பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்' என்பார் வள்ளுவப் பேராசான். அதாவது, தவறான ஆலோசனைகளைக் கூறுபவர்களை அரசன் பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பது எழுபது கோடிப் பகைவர்கள் இருப்பதற்குச் சமம் என்று பொருள். தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருக்கும் பஸ் கட்டண உயர்வும் ஏனைய மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வும், அந்தக் குறளைத்தான் ஞாபகப்படுத்துகிறது.
எந்தவோர் அரசும் வரிகள் போடாமலோ, கட்டணங்களை உயர்த்தாமலோ செயல்பட முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், வரிகளை அதிகரிப்பதும் கட்டணங்களை உயர்த்துவதும் வேறு வழியே இல்லாத நிலையில் அரசு எடுக்க வேண்டிய கடைசி முடிவாக இருக்க முடியுமே தவிர, நிர்வாகக் குறைபாடுகளையும் நஷ்டங்களையும் ஈடுகட்ட வரி போடுவதும், கட்டணங்களை உயர்த்திக்கொண்டே போவதும் தீர்வாக இருக்க முடியாது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையும் சரி, மின்சார வாரியமும் சரி, ஆவின் நிறுவனமும் சரி தொடர்ந்து நஷ்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பது நீண்டகால நடைமுறையாகவே மாறிவிட்டது. தொடர்ந்து ஆட்சிகள் மாறிக் கொண்டிருக்கின்றனவே தவிர, இந்த மூன்று அமைப்புகளிலும் காட்சி மட்டும் மாறாமலே தொடர்கிறது. இந்த அமைப்புகளின் நிர்வாகச் சீர்கேடுகளை அகற்றி, குறைந்தபட்சம் அகற்ற முயற்சி செய்துவிட்டு, பிறகு கட்டண உயர்வுக்கு அரசு முனைந்திருக்குமானால் யாரும் குற்றம் கூறி இருக்க வழியே இல்லை.
அரசுப் போக்குவரத்துத் துறையின் நஷ்டத்தை இந்தக் கட்டண உயர்வு குறைக்கப் போகிறது என்பது வெறும் பகல்கனவாகத்தான் இருக்கும். கூடுதல் வசூல், கூடுதல் ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் வழிவகுக்கப் போகிறது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திடீர் பஸ் கட்டண உயர்வால் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி என்பது ஒட்டுமொத்தமாக முதல்வர் ஜெயலலிதாவின் தோள்களில் மட்டுமே இறக்கப்படுமே தவிர, கட்டணத்தைக் கூட்டி நஷ்டத்தைச் சரிப்படுத்தி விடலாம் என்று தவறான ஆலோசனை வழங்கிய அதிகாரிகளைப் பாதிக்கப் போவதில்லை.
முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல, போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலைமையில் இருக்கின்றன. இதற்கு முந்தைய திமுக அரசு, அரசியல் நோக்கத்துடன் டீசல் விலையேற்றத்திற்கேற்பக் கட்டணங்களை அதிகரிக்காததுதான் காரணம் என்பதும் உண்மை. பத்தாண்டுகளாக உயர்த்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், கட்டண உயர்வு எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்கிற அறிவிப்பை மக்களிடம் வெளிப்படையாகச் சொல்லாமல் இரவோடு இரவாக உயர்த்தியதன் விளைவு, மக்கள் கொதித்துப் போய் அரசை வசைமாரி பொழியத் தொடங்கிவிட்டனர்.
சென்னையில் மட்டும் மொத்தம் 3,140 அரசுப் பேருந்துகள் இயங்குகின்றன. இதில் தினசரி 55 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். வேலைக்குப் போய்த் திரும்ப சென்னை மாநகரப் போக்குவரத்துதான் பெரும்பாலோரின் வாகனமாகத் தொடர்கிறது. தமிழகம் முழுக்க 21,169 அரசுப் போக்குவரத்து பஸ்கள் ஓடுகின்றன. இதில் தினசரி 2 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் பயணிக்கிறார்கள். ஏறத்தாழ மூன்று கோடி பேர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து ஊர்திகளின் கட்டணத்தை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உயர்த்துவது எந்த விதத்தில் சரி?
பல விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், அலுவலகத்தில் கணக்கர்களாக, உதவியாளர்களாக, துப்புரவுத் தொழிலாளர்களாக, சிறு சிறு தொழிற்சாலைப் பணியாளர்களாகப் பணிபுரிபவர்கள்தான் அரசு பஸ்களில் பெருவாரியாகப் பயணிப்பவர்கள். அதிகபட்சமாக மாதம் 5,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்கள் ஏராளம் ஏராளம். கையில் அன்றாடம் தேவைக்கான பஸ் கட்டணத்துடன் வேலைக்குப் போகிறவர், உயர்த்தப்பட்ட கட்டணத்தால் அதிர்ச்சி அடைந்து வேலைக்குப் போகாமல் வீடு திரும்பிய அவலம் பல இடங்களில் ஏற்பட்டதே, இதெல்லாம் அதிகாரிகளுக்கு எப்படித் தெரியும்?
மூன்று ரூபாயுடன் பஸ்ஸில் ஏறி ஒரு கிலோ மீட்டர் பயணித்த பிறகு, கட்டணம் ஆறு ரூபாய் என்கிற அதிர்ச்சிச் செய்தி கேட்டு, வழியில் இறங்கித் திரும்பி நடந்தவர்கள் அதிகாரிகளைத் திட்டவில்லை. முதல்வரை வசைபாடினார்கள். இப்படி நடக்கும் என்பதை முன்கூட்டியே முதல்வருக்குத் தெரிவித்து, முறையான அறிவிப்புடன் கட்டண உயர்வை படிப்படியாக ஏற்றுவதற்கு அறிவுறுத்த வேண்டிய அதிகாரிகள் செய்த தவறுக்கு முதல்வரும் அரசும் பொறுப்பேற்க வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது.
இப்போதும் கெட்டுப் போய்விடவில்லை. இத்தனை நிதிச் சுமையுடன் இலவசங்களை விநியோகிப்பதை ஒத்திவைத்துவிட்டு, அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை மூன்றில் இரண்டு பங்கு குறைக்கலாம். "டாஸ்மாக்' மது ரகங்களின் விலையை இரட்டிப்பாக்கி போக்குவரத்துக் கழக, மின்வாரியக் கடன் சுமையை சற்று இறக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
பஸ் கட்டண, மின் கட்டண, பால் விலை உயர்வுக்கான காரணங்களை எடுத்துக்கூறி, ஏன் இந்தக் கட்டண உயர்வு என்பதற்கான தன்னிலை விளக்கத்துடன்கூடிய முதல்வரின் அறிக்கையில் உள்ள அத்தனை நியாயங்களையும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறோம். ஆனால்...
உங்களுக்காகத் தமிழக மக்கள் சுமையைத் தாங்கிக் கொள்ளத் தயார். பாரத்தை ஏற்றி வையுங்கள், தாங்குவார்கள். அதற்காக, பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டால் தாங்கமாட்டார்கள்.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது மக்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியாளர்களுக்கும்கூடப் பொருந்தும்!
No comments:
Post a Comment