முதல்வர் ஜெயலிதா கடந்த தனது ஆட்சியில் டாஸ்மாக்கைக் கொண்டு வந்தபோது, அவரே அது இந்த அளவுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது ஆண்டுக்கு கிட்டதட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தருகிறது டாஸ்மாக். இந்த வருமானம், அரசாள்பவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், டாஸ்மாக் கடைகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைக் கேட்டால், கண்களில் ஓரம் நீர்த்துளிகளே வெளிப்படும். கோடிக்கணக்கில் அரசுக்கு வருவாயை ஈட்டித் தரும் டாஸ்மாக்தான் லட்சக் கணக்கானவர்களின் உடல்நலனைப் பாதித்து, அவர்களை நம்பியிருக்கும் குடும்பங்களை நடுவீதியில் நிறுத்தியிருக்கிறது. அதுவும் முப்பது வயதுக்குள்ளேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழப்பு, பக்கவாதம், கிட்னி ஃபெயிலியர் என்று மீள முடியா பெருந்துயரங்களுக்கு ஆளாகி, வைத்தியத்துக்கு செலவு செய்ய வழியற்ற நிலையில் இறந்து போகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியும், சோகமும் கலந்த உண்மை. முப்பது வயதுக்குள் மேற்கண்ட பாதிப்புகள் மிகவும் அரிதாக நடக்கக் கூடியவைதான். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் இந்தப் பாதிப்புகளின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் சென்னையைச் சேர்ந்த கார்டியாலஜிஸ்ட் ஒருவர்.
கண்ணனுக்கு 27 வயது. சேலம்தான் சோந்த ஊர். இரண்டு ஆண்டுகளாக பொருத்தமான பெண்ணைத் தேடியலைந்து, அபிராமியை நிச்சயம் செய்துவைத்தார்கள். திருமணத்திற்கு முதல் நாள் நண்பர்கள் ரொம்ப வற்புறுத்தியதால், ‘பார்ட்டி’ வைத்தார். மதுபான பார்ட்டி களை கட்டியபோது, திடீரென்று கண்ணனுக்குத் தாங்க முடியாத வயிற்று வலி. விடிந்தால் கல்யாணம், என்ன செய்வது? ‘எப்படியோ சமாளி, தாலி கட்டியபிறகு டாக்டரிடம் காட்டிக் கொள்ளலாம்’ என்று நெருங்கியவர்கள் அட்வைஸ் செய்ய, திருமணம் முடிந்த கையோடு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். எல்லா பரிசோதனைகளையும் செய்து பார்த்த டாக்டர்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துப்போகச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்டான்லியில் தீவிர சிகிச்சை தரப்பட்டது. நான்கைந்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்தன. இருந்தாலும் எந்தப் பலனும் இல்லை. கண்ணனைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்தச் சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றைக்கும் கண்ணனுக்கு ட்ரீட்மெண்ட் செய்த டாக்டர் சுரேந்திரன் நினைவுகளில் பெரும் சோகமாகத் தங்கியிருக்கிறது கண்ணனின் நினைவுகள். "அவருக்கு வந்த பிரச்சினை, அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் (acute pancreatitis). ரெகுலராக அவருக்கு குடிப்பழக்கம் இல்லை. முதன்முறையாக அன்றுதான் குடிக்கிறார். இந்த அக்யூட் பேங்க்ரியாடிடிஸ் முதன்முறையாகக் குடிப்பவர்கள் பலருக்கு வரும் பிரச்சினை. கண்ணனுடன் ஒரு வார்த்தை கூட பேசியிராத, முகத்தைச் சரியாகப் பார்க்கக்கூட அவகாசம் வாய்க்காத அந்தப் பெண், ‘எப்படியாவது காப்பாத்துங்க’ என்று பார்க்கும் டாக்டர்களை எல்லாம் கைகளைக் கூப்பி கெஞ்சியதுதான் இன்னும் என் நினைவுகளில் இருந்து நீங்காமல் தங்கியிருக்கிறது. ஒரே நாளில் எல்லாம் முடிந்து விட்டது" என்கிறார் டாக்டர் சுரேந்திரன் பெருமூச்சுடன்.
