Wednesday, November 7, 2012

கோட்டை விட்டதா அரசு? மீண்டும் பி.ஆர்.பி. கிரானைட் குவாரிக்கு அனுமதி



கிரானைட் முறைகேடுகள் குறித்து விசார ணைகள் நடக்கிறது. அந்த அறிக்கை கிடைத்ததும் கிரானைட்டுக்கு என்று தனிக்கொள்கை உருவாக்கப்படும்’ - அமைச்சர் தங்கமணி சட்டமன்றத்தில் இப்படி அறிவித்த மறுநாள், சீல் வைக்கப்பட்ட பி.ஆர்.பி. கிரானைட் அலுவலகத்தைத் திறக்க உத்தரவு போட்டுவிட்டது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை! பி.ஆர்.பி. நிறு வனத்தின் பங்குதாரர்களில் ஆணிவேரான பி.ஆர்.பழனிச்சாமியைத் தவிர, மற்ற யாரும் இதுவரை சரண்டர் ஆகவில்லை; கைதாகவும் இல்லை. இந்தநிலையில், குவாரித் தொழிலாளர்களின் வாழ் வாதாரமும் தங்களின் ஏற்றுமதித் தொழிலும் பாதிக் கப்படுவதால், மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினார் தலைமறைவாக இருக்கும் பி.ஆர்.பி-யின் மகன் சுரேஷ்குமார். அதற்கு ரெஸ்​பான்ஸ் இல்லை.

அதன்பிறகு, 'எந்தவிதமான சட்ட விதிமுறை​களையும் பின்பற்றாமல் ஹிட்லர்போல் செயல்பட்டு கிரானைட் அலுவலகத்துக்கு சீல் வைத்திருக்கிறார் மதுரை கலெக்டர். கிரானைட் குவாரிக்கு சீல் வைப்பதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, குவாரிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என்று, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில் அதிரடியாய் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.



நவம்பர் 2-ல் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி வினோத் கே.சர்மா, 'பி.ஆர்.பி. நிறுவனங்களின் நிர்வாக அலுவலகத்துக்கு சீல் வைத்ததும் அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கிவைத்து ஏற்றுமதி - இறக்குமதி நடவடிக்கைகளை முடக்கியதும் சட்ட விதிமுறைப்படி நடக்கவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் சம்பந்தப்பட்ட இந்தக் குற்றவழக்கில், 'வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஆவணங்கள் அனைத்தையும் வழங்கிடத் தயாராக இருக்கிறோம். சாட்சியங்களை அழிக்க மாட்டோம்; சாட்சிகளை மிரட்ட மாட்டோம்’ என்றெல்லாம் மனுதாரர் தரப்பில் உத்தரவாதம் கொடுத்தாலும், அவர்களுக்குச் சாதகமாக கண்மூடித்தனமான எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. எனினும், சில நிபந்தனைகளுடன் அவர்கள் குவாரி தொழிலைத் தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படுகிறது. அதில் விதிமீறல் இருந்தால், தமிழ்நாடு மைன்ஸ் அண்ட் மினரல்ஸ் ரெகுலேஷன் ஆக்ட் பிரகாரம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். மனுதாரரின் வங்கிக் கணக்கு முடக்கமும் ஏற்றுமதி - இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையும் ரத்து செய்யப்படுகிறது. குவாரியின் வரவு செலவு விவரம் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும். விசாரணைக்குத் தேவையான கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றை விசாரணை அதிகாரி பெற்றுக்கொண்டு, 10-ம் தேதியில் இருந்து அலுவலகம் இயங்க அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

அக்டோபர் தொடக்கத்திலேயே, 'குவாரிகளை மறுபடி திறந்திடுவாங்க’ என்று ஆரூடம் சொன்ன பி.ஆர்.பி. தரப்பினர் இந்தத் தீர்ப்பால் குதூகலக் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அரசுத் தரப்பிலோ, 'அவர்கள் எப்படி குவாரிகளைத் திறக்கிறாங்கன்னு பார்த்திடுவோம்’ என்று சவால் விடுகிறார்கள். நம்மிடம் பேசிய பி.ஆர்.பி. தரப்பு சட்டப் புள்ளிகள், ''துரை தயாநிதி மற்றும் பி.கே.செல்வராஜ் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின்போதே, அவர்கள் தரப்பு வழக்கறிஞர் வீர.கதிரவன் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். அதே கேள்விகளைத்தான் இப்போது நீதிபதி தனது தீர்ப்பிலும் எழுப்பி இருக்கிறார். குவாரி நடத்த லைசென்ஸ் வழங்கி விட்டால், அங்கே குவாரி நடத்தக்கூடாதுன்னு தடை செய்வதற்கு கலெக்டருக்கு அதிகாரம் இல்லை. 'குவாரி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அனு மதிக்கக் கூடாதுன்னு தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களுக்கு எந்த அடிப்படையில் யார் கடிதம் அனுப்பியது?’ என்று நீதிபதி கேட்டதற்கு, அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. அந்தக் கடிதத்தின் நகலையும் கொடுக்கவில்லை.

