Monday, November 19, 2012

'சீனத் தோழன்' இலங்கையை நம்பலாமா? கேள்வி எழுப்பும் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


ந்தியாவுக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கை​யுடன் நெருக்கமான உறவைப் பேணி ஆபத்தை ஏற்படுத்திக்கொண்டு வரும் நிலையில் ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறோம் நாம். அவர்களது சீனப் பாசத் துக்கு அடிப்படைக் காரணம், இந்தியாவின் மீதான வெறுப்புத்தான்! 
இதுவரை இந்தியாவில் இருந்து சென்ற முக்கியத் தலைவர்கள் அனைவரையும் சிங்கள வெறியர்​கள் தாக்கி இருக்கிறார்கள் என்பதே வரலாறு. இத்தகைய தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பண்டித ஜவஹர்லால் நேரு, கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே.கோபாலன், ராஜீவ் காந்தி. ஆனால், நமக்கு ராஜீவ் தாக்கப்பட்டது மட்டும்தான் தெரியும்!

1987-ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொருட்டு இலங்கைக்குச் சென்றார் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி. அவரைத் தனது கடற்படை வீரன் விஜேமுனி விஜித ரோகன டி சில்வா  மூலமாக கொலை செய்ய முயற்சித்த இலங்கை அரசின் செயல், இங்குள்ள அதிகார வர்க்கத்தினருக்கு மறந்து​ போயிருக்கலாம். இலங்கை நீதிமன்றம் அந்தக் கொலைக்காரனுக்கு சிறைத் தண்டனை வழங்கியது. ஆனால், 1990-ல் அந்தக் கயவனுக்கு மன்னிப்பு அளித்து 'பெருந்தன்மையுடன்’ நடந்து கொண்டது இலங்கை அரசு.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே, ஆட்சி​யில் இருந்த சிங்களத் தலைவர்கள் அனைவருமே இந்தியாவின் மீது மரியாதை செலுத்துவதைப் போல பாசாங்கு செய்தபடி, இந்தியாவுக்கு விரோதமான அத்தனை நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்கூட, கொழும்பு நகர மையப்பகுதியில் காலே சாலையில் இந்தியத் தூதரக அலுவலகத்துக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை சீன விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு விற்பனை செய்து, ஒப்பந்தத்தை மீறி இருக்கிறது இலங்கை.
இலங்கையின் தென்கோடியில் உள்ள கெம்பன் தோட்டா துறைமுகத்தை 7,500 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியாவுக்கு எதிராக சீனா உருவாக்கி உள்ளது. இதனால், வரும் காலத்தில் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களின் வர்த்தக முக்கியத்துவம் குறைந்து போகும். அது மட்டுமல்லாமல் சிறிய கப்பல்கள் மட் டுமே தூத்துக்குடி, சென்னைக்கு வரக்கூடிய சூழலை இலங்கை உருவாக்கி விட்டது.
இந்தியா மீது நல்ல எண்ணம் இல்லாத மியான்மர், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள்தான் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றன. இந்த நாடுகளுடன் எல்லாம் அதீத நட்பு பாராட்டுகிறது இலங்கை. இப்போது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அத்துமீறி நுழைந்து பிரம்மபுத்ரா நீரோட்டத்தைத் தன்வசம் திருப்ப முயன்று வருகிறது சீனா. அப்படிப்பட்ட சீனாவுடன் இலங்கை 14 புதிய ஒப்பந்தங்களுக்குக் கையெழுத்துப் போட்டுள்ளது. அதன்படி 4,180 கோடி ரூபாய் செலவில் இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சீனா மேற்கொள்ள இருக்கிறது. மேலும், தொழில்நுட்ப ஒத்து ழைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, புதிய முதலீடுகள், விசா நடைமுறைகள் தளர்வு, கடல்சார் துறைகளை வலுப்படுத்த உதவி போன்றவற்றையும் இலங்கைக்கு சீனா அளிக்க இருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் அதிபர் ஹு ஜிண்டாவோவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் தலைவரான வு பாங்ஜு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு உறவின் நெருக்கத்தை அதிகப்படுத்தி உள்ளார். அதைத்தொடர்ந்து, இலங்கை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சீன வங்கிகள் கடன் வழங்க இருக்கின்றன. அருணா​சலப் பிரதேசத்தை உரிமை கொண்​டாடுவது, எல்லையில் விமானத் தளங்களை அமைப்பது என்று இந்தியாவுக்கு பல்வேறு பிரச்னைகளைக் கொடுக்கும் சீனாவுக்கு, இலங்கை நெருங்கிய நட்பு நாடாக மாறுவது ஆபத்தானது. அதனால், எதிர்காலத்தில் இந்த இரு நாடுகளும் சேர்ந்து இந்தி​யாவுக்கு நெருக்கடி அளிக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்​காமல் தொடர்ந்து தாக்கி வருகிற இலங்கை, அம்பாறை பொத்துவில் கடலில் மீன்பிடிக்க சீன நிறுவனங்​களுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மீனவர்கள் மீன் பிடிப்பதற்குப் பல்வேறு தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சீன மீனவர்கள் சுதந்திரமாக அந்தக் கடலில் மீன் பிடிக்கிறார்கள். நமது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்​படவும், கைதியாகப் பிடிக்கப்​பட்ட நேரத்திலும் சீன நாட்டினரையும் இலங்கைக் கடற்படையினரோடு பார்த்ததாகச் சொல்லி இருக் கிறார்கள்.