ஆண்டுதோறும் மதுகுடிப்பவர்களின் சதவீதம் அதிகரித்து வருவதாகக் கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். கூடவே மதுப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்படுபவர்களின் சதவீதமும் ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒரு டாஸ்மாக் கடைக்குப் போய்ப்பார்த்தால் ஜேஜே என்று திரண்டிருக்கும் கூட்டத்தில் 20, 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கூட்டம்தான் 60 சதவீதம் இருக்கும். "இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் உண்டு. இத்தகைய மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் நன்கு படித்து, பன்னாட்டு நிறுவனங்களில் கை நிறைய சம்பாதிக்கும் இளைஞர்களும் உண்டு. பொதுவாக, பரம்பரை நோய் என்று கூறப்படும் நீரிழிவு போன்ற நோய்கள் இன்று லைஃப் ஸ்டைல் நோய்களாக மாறியுள்ள நிலையில், உடல் உழைப்பு இல்லாத டெட்லைன், டார்கெட் போன்ற நெருக்கடிகளில் பணிபுரியும் இவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். இந்த நிலையில் இவர்கள் மதுப்பழக்கத்தையும் தொடரும்போது கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழத்தல், கிட்னி சார்ந்த பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்ற அதிர்ச்சித்தகவலைத் தருகிறார், டி.டி.கே. மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் அனிதா ராவ்.
"கடந்த சில ஆண்டுகளாகக் குடிப்பழக்கத்தால் இளைஞர்களின் உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான்" என்று கூறும் டாக்டர் சுரேந்திரன், குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல், கணையம் பாதிப்பு என்று அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகக் கூறுகிறார். மேலும் அதுபற்றிக் கூறும்போது, "1969லிருந்து 77வரை இதே கல்லூரியில் முதுகலை மருத்துவப் படிப்பை நாங்கள் முடித்த காலத்தில் acute pancreatitis Severe pancreatitis போன்ற பாதிப்புகள் பற்றி எல்லாம் புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் பார்த்ததில்லை.
ரொம்ப அபூர்வமாக வட இந்தியாவில் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். அப்படி இருந்தாலும் இவர்களின் இறப்பு சதவீதம் வெறும் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும். ஆனால், தற்போது ஸ்டான்லி மருத்துவமனையிலேயே சர்வ சாதாரணமாக தினமும் நோயாளிகள் வருவதைப் பார்க்கலாம். தற்போது இறப்பு விகிதம் 70 சதவீதம். அதிலும் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் மிக அதிகம். ஐ.டி., மென்பொருள் போன்றவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு கல்லீரல், கணையப் பாதிப்பு இன்று சர்வ சாதாரணம். மது குடிப்பது மேற்கத்திய நாடுகளில் கலாசாரத்தோடு இணைந்தது என்பதால் அங்கு பாதிப்புகளும் அதிகமாக இருந்தன. இன்று வரையும் நவீன மருத்துவத்தில் ஜெர்மனி நாட்டில் அளிக்கப்படும் சிகிச்சை முறையைத்தான் இங்கும் அளிக்கிறோம். இங்கு ஒரு முக்கியமான தகவலைச் சொல்ல வேண்டும்... கடந்த மாதம் கொச்சியில் நடந்த சர்வதேச மருத்துவ மாநாட்டில் ஜெர்மனி டாக்டர்கள் கலந்துகொண்டார்கள். மேற்கத்திய நாடுகளில் தற்போது வியக்கத்தகும் விதமாக மக்களிடம் மதுப்பழக்கம் குறைந்திருப்பதாகக் கூறினார்கள். ஆனால், நம் நிலையோ அதற்கு நேரேதிராக உள்ளது" என்று வேதனையுடன் கூறுகிறார் டாக்டர் சுரேந்திரன்.
"எப்போதாவது குடிக்கிறேன். வாரத்தில் ஒருநாள்தான் குடிப்பேன். பார்ட்டியில மட்டும்தான் குடிப்பேன். அளவான மதுப்பழக்கம் உடலுக்கு நல்லது’ போன்ற எல்லா காரணங்களும் குற்ற உணர்ச்சியில் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானங்கள்தானே தவிர, அதில் உண்மையில்லை. ஒரு சொட்டு விஷமாய் இருந்தால் என்ன? ஒரு குடமாய் இருந்தால் என்ன? விஷம் விஷம்தான். பீர் மட்டும்தான் குடிப்பேன் என்றும் சிலர் சொல்கிறார்கள். மதுவின் பெயர்கள்தான் வேறு வேறானவையே தவிர, அதனால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் ஒரே ரகமானவையே. சமீபத்தில் தில்லியில் பல வெளிநாட்டு டாக்டர்களும் கலந்துகொண்ட கல்லீரல் நோய்கள் தொடர்பான தேசியக் கருத்தரங்கில் குடிப்பழக்கம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் உடல் உறுப்புகள் நிச்சயம் பாதிக்கப்படும் என்று மருத்துவ அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர்.
