Thursday, November 15, 2012

உனக்கு எந்த இடத்துல தீ பிடிச்சது? வக்கீல்கள்... மிரளும் மாணவர்கள்


வம்பர் 7-ம் தேதி, மதிய நேரம். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற ஹாலைத் தாண்டிக் கேட்டது, அந்த சீற்றக் குரல். கும்ப​கோணம் பள்ளியில் 94 மாணவர்கள் இறந்த கொடூரத் தீ விபத்து தொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்த சூர்யா என்ற மாணவனிடம் நடைபெற்ற குறுக்கு விசாரணையில்தான் இந்த சீற்றம்.  
கூண்டில் நின்ற மாணவன் சூர்யா​வுக்கு இப்போது வயது 15. சம்பவம் நடந்த நேரத்தில் நான்காவது வகுப்பு படித்தவர்.
மாணவன் சூர்யா: ''தீ பிடிக்கும்போது என் ஃபிரெண்ட் பிரேம்கூடதான் இருந்தேன். என் கையால் அவனைப் பிடிச்சிக்​கிட்டு இருந்தேன். பேக்கை எடுக்கப் போறேன்னு சொல்லிட்டு, என் கையை விட்டுட்டுப் போனான்.''
எதிர்த் தரப்பு வழக்கறிஞர்: ''நீ பொய் சொல்ற. அந்த ஸ்கூல்ல நீ படிக்கலை...''
மாணவன் சூர்யா (கோபமான குரலில்): ''நீங்க அந்த இடத்தில் இருந்தீங்களா? அப்படின்னா, 94 பேர் இறந்த​துக்கு நீங்க காரணம் சொல்லுங்க...''
எதிர்த் தரப்பு வழக்கறிஞர்: ''94 பேர்னு எப்படித் தெரியும்? போலீஸ்காரங்க சொல்லிக்கொடுத்து சொல்​றீங்களா..?''
சூர்யா (ஆவேசத்துடன்): ''நடந்ததைத்தான் சொல்றேன்... இதெல்லாம் மறக்க முடியாத விஷயம். உங்க வீட்ல இப்படி யாராவது இறந்திருந்தா, நீங்க சும்மா இருப்பீங்களா?'' என ஆத்திரத்துடன் கேள்வி எழுப்ப... நீதிமன்றமே அதிர்ந்து போனது!
தமிழகத்தை உறையவைத்த சம்பவத்தின் விசாரணையில்தான் இந்த உருக்கமான காட்சிகள்!
அன்று அந்த மாணவனிடம் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்துக்கு வெளியே சூர்யாவை சந்தித்தோம்.
உனக்கு எந்த இடத்துல தீ பிடிச்சது?  குடையும் வக்கீல்கள்... மிரளும் மாணவர்கள்
''அஞ்சாறு வக்கீலுங்க என்னை பயமுறுத்துற மாதிரி அதட்டி அதட்டிக் கேள்வி கேட்டாங்க. எனக்கு நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. 'பிரேம்கிற பையனுக்கு எந்த இடத்தில் தீ பிடிச்சது?’ன்னு வக்கீல் கேட்டார். என் கண்ணு முன்னாடிதான் தீ பிடிச்சு அவன் செத்தான். அவனுக்கு எந்த இடத்தில் முதல்ல தீ பிடிச்சதுன்னு பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? வேகமா வெளியே ஓடியாந்தேன். அப்படியும் அனல், புகை அடிச்சு எனக்கு வலது பக்கக் காதில் பயங்கர வலி. அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமஆஸ்பத்திரியில் கத்திக்கிட்டே கிடந்தேன். ஆனா, 'அரசாங்கத்தில் பணம் தருவாங்கன்னுதானே ஆஸ்பத்திரியில் சேர்ந்தே?’னு அந்த வக்கீல் கேட்கிறார். என்கிட்ட கேட்ட மாதிரிதான் மத்தப் பசங்ககிட்டேயும் வக்கீலுங்க அதட்டிக் கேட்கிறாங்க'' என்று ஏக்கத்துடன் சொன்னார்  அந்த மாணவர்.
முந்தைய தினம் நடைபெற்ற குறுக்கு விசாரணையின்போது மெர்சி ஏஞ்சல் மேரி என்ற மாணவி கண்ணீ​ருடன் பொங்கி இருக்கிறார். தீக்காயத் தழும்புகளுடன் இருந்த அந்த மாணவியை, கும்பகோணத்தில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தோம். ''கை, கால், முதுகுன்னு உடம்பு பூரா தீயால் தழும்பாயிடுச்சு. இதெல்லாம் தெரிஞ்சும், என்னை மிரட்டிதான் கேள்வி கேட்​டாங்க. அதான் நான் அழுதுட்டேன். அவங்க கேக்குற கேள்விக்கு நான் பதில் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே... வேகமா அடுத்து அடுத்து கேள்வி கேட்கிறாங்க.
