கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டச் செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடாமல் எட்டாம் பக்கம், பத்தாம் பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிற ஓர் ஆங்கிலச் செய்தித்தாள், முதல் பக்கத்தில் ‘கொலைவெறி’ சினிமாப் பாடல் சூப்பர் ஹிட்டான செய்தியை நான்கு காலம் தலைப்பிட்டு வெளியிடுகிறது. ஏன் இந்தக் கொலைவெறி?கமர்ஷியல் சினிமாக்காரர்கள் எப்போதும் மிகையான பப்ளிசிட்டியில் ஈடுபடுவது வழக்கம். அது அவர்களுக்கு ‘தொழில் தர்மம்’. இருபது லட்ச ரூபாயில் ஒரு செட் நிர்மாணித்தால், மூன்று கோடி செலவிட்டதாகச் சொல்வார்கள். நடிக்கும் பாத்திரத்துக்காக நடிகர் தம்மை என்னென்னவோ விதத்தில் வருத்திக் கொண்டதாகச் சொல்வார்கள். அசல் வருத்தம் 10 சதவிகிதம் என்றால், பப்ளிசிட்டி வருத்தம் 150 சதவிகிதமாக இருக்கும். சினிமாக்காரர்கள் பப்ளிசிட்டி செய்ய வேறு எதுவும் இல்லாவிட்டால், குறைந்த பட்சம், ஒரு நடிகரோ நடிகையோ அண்ணாசாலையில் நடந்து போகிற காட்சியைப் படம் பிடித்ததைக்கூட, ‘கொளுத்தும் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நடித்த ஜிகினாஸ்ரீ மருத்துவமனையில் கொப்புளங்களுடன் அனுமதி’ என்று பரபரப்பாக்குவார்கள்.
அந்த வரிசையில் படத்துக்கான முன்னோட்ட பப்ளிசிடியாகத்தான் ‘ஒய் திஸ் கொலை வெறி’ பாட்டு வந்திருக்கிறது. ரஜினிகாந்த் தொடர்புள்ள எதையும் செய்தியாக்கி விற்பனை செய்வதில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் இருக்கும் கொலைவெறிக்கு இது சரியான தீனி. படத்தின் டைரக்டர்: ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. நாயகன்: மருமகன் தனுஷ். ஜோடி: கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி. சிறந்த நடிகர் விருது வாங்கிவிட்ட தனுஷ் அடுத்து சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ஆங்கிலப் பாடலாசிரியர். தொடர்ந்து முயற்சித்தால் தமிழ் சினிமாவில் இடம் பெறும் ஆங்கிலப் பாட்டுகளை எழுதுபவரான ராண்டார் கையின் இடத்தை தனுஷ் பிடிக்கக் கூடும். கொலைவெறிப் பாட்டு ஏன் ஹிட்டானது? அதில் அப்படி என்னதான் இருக்கிறது?
இன்றைக்கு ஃபேஸ்புக் போன்ற சமூகத் தொடர்புக்கான இணையதளங்களில் ஒரு பாட்டோ, ஒரு பொருளோ, ஒரு விஷயமோ ஹிட் ஆவது பெரிய விஷயம் இல்லை. சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பொய்க் கணக்குகளை ஆயிரக்கணக்கில் வைத்திருக்கின்றன. இவையெல்லாம் இளம் ஆண்கள், பெண்கள் பெயரில் உலவுகின்றன. இவற்றில் ‘லேட்டஸ்ட் மாடல் ...... ஷூவை பார்த்தியா? அருண் போட்டுக்கிட்டு வந்தான். ஆவ்சம்(Awesome) என்று அகல்யா, ஷோபாவுக்கு ஸ்டேட்டஸ் போடுவாள். இதை ஐநூறு பேர் லைக் பண்ணுவார்கள். அருண், அகல்யா, ஷோபா லைக் பண்ணும் ஐநூறு பேர்களும் கற்பனைப் பாத்திரங்கள். ஃபேஸ் புக்கில் நிஜம் போல உலவுபவர்கள். ஷூ கம்பெனியால் உலவ விடப்பட்டவர்கள். புது ஷூ செய்தி போதுமான அளவு பரப்பப்பட்ட பின்னர்தான் கம்பெனி ஷூவை மார்க்கெட்டுக்கே அனுப்பும்!இந்த மாதிரி நவீன டெக்னாலஜி சார்ந்த வணிக சாமர்த்தியங்களை, தமிழ் வணிக சினிமா அடைந்துவிட்டதா என்று தெரியவில்லை. அதை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பது நிச்சயம். கொலைவெறிப் பாட்டு நாடெங்கும் இளைஞர்களின் தேசிய கீதமாக ஆகிவிட்டதாகச் செய்திகள் பரப்பப்படுகின்றன. சென்னையில் அது தமிழ்ப் படத்தில் இருக்கும் ஆங்கிலப் பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. வடக்கே ஹிந்தி வானொலி சேனல்களில் ஒலிபரப்பப்படும் முதல் ‘தமிழ்’ பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. பாடல் கேட்கும் இளம் மனங்களில் இடம்பிடிக்க அடிப்படைக் காரணம் கால் தட்டவைக்கும் தாள கதியும் எளிமையான வடிவமும்தான். திரும்பப் பாடிப் பார்க்க வசதியான பாட்டு. உண்மையில் பாட்டு என்றே சொல்ல முடியாது. தாளத்துக்கேற்ப பேசுதல்தான். உச்சாடனம், ஓதுதல் என்பதன் பல்வேறு வடிவங்களாக ராப், ரெகெ போன்றவை உருவாகி வந்திருப்பதன் இன்னொரு தொடர்ச்சி இது.
