Wednesday, November 7, 2012

காங்கிரஸ்காரர் மீது கார்த்திக் சிதம்பரம் போட்ட டுவிட்டர் வழக்கு.


நாம் ஜனநாயக நாட்டில்தான் வசிக்கிறோமா என்று சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் அவ்வப்போது சில நிகழ்வுகள் நடப்பது உண்டு. அதில் லேட்டஸ்ட், கார்த்தி சிதம்பரத்தை ட்விட்டரில் விமர்சித்தவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மீதே வழக்குப் போட்டு இருப்பதால், கொந்தளிக்கிறார்கள் புதுவை காங்கிரஸ் தொண்டர்கள். 
கடந்த 30-ம் தேதி, புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவியை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் திடீரெனக் கைது செய்தனர். காரணம், ட்விட்டரில்,  கார்த்தி சிதம்பரத்தை விமர்சித்ததுதான். புதுச்சேரி நீதி மன்றத்தில் நீதிபதி வெங்கடகிருஷ்ணன் முன் ஆஜர்படுத்தப்பட்ட ரவியை, நவம்பர் 9-ம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அப்போதே, ரவி தரப்பில் இருந்து ஜாமீனுக்கு மனு போடப்பட்டதால், அது ஏற்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ரவியிடம் பேசினோம். ''20 நாட்களுக்கு முன், ஆங்கில நாளிதழில் காங்கிரஸ் கட்சி தொடர்பானசெய்தியைப் படித்துவிட்டு ட்விட்டரில் என்னுடைய பக்கத்தில், 'வதேராவை விட கார்த்தி சிதம்பரம் பணக்காரர்’ என்று என் கருத்தைப் பதிவு செய்திருந்தேன். அதன் பிறகு, நான் அதை மறந்துவிட்டேன். ஒரு வாரத்துக்கு முன், புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் என்னைத் தொடர்பு கொண்டு, என்னுடயை முகவரியைக் கேட்டனர். அப்போதே, 'காவல் நிலையத்துக்கு வர வேண்டுமா?’ என்று கேட்டதற்கு, 'தேவைஇல்லை’ என்று கூறினர்.
திடீரென, கடந்த 30-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸார் என்னைக் கைது செய்து விட்டனர். என் ட்விட்டர் கணக்கை ஆய்வுசெய்து, முன்பு ப.சிதம்பரத்தை விமர்சித்து நான் போட்ட பதிவுகளையும் என் வழக்கில் ஆதாரங்களாகச் சேர்த்து உள்ளனர். எட்டு மாதங்களுக்கு முன், 'ஆதார் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிதம்பரம், நாட்டின் வளர்ச்சியை விரும்பவில்லை’ என்றும்... அடுத்த நான்கு மாதங்கள் கழித்து, 'சிதம்பரத்தை எம்.பி. ஆக்கியதற்காக தமிழனாக நான் வெட்கப்படுகிறேன்’ என்றும் ட்விட்டரில் நான் பதிவு செய்திருந்தேன். அந்தக் கருத்துக்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் இந்த வழக்கில் ஆதாரங்களாகச் சேர்த்து உள்ளனர்.
இப்போது, பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார் ராபர்ட் வதேரா. அவருக்கு  ஆதரவாக காங்கிரஸார் பலரும், 'அவர் தொழில் செய்துதான் சொத்து சேர்த்தார்’ என்று சொல்லி வருகின்றனர். இந்தச்சூழலில், நான் சொன்ன கருத்தால், கார்த்தி சிதம்பரத்தின் புகழுக்கு எந்தக் களங்கமும் விளைந்ததாகத் தெரியவில்லை. அவர் ஊழல் செய்தார் என்றோ, சட்டத்துக்குப் புறம்பாக சொத்து சேர்த்தார் என்றோ நான் கருத்துச் சொல்லவில்லை. என் மீது தொடுக்கப்பட்ட வழக்கு மூலம் கார்த்தி சிதம்பரமே வதேராவை ஒரு குற்றவாளி என்று மறைமுகமாகக் கூறுகிறார்'' என்று படபடப்புடன் சொன்னார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய ரவியின் நண்பரும் புதுச்சேரி காங்கிரஸின் முன்னாள் கவுன்சிலருமான சிபி, ''சொந்தக் கட்சிக்காரர் மீதே வழக்குப் போட்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். யார்மீது வழக்குப் போடுகிறோம் என்றெல்லாம் கவலை இல்லாமல், கட்சிக்காக உழைத்த அடிமட்டத் தொண்டன் மீது வழக்குப் போட்டிருக்கிறார். ஏற்கெனவே, புதுச்சேரி காங்கிரஸில் கட்சி மாறிகளுக்கும், பணம் படைத்தவர்களுக்கும்தான் பதவிகள் கொடுக்கிறாங்க. கட்சிக்காக உழைப்பையும் பணத்தையும் கொடுப்பவர்கள் மீது வழக்குப் போடுறாங்க'' என்று வருத்தப்பட்டார்.
காங்கிரஸ் அரசோடு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முட்டல் மோதல் போக்கைக் கடைப்பிடித்தாலும் புதுச்சேரி அரசைத் தங்குதடை இல்லாமல் நகர்த்துவதற்கு, மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவு அவசியம் என நினைக்கிறாராம். அதனால், அவரைக் குளிர் விப்பதற்காகவே இந்தக் கைது நடவடிக்கையில் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீஸை ரங்கசாமி பயன்படுத்தி இருக்கிறார் என்று கருதுகின்றனர் சமுக ஆர்வலர்கள்.
இந்தப் பிரச்னை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. ஆய்வாளர் தங்கமணியிடம் பேசினோம். ''எங்களுக்கு 29-ம் தேதி ஆதாரங்களுடன் புகார் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்து 30-ம் தேதி அதிகாலை கைது செய்தோம். அதிகாலையில் கைது செய்யலாமா என்று கேட்கிறார்கள். காலையில் கைது செய்யக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ன?'' என்று நம்மையே திருப்பிக் கேட்டார்.
கார்த்தி சிதம்பரம் தரப்பில் விளக்கம் பெறு வதற்காகத் தொடர்புகொண்டோம். அப்போது பேசிய அவரது செயலாளர் முரளி, ''கார்த்தி இப்போது லண்டனில் இருக்கிறார். அடுத்து, அமெரிக்கா செல்ல இருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அதனால், இந்த வழக்குத் தொடர்பாக வழக்கறிஞர் நிர்மலிடம் பேசிக்கொள்ளுங்கள்'' என்றார். நிர்மலிடம் பேசினோம். ''சமுக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்டவரின் கணக்கை ஆய்வு செய்தபோது பல்லாயிரம் பேர் அவர் பதிவு செய்த கருத்துகளைப் பார்த்து உள்ளது தெரிகிறது. எனவே, இந்த நடவடிக்கையில் இறங்கினோம். இதில், தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை'' என்றார்.
இப்போது, தொழிலதிபர் ரவிக்கு ஆதரவாக சுப்ரமணியன் சுவாமி ஆஜராக தானே முன் வந்திருக்கிறாராம். ஆக, வழக்கு சூடுபிடிக்கிறது!

No comments:

Post a Comment