அடையாறில் உள்ள டி.டி.கே. மருத்துவ மையத்தில் பல ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களுக்கு கவுன்சலிங் நடக்கிறது. "10 ஆண்டுகளுக்குமுன் இந்த கவுன்சலிங்கில் நடுத்தர வயதுப் பெண்கள், கணவனை இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி மீட்பது என்பதைத் தெரிந்துகொள்ள தவறாமல் கலந்துகொள்வார்கள். தற்போது இந்த கவுன்சலிங்கில் ஏராளமான நாற்பது, ஐம்பது வயது பெற்றோர்கள் கலந்துகொள்கிறார்கள். மிகச் சிறிய வயதிலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிகரித்து விட்ட அவலம் இது" என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர்.
"குடிப்பழக்கம் உள்ளவர்களில் 20 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இது உடல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, மனம் சார்ந்ததும்கூட. கல்லூரி மாணவன் ஒருவன், தற்போது எங்கள் மையத்தில் தொடர் சிகிச்சையில் இருக்கிறான். 20 வயதான அவன், நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பித்தவன், கொஞ்ச நாட்களிலேயே மதுவுக்கு அடிமையாகி விட்டான். குடும்ப கவுரவம் போய்விடுமே என்று பயந்தவர்கள் முதலில் வீட்டில் வைத்து, ‘இது தப்பு’ என்று சொல்லி திருத்தப் பார்த்திருக்கிறார்கள். யாருமே இல்லாத சமயத்தில் அமைதியாக இருப்பவன், வீட்டிற்கு விருந்தினர்கள் வரும்போது, பயங்கரக் கலாட்டா செய்வது, மிரட்டுவது, குடிப்பதற்கு பணம் தராவிட்டால் விருந்தினர்களுக்கு தருவதற்கு எடுத்துச் செல்லும் தேநீரைப் பிடுங்கி, எதிர்பாராத நேரத்தில் அவர்கள் மீது கொட்டுவது என்று அவன் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்க... இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை தருகிறோம்" என்கிறார் டாக்டர் அனிதா.
"குடிக்கு அடிமையாகி, சிகிச்சைக்குச் சேர்க்கப்படுபவர்களின் ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலைக் குறைக்கவே 3லிருந்து ஐந்து நாட்கள் ஆகும். அதன் பிறகே சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள். குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய் வருவதும் சகஜம். இவர்களின் ரத்தத்தில் ஆல்கஹாலைக் குறைப்பதற்கு 20 நாட்கள் ஆகும். முற்றிலும் மதுவை நிறுத்தி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே ஓரளவு உடல் நிலை தேறும். ஆனால், அதே நேரம் ஒருமுறை கணையத்தில் பிரச்சினை வந்தால், தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். அதன் பிறகு மதுவையே தொடாவிட்டாலும் சிகிச்சையும் தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பும் தேவை. கணையம் பாதிப்பினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு நோயாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க அரசுக்கு ஆகும் செலவு 50 முதல் 60 லட்சங்கள்" என்று கூறுகிறார், அரசு மருத்துவர் ஒருவர்.
இதயநோய் மருத்துவரான டாக்டர் சொக்கலிங்கம், "கடந்த 20 ஆண்டுகளில் ஆண்களிடம் மட்டுமல்ல, பெண்களிடமும் குடிப்பழக்கம் அதிர்ச்சியளிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. ஆல்கஹாலில் உள்ள எத்தனால் உடலில் போய் வளர்சிதை மாற்றம் ஆகும்பொழுது (metabolism) அசிட்டேன், அசிட்டால்டிஹைடு இரண்டும் மூளை, கல்லீரல், இதயத் தசைகள் போன்றவற்றைப் படுமோசமாகப் பாதிக்கிறது. இதயத் தசைகள் நாளடைவில் விரிவடைந்து இதயம் பெரிதாகும். 42 ஆண்டுகள் என் மருத்துவ அனுபவத்தில் சமீப காலங்களில் இளைஞர்கள் குடியால் மோசமாகப் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறேன். மது அருந்துபவர்களுக்கு hdl (tri glycerise) எனப்படும் நல்ல கொழுப்பிற்குப் பதிலாக, hdl 3 எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். இது, ரத்தக் குழாய்களை அடைத்து, இதயத்திற்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்" என்கிறார்.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் மது பாதிப்பால் ஏற்படும் உடல் பிரச்சினைகளுக்குச் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், இதனை வேறு விதமாகப் பார்க்கிறார். குடல் இரைப்பைத் துறைத் தலைவர் டாக்டர் சந்திர மோகன். "குடியின் பாதிப்பு தற்போது அதிகமாக இருந்தாலும் ஒரே நாளில் திடீரென்று இந்த எண்ணிக்கை உயர்ந்து விடவில்லை. வயிற்று வலி என்றால், தெரிந்த டாக்டரிடம் காட்டுவார்கள். இப்போது அதற்கான சிறப்பு மருத்துவரிடம் போக வேண்டும் என்று தெரிந்து வருகிறார்கள். அதனால் குறிப்பிட்ட துறையில் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என்றாலும் எந்த அரசு மருத்துவமனையை எடுத்துக்கொண்டாலும் மதுவினால் பாதிப்பு என்பது அதிகரித்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது" என்கிறார்.
"தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் இதே அவல நிலைதான். பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டுமல்ல, குடிக்கு அடிமையாகும் பெண்கள் வட சென்னையில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்கு வருவதும் சகஜமான ஒன்றுதான்" என்று கூறி, வேதனையை அதிகரிக்க வைக்கிறார்கள் அங்கிருக்கும் மருத்துவர்கள்.
மதுப்பழக்கமுள்ளோர் வயது விகிதம்
50+ வயதினர் = 18%
15 - 20 வயதினர் = 10%
30 - 50 வயதினர் = 37%
20 - 30 வயதினர் = 35%
எப்படிப் பாதிக்கிறது?
கணையம்: மதுவின் முதல் டார்கெட் கணையம். இதிலிருந்து சுரக்கும் ஜீரண நீர், உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மதுவில் உள்ள ஆல்கஹால் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது (TONAR போன்ற அழகு சாதனப் பொருட்களில் ஆல்கஹால் பயன்படுத்துவது அதன் பரவும் தன்மைக்காகவே). இது, கணைய நீர் வெளிவரும் பாதையைச் சென்று அடைத்துவிடும். இதனால், சுரக்கும் ஜீரண நீர் கணையத்திலேயே தங்கிவிடும். ஜீரணத்திற்காக சுரக்கிற நீர் வெளியேறாமல் அதே இடத்தில் தங்கும்போது கணையம் வீங்கத் தொடங்கும். இது, கழிவு நீர் தேங்குவது போன்றதுதான். இதனால், கணையத்தில் கிருமிகள் சேர்ந்து அதனை அழுகச் செய்துவிடும். அழுகிய பகுதியை வெட்டி எடுப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. உமிழ் நீர், இரைப்பையில் சுரக்கும் நீர், கணைய நீர் மூன்றும் செரிமானத்திற்கு உதவுகின்றன. இதில் ஒன்று கெட்டு விட்டதால், உணவு செரிமானம் ஆவது பாதிக்கப்படும்.
இரைப்பை: மதுவில் உள்ள ஆல்கஹால், இரைப்பையின் உட்புறம் உள்ள மிக்கஸ் என்ற மெல்லிய சுவரை அரித்து, அல்சர் வரவழைக்கும்.
கல்லீரல்: உடலின் பெரிய உறுப்பான கல்லீரலில் உள்ள செல்கள், மதுவில் இருக்கும் நச்சு பாக்டீரியாக்களால் அழிக்கப்படுகின்றன. 80 சதவீதப் பகுதியை வெட்டி எடுத்துவிட்டாலும் வளரும் இயல்பு கொண்டது கல்லீரல். ஆனாலும் அழிந்து போன செல்கள், கல்லீரல் முழுக்க திட்டுத் திட்டாக தழும்புகளாக மாறிவிடும். இதனால், கல்லீரல் வீக்கம், ஹெபாடிடிஸ், சிரோசிஸ் என்று பல பிரச்சினைகள் வரும்.
சிறு மூளை: நம்முடைய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது சிறு மூளை. ஆல்கஹால் குடித்தவுடன் நேராக சிறு மூளையைத்தான் பாதிக்கும். குடிப்பவர்களின் கட்டுப்பாடு மொத்தமும் போய்விடும். நேராக நடக்க முடியாது. ஒழுங்காகப் பேச முடியாது. ஆல்கஹாலுக்குப் பரவும் தன்மை அதிகம் என்பதால், வேகமாக ரத்தத்தில் கலந்து உடல் முழுக்கப் பரவும். இதனால், எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா உறுப்புகளும் பாதிக்கும். குறிப்பாக, இனப்பெருக்க்க உறுப்புகள் பாதித்து மலட்டுத் தன்மை அதிகமாகும். கர்ப்பமாக இருக்கும்போது, பெண்கள் மது அருந்தினால் குழந்தைக்கு மனநிலை பாதிக்கும். சீக்கிரத்திலேயே மறதி நோய் (dementia) வரும்.
