Saturday, November 26, 2011

ஜெ. விமானத்தில் சுற்றுவதை விட்டுவிட்டு, காரில் வரவேண்டும்: பிரேமலதா

பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக அலுவலகம் முன்பு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் 24.11.2011 அன்று உண்ணாவிரதம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த்,



புட்சித் தலைவி என்று சொல்லிக்கொள்கிறீர்கள். உண்மையில் அந்த புரட்சிக்கு உரியவதாக நீங்கள் இருந்தால், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை அறிவித்திருக்க வேண்டியதுதானே. உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த தேர்தல் வர நேரம் இருக்கிறது என்ற ஒரு தைரியத்தில் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளீர்கள்.

மம்தா பானர்ஜி ஒரு தைரியமான பெண். அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்திய அரசாங்கத்தின் எந்த உதவியும் எங்களுக்கு தேவையில்லை என்று தைரியமாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.

உங்கள் நீங்களே தைரியமானவர் என்று சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா அவர்கள் அறிவியுங்கள் நாங்கள் ஒன்றும் மத்திய அரசாங்கத்தை நம்பி இல்லை. ஒரு பைசா கூட நீங்கள் கொடுக்க தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை எல்லா வகையிலும் எங்களால் காப்பாற்றிக் கொண்டு வர முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள். ஏன் இதையெல்லாம் செய்யாமல் மக்கள் மீது உங்கள் பிரச்சனையை சுமத்துகின்றீர்கள்.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறந்து ஒட்டு மொத்த தமிழக இளைஞர்கள் அதள பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கம் தற்போது உயர்தர மதுபானங்களை விற்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். இதெல்லாம் எதற்காக மிடாஸ் என்கிற அவர்களுடைய கம்பெனி 100 சதவீதம் லாபகரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே தவிர, உண்மையிலுமே அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அக்கறை கிடையாது.

பேருந்து வசதிகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது ஒரு அரசாங்கம். வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது ஒரு அரசாங்கம். கலர்களை மாற்றிவிட்டு, சொகுசுப் பேருந்து, தாழ்தள பேருந்து என்று மாற்றிவிட்டு பஸ் கட்டணத்தை ஏற்றியுள்ளார்கள். கட்டணத்தை உயர்த்திய நீங்கள், அந்த பேருந்தில் வசதியாக பயணம் செய்ய ஏற்பாடு செய்தீர்களா.

முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஹெலிகாப்டரில் சுற்றுவதை விட்டுவிட்டு, ஒரு காரில் இங்கு உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் வரவேண்டும். அதற்காகத் தான் ஒட்டு மொத்த தமிழக மக்களும் உங்களை மெஜாரிட்டி தந்து உங்களை ஜெயிக்க வைத்துள்ளார்கள். எல்லா சாலைகளிலும் சென்று பாருங்கள். சாலைகள் சரியாக இருக்கிறதா. பேருந்தில் போகிறவர்கள் பாதுகாப்பாக போகிறார்களா என்று பாருங்கள். இதையெல்லாம் செய்ய தவறிய ஒரு அரசாங்கம் விலை வாசியை மட்டும் மக்கள் மீது சுமத்துகிறார்கள்.

புரட்சித் தலைவி அடிக்கடி சொல்லுவார்கள். என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தாய்குலங்களே என்று தான் அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒட்டுக்கேட்கும்போது சொல்லுவார்கள். தமிழ்நாட்டு தாய்குலங்கள் தான் உங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் மூன்றாவது முறையாக முதல் அமைச்சராக வந்து, பல கோடி ரூபாய் ஊழல் செய்ததால் தான் இன்றைக்கு பெங்களூரு கோர்ட்டுக்கு போய் 1,339 கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய நிலையில் உங்களை நீங்கள் நிறுத்தியிருக்கீங்க. உங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தாய்குலங்களுக்கு நீங்கள் செய்தது என்ன.

புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் நாமம் வாழ்க என்று சொல்லி சொல்லி மெஜாரிட்டியில் வெற்றிப் பெற செய்த தமிழ்நாட்டு மக்களுக்கு நாமம் போட்டுத்தான் இன்று அவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment