Friday, November 18, 2011

ரப்பர் - வரலாறு

தாவரங்கள் தங்களிடமிருந்து, வண்ணப்பசை, எண்ணெய், கோந்து, குங்கிலியம், பால் போன்ற பலவிதமான திரவப் பொருள்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றில் ஒன்றுதான் ரப்பர் பால். ரப்பர் பால் என்பது கோந்து, எண்ணெய், புரோட்டீன், அமிலங்கள், உப்புகள், சர்க்கரை,ஹைட்ரோ கார்பன் முதலியவை கலந்ததுதான். ‘லாடெக்ஸ்’என்னும் ரப்பர் பாலில் 50 அல்லது 60 சதவிகிதம் ஹைட்ரோகார்பனும் ரெஸின் என்னும் பொருளும்தான்.முதன்முதலில் ரப்பரின் உபயோகத்தைத் தென் அமெரிக்கர்கள்தாம் அறிந்திருந்தார்கள். சுமார் 490 ஆண்டுகளுக்கு முன்புதான் ரப்பரைப் பற்றி உலகின் மற்ற பாகங்களுக்கும் தெரிய வந்தது. தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களைத் தேடி அலைந்த ஸ்பானிஷ் மக்கள், தென் அமெரிக்காவின் கிராமங்களைக் கொள்ளையடிக்கச் சென்றபோது, அங்கே சில குழந்தைகள் ஒரு மரத்தின் பட்டையிலிருந்து வழியும் பாலை எடுத்து உருண்டையாக உருட்டி வைத்துக் கொண்டு விளையாடுவதையும் அந்தப் பொருள் பூமியில் விழுந்தால் எம்பிக் குதிப்பதையும் கண்டார்கள்.
தென் அமெரிக்க கிராம மக்கள் அந்த மரத்தைக் ‘கூச்சீ’ என்று குறிப்பிட்டார்கள். கூச்சீ என்றால் ‘கண்ணீர் வடிக்கும் மரம்’ என்பது பொருள். அந்த மரங்கள் உலகில் வேறெங்கும் வளர்வதை அவர்கள் விரும்பவில்லை.1870ல், ஹென்றி விக்ஹாம் என்பவர் மிகுந்த சிரமத்துடன் பிரேஸில் நாட்டிலிருந்து, ரப்பர் மரத்தில் 70,000 விதைகளை ஒருவருக்கும் தெரியாமல் கொண்டு போனார். அவை இங்கிலாந்தில் பயிரிடப்பட்டன. அங்கே சுமார் 2000 ரப்பர் மரக்கன்றுகள் முளைத்தன. அங்கிருந்து ரப்பர் மரக்கன்றுகள் மிக ரகசியமாக 1905ல் இலங்கைக்கும், பிறகு அங்கிருந்து மலேசியாவுக்கும் கொண்டு செல்லப்பட்டன.ரப்பர் பாலுக்கு லாடெக்ஸ் என்று பெயர். ரப்பர் பாலின் நிறம் வெள்ளைதான் என்றாலும், பருவ காலத்துக்குத் தகுந்தாற்போல் அது மஞ்சளாகவும் வெளிர் ஆரஞ்சாகவும், சாம்பல் நிறத்திலும் இருக்கும்!சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே, தென் அமெரிக்க செவ்விந்தியர்கள், ரப்பர் பாலிலிருந்து செருப்புகளும், கிண்ணங்களும், புட்டிகளும் செய்தார்கள்.ஒரு காலத்தில், இங்கிலாந்தில் சுமார் ஒரு கன செ.மீ. அளவுள்ள ரப்பர் துண்டு 75 அமெரிக்க சென்ட் மதிப்புக்கு விற்கப்பட்டது.1770ல், ஜோஸப் பிரிஸ்ட்லி என்னும் வேதியியல் அறிஞர் இது பென்சில் கோடுகளை அழிப்பதால் ‘ரப்பர்’ என்று முதன்முதலில் பெயரிட்டார்.ரப்பரைப் பயன்படுத்தி ‘மழைக்கோட்டு’ தயாரிக்கலாம் என்பதை ‘சார்லஸ் மாசிண்டோஷ்’ என்னும் ஸ்காட்லாந்துக்காரர் 1823ல் கண்டுபிடித்தார்.
உருகிய நிலையில் ரப்பருடன் கந்தகத்தைச் சேர்த்தால் உறுதியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை 1839ல் ‘குட் இயர்’ என்னும் அமெரிக்கர் கண்டுபிடித்தார். அதன் பிறகுதான் ரப்பரின் உபயோகம் அதிகமானது.1896ல்தான் வாகனங்களுக்கான காற்றடைக்கப்பட்ட ரப்பர் டியூப்கள் கண்டுபிடிக்கப்பட்டன.ரப்பர் மரம் 18 முதல் 30 மீட்டர்கள் உயரம் வரை வளரும். 2 முதல் 3 மீட்டர்கள் சுற்றளவு இருக்கும். வளர்ந்து 7வது வருடத்திலிருந்து பலன் தர ஆரம்பிக்கும். அதிலிருந்து சுமார் 50 வருடங்களுக்கு ரப்பர் பால் சேகரிக்கலாம்.ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் 150 வெட்டு வாய்களை உண்டாக்கலாம். அடி மரத்தின் மேலும் கீழும் சுமார் 35 செ.மீ. விட்டுவிட்டு மற்றப் பகுதிகளில் இந்தக் கீறல்களை உண்டாக்குவார்கள். 10 வருடங்களில் அதன் பட்டை மறுபடியும் வளர்ந்துவிடும். ஒரு கூரிய கத்தியால், சுமார் 1.25 செ.மீ. கனத்துக்கு ரப்பர் மரத்தின் பட்டை அகற்றப்பட்டு அதில் ஓர் உலோகக் கிண்ணம் பொருத்தப்படுகிறது. அதில் பால் வடிகிறது. சேகரிக்கப்பட்ட பால், நீர் நீக்கப்பட்டு உறைய வைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுகிறது.
பட்டை நீக்கம் மூன்று விதங்களில் செய்யப்படுகிறது.
அதிகாலை நேரம்தான் மரத்தைக் கீற ஏற்றது. 3 மணி நேரத்தில் ஒருவர் 200 முதல் 300 மரங்களில் பால் சேகரிப்பார். முதல் 6 வருடங்கள் மரத்தின் ஒரு பக்கம் கீறுவார்கள்; மறு 6 வருடங்கள் அடுத்தப் பக்கம் கீறுவார்கள்.உலக ரப்பர் உற்பத்தியில் தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, இந்தியா முதல் நான்கு இடங்களை வகிக்கின்றன.ரப்பர் உற்பத்தியில் கடைசியாக இருப்பது, ரப்பரை உலகத்துக்கு அறிமுகப்படுத்திய ‘லத்தீன் அமெரிக்கா தான்!’.
இந்திய மாநிலங்களில் கிடைக்கும் ரப்பரின் சதவிகிதம்
கேரளா 91%
தமிழ்நாடு 7%
கர்நாடகா 1%
அந்தமான் 0.1%

No comments:

Post a Comment