மது குடித்தவுடன் அதில் உள்ள ஆல்கஹாலில் 20 சதவீதம், இரைப்பையில் உடனடியாகப் பரவி தங்கிவிடும். மீதி 80 சதவீதம், பெருங்குடலில் தங்கிவிடும். மது குடித்த 20 நிமிடங்களில் ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு உயரும். குடித்த மூன்று நாட்களுக்கு உடலில் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் என்று அனைத்துப் பாகங்களிலும் ஆல்கஹால் அப்படியே தங்கியிருக்கும்.
எல்லா மது பானங்களைத் தயாரிக்கும்போதும், பார்லி, காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இவற்றை ஈஸ்ட் சேர்த்து நொதிக்கச் செய்கிறார்கள். அத்துடன் சர்க்கரை சேரும்பொழுது எத்தில் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது. இத்துடன் சோடியம் ஹைட்ராக்சைடு, சோடியம் சல்பர், சோடியம் குளோரைடு, சோடியம் தியோசல்பர், கால்சியம் கார்பனேட் போன்ற எல்லா வகையான உப்புகளும் இதில் சேர்க்கப்படுகின்றன. இந்த உப்புகள் ஆல்கஹாலுடன் சேர்ந்து உட்கொள்ளப்படுவதால், கிட்னி உள்ளிட்ட பகுதிகளில் இவை படிந்து, தமது விஷம வேலைகளைக் காட்ட ஆரம்பிக்கின்றன.
போலி நம்பிக்கைகள்
இளைஞர்களிடையே ஒரு போலி நம்பிக்கை உள்ளது. மது குடிப்பதற்குமுன் சில மாத்திரைகளை போட்டுக் கொண்டால் சிறுநீரகங்கள், கல்லீரல் பாதிக்காது என்று. ஆனால், யாருக்கும் அது என்ன மாத்திரை என்று தெரியாது. நண்பர்கள், குடிப்பழக்கம் இல்லாதவர்களையும் தங்கள் பார்ட்டியில் சேர்த்துக்கொள்ள வைட்டமின் மாத்திரைகளைக் கொடுத்து ஏமாற்றுவார்கள். ஏமாற வேண்டாம். எந்த முன்னெச்சரிக்கைச் செயலும் மதுவால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்காது.
அதேபோல கள்ளு குடிப்பது உடலுக்கு நல்லது என்பதும் உண்மையில்லை. பனையில் இருந்து பெறப்படும் பொருட்கள் இயற்கையானவை என்பதால் அவற்றால், உடல் நலத்திற்கு நல்லது. ஆனால், கள் அப்படியல்ல. புளிக்க வைப்பதால் இதில் பாக்டீரியாக்கள் அதிகம். இது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தவிர, கள் என்கிற பெயரில் மாத்திரைகளைப் போட்டும் ஏமாற்றுவார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதி.
வசூல்ராஜா
இந்த ஆண்டு எப்படியும் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக டாஸ்மாக் மூலம் வருவாய் ஈட்ட வேண்டும் என்பது தமிழக அரசின் இலக்கு. தினமும் சுமார் 38 கோடி ரூபாய் வருவாய் தரும் துறையை உள்ளாட்சித்தேர்தலுக்காக ஐந்து நாட்கள் மூடிவிடப் போவதாக அரசு அறிவித்தவுடன் அதற்கு முந்தைய சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் விற்பனை வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகரித்தது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் என்று எல்லா வகை மதுபானங்களும் கடை திறந்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்து விட்டதாக டாஸ்மாக் ஊழியர் ஒருவர் சொன்னார்.
அலைமோதும் கூட்டத்தைப் பார்த்து, எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்கியவர்களும் இருக்கிறார்கள். சாதாரண நாட்களில் ஒரு குவார்ட்டருக்கு 3 ரூபாய் அதிகம் கொடுத்தவர்கள், அன்று 10 ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள். தமிழகம் முழுக்க அரசுக்குச் சொந்தமான 6,500 மது விற்பனைக் கடைகளில் வேலை செய்யும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கும் அன்று நல்ல வருவாயாம். இப்படி கூடுதலாக வசூலான பணம் மட்டும் ஒரே நாளில் கிட்டதட்ட 3 கோடி ரூபாய்.
No comments:
Post a Comment