Monday, November 14, 2011

ஐஸ்வர்யா ராய்


உலக அழகி ஐஸ்வர்யா ராய் 1973-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார். இந்தி, ஆங்கிலம், மராத்தி மொழிகள் தெரியும் என்றாலும் ஐஸ்வர்யா ராயின் தாய் மொழி துளு. கர்நாடகாவில் மேற்குக் கரையோரம் உள்ள பகுதிகளில் மக்கள் பேசும் மொழி இது. அவருடைய அப்பா கிருஷ்ண ராய் கப்பலில் அதிகாரியாகப் பணியாற்றினார். அம்மாவின் பெயர் பிருந்தியா. ஐஸ்வர்யா ராய்க்கு ஆதித்யா ராய் அவருடைய அண்ணன். வீட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு ஐஷு, குல்லு என்ற செல்லப் பெயர்களும் உண்டு.

ஐஸ்வர்யா ராய்க்கு நான்கு வயதாக இருந்தபோது, அவர்கள் குடும்பம் மங்களூரிலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தது. மும்பை சாந்தா குரூசில் இருக்கும் ஆர்ய வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். கப்பல் வேலை காரணமாக அவருடைய அப்பா ஆண்டில் சில மாதங்கள் மட்டுமே குடும்பத்துடன் இருப்பார். மற்ற நேரமெல்லாம் கடல் பயணம்தான். எனவே, அப்பா எப்போது கப்பலில் வேலை முடிந்து மும்பைக்குத் திரும்புவார் என்று குழந்தைகள் ஆர்வமாகக் காத்திருப்பார்கள். பள்ளிக்கூடத்தில் மிகவும் நன்றாகப் படிக்கிற மாணவிகளில் இவரும் ஒருவர். ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஒவ்வொரு தேர்விலும் இவர்தான் முதல் ரேங்க். ஒரே ஒரு முறை மூன்றாவது ரேங்க் வாங்கினபோது, அன்று முழுவதும் கவலையாக இருந்தார். இறுதிப் பரிட்சையில் மீண்டும் நாம்தான் முதல் ரேங்க் வாங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கடுமையாகப் படித்தார். முழு ஆண்டுத் தேர்வு முடிவுகள் வெளியானபோது ஐஸ்வர்யா ராய்க்கு ஒரே சந்தோஷம். காரணம் ஏழாம் வகுப்பின் அத்தனை பிரிவுகளிலும் இருக்கும் மாணவர்களை விட அதிக மார்க் வாங்கியிருந்தார்.ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க ஐஸ்வர்யா ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பாக பள்ளிக்கூடத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா வேகமாக ஓடும்போது தடுக்கி விழுந்துவிட, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இரண்டு மாதம் மாவு கட்டு போட்டுவிட, அவரால் நடனம் ஆட முடியாமல் போனது.

அந்தக் காலத்தில் ஒலிநாடாக்களில் தான் பாட்டு கேட்க வேண்டும். ஐஸ்வர்யா ராயின் அம்மாவுக்குப் பழைய இந்திப் படப்பாடல்கள் பிடிக்கும். அண்ணனுக்கு பாப் இசை பிடிக்கும். ஆனால் ஐஸ் ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை, கிளாசிகல் நடனம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டிருந்ததால், இந்திய பரம்பரிய இசையை விரும்பிக் கேட்பார். அவ்வளவாக சினிமாவுக்குப் போனதில்லை. ரேடியோவில் ‘சாயாகீத்’ என்ற நேயர் விருப்பம் மற்றும் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக் கிழமை சினிமா இரண்டும்தான் ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். சின்ன வயதில் ஐஸ்வர்யா ராயும், அண்ணன் ஆதித்யாவும் எதற்கெடுத்தாலும் சண்டைபோட்டுக் கொள்வார்கள். ‘அவள் சின்னப் பெண்தானே! விட்டுக் கொடுத்துவிடு’ என்று அம்மா சொன்னால், ‘நான் அவளைவிடப் பெரியவன் இல்லையா? அண்ணனுக்காக அவள் விட்டுத் தரட்டுமே!’ என்று கோபப்படுவார் ஆதித்யா. ‘இப்போது நினைத்துப் பார்த்தால் அந்தச் சண்டைகள் எல்லாம் எத்தனை குழந்தைத்தனமானவையாகத் தோன்றுகின்றன’ என்று சிரிக்கிறார் ஐஸ்வர்யா ராய்.பள்ளி படிப்பை முடித்தவுடன், மும்பையில் உள்ள ஜெய்ஹிந்த் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார். பள்ளி இறுதித்தேர்வில், ஐஸ்வர்யா வாங்கிய மார்க் 90%. தொடர்ந்து மாதுங்காவில் இருக்கும் டி ஜி ரூபரல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆரம்பத்தில் விலங்கியல் பாடத்தில் நிறைய ஆர்வம் கொண்டிருந்த அவர், டாக்டருக்குப் படிக்க விரும்பினார். ஆனால், கல்லூரியில் சேர வேண்டிய சமயத்தில் அவரது ஆர்வம் திசை மாறி, ஆர்கிடெக்சர் என்ற கட்டடக் கலை படிப்பின் பக்கம் திரும்பியது. அப்போது ஓய்வு நேரங்களில் மாடலிங் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஒரு கட்டத்தில், மாடலிங் வாய்ப்புகள் மிகுதியாக வரவே, படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, முழு நேர மாடலிங்கில் இறங்கினார்.

மாடலிங் துறையில் அவர் காலடி வைத்தபோது அவருக்குப் பதினான்கு வயது இருக்கும். அவர் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். பள்ளிக்கூட மணவ, மாணவிகள் பயன்படுத்தும் கேம்லின் பென்ஸில் விளம்பரம்தான் அவர் தோன்றிய முதல் விளம்பரம். புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா ராயின் ஆசிரியர் ஒருவர், விளையாட்டாகத் தன் சுட்டி மாணவியை சில போட்டோக்கள் எடுத்தார். அந்தப் புகைப்படங்கள் ஒரு ஃபேஷன் பத்திரிகையில் வெளியாயின. அதைப் பார்த்து விட்டுத்தான் ஐஸ்வர்யா ராய்க்கு விளம்பரத்தில் வாய்ப்புக் கிடைத்தது.

No comments:

Post a Comment