பாடலின் விஷயம்தான் நம் ஆழ்ந்த கவனத்துக்குரியது. கல்யாணப்பரிசு காலத்திலிருந்து சினிமாவில் இருக்கும் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருத்தன்’ தீம்தான். ஆனால் அறுபது வருட முந்தைய தமிழ்க் காளைக்கும் இன்று தனுஷ் மூலம் சித்திரிக்கப்படும் தமிழ்க் காளைக்கும் கடுமையான வேறுபாடு இருக்கிறது. இன்று தனுஷ் காட்டும் இளைஞன் விடலையாக, பொறுக்கியாக, ஒரு சமூகப் புல்லுருவியாக இருக்கிறான். ‘ஆடுகளம்’ படத்தில் தனுஷ் ஏற்ற பாத்திரம் அவன் குடும்பத்துக்கு எந்தவிதத்திலும் பயன்படாத ஒரு மனிதன் பற்றியது. விதவைத்தாய் வறுமையில் புலம்பிக்கொண்டே இருக்கிறாள். அவள் பேசினாலே, “ஸ்பீக்கரை ஆஃப் பண்ணு,” என்று விடலை மொழியில் வாயை மூடச் சொல்லுகிறான். தொடர்ந்து பேசும் தாயிடம் வாயை மூடாவிட்டால், “கொன்னே போடுவேன்” என்று கர்ஜிக்கிறான். செவத்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் துரத்தித் துரத்தி மிரட்டி மிரட்டிக் காதலிக்க வைக்கிறான். முப்பது நாற்பது வயதைக் கடந்தவர்களுக்குத்தான் இந்தப் படத்தின் சேவல் சண்டை பண்பாட்டு அடையாளம். தனுஷ் என்ற கதாநாயகனுடன் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் 14 முதல் 20 வரையிலான எண்ணற்ற இளைஞர்களுக்கு, பொறுக்கித்தனமும் பெண் சீண்டலும்தான் படத்தின் செய்தி.குடும்பப் படமாக, அதாவது குடும்பத்தோடு சென்று கண்டுகளிக்க ஏற்றவையாக, சென்ற வருடம் பாராட்டப்பட்ட இன்னொரு படம் களவாணி. விமல் நாயகனாக நடித்த இந்தப் படத்தின் நாயகப் பாத்திரம் இன்னொரு பொறுக்கி. துபாயிலிருந்து அப்பா அனுப்பும் பணத்தை அம்மாவிடமிருந்து ஏமாற்றிப் பிடிங்கிக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வந்து பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் சைக்கிளைத் தடுத்துப் பிடித்துத் தம்மைக் காதலிக்கும்படி மிரட்டுபவன். இந்தப் படமும் விமலுக்கு பதில் தனுஷ் நடித்திருக்கக்கூடிய ஒரு படம்தான்.இரு படங்களிலும் பொறுக்கிக் கதாநாயகர்களால் காதலிக்கும்படி மிரட்டப்பட்ட நாயகிகள்; அடுத்த கட்டத்தில் தாமே மனமுவந்து காதலிக்கிறார்கள். இதுதான் விடலை மனங்களுக்குக் களிப்பூட்டும் செய்தி.
இந்த வரிசையில்தான் ‘கொலைவெறி’ பாடலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. செவத்த பெண் ஏமாற்றிவிட்டாள். கறுத்த பையன் புலம்புகிறான். வெள்ளை நிலா, கறுப்பு வானத்தில் இருப்பது போல, நாம் இருக்க முடியாதா என்று ஏங்குகிறான்.தன் காதலை ஏற்காதவளை, கொலை வெறி பிடித்தவள் என்று வர்ணிக்கிறான். கொலைவெறிப் பாடல் வந்திருக்கும் அதே சமயத்தில் வெளியாகியிருக்கும் இன்னொரு தனுஷ் பாடிய பாடல், ‘என் காதல் அது கண்ணீருல...’ இதில் பிரபலமான வரிகள்: அடிடா அவளை, உதைடா அவளை என்பவைதான். எதற்கு அடிக்க வேண்டும்? உதைக்க வேண்டும்? இவனைக் காதலிக்க அவள் மறுத்துவிட்டதற்குத்தான். விடலை மனங்களுக்கு இன்னொரு செய்தி. உனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க வேண்டாம். அவள் எதற்கு இருக்க வேண்டும்? அடி உதை கொல்லு... தமிழ் நாட்டில் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் ஊற்றுவது தொடர்ந்து நடக்கும் கொடுமையான வன்முறை.
