கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, கல்பாக்கத்தில் இருக்கும் சென்னை அணு மின் நிலையம் குறித்தும் ஏகப் பரபரப்பு. இதனால், கட்டுப்பாடுகள் நிறைந்த அணு மின் நிலையக் கதவுகள் கடந்த 22-ம் தேதி மீடியாவுக்காகத் திறந்தன. 'எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளத் தயார்; அணு மின் நிலையத்தின் எந்தப் பகுதியையும் பார்வை இடலாம்’ என்றபடி அழைத்துச் சென்றார்கள் அதிகாரிகள்.
அணு உலை தொடர்பான சந்தேகங்களை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சேத்தல், சென்னை அணு மின் நிலையம் - பாவனி திட்டம் இயக்குனர் பிரபாத் குமார், சென்னை அணு மின் நிலையத்தின் இயக்குனர் ராமமூர்த்தி, அணு மின் நிலையத் தலைமை வடிமைப்பாளர் மற்றும் பாதுகாப்பு இயக்குனர் செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் கேட்டோம்.
''எப்போது வேண்டுமானாலும் பூகம்பம் வரக்கூடிய 'நிலநடுக்கப் பகுதி - 3’ என்பதில் கல்பாக்கம் அணு உலை உள்ளது என்பது உண்மையா? ஒருவேளை பூகம்பம் ஏற்பட்டால், உலை சேதமாகி, கதிர் வீச்சு வெளியேறாதா?''
''நிலநடுக்கப் பகுதி 3-ல் கல்பாக்கம் உள்ளது என்பது உண்மைதான். அணு உலையில் 30 சதவிகிதம் யுரேனியம், 70 சதவிகிதம் புளுட்டோனியம் கொண்டு வெப்பத்தை உருவாக்கித்தான் மின்சாரம் தயாரிக்கிறோம். பூகம்பம் ஏற்பட்டால் அணு உலை ஆட்டம் கண்டு, அதில் இருக்கும் திரவமோ வாயுவோ கசிந்து கதிர் வீச்சு பரவும் என்பதுதான் பலரது வாதம்.
ஆனால், அணு உலை இருக்கும் பகுதியில் நாங்கள் தொடர்ந்து செயற்கையாக, அதிகபட்ச ரிக்டர் அளவில் பூகம்ப அதிர்வுகளை ஏற்படுத்தி, அணு உலைக்குப் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம். அவ்வளவு உறுதியான கட்டமைப்புகளுடன் அணு உலை அமைக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் நான்கு ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டால், அணு உலை தானாகவே தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டு பாதுகாப்பு நிலைக்குச் சென்றுவிடும். அதிர்வுகள் முழுமையாக அடங்கியதும், தானாக இயங்க ஆரம்பிக்கும். இதுவே ஆறு முதல் ஏழு ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால், அணு உலை தானாக இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். மீண்டும் நாங்கள்தான் அதனை இயக்க வேண்டும்.
இவ்வாறு அணு உலை தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும்போது உலையைக் குளிர்விக்க குளிர்சாதன டீசல் என்ஜின் தானாகவே இயங்கும். டீசல் என்ஜின் ஒருவேளை செயல்படாமல் போனால், 'தெர்மோஸ்போனிங்’ எனப்படும் நீராவித் தொழில்நுட்பம் மூலம் உலை குளிர்விக்கப்படும். அதுவும் செயல்படவில்லை என்றால், அவசரக் காலத் துளைகள் மூலம், உலை மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. இதற்காக எப்போதும் 37.6 மில்லியன் லிட்டர் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பூகம்பம் மட்டும் அல்ல... சுனாமி வந்தாலும் அதையும் சமாளிக்கும் வகையில் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணு உலை உட்பட மின் நிலையத்தின் அனைத்து முக்கியப் பகுதிகளும் சுனாமி அலைகளால் பாதிக்கப்படாத உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான், கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இந்த மின் நிலையத்துக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அதன் பின்பு, 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் அணு சக்தி ஒழுங்கு முறை வாரியம் மின் நிலையத்தை ஆய்வு செய்து எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று சான்று அளித்துள்ளது.
பூகம்பம், சுனாமி, சூறாவளி, புயல் என எந்த இடர்ப்பாடு ஏற்பட்டாலும் உடனடியாக இங்கு இருக்கும் மூன்று மைக்ரோ ஸ்டேஷன்களுக்கு முன்னதாகவே சிக்னல் கிடைத்துவிடும். இது தவிர, ஆன்லைன் நியூக்ளியர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மூலமாக, கம்ப்யூட்டரில் 24 மணி நேரமும் அதிகாரிகள் வானிலை மற்றும் பேரிடர்களைக் கண்காணிப்பார்கள்.''
