Thursday, November 15, 2012

உதவி செய்யப் போனவர் சந்தித்த மரணம்! அதிர வைத்த அநியாயம்!


விபத்து நடந்தால் பலரும் உதவி செய்யாமல் ஒதுங்கிப்போவதற்கு போலீஸ் செயல்பாடு ஒரு முக்கியக் காரணம். விசாரணை, ஸ்டேஷன், நீதிமன்றம் என்று அலையவைப்பார்கள் என்றே பலரும் தயங்குவார்கள். இந்தச் சூழலில், போலீஸுக்கு உதவ முன்வந்த ஒருவர் அடித்தே கொல்லப்பட்டது, தமிழகத்தையே அதிரவைத்தது! 
லால்குடி ஊராட்சிக்கு அருகில் இருக்கும் ஊர் மணக்கால். இந்த ஊரைத் தாண்டித்தான் இருக்கிறது அன்பில் மணல் குவாரி. எப்போதும் மணல் லாரிகள் பவனி வருவதால், அன்பில் தொடங்கி லால்குடி வரைக்கும் சாலைகள் தூசி பறக்கக் காட்சி அளிக்கும். இந்த குண்டும் குழியுமான சாலையில் கடந்த 7-ம் தேதி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியில் அடிபட்டு, மொபட்டில் சென்ற கொப்பாளி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இந்த விபத்துக்கு போலீஸுக்கு உதவி செய்யப் போன மணக்காலை சேர்ந்த ராஜேஷ் என்பவரைத்தான், பொதுமக்கள் அடித்தே கொன்று இருக்கிறார்கள்.
பரிதாபமான மரணத்தை ராஜேஷ் சந்தித்​துள்ளார்!
நாம் சென்றபோது கிராமமே ஒன்றுகூடி மணக்​கால் பேருந்து நிறுத்தத்தில் காவல் துறையை எதிர்த்து பஸ் மறியலில் நின்றது. இறந்துபோன ராஜேஷின் தம்பி பிரேமை சந்தித்தோம். ''கொப்பாவளி ஊரைச் சேர்ந்த மூர்த்தியை அவரது மகன் ராஜேஷ் மொபட்ல பின்னாடி உட்காரவைச்சுக் கூட்டி வந்திருக்கார். மணக்கால் அருகே வரும்போது எதிரே வந்த லாரி மோதி, விபத்து நடந்திடுச்சு. ராஜேஷ் எப்படியோ தப்பிச்சுட்டார். மூர்த்தி அந்த லாரியின் பின் டயரில் மாட்டி, சம்பவ இடத்​திலேயே இறந்துட்டார். உடனே ஊர்க்காரங்க, போலீஸ்னு கூட்டம் சேர்ந்து போச்சு.
சம்பவம் நடந்ததுமே, லாரி டிரைவர் பயந்துபோய் லாரியை விட்டுட்டு ஓடிப் போயிட்டார். லால்குடி டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்னு எல்லா போலீஸ்காரங்களும் வந்துட்டாங்க. டிராஃபிக்கை கிளியர் பண்ணுவதற்காக, 'இங்கே டிரைவிங் தெரிஞ்சவங்க யாராச்சும் இருக்கீங்களா?’னு போலீஸ் கேட்டது. உடனே என்னோட அண்ணன், 'எனக்கு ஓட்டத் தெரியும்’னு உதவிசெய்யப் போனான். லாரியை ஸ்டேஷன்ல விடுறதுக்காக லால்குடியை நெருங்கிய நேரத்தில், விபத்தில் இறந்த மூர்த்தியோட ஊர்க்க​£ரங்க, 'இந்த லாரிதான்டா நம்ம மூர்த்தியைக் கொன்னது’ன்னு ஆவேசமா வந்து லாரியை நிப்பாட்டினாங்க.
எங்க அண்ணன்தான் விபத்து ஏற்படுத்தின டிரைவர்னு நினைச்சு, திபுதிபுன்னு லாரியில் ஏறிட்​டாங்க. எங்க அண்ணனை இழுத்துப்போட்டு அடிச்சாங்க. லாரிக்குப் பின்னாடி வந்த போலீஸ்​காரங்கதான் எங்க அண்ணனை மீட்டாங்க. அதுக்குப் பிறகும் எங்க அண்ணன் வலியைத் தாங்கிக்கிட்டு, லாரியை ஸ்டேஷன் வரைக்கும் ஓட்டிட்டுப் போனான். ஆனால் வலி அதிகமாகி மூச்சைவிட்டுட்டான். இப்போது, என் அண்ணன் மாரடைப்பால் இறந்துட்டதாச் சொல்றாங்க. இது​வரைக்கும் யார் மீதும் கேஸ் போடாமல் எங்களை ஏமாத்தப் பார்க்குறாங்க. போலீஸுக்கு உதவினால் இப்படித்தான் நடக்குமா? உதவி செய்தவரைக் காப்பாற்றவில்லை என்றாலும் இப்படி அவமானப்​​படுத்தாமல் இருக்கலாமே...' என்கிறார் பரிதாபமாக.
''ராஜேஷை அடிச்சது இறந்துபோன மூர்த்தியின் ஊர்க்காரங்க​தான். அவங்களுக்கு ராஜேஷ் எங்க ஊர்க்காரன்னு நல்லாவே தெரியும். ஏதோ முன் பகையை மனசில் வைச்சுத்தான் அடிச்சுப் போட்டுட்டாங்க. சரமாரியா அடிச்சதில்தான் இறந்துபோயிட்டார். இத்தனைக்கும் போலீஸும் அவர் கூடவேதான் போயிருக்காங்க'' என்றும் ஊர்க்காரர்கள் சிலர் குற்றம் சாட்டினார்கள்.
''லால்குடியைத் தொடும்போது கொப்​பாவளிக்காரங்க மூன்று பேர் லாரியை நிறுத்தி, ராஜேஷை ஓங்கி அறைஞ்சாங்க. அதைக் கவனிச்​சதும் நாங்க தலையிட்டுத் தடுத்துட்டோம். அவர் வண்டியைக்​கொண்டு வந்து ஸ்டேஷன்ல விட்டுட்டு வீட்டுக்குப் போய்ட்டார். அதன் பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னரே அவர் இறந்தார்'' என்று ஆரம்பத்தில் சொன்னார்கள் போலீஸார். பின்னர் என்ன நடந்ததோ... ராஜேஷை கொலை செய்ததாக நான்கு பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள்.
லால்குடி டி.எஸ்.பி-யான அப்துல் அஜீஸிடம் பேசினோம். ''ராஜேஷை அடித்துக் கொன்றது தொடர்பாக நால்வரைக் கைதுசெய்து இருக்கிறோம். அதில் ராஜேஷ் என்பவர் லாரி விபத்தில் இறந்துபோன மூர்த்தியின் மகன்'' என்றார்.
மூர்த்தியின் ஊரான கொப்பாவளி ஊராட்சி மன்றத் தலைவரான பன்னீர்செல்வத்திடம் பேசியபோது, ''அப்பாவைக் கொன்றுவிட்டார்கள் என்ற உணர்ச்சி வேகத்தில்தான் ராஜேஷ§ம் அவருடைய நண்பர்களும் இப்படி ஒரு செயலை செய்துவிட்டார்கள். மற்றபடி முன் பகை என்று சொல்வது தவறான தகவல்'' என்றார்.

No comments:

Post a Comment