Thursday, November 15, 2012

நாடார்களைச் சீண்டுகிறதா காங்கிரஸ்? கொந்தளிக்கும் குமரி!


காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் குமரி மாவட்டத்தில், சாதியின் பெயரால் தோன்றியுள்ள போராட்டத்தால் மிரண்டு நிற்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் 9-ம் வகுப்பு சமூகவியல் புத்தகத்தில், நாடார் சமூகத்தினர் இழிவு செய்யப்பட்டதுதான் விவகாரத்தின் தொடக்கம்!
 50 சதவிகிதத்துக்கு மேலாக நாடார் சமுதாய வாக்குகளை உள்ளடக்கியது குமரி மாவட்டம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸோடு கைகோத்த தி.மு.க-வின் வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் எம்.பி-யாகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெல்லார்மின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் குமரி மாவட்டத்தில் மட்டும் மூன்று தொகுதிகளில் வெற்றி என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த நாடார் சமுதாயம் இப்போது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கச்சை கட்டுவதுதான் பெரும் சிக்கலைக் கிளப்பி உள்ளது.
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பாலபிரஜாதிபதி அடிகளாரிடம் பேசினோம். ''சி.பி.எஸ்.இ.பாடத்திட்டத்தில் நாடார் சமூகத்தை மிகவும் கேவலமாக சித்திரித்து உள்ளார்கள். கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நாடார்களை, 'சாணார்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.  இதைவிடக் கொடுமை, நாடார்களை 'வந்தேறிகள்’ என்று சொல்லி இருப்பதுதான்.  குமரி மாவட்டத்தின் பூர்வீகக் குடிகள் நாயர் சமுதாயத்தினர் என்றும் நாடார்கள் பின்னர் வந்து குடியேறியவர்கள் என்றும் வரலாற்றை மறைத்து இருக்கிறார்கள்; மாற்றி எழுதி இருக்கிறார்கள்.
நாடார்களை இழிவுபடுத்தும் நோக்குடன் வெளி​யிடப்பட்டுள்ள இந்தப் பாடத்தை உடனடியாக நீக்கக் கோரித்தான் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். குமரி மாவட்ட விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் நாடார்கள் என்பதை அழுத்தம்​திருத்தமாகப் பதிவு செய்ய மறந்துவிட்டார்கள். குமரி மாவட்டத்தின் பூர்வீகக் குடிகள் நாடார்கள்தான் என்பதைப் பாடமாக மாற்றும் வரை எங்களது போராட்டம் ஓயாது’' என்றார்
தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கத் தலைவர் கருங்கல் ஜார்ஜிடம் பேசினோம். ''நாடார்களை இழிவுபடுத்தியதன் மூலம், ஆளும் காங்கிரஸ் அரசு அதனுடைய வக்கிர புத்தியைக் காட்டி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் என்றாலே காங்கிரஸுக்கு வாக்களித்துப் பழக்கப்பட்ட நாடார் சமுதாய மக்களை இழிவுபடுத்திவிட்டார்கள். இதற்கான பதில் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். எங்கள் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்திருக்கும் மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் இதுவரை வாய் திறக்காமல் மௌனமாக இருப்பது ஏன் என்று புரியவில்லை. அவர்கள் கட்சித் தலைமையிடம் எடுத்துச்சொல்லி பாடத்திட்டத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்காவிட்டால், குமரியில் காங்கிரஸ் தோற்பது உறுதி'’ என்றார்
இந்தச் சூழலில் வைகோ தலைமையில் குவிந்த ம.தி.மு.க-வினர் கடந்த 9-ம் தேதி சி.பி.எஸ்.இ-யின் செய​லைக் கண்டித்துக் குமரியில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் பேசியவைகோ, ''நாடார்களை இழிவுபடுத்தி, குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் இந்தப் பாடத்திட்டத்தை நீக்குவதற்கு டிசம்பர் 28-ம் தேதி வரை மத்திய அரசுக்கு காலஅவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் இந்தப் பாடத்தை நீக்காவிட்டால், வரும் டிசம்பர் 30-ம் தேதி ஒரு லட்சம் பேரைத் திரட்டி மார்த்தாண்டத்தில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். இந்தப் போராட்டம் கட்சிக் கொடிகளுக்கு அப்பாற்பட்டு, குமரி மாவட்ட உணர்வாளர்களின் போராட்டமாகவே நடை​பெறும். மானப் பிரச்னையை முன்வைத்து நடக்கும் இந்தப் போராட்டத்தில், திரளான மீனவர்களும் பங்கேற்பார்கள்'' என்றார்.
அம்பேத்கரை இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய சி.பி.எஸ்.சி., இப்போது நாடார்களை வம்பு இழுத்து உள்ளது. நடவடிக்கை எடுக்கவேண்டிய காங்கிரஸ் கட்சியோ வேடிக்கை பார்க்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசி​கனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ''இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த புரந்தேஸ்வரியை பெங்களூருவில் சந்தித்து முறையிட்டேன். அதன்பிறகு அமைச்சரவை மாற்றம் நடந்த நிலையில் கடந்த 4-ம் தேதி புதிய அமைச்சர் பல்லம் ராஜுவை டெல்லியில் சந்தித்துப் பேசினேன். அவரும் சி.பி.எஸ்.சி. சேர்மனிடம் பேசி பிரச்னையை தீர்ப்பதாகச் சொன்னார். அதன்படி இப்போது நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன. விரைவில் தீர்வு ஏற்படும். புத்தகத்தில் வரலாற்றுப் பிழைகள் இருக்கின்றன. தேவையில்லாத சில வார்த்தைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. வைகோ குறிப்பிடுவது போல இந்த தவறுக்கு மத்திய அரசு காரணம் அல்ல. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை வடிவமைப்பது அதற்காக உள்ள பாடநூல் கமிட்டிதான். இருந்தாலும் தவறுகளைத் திருத்துவதற்கான முயற்சியில் உடனே மத்திய அரசு இறங்கிவிட்டது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என் தலைமையில் போராட்டம் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தயாராகவே இருந்தது. இப்போது நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருப்பதால் போராட்டத்தை நிறுத்தியிருக்கிறோம்'' என்றார்.
வரலாறு என்பது திரிக்கப்பட்டதாகவோ... இழுக்கு செய்வதாகவோ இருக்கக்கூடாது!

No comments:

Post a Comment