Wednesday, November 7, 2012

கணக்கு வாத்தியாரை கத்தியால் குத்திய மாணவன். விருதுநகரில் விபரீதம்.


விருதுநகரில் ஒரே நாளில் இரண்டு பள்ளி மாணவர்கள் செய்த அடாவடிச் செயல்களால் ஆடிப்போய் இருக்கிறது, ஆசிரியர் சமுதாயம். 
விருதுநகரில் புகழ் பெற்றது, கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி. அரசு உதவிபெறும் இந்தப் பள்ளியில் 4,000 மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில்தான் விருதுநகர் அருகேயுள்ள கம்மாபட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சேவியரின் மகன் சம்பத் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். பள்ளிக்குத் தினமும் தாமதமாக வருவது, அடிக்கடி விடுப்பு எடுப்பது, சக மாணவர்களுடன் ஊர் சுற்றுவது போன்ற குணங்களுடன் வலம் வந்திருக்கிறான். ஆசிரியர்கள் பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை.
இதற்கிடையே, கடந்த மாதம் 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சம்பத் பள்ளிக்கு வரவில்லை. மறுநாள் பள்ளிக்கு வந்த அவனிடம், கணக்குப் பாட ஆசிரியர் பாண்டியராஜன், 'காலாண்டுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் குறைவான மார்க் வாங்கியிருக்கிறாய்.. இப்படி அடிக்கடி லீவு போட்டால் எப்படிப் படிப்பாய்? நாளை பெற்றோருடன் வந்து பார்’ என்று சொல்லி இருக்கிறார்.  
மறுநாள், உலக சிக்கன நாளையட்டி அதேபள்ளியில் விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி தலைமையில் விழா நடந்தது. அனைவரும் விழாவுக்கான பரபரப்பில் இருந்த அந்த நேரத்தில்தான் அந்தப் பதறவைக்கும் சம்பவம் அரங்கேறியது. பாண்டியராஜனை கத்தியால் பதம் பார்த்து விட்டான் சம்பத்.
காயம் அடைந்த ஆசிரியர் பாண்டியராஜனிடம் பேசினோம்.
''9-ம் வகுப்புக்கு அன்றைக்கு மூன்றாவது பீரியட் கணக்கு கிளாஸ். நான் வழக்கம்போல் மதியம் 12 மணிக்கு வகுப்புக்குச் சென்றேன். முந்தைய நாள், சம்பத்தைக் கண்டித்து வகுப்புக்கு வெளியே நிற்க வைத்திருந்தேன். அதனால், அன்றும் வகுப்புக்கு வெளியே நின்றான்.
நான் கணக்குப் பாடத்தை எழுதிவிட்டு உட்கார்ந்தேன். அப்போது வெளியே நின்றிருந்த சம்பத் திடீரென எனக்குப் பின்னால் வந்தான். என்ன ஏது என்று நான் சுதாரிப்பதற்குள் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டான். வகுப்பில் இருந்த மாணவர்கள், பதறிப்போய் கத்தினர். உடனே, மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை பெற்றேன்'' என்றார் வருத்தத்துடன்.
தங்கள் பள்ளி பெயர் கெட்டுவிடும் என்பதால்,  போலீஸில் புகார் செய்ய வேண்டாம் என்று, ஆசிரியரை பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதாம். அதனால், இந்த விவகாரம் போலீஸுக்குப் போக வில்லை. ஆனால், போலீஸ் கைது செய்வார்களோ என்ற பயத்தில் மாணவர் சம்பத்தின் குடும்பத்தினர் வெளியூருக்குப் போய்விட்டனர்.
இந்தச்சம்பவம் நடந்த அதேநாளில் அதே விருதுநகரில் வேறு ஒரு பள்ளியில் நடந்த சம்பவம், விபரீதத்தின் இன்னொரு எல்லை.
மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பணன். இவரது ஒரே மகன் ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் தங்கி, விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறான். கடந்த 29-ம் தேதி, மதிய உணவுக்கு விடுதிக்குத் திரும்பிய ரகு, தனது அறையைப் பூட்டிக்கொண்டு உள்ளே தன்னை தூக்கு மாட்டிக்கொண்டுள்ளான். ரகு தூக்கில் தொங்குவதை ஜன்னல் வழியாகப் பார்த்து அதிர்ந்த மாணவர்கள், கதவை உடைத்துக் காப்பாற்றி உள்ளனர். கயிறு சரியாக இறுகாத காரணத்தால் உயிர் தப்பி விட்டான்.
மாணவன் ரகுவிடம் பேசினோம். ''போன வாரம் நான் மூணுநாள் ஸ்கூலுக்குப் போகலை. என்னை மாதிரி மூணு பேர் ஆப்சென்ட். 29-ம் தேதி ஸ்கூலுக்குப் போனதும் எங்க நாலு பேரையும், பெற்றோரைக் கூப்பிட்டு வரச்சொல்லிட்டாங்க. அப்பா, அம்மாக்கிட்ட சொல்ல பயமா இருந்துச்சு. அதனாலதான் தூக்குப் போட்டுக்கிட்டேன்'' என்று கண் கலங்கினான்.
ரகுவோட அப்பா கருப்பணன், ''கூலி வேலை செஞ்சு கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறோம். ஆனா இந்தக் காலத்துப் பிள்ளைங்க சின்ன விஷயத்துக்கு எல்லாம் இப்படி விபரீதமா முடிவு எடுக்கறாங்க. வாழ்க்கையை எப்படித்தான் வாழப்போறாங்களோ?'' என்று வருத்தப்பட்டார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.நல்லதம்பி, ''10-ம் வகுப்பு என்பதால் ஆசிரியை செல்வலட்சுமி தினமும் காலையில் சிறப்புவகுப்பு எடுக்கிறார். அடிக்கடி ரகு விடுப்பு எடுத்ததை அறிந்து, தேர்வு நேரத்தில் விடுப்பு எடுக்க வேண்டாம் என்று சொல்வதற்காகத்தான் பெற்றோரை வரச்சொன்னார். மாணவன் இப்படி முடிவு எடுத்தது அவரை மிகவும் பாதித்துவிட்டது'' என்றார்.
மனஅழுத்தம், பாடச்சுமை போன்றவற்றால் பாதிக்கப்படும் பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அதை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம் இது. ப்ளீஸ்!

No comments:

Post a Comment