'குவாரி அலுவலகத்தை சீல் வைப்பதற்கு கலெக்டருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?’ என்று நீதிபதி கேட்டபோது, 'கலெக்டர் சீல்வைக்க​வில்லை, கிரிமினல் ஆக்ஷன் பிரகாரம் போலீஸ்தான் 4,000 சதுர அடி பரப்பிலான அலுவலகத்தை மட்டும் பூட்டி சீல் வைத்தது’னு குழப்பினாங்க. சீல் வைத்த விவகாரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முறைப்படி தெரிவிக்கப் பட்டதா என்ற கேள்விக்கும் அந்தத் தரப்பில் பதில் இல்லை. மைன்ஸ் வழக்குகளை உடைப்பதில் கில்லாடியான ராமகிருஷ்ண ரெட்டிதான் இந்த வழக்கில் பி.ஆர்.பி-க்கு வக்கீல். எப்படியும் கேஸை உடைக்க வேண்டும் என்பதற்காகவே ரெட்டியின் சீனியரான ராஜீவ் தவானையும் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வரவழைத்து இருந்தோம். தவான் வருகிறார் என்றதும் அரசுத் தரப்பிலும் சுப்ரீம் கோர்ட் சீனியர் வக்கீலான நாகேஸ்வர ராவை அழைத்து வந்தனர். 'கிரிமினல் குற்றம் புரிந்திருந்தால், அதற்கான நடவடிக்கையை எடுங்கள். அதற்காக குவாரியை முடக்குவது எப்படி சரியாகும்?’ என்று நீதிபதி எழுப்பிய சில நியாயங்​களை நாகேஸ்வர ராவும் ஆமோதிக்க வேண்டிய சூழலை உருவாக்கி விட் டனர்'' என்கிறார்கள்.

தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்​ணனிடம் கேட்டதற்கு, ''சீல் அகற்றப் பட்டாலும் அவர்களால் குவாரி நடத்த முடியாது. விரைவில் அப்பீல் செய்வோம்'' என்றார்.

கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, ''அவகாசம் கொடுத்து ஆக்ஷன் எடுத்தால் ஆவணங் களையும் தடயங்களையும் அழித்துவிட்டு குற்றவாளிகள் எஸ்கேப் ஆகிவிடுவார்கள் என்பதால் நோட்டீஸ் கொடுக்கவில்லை. இருந்தாலும் ஃபேக்டரியை நாம் இதுவரை ஸ்டாப் பண்ணவில்லை; ஆபீஸை மட்டும்தான் சீல் வெச்சிருக்கோம். அவங்களாகத்தான் புரொடக்ஷனை நிறுத்திட்டாங்க. சீல் வைக்க கலெக்டருக்கு அதிகாரம் இல்லைன்னு சொல்றாங்க. இல்லீகல் குவாரி நடத்தி, அதற்கான ரா மெட்டீரியல்ஸை உள்ளே வெச்சிருக்காங்க. இதில் கிரிமினல் ஆக்ஷன் உள்ளே வருது. 'மைன்ஸ் அண்ட் மினரல்ஸ் டெவலப் மென்ட் ரெகுலேஷன் ஆக்ட் 1957 விதிகள், 21-3, 21-4, 21-5, 24, 24-2, 24-3, 24-டி, - படி குவாரிகளை பூட்டவும் சீல் வைக்கவும் சட்டத்தில் புரொவிஷன்ஸ் இருக்கு. இதைத்தவிர இன்னும் சில சிறப்பு அதிகாரங்களும் இருக்கு. இதன்படிதான் பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் கம்பெனி அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டிருக்கு. இதை எல்லாம் எடுத்துச் சொல்லி மீண்டும் அப்பீல் செய்வோம்'' என்றார்.