எங்க பள்ளிக்கூடம் தீப்பிடிச்சு மாட்டி​னப்போ, நான் மூணாவது படிச்சிக்​கிட்டு இருந்தேன். அப்ப எனக்கு ரெண்டு கால்லேயும் நெருப்புப் பட்ட​தால், வெளியே ஓடிவர முடியலை. அந்த இடத்தில் நிறையப் புள்ளைங்க எரிஞ்சு தரையில் கிடந்தாங்க. நான் பெஞ்சுக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டேன். உடம்பு எல்லாம் பயங்கரக் காயம். அப்புறம்தான் என்னைக் காப்பாத்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க. ஆறு மாசம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். என்கிட்ட கோர்ட்ல வக்கீல் ஒருத்தர், 'உனக்கு மட்டும் ஏன் தனியா ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க’னு கேட்​டார். 'என் உயிரையாவது காப்பாத்த அவங்க நினைச்சிருக்கலாம்’னு சொன்னேன்.
எங்க ஸ்கூல் தீப்பிடிச்சு எரிஞ்சதைப் பத்தியே என்னை பேசவிடாம, 'ட்ரீட்மென்ட்டுக்கு எவ்வளவு செலவாச்சு..? எத்தனையாவது மாடியில உனக்கு சிகிச்சை கொடுத்தாங்க..? ஸ்கூல்ல எத்தனை மாணவர்கள் படிச்சாங்க..? எத்தனை பேரு வந்தாங்க..? நீ என்ன ஐ.ஏ.எஸ். எக்ஸாமா எழுதின..? இப்படி என்னென்னமோ கேள்விகளைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் குழப்பினாங்க'' என்றார் மிரட்சி விலகாமல்.
இவருடைய தந்தை மரியநாதன், ''பள்ளி நிர்வாகி பழனிச்சாமியின் பண ஆசையாலும் அலட்சியத்தாலும்தான் 94 உயிர்கள் தீயில் கருகின. இது நாடே அறிஞ்ச சம்பவம். ஆனாலும், எட்டு வருஷமா இந்த வழக்கை இழுஇழுன்னு இழுத்துக்கிட்டே போறாங்க. பழனிச்சாமிக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தாதான் இந்த மாதிரியான சம்பவங்கள் இனியாவது எங்கேயும் நடக்காம இருக்கும். எதிர்த் தரப்பு வக்கீலுங்க குறுக்கு விசாரணைனு ரொம்பவும் அதிகப்படியா நடந்துக்கிறாங்க. இந்த வழக்குக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளைக் கேட்டு, மாணவர்களைக் குழப்புறாங்க. தீ விபத்து சம்பவத்தை ஒழுங்காச் சொல்லவிடாமத் தடுத்து, இந்த வழக்கை ஒண்ணும் இல்லாம ஆக்கப் பார்க்குறாங்க.'' என்று கோரிக்கை வைத்தார்.
எதிர்த் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான வி.எஸ்.ராமலிங்கத்திடம் பேசினோம். ''குறுக்கு விசாரணை செய்தால்தான் உண்மை வெளிப்படும்; இல்லை என்றால், அந்த சாட்சியமே பயன் அற்றது. போலீ​ஸார் சொல்லிக்கொடுத்த விஷயங்களைத்தான் அந்த மாணவர்கள் நீதிமன்றத்தில் சொன்னார்கள். அதனால் உண்மையை வெளிப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்டோம். மாணவர்களை மிரட்டினோம் என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட விஷயம். அந்தப் பள்ளியில் நடந்தது ஒரு விபத்து. அதற்காக பள்ளி நிர்வாகி பழனிச்சாமியை குற்றவாளி ஆக்குவதா?'' என்றார்.

No comments:

Post a Comment