தான் உற்பத்தி செய்யும் பொருட்களை இலங்கை, பாகிஸ்தான், அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கு இந்து மகா சமுத்திரம், தன் ஆளுகைக்கு உட்பட வேண்டுமென்று தந்திரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது சீனா. இந்தியாவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சீனா பயன்படுத்தி வருகிறது. அதற்குக் கடல் ஆதிக்கமும் தேவைப்படுகிறது.
பங்களாதேஷில் சிட்டகாங், பாகிஸ்தானில் கோத்தார் ஆகிய துறைமுகங்கள் சீனாவின் பிடியில் வந்து விட்டன. தைவானை தன் வசமாக்கிக்கொண்ட பிறகு, ஆசிய கண்டத்தையே தன் ஆளுமைக்குக் கொண்டுவர சீனா திட்டமிட்டு உள்ளது. இதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போட்டி நிலவுகிறது. இந்தச்சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அபாயம் தரும் நிலை ஏற்பட்டு இருப்பதற்கு ஒட்டுமொத்தக் காரணம் இலங்கை சிங்கள அரசும், அதன் அதிபர் ராஜபக்ஷேவும்தான்.
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராகச் செயல்​பட்ட பசீது வாலி முகம்மதுவின் உதவியோடு பாகிஸ்தான், இரண்டு கப்பல் நிறைய ஆயுதங்களை வழங்கியது. இந்தியாவுக்குள் நடைபெறும் பல்வேறு தீவிரவாதச் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் ஐ.எஸ்.ஐ-யின் முன்னாள் தலைவராகச் செயல்​பட்டவர் பசீது வாலி முகம்மது. மேலும், இவர் கோவை குண்டு வெடிப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தி​யாவின் தலைப் பகுதியான காஷ்மீரில் கண்மூடித்தனமான தீவிரவாதத்தை முன்னெடுக்கும் பாகிஸ்தான், சிங்கள இலங்கை வழியாக தென்னிந்தியப் பகுதிகளிலும் மத வன்முறையைத் தூண்ட முயற்சிக்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் இறை யாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயலுக்கும் சிங்கள அரசு துணை போகக்கூடும். ஈழத்தின் சம்பூர் மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கிவிட்டு, இலங்கை அரசு அதை நிறைவேற்றவிடாமல் மழுப்பி பாகிஸ்தானுக்குக் கொடுக்கத் திட்டமிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.
பலாலி விமான நிலையத்தை இந்தியா சீர் அமைத்துக் கட்டித்தர சம்மதித்த ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டுவிட்டார் ராஜபக்ஷே. சமீபத்​தில் வர்த்தக ஒப்பந்தங்களை நடை முறைப்படுத்த இலங்கைக்குச் சென்ற இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மாவுக்குத் தெளிவான பதிலை இலங்கை அரசு கூறவில்லை.
போர் முடிந்த பின்னரும் சிங்கள அரசு சீனா, பாகிஸ்​தான் ஆயுதங்களோடு ராணுவத்தினரைக் குவித்து, தமிழர்களை அச்சப்படுத்துகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்த மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரும், அந்தத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதாவது தமிழர்கள் பெரும்பாலும் வாழும் இடங்களில் சிங்கள ராணு​வம் அதன் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்து இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் மூன்று பிரிவுகளும், கிளி நொச்சியில் மூன்று பிரிவுகளும், முல்லைத் தீவில் மூன்று பிரிவுகளும் வவுனியாவில் ஐந்து பிரிவுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் இரண்டு பிரிவுகள் கிழக்கு மாகாணத்திலும், தென்பகுதியில் மூன்று பிரிவுகளும் வைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கர்னல் ஆர்.அரிகரன், 'இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் பரவலாக நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, போருக்குத் தயார் நிலையில் இருப்பதுபோன்று காட்சி அளிக்கிறது’ என்று அச்சம் தெரிவித்துள்ளார். அண்மையில் அதிபர் ராஜபக்ஷே, 'தமிழ்ப் புலி களுக்கு எதிரான போரில் பாகிஸ்தானும் சீனாவும் உதவியதற்காக நன்றி’ என்று பட்டவர்த்தனமாக அறிவித்து இருக்கிறார். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, உலகம் முழுவதும் தனது வணிகத்தை பெருக்க சீனா திட்டமிட்டு உள்ளது. வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளோடு உறவுகொள்ளத் துடிக்கிறது. சீனா வுக்கு எரிவாயு, கச்சா எண்ணெய் வருவதற்கு பர்மா வழியாக பைப் லைன் போட்டு அந்தமான், இலங்கை வழியாக ஊடுருவும் திட்டங்கள் உள்ளன. வங்கக் கடலோரத்தில் இருக்கிற கொக்கோ தீவுகள், பர்மாவுக்கு இந்தியா விட்டுக் கொடுத்து ஆஸ்திரேலியா உரிமை கொண்டாடியது. இப்போது அந்த இரண்டு தீவுகளையும் சீனா பர்மாவிடம் குத்தகை எடுத்துக்கொண்டு, அங்கே கப்பல் படைத் தளத்தை நிறுவ உள்ளது.  மேலும், எலக்ட்ரானிக் பொருட்களையும், துணிகள், பீங்கான் பாத்திரங்கள், பிளாஸ்க் போன்ற சீனப் பொருட்களை உலகத்தின் அத்தனை பகுதிகளுக்கும் இறக்குமதி செய்ய வேண்டும் என்று பேராசைப்படுகிறது சீனா. இதன் மூலம் இந்தியாவின் ஆளுமையை தென் கிழக்கு ஆசிய மண்டலத்தில் ஒழிப்பதற்குத் திட்டம் தீட்டுகிறது.
இப்படிப்பட்ட சீனாவுடன் நட்பு பாராட்டுகின்ற சிங்கள அரசை, நம்பக் கூடாது என்பதை இந்தியா எப்போது புரிந்துகொள்ளுமோ?

No comments:

Post a Comment