Wednesday, November 30, 2011

அண்ணா நூலகம்: அம்பானி வீட்டுக்கு ஆனதைவிட அதிக செலவு


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம்மாறும் விவகாரத்தில் அடுத்த திருப்பமாக அந்த நூலகத்தைக் கட்டுவதில் 250 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நூலகத்தை இடம் மாற்றும் விவகாரம் உயர்நீதிமன்றத்தை எட்டியிருக்கும் நிலையில், நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்கிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த ஊழல் விவகாரம் என்கிறார்கள்.


அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்ததும் அதை எதிர்த்து போராட்டக் குரல்கள் எழும்பத் தொடங்கியதும் அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் கருப்பன் சித்தார்த்தனைச் சந்தித்தோம்.
“அண்ணா நூற்றாண்டு நூலகம் வேண்டுமா? வேண்டாமா? என்ற வாதம் ஒருபக்கம் இருந்தா லும் இந்த பிரமாண்ட கட்டடத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்பதற்கு ஆணித்தரமான புள்ளி விவரங்கள் உள்ளன. சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடக்கும் நேரத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருந்தன. அந்த நேரத்தில் நூலகப் பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு சத்தமில்லாமல் ஒரு கோடி ரூபாய் கொடுத்துவிட்டனர்.

எட்டு ஏக்கர் பரப்பளவில் அமைந் திருக்கும் அண்ணா நூலகம் 3,48,448 சதுர அடியில் அமைந்துள்ளது. 40,000 சதுரஅடிப் பரப்பை மட்டும் பயன்படுத்திவிட்டு, மீதமுள்ள இடத்தை காலியாக வைத்துள்ளனர். வெறும் 40,000 சதுரஅடி பரப்புக்காக இவ்வளவு கோடிகளைச் செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? கருணாநிதிக்கு வேண்டப் பட்ட ஈ.டி.ஏ. குழுமமே இந்தக் கட்டடப் பணிகளை மேற்கொண்டதற்குக் காரணம் என்ன?

இந்தக் கட்டடத்தைப் பராமரிப்பது என்பது யானையைக் கட்டி தீனி போடுவது போல. இதன் ஆண்டுப் பராமரிப்புச் செலவு மட்டும் ஏழு கோடி ரூபாய். புத்தகம் திருடு போகாமல் காப்பது உள்பட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுக்காக 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பசுமைக் கட்டடம் எனக் காட்ட மரம், செடி கொடிகளுக்காக ஆறு கோடி ரூபாய் ஆண்டுதோறும் செலவிடப்படுகிறது.

இதைத் தவிர நூலகத்திற்கு ஆலோசனை, ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் வழங்க தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கணக்குப் பார் த்தால் 46 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவிடப்படுகிறது.

முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டைக் கட்டுவதற்காகக்கூட இவ்வளவு ஆலோசனைக் கட்டணம் கொடுத்திருக்க மாட்டார்கள். அவ்வளவு செல வழித்திருக்கிறார்கள்!

மொத்தத்தில் இந்த நூலகம் கட்டியதில் சுமார் 250 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது. இதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அவரது ஆட்சிக் காலத் திய அரசு அதிகாரிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று பொரிந்து தள்ளினார் கருப்பன் சித்தார்த்தன்.

அடுத்து, நம்மிடம் பேசிய நூலகத் துறை அதிகாரி ஒருவர், “32 மாவட்ட நூலகங்களின் வளர்ச்சிக்காகச் செலவிட வேண்டிய பெரும் பணத்தை அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம் கட்ட முடக்கிவிட்டார்கள். ‘அந்தந்த மாவட்ட நூலக வரிப் பணம் அந்தந்த மாவட்டங்களுக்கே செலவழிக்கப்பட வேண்டும்’ என காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவுகள் காற்றில் பறந்துவிட்டன’’ என்றார்.

இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய நூலகத்துறை அதிகாரி ஒருவர், “இந்த விஷயத்தில் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இந் நூலகம் கட்டுவதற்காக பல துறைச் செயலர்களைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டன. அண்ணா நூலகத்தைப் பொறுத்தவரையில் எல்லாம் வெளிப்படையாகவே நடந்தது’’ என் றார்.

No comments:

Post a Comment