காசி முதல் ராமேஸ்வரம் வரை... என்று இந்தியா முழுக்கச் சொல்லும் அளவுக்கு புகழ் பெற்ற நகர் இன்று நாறுகிறது! ''பக்தியுடன் வரும் பக்தர்களுக்கு, தொற்று நோய்களை இலவசமாக வழங்குகிறது ராமேஸ்வரம் நகராட்சி'' என்று குற்றம் சுமத்துகிறார், ம.தி.மு.க-வின் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் கராத்தே பழனிச்சாமி.
''பக்தர்களுக்குப் புண்ணிய ஸ்தலமாகவும் மற்றவர்களுக்கு சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்கும் ராமேஸ்வரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி வழங்குகின்றன. ஆனால், நகராட்சி நிர்வாகத்தினர், அத்தனை நிதியையும் வீண டிக்கிறார்கள்.
நகரில் உள்ள 21 வார்டுகளில், 10 வார்டுகளில் சுகாதாரப் பணியை தனியாரிடம் ஒப்படைத்து உள்ளனர். அவர்களது கட்டுப்பாட்டில்தான் திருக்கோயிலின் நான்கு ரத வீதிகள், நகருக்குள் வரும் தேசிய நெடுஞ்சாலை, மீன் மார்க்கெட், கடை வீதி போன்ற பிரதான பகுதிகள் இருக்கின்றன. மிகவும் கண்காணிப்புடன் இருக்க வேண்டிய இந்தப்பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல், மலைபோல குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக பள்ளிகள், பிரதான சாலைகள் அமைந்துள்ள திட்டக்குடி சந்திப்பு, பழைய போலீஸ் லைன், நகர காவல் நிலைய சாலை, ரயில் நிலைய சாலை ஆகிய இடங்களில் குப்பை அள்ளப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இந்தக் குப்பைகளுடன் கடற்கரை பகுதியில் இருந்து வரும் மீன் கழிவுகளும் சேர்வதால், புழு, பூச்சிகள், கொசு, ஈக்கள் பெருகிவிடுகின்றன. இதுவே பல தொற்று நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது.
இதுதவிர, நகரில் பல இடங்களில் கழிவுநீர் செல்வதற்கு முறையான வசதி செய்யப்படவில்லை. அதனால் எங்கெங்கும் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. ஒரு சில இடங்களில் குடிநீர்த் தொட்டிகளில் இந்தக் கழிவுநீர் கலப்பதாலும் பல நோய்கள் உண் டாகின்றன.
மழை பெய்தால், இங்கே வசிப்பவர்கள் அனுபவிக்கும் கொடுமையைச் சொல்லவே முடியாது. நகர் முழுவதும் மழை நீருடன் கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடும். உள்ளூர்வாசிகளும் வெளியூர் பக்தர்களும் கழிவுத் தண்ணீரில்தான் நடக்கவேண்டும். இந்தக் குறைபாடுகளை எல்லாம் நகராட்சி சேர் மனிடம் பல முறை புகார் செய்துவிட்டோம். ஆனாலும், எந்த விமோசனமும் கிடைக்கவில்லை'' என்று ஆவேசமானார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் சி.பி.எம். தாலுக்கா செயலாளர் செந்தில்வேல், ''நகராட்சிக்குப் போதிய வருமானம் இல்லாத காலங்களில் கூட, நகரம் தூய்மையாக பராமரிக்கப்பட்டது. ஆனால், இப்போது மத்திய, மாநில அரசுகள் நிறையவே நிதி வழங்குகின்றன. இதுதவிர நாள்தோறும் உருவாகி வரும் தனியார் விடுதிகள், ஹோட்டல்கள், வாகன நுழைவுக் கட்டண உரிமை என்று ஏகப்பட்ட தொகை வருமானமாக வருகிறது. ஆனாலும், எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற மறுக்கிறார்கள். பேருந்து நிலையம் உள்ளிட்ட கோயிலின் சுற்றுப் பகுதிகளில் ஓர் இடத்தில்கூட இலவசக் கழிவறை கிடையாது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட அலங்கார விளக்குகள் எல்லாம் எரியாமல் காட்சிப் பொருளாகத்தான் இருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில், பயணிகள் ஒதுங்குவதற்கு நிழற்குடைகள் கூட இல்லை. ஆனால், பயணிகள் ஒதுங்கி நிற்கும் இடங்களில் எல்லாம் தற்காலிகக் கடைகளை நகராட்சி நிர்வாகமே அமைத்து, பயணிகளுக்கான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்தக் கடைகளை கவுன்சிலர்களே தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். நகராட்சிக்கு சிறுதொகையை மட்டும் செலுத்திவிட்டு, எஞ்சியதை கூட்டுக்கொள்ளை அடிக்கிறார்கள். இதற்குக் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள அத்தனை கட்சிகளும் துணைபோகின்றன. இங்கு கடை ஒவ்வொன்றுக்கும் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று கவுன்சிலர்களும் சேர்மனும் குறியாக இருப்பதால், மக்கள் நலன் பற்றி சிந்திப்பதே இல்லை'' என்று குற்றம் சுமத்தினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த நகராட்சி சேர்மன் அர்ச்சுனனிடம் பேசினோம். ''ராமேஸ்வரம் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், இன்னும் பணியாளர்கள் எண்ணிக்கை, பேரூராட்சிக்கான அளவில்தான் இருக்கிறது. குறைவான ஊதியமே வழங்கப்படுவதால் தற்காலிகப் பணியாளர்கள் சுகாதாரப் பணிக்கு வர ஆர்வம் காட்டுவது இல்லை. இவற்றை எல்லாம் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். கூடுதல் பணியாளர்கள் நியமிப்பதற்கான அனுமதி கிடைத்தவுடன், சுகாதாரப் பணிகள் முழுமையாக சீரடைந்து விடும். கழிவு நீர், வாய்க்காலில் இருந்து கடலுக்குச் செல்ல தேசிய நெடுஞ்சாலை குறுக்கிடுகிறது. எனவே, அங்கு புதிய பாலம் அமைத்துத் தரு மாறு தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் கோரியுள்ளோம். அந்தப்பாலம் கட்டிவிட்டால், கழிவுநீர் தேங்காது. பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கடைகள் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதப்பட்டால், அவை நிச்சயம் அகற்றப்படும். நகராட்சி சார்பில் அந்தக் கடைகளுக்கு நாங்கள் சரியான தொகையைக் குறிப்பிட்டு அனுமதி கொடுத்திருக்கிறோம். அந்தக் கடைக்கு அனுமதி பெற்றவர்கள், கூடுதல் பணத்துக்கு மற்றவர்களிடம் கொடுப்பதை நாங்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? மக்களுக்கும் பயணிகளுக்கும் அனைத்து வசதிகளும் விரைவில் கிடைக்கும்'' என்றார்.
ராமேஸ்வரத்துக்கு விரைவில் விமோசனம் கிடைக்கட்டும்
No comments:
Post a Comment