்த நிலைமை. இந்த உண்மை தெரியாமல் அப்பாவித் தொண்டர்கள் சொத்து பத்துக்களை விற்று இவருக்காக செலவு செய்கிறார்கள். எனக்கு நேர்ந்த கொடுமையை எடுத்துச்சொல்லி தயவு செய்து அவர்களை காப்பாற்றுங்கள்''

 

''எங்களுக்கு வேண்டாம் அருண்பாண்டியன்!''

அருண்பாண்டியன் முதல்வரை சந்தித்ததும், பேராவூரணியைச் சேர்ந்த தே.மு.தி.க-வினர் அவரது உருவப் பொம்மையை எரிப்பது, போஸ்டரைக் கிழிப்பது என்று இறங்கி விட்டனர். அவர்களிடம் பேசினோம். ''இந்தத் தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை கேப்டன் இங்கு நிறுத்தினார். அப்போதே கட்சியினர் உட்பட தொகுதி மக்கள் அனைவரும் அதிருப்தி அடைந்தனர். ஆனால், தேர்தல் பிரசாரத்தின் போது அருண்பாண்டியன், 'நான் வெற்றி பெற்றால் இந்தத் தொகுதியிலேயே தங்கியிருந்து, மக்கள் பணி செய்வேன்’ என்று உறுதி அளித்தார். ஆனால், தேர்தல் முடிந்ததும் போனவர்தான். ஆறு மாதங்கள் வரை தொகுதிப் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.

இதுவரை கட்சிக்காரன் வீட்டில் நடந்த எந்த ஒரு நல்லது கெட்டதிலும் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ. எங்களுக்கு எதுக்கு? கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இவரைப் பற்றி தலைமைக்குப் புகார் அனுப்பி விட்டோம். கேப்டன் நடவடிக்கை எடுப்பதற்குள் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். எங்கள் தொகுதிக்காக எந்தக் கோரிக்கையையும் சட்டமன்றத்தில் பேசாதவர், இனிமேலா நிறைவேற்றித் தரப்போகிறார்?'' என்று கொந்தளித்தனர்.



''பணத்துக்காக கேப்டனுக்கு துரோகம் செய்தேனா?''

ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து திட்டக்குடி தமிழ் அழகனிடம் பேசினோம்.

''நீங்கள் முதல்வரை சந்தித்ததன் நோக்கம்?''

''தொகுதி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வெலிங்டன் நீர்தேக்க ஏரியை தூர்வாருதல், பெண்களின் நலனுக்காக மகளிர் காவல் நிலையம், தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகள், மகளிர் கல்லூரி உள்ளிட்ட 16 கோரிக்கைகளை முதல்வரிடம் மனுவாக கொடுத்துள்ளேன். அதை நிச்சயம் நிறைவேற்றுவதாக முதல்வர் சொல்லி இருக்கிறார்.''

''நீங்கள் முதல்வரை சந்திக்கச் செல்வதை ஏன் உங்கள் தலைமைக்குத் தெரிவிக்க​வில்லை?''

''எனக்கு ஓட்டுப் போட்ட மக்களின் நலனுக்காக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைத்தது குற்றமா?''

''நீங்கள் பணத்துக்காக கேப்டனுக்கு துரோகம் செய்து விட்டதாக தே.மு.தி.க-வினரே குற்றம் சாட்டுகிறார்​களே?''

''நான் பணத்துக்கு ஆசைப்பட்டு கட்சி மாறினேன் என்று சொல்கிறீர்களே... எனக்கு பின்னர் நடிகர் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் எல்லாம் முதல்வரைச் சந்தித்து இருக்கிறார்களே... அவர்களிடம் இல்லாத பணமா..? அவர்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு வந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியுமா?''

''உங்கள் மகன் பிரச்னையில் இருந்து தலைமறைவாக இருந்த நீங்கள், உங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆறு மாதங்களாக கட்சியில் இருந்து விலகி இருந்ததாக சொல்லப்​படுகிறதே?''

''எம்.எல்.ஏ. ஆன பிறகு தொகுதி மக்களின் பிரச்னைகளை வலியுறுத்தி இரண்டு முறை சட்டமன்றத்தில் பேசினேன். கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அதனால், முதல்வரை சந்திக்க அப்போதைய சபாநாயகர் ஜெயக்குமார் மூலமாக நேரம் கேட்டேன். கிடைக்கவில்லை. அதன்பிறகு, ஓ.பி.எஸ். மூலமாக நேரம் கேட்டேன். நான்கு மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் சந்தித்து இருக்கிறேன். இதற்கு நடுவில் கேப்டனோடு கடலூரில் நடந்த விழாவிலும், கரூரில் நடந்த விழாவிலும் கலந்து கொண்டேன். ஆனால், ஆறு மாதங்களாக கட்சிப் பணிகளில் நான் ஈடுபடவில்லை என சொல்வது வீண் குற்றச்சாட்டு.''

No comments:

Post a Comment