''அணு உலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் சுற்றுவட்டாரக் கிராம மக்களுக்கும் கதிர் வீச்சால் பாதிப்பு இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியுமா?''
''மனித உடலில் 250 மில்லி சீவர்ட் அளவுக்கு அணுக் கதிர் வீச்சு ஏற்பட்டால், விளைவு எதுவும் இருக்காது. 1,000 முதல் 3,000 மில்லி சீவர்ட் வரை கதிர் வீச்சு ஏற்பட்டால், குமட்டல், வாந்தி, நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு போன்றவை ஏற்படும். 4,500 முதல் 6,000 மில்லி சீவர்ட் வரை கதிர் வீச்சு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர் 30 நாட்களில் இறக்க நேரிடலாம்... என்பது உண்மைதான்.
அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம், அணு சக்தித் தொழில் முறை ஊழியர் ஓர் ஆண்டுக்கு 20 மில்லி சீவர்ட் வரை கதிர் வீச்சை உள்வாங்கலாம் என்று அனுமதித்துள்ளது. ஆனால், இங்கு உள்ள ஊழியர் ஓர் ஆண்டுக்கு 1.87 மில்லி சீவர்ட் மட்டுமே கதிர் வீச்சை உள்வாங்குகிறார். ஓர் ஊழியர் தொடர்ந்து 30 ஆண்டுகள் வேலை பார்த்தால்கூட பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் கதிர்வீச்சு இருக்காது. மின் நிலையத்தின் 1.6 கி.மீட்டர் சுற்றுவட்டாரத்தில் 2010-ம் ஆண்டு எடுத்த ஆய்வின்படி 0.023 மில்லி சீவர்ட் கதிர்வீச்சு மட்டுமே இருந்தது. இதனால், பொது மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனெனில் தொலைக்காட்சி பார்க்கும்போதும் விமானப் பயணம் செய்யும்போதும் ஏற்படுகிற கதிர்வீச்சைவிட, இது குறைந்த அளவுதான்.
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ஆஸ்பயர் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 22 கிராமங்களில் கேன்சர் உட்பட 15 வகையான நோய்களுக்கான மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. 25,164 பேரில் 22,345 பேரிடம் ரத்தப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் 0.22 சதவிகிதம் நபர்களுக்கு (48 பேர்) கேன்சர் இருப்பது தெரிய வந்தது. இது கேன்சரின் தேசிய சதவிகிதமான 4 முதல் 12 சதவிகிதத்துக்கும் குறைவே. இப்படி அனைத்து நோய்களிலும் தேசிய சதவிகிதத்தைவிட இங்கு மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது.''
''கடலில் இருந்து பம்பிங் செய்யப்பட்ட நீர், அணு உலை செயல்பாட்டுக்குப் பயன்படுத்திய பிறகு கடலில் விடப்படுகிறது. இதனால் கடல் நீர் வெப்பமாகிறது; மீன் வளம் பாதிக்கப்படுகிறது என்பது உண்மையா?''
''ஒரு மணி நேரத்துக்கு 90 மில்லியன் லிட்டர் தண்ணீர், அணு உலை செயல்பாட்டுக்குப் பின்பு கடலில் விடப்படுகிறது. இந்தத் தண்ணீர் அதிகபட்சம் 7 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே சூடாக இருக்கும். ஆனால், கல்பாக்கத்தில் இதுவரை இது 5 டிகிரியைத் தாண்டியது இல்லை. இந்தத் தண்ணீரையும் நேரடியாகக் கடலில் கலக்கவிடுவது இல்லை. ஒன்பது கி.மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டி அதன் வழியாகச் சென்றுதான் கடலில் கலக்கிறது. இதனால், கடலின் தட்பவெப்பம் மாறுவதற்கு சாத்தியம் இல்லை. மீன் வளம் குறித்துக் கேட்டீர்கள், உலையின் நீர் வெளியேறும் இடத்திலேயே எவ்வளவு மீன்கள் நீந்துகின்றன என்பதை நேரடியாக நீங்களே பாருங்கள். இதனால், மீன் வளம் பாதிக்கப்படுகிறது என்பதும் பொய். (அழைத்துச் சென்று காட்டியபோது, ஏராளமான மீன்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன)
இவை அனைத்துக்கும் மேலாக ஒரு விஷயம். இங்கு சுமார் 1,000 பேர் வேலை பார்க்கிறோம். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. பலர் வதந்தி பரப்புவதுபோல அணு மின் நிலையம் ஆபத்தானது என்றால், முதலில் பலியாகப்போவது நாங்கள்தான். ஆபத்து இருப்பது உண்மை என்றால், இங்கே வேலை பார்ப்போமா? நாட்டின் வளர்ச்சிக்கு யாரும் முட்டுக்கட்டை போட வேண்டாமே..!''
No comments:
Post a Comment