தலைமைச் செயலகத்தில் இப்போது இரண்டு அதிகாரிகளுக்கு 'மாற்றான்’ என்று பெயர் வைத்துள்ளனர். முதல்வரின் செயலாளர்களில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வெங்கடரமணன், உள்துறைச் செயலாளராக இருக்கும் ராஜகோபால் ஆகிய இருவர்தான் அவர்கள். வெங்கடரமணனின் பதவிக் காலம் முடிந்து விட்டது. ஆனால், அவரது சேவை தேவை என்று நினைத்த முதல்வர் ஐந்து ஆண்டுகளுக்குப் பணி நீட்டிப்பு கொடுத்தார். அப்போது, தன்னுடைய குடும்பத்தினருடன் சென்று முதல்வரைச் சந்தித்து ஆசி பெற்றார் வெங்கடரமணன். உள்துறைச் செய லாளராக இருக்கும் ராஜகோபாலுக்கு, திட்டம்- வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை ஆணையர் பதவியும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. 'பொதுவாக உள்துறைச் செயலாளருக்கு இப்படிக் கூடுதலாக எந்தத் துறையையும் ஒதுக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு உள்துறையில் தினமும் ஏராளமான பிரச்னைகளை டீல் செய்ய வேண்டும் என்பதால், கூடுதல் சுமையை திணிக்க மாட்டார்கள். ஆனால் இப்போது, ராஜகோபாலுக்குத் திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கொடுக்கப்பட்டு இருப்பது அவர் மீது முதல்வர் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது’ என்கிறார்கள். ஷீலா ப்ரியா, முதல்வரின் செயலாளர்களில் முதலாமவர். இரண்டாவது ராம மோகன ராவ். சில மாதங்களுக்கு முன்பே, ஷீலா ப்ரியாவின் அதிகாரம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் ராம மோகன ராவ் சமீப காலமாக கொஞ்சம் சைலன்ட் ஆக்கப்பட்டு உள்ளார் என்றும் தகவல். அவர்களுக்கான இடங்களை வெங்கடரமணனும் ராஜகோபாலும் பிடித்து விட்டார்களாம்.''
''இவர்கள் சம்பந்தமாக பலமான விமர்சனங்களும் கோட்டை வட்டாரத்தில் நிலவுகிறது. 'முதல் அமைச்சரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக இவர்கள் இணைந்தும், போட்டி போட்டும் செயல்படுகிறார்கள். வெங்கடரமணன், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் 2006-ம் ஆண்டு வரை முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கூடுதல் செயலராக இருந்தார். அதன்பிறகு, அசோக் வர்தன் ஷெட்டி ஆசீர்வாதத்தில் 2007 முதல் 2011 வரை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளராக இருந்தார். அதன்பிறகு, மீண்டும் ஜெயலலிதாவின் செயலாளராக ஆனார். இப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இவர்தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். முதல்அமைச்சரின் அனைத்து உரைகளையும் இவர்தான் தயாரிப்பதாகச் சொல்கிறார்கள். எல்லா அமைச்சர்களும் இவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். அமைச்சர்களுக்கு முதல்வரின் உத்தரவைச் சொல்வது இவர் என்பதால், இவரது வாக்கே வேதவாக்காக இருக்கிறது’ என்கிறார்கள்.
தன்னுடைய நண்பர்களை முக்கியப் பதவிகளில் கொண்டுவந்து விட்டார் என்றும் பேச்சு. 'இந்த ஆட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திவரும் ஒரு துறைக்கு தனக்கு வேண்டியவரைக் கொண்டு வந்தார். அவர்தான் முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது தேர்தல் அறிக்கை தயாரிக்க அந்தக்கட்சிக்கு உதவியாக இருந்து பல ஆலோசனைகளைச் சொன்னவர். அவரை இந்தப் பதவிக்குக் கொண்டுவர வேண்டாம் என்று மூத்த அதிகாரி தடுத்தும் அதை மீறிக் கொண்டுவந்தார்கள். முந்தைய முறை அவர் இந்தத் துறையை சரியாகக் கவனித்திருந்தால், இந்த அளவுக்குத் தட்டுப்பாடு வந்திருக்காதே’ என்கிறார்கள்.''
''ராஜகோபால், நன்றாகப் பேசக்கூடியவர். ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் நடத்திய துறை ரீதியான மீட்டிங்குகளில் அசத்தியவர். முதலில் இவருக்கு உள்துறை தரப்பட்டது. அப்புறம், திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கொடுக்கப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அடிமாட்டு விலைக்கு வீடு ஒதுக்கீடு செய்தபோது, 'இவ்வளவு குறைந்த விலைக்கு எப்படி உங்களால் கொடுக்க முடிகிறது?’ என்று கேட்டு, தனக்கு வீடு வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர்தான் இந்த ராஜகோபால். 'தகுதி, திறமை உள்ளவராக இருந்தாலும் உள் துறையை வைத்திருப்பவருக்கு இன்னொரு துறை தரலாமா? தமிழகத்தில் கூடங்குளம், பரமக்குடி, சிவகங்கை, தர்மபுரி என்று சட்டம் ஒழுங்கு முழுமையாகச் சிதைந்து வருகிறது. அதைக் கவனிப்பவருக்கு இந்தக் கூடுதல் சுமை தேவையா?’ என்பதும் பலரது கேள்வி.''
''அதற்காக மற்றவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது என்பது இன்னொரு சாரார் கருத்து. 'முதல்வரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகச் செயல்படுவதை விட, தமிழகத்தை வளப்படுத்தும் திட்டங்களில் இந்த அதிகாரிகள் கவனம் செலுத்தலாம்’ என்பதுதான் ஆதங்கம்''
No comments:
Post a Comment