Wednesday, November 21, 2012

ஆ.ராசா குற்றவாளி இல்லையா?


மீண்டும் ஸ்பெக்ட்ரம் சர்ச்சை! 
உலகத்தையே கவனிக்க வைத்தது காங்கிரஸ் அரசாங்கத்தின் ஸ்பெக்ட்ரம் ஊழல். 'சில தனியார் நிறுவனங்கள் கொழுப்பதற்காக அரசாங்க வளம் தாரைவார்க்கப்பட்டது. உண்மையில் 1.76 லட்சம் கோடி வரை விற்பனை செய்யப்பட்டு இருக்க வேண்டிய 2ஜி, அதில் ஆறில் ஒரு பங்கு விலைக்குத்தான் விற்பனை செய்யப்பட்டது’ என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த மோசடிக்குத் துணையாக பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் கைமாறி இருக்கலாம் என்றும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உரிமங்களுக்கான ஏலம் கடந்த வாரத்தில் நடந்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மிகமிகக் குறைவாகவே இந்த ஏலம் போனது. 'பார்த்தீர்களா, நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை’ என்று, இப்போது காங்கிரஸ் பேச ஆரம்பித்து உள்ளது. இவை அனைத்தும் மக்களை கிறுக்குப்பிடிக்க வைத்து விட்டது!
தொலைபேசி என்பது ஒரு காலத்தில் குதி​ரைக் கொம்பு. பதிவுசெய்து பல வருடங்கள் காத்திருந்தால்தான் இணைப்பு கிடைக்கும். தொலைபேசியைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டும் நிலைமையில்தான் அப்போது கட்டணங்களும் இருந்தன. இவற்றை எல்லாம் உடைத்து எறியும் அளவுக்கு, இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை பிரமாண்டமாக வளர்ந்தது. 2007-08 ஆண்டுகளில் டெலிகாம் அமைச்சராக இருந்த ஆ.ராசா, ஒன்பது நிறுவனங்களுக்கு 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களைக் கொடுத்தார். அந்த விவகாரத்தில் தில்லுமுல்லும் ஊழல்களும் நடந்ததாகக் கூறி, அவர் மீதும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைப் பெற்ற நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடர்ந்து, பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்கள் கொடுக்கப்பட்ட ஆண்டிலேயே எதிர்க்கட்சியினர்  30 ஆயிரம் கோடி என்றும், பின்னர்  70 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என்றும் கொந்தளித்தனர். அதன்பிறகு, நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. 2010-ல் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கைத்  துறையினர் (சி.ஏ.ஜி.) கொடுத்த அறிக்கை உச்சகட்டப் பரபரப்பைக் கிளப்பியது. 122 உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு  1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று கணக்கிடவே, நாடே கொந்தளித்தது. சுப்ரீம் கோர்ட்டும் கண்டனத்தைப் பதிவுசெய்ததால், சி.பி.ஐ. அதிரடி ஆக்ஷனில் இறங்கியது. தனது குற்றப் பத்திரிகையில் அரசுக்கு  30 ஆயிரத்து 984 கோடி இழப்பு என்றது. ஆ.ராசா வழங்கிய 122 உரிமங்களையும் கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் ரத்துசெய்தது. நீதிமன்ற உத்தரவின்படி, வெளிப்படையான ஏல முறையில் தொலைபேசி உரிமத்தையும் ஸ்பெக்ட்ரம் அலை​வரிசையும் ஒதுக்கீடு செய்ய, மத்திய தொலைத் தொடர்புத் துறை பணிகளில் இறங்கியது. இதற்கான வரைமுறை​யை, தொலைத் தொடர்பு ஒழுங்கு​முறை ஆணையம் (டிராய்) வெளி​டவே, புதிய ஏலத் துக்கு விண்ணப்​பங்களைக் கோரியது. கடந்த 12-ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடந்த ஏலம், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது!
இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் மறுஏலத்தில்,  40 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று சில பத்திரிகைகள் எழுதின. மத்திய அரசும் தங்களுக்குக் குறைந்த பட்சம்  28 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று நம்பியது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள 5.3 சதவிகித நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கமுடியும் என்றும் நம்பியது. ஆனால், எல்லாவற்றையும் பொய்யாக்கி​விட்டு,  9,407 கோடிதான் கிடைத்து இருக்கிறது.