இரு பாடல்களிலும் குடிப்பதும்; போதையும் இந்தச் சோகத்துக்கு மருந்தாக ஆறுதலாகச் சொல்லப்படுகிறது. இருபதாயிரம் கோடி ரூபாய் விற்பனையை நோக்கித் தமிழக அரசின் மது வியாபாரம் படுவேகமாக ‘வளர்ந்து’ கொண்டிருக்கும் நிலையில், ப்ளஸ் டூவிலேயே போதை அடிமைகள் உருவாகிக் கொண்டிருப்பதைப் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.எந்தச் சமூகத்திலும் விடலைகள் இருப்பார்கள். பொறுக்கிகள் இருப்பார்கள். அவர்களை மன முதிர்ச்சியும் பக்குவமும் உடையவர்களாக ஆக்கவே கல்வியும், கலைகளும் ஒரு சமூகத்தால் பயன்படுத்தப்படும். மாறாக அவர்களை ஊக்கப்படுத்துவதை நியாயப்படுத்துவதை கதாநாயகர் பாத்திரங்களாக்கிக் கொண்டாடுவதை ரசிப்பதைச் செய்யும் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். இன்றைய தமிழ்ச் சமூகத்தில் வளரிளம் பருவத்தில் இருக்கும் பையன்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்குப் பதில் கொலைவெறியை அதிகரிப்பதையே கொலை வெறிப் பாடல் கலாசாரம் செய்கிறது. ஆண்-பெண் உறவு எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதே விடலைப் பருவத்தில் புரியாத சிக்கலாகப் பலருக்கு இருக்கிறது. செவத்த பெண்ணுக்காக ஏங்கும் கறுத்த பையன் என்ற பிம்பம் இருவருக்கும் ஆபத்தானது. செவப்பும் கறுப்பும் உடல் நிறமும் பிரதான விஷயங்களே அல்ல. மனம்தான் முக்கியம், அறிவுதான் முக்கியம், அன்புதான் முக்கியம் என்ற பார்வைக்குப் பதில், உடல் சார்ந்து மட்டுமே இவை இளம் மனத்தைத் தூண்டுகின்றன. நம் சமூகத்தின் நிறவெறியின் இன்னொரு வடிவமே கொலைவெறிப் பாட்டு. இப்படிப்பட்ட பாடல்கள் ஹிட் ஆவது பற்றி வியாபாரிகள் மகிழ்ச்சியடையலாம்.எதிர்காலத் தமிழகம் பற்றிச் சிந்திக்கும் ஒருவரும் மகிழ்ச்சியடையமுடியாது. பொறுக்கியாக நடிக்கும் தனுஷோ, நடிக்கவைக்கும் ஐஸ்வர்யா, வெற்றிமாறன்களோ தங்கள் அன்றாட நிஜ வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும் உடையவர்களாக வாழ்வதினால் தான் அவர்களால் ‘தொழிலை’ ஒழுங்காகச் செய்யமுடிகிறது. ஆனால் அவர்கள் உலவவிடும் பாத்திரங்கள் தமிழகத்தின் பள்ளிகளிலும், தெருக்களிலும் ஏராளமான இளம் மனங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அலைக் கழிப்பிலிருந்து வழிநடத்த நம்மிடம் முறையான கவுன்சிலிங் அமைப்புகள் எதுவும் இல்லை. வழிகாட்டக் கூடிய ஊடகங்களே அவர்களைத் திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்பதுதான் அரசு முதல் படைப்பாளிகள் வரை தாரக மந்திரமாகிவிட்டது.
இந்த வார சந்தேகம்:
அண்ணா ஹசாரேவின் மெழுகுச்சிலையை ஒருவர் தத்ரூபமாக உருவாக்கிய செய்தியில் அசலும் நகலும் அருகருகே சிரித்தபடி இருக்கும் படம் பார்த்தேன். இப்படி ஒரு சிலை உருவாக்க, அந்தப் பிரபலம் தன் அளவுகளையும் புகைப்படங்களையும் தர வேண்டும். ஒரு ‘காந்தியவாதி’ இப்படி சுயமோகத்தில் தனி நபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் செயலுக்குத் துணை போனது எப்படி ?
இந்த வாரக் கண்டனம்:
முல்லைப்பெரியாறு அணை பற்றிப் பொய்யான பீதியைத் தூண்டும்விதத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தை எதிர்த்து ம.தி.மு.க.வினரும் இதர தமிழ் தேசியர்களும் ஸ்டூடியோவுக்குள் சென்று படச் சுருள்களை நாசமாக்கி நிகழ்த்திய வன்முறைக்கு இ.வா.கண்டனம். அணை உடைந்துவிடும் என்ற கருத்து தவறானது என்றால், அதற்கு எதிர்ப் பிரசாரம் செய்வதே முறை. கருத்து சொல்பவருக்கு எதிரான வன்முறை ஆபத்தானது. கூடங்குளம் அணு உலை ஆபத்தானது என்று பிரசாரம் செய்யக் கூடாது என்று அரசு நம் மீது வன்முறையைப் பிரயோகித்தால் அதை ஒப்புக்கொள்வோமா?
No comments:
Post a Comment