Wednesday, November 23, 2011

மாறி வரும் பெங்களூர் மக்களின் 'லைப் சைக்கிள்'- வாடகை சைக்கிளுக்கு அமோக வரவேற்பு!

பெங்களூர்: மெட்ரோ ரயில் ஓடத்தொடங்கியுள்ள பெங்களூரு நகரில் புதிதாக தற்போது சைக்கிள் மோகம் அதிகரித்துள்ளது. அங்கு புதிய வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.உடல்ஆரோக்கியம், பெட்ரோல் விலை, புகை, தூசு என சீர்கெட்டு வரும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வாடகை சைக்கிள் திட்டத்திற்கு பெங்களூரு மக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.


கடந்த காலங்களில் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாகனமாக சைக்கில் பயன்படுத்தப்பட்டு வந்தது. சைக்கிள் வாங்க வசதியில்லாதவர்களுக்காகவே வரப்பிரசாதமாக வாடகை சைக்கிள் கடைகளும் தொடங்கப்பட்டன. பத்து, பதினைந்து சைக்கிள்களை வாங்கிவிட்டு நாள்வாடகை, மணிவாடகை என பணம் வசூல் செய்தனர் வாடகை சைக்கிள் கடைக்காரர்கள். தற்போது தமிழ்நாட்டின் நகர்புறங்களில் வாடகை சைக்கிள் கடை என்பது வழக்கொழிந்து வருகிறது. ஒரு சில கிராமங்களில் மட்டுமே சைக்கிள் கடைகள் காணப்படுகின்றன.

வாடகை சைக்கிள் திட்டம்

நடுத்தர வர்க்கத்தினர் வீடுகளில் ஒரு உறுப்பினரைப் போல இருந்த சைக்கிள் கால மாற்றத்தினாலும், பொருளாதார வளர்ச்சியினாலும், பைக், கார் என உருமாறி இருக்கிறது.

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையினால் கலங்கிபோன வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 'கம்ப்யூட்டர்' நகரமான பெங்களூவில் ஒரு புதிய வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியும் கெர்பெரொன் என்ற பொறியியல் நிறுவனமும் இணைந்து ‘ATCAG’ என்ற வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஆரோக்கியத்தோடு செலவும் மிச்சம்

உடல் உழைப்பு குறைந்து போனதால் பருமன் அதிகமாகி ஏராளமானோர் ஜிம் செல்ல வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஜிம்மில் போய் சைக்கிளிங் செய்வதை விட 'கும்'முன்னு சைக்கிளிலேயே அலுவலகம் சென்றுவிடலாம் என்று கணக்கு போடத் தொடங்கிவிட்டனர் நகரவாசிகள்.

இதனால் பெங்களூருவிலும் மற்ற பல இந்திய நகரங்களிலும் சைக்கிள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பலர் அலுவலகத்துக்குத் தினமும் சைக்கிளில் சென்றுவரத் தொடங்கியிருக்கிறார்கள். அதை ஓர் அவமானமாக நினைக்காமல், பெருமையாக எண்ணுகிற சூழலும் ஏற்பட்டிருக்கிறது. பல அலுவலகங்கள் சைக்கிளில் வரும் ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசுகள் கூடத் தருகின்றன!

தற்போதைய சூழ்நிலையில் அனைவராலும் சைக்கிள் வாங்கி பராமறிக்க முடியாது என்பதை கருத்தில் கொண்டே பெங்களூருவில் ATCAG’ என்ற வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நகரின் முக்கியமான இடங்களிலெல்லாம் தானியங்கி சைக்கிள் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட சிறிய பேருந்து நிறுத்தத்தைப்போலவே தோற்றமளிக்கும் இந்த ‘சைக்கிள் ஸ்டாப்’களில் மூன்று முதல் பத்து சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் இந்த சைக்கிள்களைத் தேவையான நேரத்தில் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்மார்ட் கார்டு திட்டம்

ஊர் முழுக்க எங்கே வேண்டுமானாலும் இந்த சைக்கிளை எடுத்துக் கொள்ளலாம், எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோய் விடலாம். மாதம் இருநூறு ரூபாதான் செலவு. மாதத்துக்கு இருநூறு ரூபா செலுத்திவிட்டால் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் ஒரு ஸ்மார்ட் கார்டில் பதித்துக் கொடுத்துவிடுகிறார்கள்.

ATCAG இந்த நிலையங்களில் அந்த கார்டைத் தேய்த்தால் ஒரு சைக்கிள் தானாகத் திறந்துகொள்ளும், நீங்கள் அதை ஓட்டிச் செல்லலாம். பத்து நிமிடமோ, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ சைக்கிளைப் பயன்படுத்திய பிறகு, வேறொரு ATCAG நிலையத்தில் அதை நிறுத்திப் பூட்டிவிட்டு நம் வேலையைப் பார்க்கப் போகலாம். மற்றபடி வாடகை வசூலிக்க யாரும் இருக்க மாட்டார்கள், எல்லாமே ஆட்டோமேட்டிக்!.

சோதனை அடிப்படையில் ஜெயநகர் மற்றும் எம். ஜி. ரோடு என்ற இரண்டு முக்கியப் பகுதிகளில் மட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது பெங்களூரு நகரம் முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படுமா?

எங்கு வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் என்கிற சவுகர்யத்தால் பலரும் புதிதாக சைக்கிள் ஓட்டத் தொடங்குவார்கள் என்று பெங்களூரு மாநகராட்சி எதிர்பார்க்கிறது. அதன்மூலம் பெட்ரோல், டீசல் போன்ற மாசு ஏற்படுத்துகிற, அளவில் குறைந்து வருகிற எரிபொருள்களுக்கு ஒரு நல்ல மாற்றும் கிடைக்கும்.

இந்தப் புதுமைத் திட்டத்தை மற்ற இந்திய நகரங்களுக்கும் கொண்டுசெல்லும் யோசனையில் இருக்கிறது கெர்பெரொன் நிறுவனம். தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வினால் கலங்கி போயுள்ள மக்களுக்கு வாடகை சைக்கிள் முறை இங்கும் அறிமுகப்படுத்தப்பட்டால் இங்கும் பெரும் வரவேற்பை பெரும் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment