தன்னுடைய ஊழியர்களுக்குப் புதுமையான வகையில், தீபாவளி பரிசு கொடுத்து உள்ளது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். 'ஊழியர்கள் இப்போது வாங்கும் சம்பளத்தில் இனி, 50 சதவிகிதம் மட்டுமே வழங்கப்படும்’ என்பதுதான் அந்த தீபாவளிப் பரிசு!
கடந்த 7-ம் தேதி அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் இந்த அறிவிப்பை வெளியிடவே, அதகளம் ஆரம்பம் ஆனது. துணைவேந்தரை நகரவிடாமல் மறித்த ஊழியர்கள், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் மதியழகன் கொதிப்புடன் நம்மிடம் பேசினார். ''இப்போது பல்கலைக்கழகம் மிகவும் நெருக்கடியான நிதி நிலையில் இருக்கிறது. அதனால் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 50 சதவிகிதம் குறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எங்களிடம் சொல்கிறார்கள். இப்படி ஒரு நிதி நிலைமை ஏற்பட யார் காரணம்... நாங்களா? இல்லையே! பிறகு எதற்கு நாங்கள் எங்கள் ஊதியத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்?
ஆசிரியர்கள் நியமனத்துக்கு 30 லட்ச ரூபாய், அலுவலக ஊழியர்களுக்கு 10 லட்ச ரூபாய் என்று எல்லாவற்றுக்கும் பணம் வாங்கிக்கொண்டு, தேவைக்கும் மீறிய ஆட்களை நியமித்தார்கள். பணம் கிடைக்கிறது என்பதற்காக பணி நியமனம் செய்துவிட்டு, இப்போது சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றால், அதற்கு நாங்களா பொறுப்பு?
1996-ம் ஆண்டில் இருந்தே தேவையற்ற பணி நியமனத்தை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். ஆனால், நிர்வாகம் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தியபோது, 'எங்களிடம் போதுமான நிதி ஆதாரம் இருக்கிறது. அதனால் உங்கள் போராட்டம் தேவை அற்றது’ என்று பதில் சொன்னார்கள். அதற்குள் எப்படி நிதி நிலைமை மோசமாகி இருக்கும்? அதனால் ஊதியக் குறைப்போ... ஆள் குறைப்போ எதற்கும் நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம்'' என்றார் உறுதியுடன்.
பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கிள்ளை ரவிந்திரன், ''பல்கலைக்கழக நிர்வாகத்துக்குச் சொந்தமான செட்டிநாடு சிமென்ட்ஸ், மதுரா கோட்ஸ் ஆலை போன்றவைகளுக்கு பல்கலைக்கழக நிதியைத் திருப்பிவிட்டதோடு, இந்த நிதியைக்கொண்டுதான் செட்டிநாடு மருத்துவமனையும் தொடங்கி இருக்கிறார்கள். ஒட்டுமொத்தப் பல்கலைக்கழகமும் புரோக்கர்களின் பிடியில்தான் இருக்கிறது. பணம் கொடுத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்கிறார்கள். தேர்ச்சி பெறுவதற்காக புழங்கும் பணமே பல கோடிகளைத் தாண்டும். பல்கலைக்கழகத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல், ஊழியர்களிடம் வந்து நிற்கிறார்கள். வேறு தொழில்களில் இருப்பவர்களே கல்லூரியைத் தொடங்கி சிறப்பாக நடத்தும்போது, கல்வித் துறையில் நூற்றாண்டு அனுபவம் கண்ட இவர்கள் ஏன் ஊழியர்களான எங்களிடம் கையேந்த வேண்டும். இப்படி நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை அறிய, தமிழக அரசு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்'' என்றார்.
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் உதயசந்திரன், ''மாணவர்களின் சேர்க்கை, ஊழியர்களின் நியமனம் ஆகியவற்றால் மட்டுமே முறைகேடாக பல கோடி ரூபாய் புழங்குகிறது. அந்தப் பணம் எதுவும் பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. இங்கிருந்து மருத்துவக் கல்லூரிக்கு பல கோடி ரூபாய் தந்தார்கள். அதனைத் திரும்ப வாங்கவில்லை. இப்படிபல்கலைக்கழகத்துக்கு வர வேண்டிய பணத்தை எல்லாம் ஸ்வாகா செய்துவிட்டு நிதி நெருக்கடி என்று எங்கள் தலையில் கட்டப் பார்ப்பது என்ன நியாயம்?'' என்று கொதித்தார்.
பல்கலைக்கழகத்தில் 9,600 ஊழியர்கள், 3,600 ஆசிரியர்கள் என்று கிட்டத்தட்ட 13,000 பேர் வேலை பார்க்கிறார்கள். கடந்த வாரத்தில் பல்கலைக்கழகத்தை ஆய்வுசெய்ய வந்த இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பன் எல்லா கணக்கு வழக்குகளையும் பார்த்துவிட்டுத்தான் இந்த முடிவை எடுத்தார் என்கிறார்கள்.
பல்கலைக்கழகத்தின் இந்த நிலை குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ராமநாதனிடம் பேசினோம். ''தொலைதூரக் கல்வி மற்றும் புதிய படிப்புக்கள் தொடங்குவதற்காகதான் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்தோம். வெளி மாநிலங்களில் படிப்பு மையங்கள் நடத்தக் கூடாது என்பதுபோன்ற அரசின் பல உத்தரவுகளை இப்போது பின்பற்றுவதால், ஆட்கள் உபரியாக இருக்கிறார்கள். ஊதிய உயர்வு, டி.ஏ. உயர்வு ஆகியவைதான் தற்போதைய நிதி நெருக்கடிக்குக் காரணம். இப்போது ஆசிரியர்களுக்கான ஊதியமாகவே மாதம் 38 கோடி ரூபாய் செலவாகிறது. அதாவது, மொத்த வருமானத்தில் 90 சதவிகிதம் ஊழியர்களின் சம்பளமாகவே செலவிடப்படுகிறது. கடந்த 10 மாதங்களாகவே சம்பளம் கொடுக்க சிரமமாகிவிட்டது. யாரையும் வெளியேற்றாமல் பல்கலைக்கழகம் தொடர்ந்து சிறப்பாக நடக்க வேண்டும் என்றால், 50 சதவிகித ஊதியக் குறைப்பு செய்தே ஆகவேண்டும். கோடிக்கணக்கில் முறைகேடான வருமானம் என்பது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. அதுபோல் பல்கலை நிதியை வேறு விஷயங்களுக்குத் திருப்பிவிட்டோம் என்பதும் தவறான தகவல். இனி என்ன செய்ய வேண்டும், எப்படி செயல்பட வேண்டும் என்பதை சிண்டிகேட் கூட்டம் போட்டு முடிவு எடுப்போம்'' என்றார்.
துணைவேந்தர் வீடு முற்றுகை, ஆர்ப்பாட்டம் என்று பெரிய அளவுக்குப் போராட்டங்கள் வெடிக்கவே, காலவரையற்ற விடுமுறை அளித்து உத்தரவிட்டிருப்பதால் போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தீபாவளிக்குப் பிறகு மீண்டும் வெடிக்கும் என்கிறார்கள்!
No comments:
Post a Comment