திருவானைக்கா திருமண மண்டபம் ஒன்றில் பந்தி முடிந்து கை கழுவ வெளியேறிய அந்த 19 வயது இளைஞன், கண்ணில் பட்ட காட்சிக்கு அப்படியே விக்கித்துப்போகிறான். மண்டபத்தில் இருந்து எறியப்பட்ட எச்சில் இலைகளில் பன்றிக் கூட்டம் ஒன்று மேய்ந்துகொண்டு இருக்க, அவற்றோடு எச்சில் பருக்கை களுக்காக அடித்துப்பிடித்துக்கொண்டு இருந்த மனிதர்கள் அவனுடைய ரத்த உறவுகள். நாகரிகச் சமூகத்தில் தானும் ஓர் அங்கம் என உழைத்து வளர்ந்துகொண்டு இருந்த அவனை அந்தக் காட்சி உலுக்கிப்போட, கேவலுடன் மண்டப மூலையில் முடங்கி, யாரும் அறியாது அழ ஆரம்பித்தான்.
'20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த இந்தச் சம்பவம்தான் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது!' - சுப்ரமணியம் சாதாரணமாகச் சொன்னாலும், அவர் சார்ந்த நரிக்குறவர் சமூகம் தலைநிமிரத் தன்னையே நெம்புகோலாக் கிக்கொண்டவர்.
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் இருந்து 4 கி.மீ. உள்ளடங்கி இருக்கிறது மலையப்ப நகர். ஊர் ஊராக நாடோடிகளாகத் திரிந்த தன் சமூக மக்களை எச்சில் இலைகளில் இருந்து மீட்கும் முயற்சியில் இரண்டு வழிகளைக் கையாண்டு இருக்கிறார் சுப்ரமணியம். முதலாவது, பெரியவர்களுக்கு சுயதொழில். இரண்டாவது, சிறுவர்களுக்கு பள்ளிப் படிப்பு.
'எங்களுக்கு ஏற்கெனவே நல்லா தெரிஞ்ச பாசி மணி கோக்கும் தொழிலையே கொஞ்சம் பெரிசா எடுத்து பண்ண ஆரம்பிச்சோம். இதற்காக எங்க சமூகப் பெண்களை சுய உதவிக் குழுக்களா ஒருங்கிணைச்சேன். பெண்கள் அதிக அளவுல மணி மாலைகளைத் தயாரிக்க, இடைத் தரகர்களோட கொள்ளையை ஒழிக்க ஆண்கள் நேரடியா மார்க்கெட்டிங்ல இறங்கினோம். எங்க சிரத்தையால் செட்டிக்குளம் முருகன் கோயில் வாசலில் தொடங்கிய முயற்சி, கடல் கடந்து மலேசியா முருகன் கோயில் வரை களைகட்டியது. மூத்த தலைமுறையின் பொருளாதாரச் சுணக்கம் விலக, இரண்டாவது வியூகமாக குழந்தைகளைப் படிக்கவைக்கும் முயற்சியில் இறங்கினோம்!''
இந்த இரண்டாவது முயற்சிக்காக சுப்ரமணியம் மேற்கொண்ட பாடுகள்தான் ஆச்சர்யம் அளிக்கும் போராட்டம்.
'சிறுவாச்சூரில் பள்ளிக் குழந்தைகளுக்கான விடுதியை ஏற்பாடு செய்தேன். சாப்பாட்டுக்கு ஸ்பான்சர்கூடத் தயார். ஆனா, உழைக்கத் தயங்காத எங்க ஜனங்களால படிக்கிறதை மட்டும் ஏத்துக்க முடியலை. குழுவா பல ஊர் களுக்கும் பயணப்பட்டு எங்க சமூக மக்களிடம் பேசிப்பார்த்தோம். ஆண்டாண்டு காலமா ஊறிப்போன பழமை சுலபமா விலகுமா? எங்களை ஏதோ பிள்ளை பிடிக்கிற கூட்டமா பாவிச்சு, எங்க சொந்தக்காரங்களே பதறி விலகினாங்க. அதையும் மீறி குழந்தைகளை மீட்டு படிக்க வெச்சதுக்கு, வருமானம் பறிபோச்சேனு பல பெற்றோர் மண் வாரி விட்டதுகூட நடந்தது.
இதோ ஆச்சு 11 வருஷம். முதல் தலைமுறை மாணவர்கள் 16 பேர் காலேஜ் போறாங்க. அதைப் பார்த்து பெத்தவங்க தானா முன்வந்து குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கிறாங்க. சிறுவாச்சூரைத் தொடர்ந்து இப்போ எங்க சமூக மக்கள் அதிகமா இருக்கும் மாயவரத்தைக் குறிவெச்சு பல்லவராயன்பேட்டையிலும் ஒரு உண்டு உறைவிடப் பள்ளியை ஆரம்பிச்சி இருக்கோம். வருஷத்துக்கு 10 ஊர்களைக் குறிவெச்சு விழிப்பு உணர்வுப் பிரசாரம் பண்றோம்!'' என்று சொல்லும் சுப்ரமணியம் ஐந்தாம் வகுப்புதான் படித்திருக்கிறார். இந்த கல்வி சேவைக்காகத் தனது முன்னாள் தலைமையாசிரியர் பாலசுப்ரமணியத்தைத் தேடிக் கொண்டுவந்து தனது ஹாஸ்டலில் வார்டனாக்கி இருக்கிறார்.
குளிக்காத தேகம், டால்டா டப்பா, காடை - உடும்புக் கறி, நரி வால் எனப் பொதுப்புத்தி பார்வை இனி மலையப்ப நகர் நரிக்குறவர்களிடம் எடுபடாது. பெயரில்கூட நரி போய் நெறி சேர்ந்திருக்கிறது. தமிழ்நாடு நெறிக்குறவர் கூட்டமைப்பின் தலைவராகி இருக்கிறார் சுப்ரமணியன். மலேசியா வரை போன மணிமாலை பிசினஸ் புண்ணியத்தில் இன்று அவர்கள் அனைவருடைய வீடுகளிலும் மோட்டார் சைக்கிள்கள் நிற்கின்றன. இருவர் கார் வைத்திருக்கிறார்கள். வாகிரி பாஷையில் தங்களுக்குள் பேசிக்கொண்டாலும் மற்றவர்களிடம் அதன் சாயலே இல்லாமல் தெள்ளு தமிழ் பேசுகிறார்கள். குழந்தைகள் கான்வென்ட் ஆங்கிலத்தில் அசத்துகிறார்கள். ''அடுத்தது அரசியல்தான். மற்ற மாநிலங்களில் எஸ்.டி. பிரிவில் இருக்கும் நாங்கள் தமிழகத்தில் மட்டும் அரசின் பாராமுகத்தால் எம்.பி.சி. பிரிவில் இருக்கிறோம். வட மாநில குஜ்ஜார்கள்போல தீவிரப் போராட்டத்துக்கான பூர்வாங்க வேலைகள் தயார்!''
- திடமாக சுப்ரமணியம் பேச, சந்தோஷமாக அதை ஆமோதிக்கிறார்கள் மலையப்ப நகர் நரி... சாரி.. நெறிக்குறவ சகோதரர்கள்.
என் விகடன் - திருச்சி
No comments:
Post a Comment