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பி.ஆர்.பி-யின் 17 பஸ்களில் 13-ஐ மட்டும் விடுவித்திருக்கிறது மேலூர் கோர்ட். 'இந்த பஸ்கள் கடனில் வாங்கப்பட்டவை. ரூட்டில் ஓடி கலெக்ஷன் ஆனால்தான் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்’ என்ற காரணத்தைச் சொல்லி பஸ்களை மீட்டு இருக்கிறார்கள். இப்போது, கோர்ட் உத்தரவால் உச்சி குளிர்ந்துகிடக்கும் பி.ஆர்.பி. தரப்பு, 4-ம் தேதியில் இருந்து தனது தொழிலாளர்களுக்கு மூன்று மாதச் சம்பளத்தையும் தீபாவளி போனஸையும் சேர்த்து ஒரே 'செக்’காக பட்டுவாடா செய்து வருகிறது. சீல் வைப்பதற்கு முன், சட்டப்படி நோட்டீஸ் கொடுக்கவில்லை என்பதுதான் பி.ஆர்.பி. தரப்பின் வாதம் என்பதால், இப்போது சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளிலும் இருந்து நோட்டீஸ் பறக்கின்றன. சீல் வைக்கப்பட்டுள்ள பி.ஆர்.பி. நிர்வாக அலுவலகத்தின் இரண்டு கட்டடங்களில் ஒரு கட்டடத்துக்கு பிளான் அப்ரூவல் வாங்கவில்லையாம். இன்னொரு கட்டடத்துக்கு 16,555 சதுர மீட்டருக்கு அனுமதி வாங்கிவிட்டு, ஒரு லட்சத்து 75 ஆயிரம் சதுர மீட்டருக்குக் கட்டடம் கட்டி இருக்கிறார்களாம். இதன் பேரில் நடவடிக்கை எடுத்தால் ஒட்டுமொத்த நிர்வாக அலுவலகத்தையும் இழுத்துப் பூட்டி சீல் வைக்க கலெக்டருக்கு அதிகாரம் இருக்கிறதாம்.

சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் வளைக்கப்பட்டுள்ள நிர்வாக அலுவலக வளாகத்துக்குள் 13 கண்மாய்களை தூர்த்து மூடி இருக்கிறார்கள். இது தொடர்பாக பொதுப்பணித் துறையில் இருந்து நோட்டீஸ் போயிருக்கிறதாம். இந்தக் கண்மாய்களை புனரமைக்கக் கிளம்பினாலே பி.ஆர்.பி. அலுவலகம் இடிக்கப்பட்டு விடுமாம். கிரானைட் கற்களை வெட்டிக்கடத்திய விவகாரத்தில் அரசுக்குச் செலுத்த வேண்டிய விற்பனை வரி எவ்வளவு என்பது குறித்து வணிக வரித்துறை அதிகாரிகள் கணக்குப் போட்டு வருகிறார்களாம். வரியையும் அபராதத்தையும் கணக்கிட்டாலே பல ஆயிரம் கோடிகள் வரும் என்​கிறார்கள்.

போலீஸ் தரப்பிலோ, ''பி.ஆர்.பி. அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆதாரங்களை எடுத்துக்கொள்ள மூன்று நாட்கள் அவகாசம் அளித்திருக்கிறது கோர்ட். தென் மாவட்டங்களில் சட்டம் - ஒழுங்கு சிக்கல் நிலவுவதால் கோர்ட் கொடுத்திருக்கும் அவகாசத்துக்குள் எங்களால் அந்த வேலையை முடிக்க முடியாது. இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்போம்'' என்கிறார்கள்.

''விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளிப்பதாக கோர்ட்டில் உறுதி கொடுக்கிறார்கள். ஆனால், விசார ணைக்கு வராமல் ஓடி ஒளிகிறார்கள். குவாரி அலுவலகத்தை மீண்டும் செயல்பட விட்டால் ஏற் கெனவே நடந்திருக்கும் குற்றங்கள் மீண்டும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தி கோர்ட்டில் அப்பீல் செய்வோம். தவறு செய்தவர்கள் தப்பிக்கவே முடியாது. அவர்​களுக்கு கிடுக்கிப்பிடி போட இன்னும் எத் தனையோ வழிகள் இருக்கின்றன'' என்கிறார் மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன்.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, 5-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்திருக்கிறார் அன்சுல் மிஸ்ரா. தீர்ப்பு என்ன வருகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment