Monday, November 26, 2012

அரசை ஏமாற்ற ஆன்மிகப் பூங்காவா? நித்தியின் சூப்பர் பிளான்!


த்தனை கஷ்டங்கள் வந்தாலும் நெளித்துக் கொடுத்து நிமிரப் பார்க்கிறார் நித்தி! 
நித்தியானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமத்தை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்துவதைத் தடுக்க, அதை புத்தர் கோயிலாக மாற்றும் திட்டம் அரங்கேறுவதாகச் சொல்லி அலறு கிறார்கள் இந்து சமயத் தலைவர்கள்.
நித்தியின் திருவண்ணாமலை ஆசிரமத்தை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அறநிலையத் துறை மூலம் விளக்கம் கேட்டு, கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
''அறநிலையத் துறை நித்திக்கு நோட்டீஸ் கொடுத்த நாளில் இருந்து, நித்தியை யாருமே பார்க்க முடியவில்லை. ஏனோ அவர் தலைமறைவாகவே இருக்கிறார்.  திருவண்ணாமலை ஆசிரமம் மூடியே இருக்கிறது. ஆசிரமத்தில் வழங்கப்படும் அன்னதானமும் கடந்த 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு, அதற்கான கூடமும் இடிக்கப்பட்டு விட்டது. இப்போது, ஆசிரமத்தில் இருந்த சுவாமி சிலைகள், ராசி, நட்சத்திரங்களுக்கான சிலைகள், 1,008 லிங்கங்களை அகற்றிவிட்டு புத்தர், நந்தி சிலை மற்றும் பெரிய பாறாங்கற்களும் குவிக்கப்பட்டு இருக்கின்றன'' என்று, ஆசிரமவாசிகள் தயக்கத்துடன் பேசினர்.
இந்த மாற்றங்கள் குறித்து அறிய நித்தியின் முக்கிய சீடர்களில் ஒருவரான நித்திய பிரானா னந்தாவை போனில் பலமுறை தொடர்பு கொண்டோம். ஒரு பெண் சீடரே பேசினார். ''மஹராஜ் மீட்டிங்கில் இருக்காங்க. அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்'' என்றார்.
பெயரைச் சொல்லாமல் பேசிய நித்தியின் சீடர் ஒருவர், ''அரசாங்கம் எங்க ஆசிரமத்தை எடுக்கப் பாக்குது. அதனால், ஆசிரமத்தைக் காப்பாற்றுவதற்காக  முக்கிய சீடர்கள், சட்ட வல்லுனர்களுடன் பல நாட்களாக சுவாமி ஆலோசனை நடத்தினார். என்ன முடிவு எடுக்கப்பட்டதுன்னு எங்களுக்குத் தெரியாது. திடீர்னு போன வாரம் லாரியில் சில ஆட்கள் வந்தாங்க. சுவாமியின் உத்தரவுன்னு சொல்லி, இங்கிருந்த சிலைகள், லிங்கங்களை எடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பதிலா புதுசு புதுசா சாமி சிலைகளை இறக்கினாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. அதுக்குப் பிறகுதான், 'சாமி இங்கே அனைத்து மதங்களையும் சார்ந்த ஒரு ஆன்மிகப் பூங்கா அமைக்கப் போகிறார்’னு சொன்னாங்க. அரசு கைக்கு எங்க ஆசிரமம் போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் சுவாமி இறங்கிட்டார். அவர் நிச்சயம் ஜெயிப்பார். இனி நாங்கள் பயப்படாமல் இருக்கலாம்'' என்றார்.
ஆனால், இதுகுறித்துப் பேசும் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சிவபாபு, ''நித்தியானந்தர் ஆசிரமம் இருக்கும் இடம் தானமாகப் பெறப்பட்ட இடம். அங்கே இந்து முறைப்படி 1,008 லிங்கங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அந்த லிங்கங்களுக்காக விளம்பரம் செய்து ஒவ்வொரு லிங்கத்துக்கும் 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை பெற்று, அவர்கள் விருப்பப்படும் தினத்தில் அந்த லிங்கத்துக்குப் பூஜை செய்து பிரசாதம் தரப்படும் என்று அறிவித்திருந்தனர். இதுதவிர, பௌர்ணமி நாளில் 50-க்கும் மேற்பட்டோர் உண்டியல் வைத்து வசூல் செய்தனர். இப்படி வசூல் செய்த பணத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்ற எங்கள் புகாரின் அடிப்படையில்தான், இந்து அறநிலையத் துறை அந்த ஆசிரமத்தைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்க நோட்டீஸ் கொடுத்தது. அதற்குள் அவர் கோர்ட்டுக்குப் போய்விட்டார். இப்போது அங்கே, 'இந்த இடம் தனியாருக்குச் சொந்தமானது. அனுமதி பெற்று உள்ளே வரவும்’ என்று போர்டு வைத்து இரவோடு இரவாக அங்கே இருந்த சிலைகள், லிங்கங்களை அப்புறப்படுத்தி, புத்தர் சிலைகளைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். அரசை ஏமாற்றி ஆசிரமத்தைக் காப்பாற்ற அங்கே நித்தியானந்தர் சர்வமத பிரபஞ்சவியல் பூங்கா அமைக்கப்போவதாக கூறுகின்றனர். முறையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்களை முறையாகத்தான் எடுக்க வேண்டும். அங்கே அப்படி நடக்கவில்லை. இது, ஆகம விதிகளுக்குப் புறம்பானது. அதற்காக நித்தியானந்தர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பூங்காவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இப்போது, மாவட்ட ஆட் சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் அறநிலையத் துறைக்குப் புகார் கொடுத்திருக்கிறோம். தீப விழா முடிந்ததும் இந்தப் பிரச்னையில் தீவிரமாகப் போராடுவோம்'' என்றார் ஆவேசமாக.
அறநிலையத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''நாங்கள் நோட்டீஸ் கொடுத்ததும் அவர் தகவல்களைத் தர மறுத்து கோர்ட்டுக்குச் சென்றுள்ளார். இப்போது, அங்கே மாற்றங்களைச் செய்து அனைத்து மதப்பூங்காவாக்க நினைக்கிறார். அங்கே புத்தர் சிலையை வைத்துவிட்டு புத்த மதத்தினரும் இங்கே வந்து வழிபடுகின்றனர். அதனால், இதை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்த முடியாது என்று காட்டவே இப்படிச் செய்கிறார். எங்கள் நடவடிக்கை நீதிமன்றத்தில் தொடரும்'' என்றார்.
எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா..!

No comments:

Post a Comment