Thursday, November 24, 2011

''பால் வார்க்க வேண்டாம்.. நெருப்பு அள்ளியா போடுறது!


'திவால் ஆகும் நிலையில் உள்ள ஆவின் நிறுவனத்தை மீட்டு எடுப்பது தமிழக அரசின் கடமையாகும். எனவே பால் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாதது’ என்று ஜெயலலிதா விளக்கம் தெரிவித்து இருந் தாலும், மக்கள் மனசு ஏற்க மறுக்கிறது.

சமன்படுத்தப்பட்ட ஆவின் பால் ஒரு லிட்டர் 17.75 விலையில் இருந்து 24-க்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பசும் பால் விலை 18-ல் இருந்து 20-க்கும் எருமைப் பாலின் விலை 26-ல் இருந்து 28-க்கும் உயர்த்தி உத்தரவு இட்டிருக்கிறது தமிழக அரசு.

மேட்டூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான புஷ்பா கொட்டித் தீர்த்துவிட்டார். ''வசதி படைச்சவங்க மட்டும்தான் இனி பால் குடிக்க முடியும் போல இருக்குது. தினமும் கூலி வேலைக்குப் போய்த்தான் நாங்க கஞ்சி குடிக்கணும். வாங்குற கூலியில குழந்தைகளுக்கு மட்டும் கால் லிட்டர் பால் வாங்குவோம். இப்போ, அதுக்கும் வழி இல்லாமப்போச்சு. ஜெயலலிதாம்மா ஆட்சிக்கு வந்தா நல்லா இருக்கும்னுதான் அவங்களுக்கு ஓட்டுப் போட்டோம். ஜெயிச்சி வந்ததும் இப்படி மோசம் பண்ணுவாங்கன்னு தெரியாமப்போச்சே. எங்க வயித்துல பால் வார்க்க வேண்டாம்... நெருப்பை அள்ளிக் கொட்டாமலாவது இருக்கலாம். விலையைக் கூட்டாம இருந்த அந்தக் கருணாநிதியே பரவாயில்லைன்னு நினைக்கவைச்சிட்டாங்க'' என்று புலம்பித் தீர்த்தார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வெங்கடேசன், ''ஒரு லிட்டருக்கு 6.25 விலை ஏத்திட்டாங்க. திடீர்னு இப்படி ஒரு விலை உயர்வு வந்தா, எப்படிங்க சமாளிக்க முடியும்? நாங்க தினமும் ஒரு லிட்டர் பால் வாங்குறோம். வழக்கத்தைவிட மாசம் 200 ரூபா செலவு அதிகமாகுது. நாங்க மாச சம்பளத்தைவெச்சுக் குடும்பம் நடத்தறவங்க. பால் விலை ஏறிடுச்சுன்னு எங்களுக்கு சம்பளம் ஏத்திக் கொடுக்கவா போறாங்க? ஆட்சிக்கு வந்ததும் இலவசம்... இலவசம்னு அள்ளிக் கொடுத்துட்டு, இப்போ மக்களோட தலையில கைவெச்சிட்டாங்க. பால் மட்டும் இல்லாம பஸ் கட்டணத்தையும் ஒரே நேரத்தில் ஏத்தினதால், எங்க பட்ஜெட்ல மாசம் 500 ரூபா இடிக்குது. இன்னும் மின்சாரத்தையும் கூட்டிட்டா எப்படித்தான் சமாளிக்கிறதுன்னு தெரியலை...'' என்று டென்ஷன் ஆனார்.



தமிழ்நாடு பால் முகவர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமியிடம் பேசினோம். ''கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மக்களிடம் கெட்ட பேரு வந்துடும், ஓட்டு வங்கி பாதிக்கும்னுதான் நஷ்டத்தில் இருந்தும்கூட பால் விலையை உயர்த்தவே இல்லை. அதுதான் இன்றைய பிரச்னைக்கு முக்கியக் காரணம். பால் விலை உயர்வு என்பது இன்றைய சூழ்நிலையில் தவிர்க்கவே முடியாது. ஓட்டை இருக்கும் நெல் சேமிப்புக் கிடங்கில் எவ்வளவு நெல்லைக் கொட்டினாலும், பெருச்சாளிகள் அந்த வழியாக உள்ளே நுழைந்து நெல்லை சாப்பிட்டுக்கிட்டேதான் இருக்கும். இன்னைக்கு ஆவின் நிறுவனமும் அதே நிலையில்தான் இருக்குது. எவ்வளவுதான் விலையை உயர்த்தினாலும், ஆவின் நிறுவனத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைச்சு பெருச்சாளிகளையும் சேர்த்து ஒழிச்சாத்தான் நஷ்டத்தில் இயங்கும் ஆவினை சரிப்படுத்த முடியும். வெறுமனே விலையை மட்டும் உயர்த்தி எந்தப் பிரயோஜனமும் இல்லை.

சில இடைத்தரகர்களால், மாதாந்திர பால் அட்டை விவகாரத்தில் எவ்வளவோ கொள்ளை நடக்குது. இப்போ மாசம் நாலு கோடிக்கும் மேல் ஆவினுக்கு இழப்பு வருது. அதனால் பால் அட்டைகளை முதலில் வரைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நியாயமான விலையில் பால் கிடைக்கும்'' என்றார்.

பால் உற்பத்தியாளர்கள் என்ன நினைக்கிறார்கள்? கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்தின் காப்பாளர் ராஜகோபாலிடம் கேட்​டோம். ''பாலுக்கான கொள்முதல் விலையை நாங்க ஆறு ரூபா உயர்த்திக் கேட்டோம். ஆனால் ரெண்டு ரூபாதான் கொடுத்திருக்காங்க. ஆறு மாசத்துக்கு முன்னால எங்களுக்கு உதவித் தொகையா லிட்டருக்கு ரெண்டு ரூபா 35 காசு கொடுத்தாங்க. அப்போ விற்பனை விலையை உயர்த்தலை. இப்போ அதுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமா விலையை ஏத்திட்டாங்க.

திடீர்னு இப்படி ஒரு விலை உயர்வை மக்கள் தலையில் சுமத்துவது வேதனையான விஷயம். ஏன் இப்படி செஞ்சாங்கன்னு தெரியலை. விற்பனை விலையைக் குறைச்சு, பொதுமக்களின் சுமையை அரசுதான் குறைக்கணும்'' என்று கோரிக்கை வைத்தார்.

இனி பால் விலையைக் கேட்டாலே... வயிறு எரியும்!

No comments:

Post a Comment