22 டெலிகாம் வட்டங்களும் 144 பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிளாக்குக்கும் குறைந்த​பட்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த பிளாக்குகள் கடிகார வரிசைப்படி ஒவ்வொரு சுற்றாக ஏலத்துக்கு வந்தது. மொத்தம் 14 சுற்றுகள் அனுமதிக்கப்பட்டன. அத்தனை சுற்றுக்களும் இரண்டு நாட்களிலேயே முடிந்து விட்டது. இதற்குக் காரணம் டெல்லி, மும்பை, கர்நாடகா, ராஜஸ்தான் டெலிகாம் பகுதிகளில் யாருமே ஏலம் கோரவில்லை. மீதமுள்ள 18 டெலிகாம் வட்டங்களில்தான் ஏலம் கோரப்பட்டது. இந்த வட்டங்களிலும் 20 உரிமங்கள்தான் விற்பனையானது. அதுவும் அரசு நிர்ணயித்த அடிப்படை விலையைவிடக் கூடுத​லாகக் கேட்டது ஒரு சில பகுதிகளில்தான். எந்த நிறுவனமும் இந்தியா முழுக்க டெலிகாம் பிசினஸ் தொடங்க உரிமம் கேட்டு ஏலத்தில் இறங்க​வில்லை. வெளிநாட்டு நிறுவனங்களும் வரவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை இழந்த டெலிவிங்ஸ் (டெலிநார்), வீடியோகான் போன்ற நிறுவனங்கள் மட்டுமே இந்த ஏலத்தில் குதித்தனர். சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத் தொடர்புகளை வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏலத்தில் பங்கெடுக்கவே இல்லை. இதில் பங்கெடுத்த டாடாவும் வீடியோகானும் பின்னர் விலகிக்கொண்டனர்.
'இப்போது சுப்ரீம் கோர்ட் ரத்துசெய்த உரிமங்களின் மறுஏலத்தின் மூலம்  9,000 கோடிதானே கிடைத்து இருக்கிறது. இதைத்தானே ஆ.ராசாவும் செய்தார்’ என்று காங்கிரஸ் ஆதரவு கட்சிகள் கேட்க ஆரம்பித்து உள்ளன.  'ஆ.ராசா விற்பனை செய்தது 122 உரிமங்கள். ஆனால், இப்போது 20 உரிமங்கள் மூலமே அந்தத் தொகை கிடைத்துவிட்டது. மறுஏலம் மூலம் இன்னமும் பணம் கிடைக்கும். ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் உரிமங்களைக் குறைந்த விலைக்கு விநியோகித்தார் என்பது மட்டும் அல்ல. உரிமங்களைக் கொடுத்த நடைமுறையில் இருந்த தில்லுமுல்லுகளே முக்கியக் குற்றச்சாட்டுகள்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
ஆ.ராசா மீதான இன்னொரு முக்கியக் குற்றச்​சாட்டு, சந்தை மதிப்பை உணர்ந்து அவர் செயல்படவில்லை என்பது. அப்போது ஒரு தொலைபேசி நுகர்வோர் மூலம் மாதம்  300 ரூபாய் வருமானம் வந்தது. ஆனால் இப்போது அது,  100 ரூபாய்க்குக் கீழாகக் குறைந்து விட்டது. வருமானம் குறைந்து விட்டதால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடனில் தத்தளிக்கின்றன. கோர்ட் நடவடிக்கை காரணமாக, ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப்பெற கடன் கொடுக்க வங்கிகளும் முன்வரவில்லை. அதனால், ஸ்பெக் ட்ரம் வாங்குவதற்கு ஆள் இல்லை. இவை எல்லாவற்றையும்விட முக்கியக் காரணம், இப் போது 2ஜி 3ஜி தொழில்நுட்பங்களைத் தாண்டி எல்.டி.இ.(LTE - Long Term Evolution) தொழில்நுட்பம் வந்துவிட்டது. அதனால் மறுஏலம் நடத்தினாலும் அரசுக்கு வருமானம் இருக்காது.
மறுஏலத்தில் இன்னும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, இப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்​தைக் குறைத்துத்தான் அரசு மீண்டும் ஏலம் விடும். அதற்கு இப்போது ஏலம் எடுத்தவர்கள், எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தங்களுக்கும் விலையைக் குறைக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குப் போவார்கள் என்பதால் சிக்கல் மேல் சிக்கல்தான்.
இப்போது ஏலம் எடுப்பவர்களுக்குள் போட்டி இல்லை... கூட்டணி உருவாகி விட்டது. அதனால்தான் பலர் விலையை உயர்த்தாலும் ஏலம் கோராமலும் இருந்தனர். இதற்கு முக்கியக் காரணம், இப்போது செயலில் இருக்கும் ஏர்டெல், வோடாபோன், பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., எஸ்ஸார், ஐடியா போன்ற பல நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் 20 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்டது. இது அடுத்த ஆண்டு காலாவதியாகிறது. 2014-15 காலகட்டத்தில் இவர்கள் உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும். இந்த ஸ்பெக்ட்ரத்தின் கட்டணங்களையும் அரசு மறுபரிசீலனை செய்யும். சுப்ரீம் கோர்ட், சி.ஏ.ஜி., பத்திரிகைகளுக்குப் பயந்து அரசு பிடிவாதமாக ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை உயர்த்தினால், 2014-ல் தொலைபேசிக் கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இனி, சுப்ரீம் கோர்ட் என்ன முடிவு எடுக்கும் என்பதைப் பொறுத்தே, தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலம் இருக்கும். ஊழல் குற்றச் சாட்டு மூலம் நாட்டை அதிரவைத்த ஸ்பெக்ட்ரம், மறுஏலம் மூலம் மீண்டும் நாட்டை அதிரவைத்து இருக்கிறது!

No comments:

Post a Comment