அப்ப்ப்பாடா... ஒருவழியாக, 14 ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து முடித்துவிட்டார் ஜெயலலிதா. வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.
கடந்த 22-ம் தேதி காலை தனி விமானம் மூலம் 9.50 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் தோழி சசிகலாவுடன் வந்து இறங்கிய ஜெயலலிதா, தயாராக இருந்த கேரவனில் சில நிமிடங்கள் ஓய்வு எடுத்தார். அதன் பிறகு 37 கார்கள் அணிவகுக்க தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் உற்சாக மாகக் கிளம்பினார். சரியாக 10.40 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்குள் நுழைந்தார். அடுத்து, சுதாகரன் தனது வழக்கறிஞர்களுடன் தோரணையாக கோர்ட்டுக்குள் நுழைந்தார். உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி இளவரசி இரண்டு நாட்களும் ஆப்சென்ட்.
கடந்த முறை ஜெயலலிதா கோர்ட்டுக்கு வந்தபோது 3,500 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட் டார்கள். இதற்காக 45 லட்சம் செலவானது. பாதுகாப்புக் கெடுபிடிகளும் அதிகம் என்று முணு முணுக்கப்பட்டது. அதனால், இந்த முறை அதிக எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று ஜெயலலிதாவே சொல்லிவிட்டாராம். அதனால், சுமார் 1,500 போலீஸார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருந்தார்கள். இந்த முறை ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக, 30 லட்சம் மட்டுமே (!) செலவு செய்யப்பட்டதாக கர்நாடகக் காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த முறை போலீஸ் கெடுபிடியால் கோர்ட்டுக்கு வர முடியாமல் கர்நாடக எல்லையிலேயே திருப்பி அனுப்பப்பட்ட தமிழக மந்திரிகள், உஷாராக இம்முறை முன்கூட்டியே பெங்களூருவில் ரூம் போட்டு செட்டிலாகி இருந்தனர். சென்னை மேயர் சைதை துரைசாமி ஏறிய விமானம் பெங்களூருவின் ஓவர் பனி மூட்டத்தால் தரை இறங்க முடியவில்லை. அதனால் அடுத்த விமானத்தைப் பிடித்து ஒரு வழியாக 1 மணிக்கு வந்து சேர்ந்தார். அவர் காரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டதால், ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றார்.
கோர்ட்டுக்குள் நடந்தது என்ன?
''252 சாட்சிகளின் அடிப்படையில் தயார் செய்யப் பட்ட மொத்த கேள்விகளின் எண்ணிக்கை 1,384
.
இதில் ஜெயலலிதாவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் 1,339. ஏற்கெனவே 567 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதால், மீதம் உள்ள கேள்விகளை காலை 11 மணிக்கு நீதிபதி மல்லிகார்ஜூனையா கேட்க ஆரம்பித்தார். ஜெயலலிதா தரப்பில் பி.குமாரும், அரசுத் தரப்பில் ஆச்சார்யாவும் ஆஜர் ஆனார்கள். அதற்கு முன்னதாக, ஜெயலலிதா விசிட்டர்ஸ் ஹாலில் நுழையும்போது, சுதாகரன் எழுந்து நின்று வணக்கம் சொன்னார். அப்போது ஜெயலலிதாவும் வணங்கியதால், சுதாகரன் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்ந்தது. ஐந்து நிமிடங்கள் முன்கூட்டியே கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. அவர் அமர்வதற்கு கோர்ட் கொடுத் திருக்கும் சேர் மிகவும் சிறியதாக இருப்பதால், சென்னையில் இருந்தே ஒரு குஷன் சேரும், ஒரு ஸ்டீல் எஸ் டைப் சேரும் கொண்டுவந்தார்கள். ஆனால் குஷன் சேருக்கு நீதிமன்ற கிளர்க் அனுமதி மறுத்துவிட்டதால், ஸ்டீல் எஸ் டைப் சேரில் அமர்ந்தார். மர பெஞ்சில் சசிகலாவும் சுதாகரனும் அமர்ந்திருந்தனர்.
இரண்டே நாட்களில் எல்லா கேள்விகளையும் கேட்டுவிட வேண்டும் என்ற அவசரத்தில் நீதிபதி அடுக்கடுக்காகக் கேள்விகளை வீசினார். வங்கிக் கணக்குகளின் பணப் பரிவர்த்தனைகள், ஷேர் மார்க்கெட், சுதாகரன் திருமணச் செலவுகள் பற்றிய கேள்விகளுக்கு ஜெயலலிதா தயங்காமல் பதில் அளித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு 'யெஸ், நோ, ஐ டோன்ட் நோ’ என்பதுதான் அவரது பதிலாக இருந்தது. முதல் நாள் மாலை 5.20 மணி வரை 580 கேள்விகளுக்கு ஜெயலலிதாவின் பதில்கள் பதிவு செய்யப்பட்டன. பேப்பர்களில் வேகமாகக் கையெழுத்துப் போட்டுவிட்டு சென்னைக்குப் பறந்தார்.
பாக்கி இருந்த 192 கேள்விகளுக்கு மறுநாள் பதில் அளித்தார். மதியம் 2 மணி வரை 160 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்ததால், 'உணவு இடைவேளை விடலாமா?’ என நீதிபதி கேட்டார். 'இன்னும் 30 கேள்விகள்தானே இருக்கின்றன. ஒரேயடியாக முடித்துவிடலாம். வேறு யாருக்காவது இதில் பிரச்னை இருக்கிறதா?’ என அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யாவைப் பார்த்து ஜெயலலிதா கேட்க, அவரும் 'நோ பிராப்ளம்’ என்று சொல்லவே... தொடர்ந்து விசாரணை நடந்து முடிந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை ஆபத்தானதாகக் கருதப் படுவது, சுதாகரனின் கல்யாண சம்பவமும் வீட்டில் இருந்த வெள்ளி, தங்க நகை, புடவைகள், வாட்சுகள் மற்றும் காலணி கள்தான். எனவே அவை குறித்த கேள்விகளுக்கு ஜெயலலிதா பதற்றமாவார் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஷார்ப்பாகவே பதில் சொன்னார். அதுவும் 'சுதாகரனின் திருமணத்திற்காக ஆறு கோடி ரூபாய் செலவு செய்தீர்களா?’ என நீதிபதி கேட்டபோது, ''சுதாகரனின் திருமணத்திற்காக நான் ஒரு பைசாகூட செலவு செய்யவில்லை. மணப்பெண் வீட்டாரே எல்லாச் செலவு களையும் செய்தார்கள்'' என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொன்னார்.
'சுதாகரன் திருமணப் பத்திரிகையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மானுக்கும், மாண்டலின் ஸ்ரீனிவாஸுக்கும் வெள்ளித் தட்டில் வைத்து, அந்தத் தட்டையும் பரிசாகக் கொடுத்தீர்களா?’ எனக் கேட்கப்பட்டது. 'அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார். 'சுதாகரன் திருமணத்தில் ஒரு மணி நேரம் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி நடத்தி இருக்கிறார். அதற்கு எவ்வளவு கொடுத்தீர்கள்?’ என்ற கேள்விக்கு, 'அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மணப்பெண் வீட்டைச் சேர்ந்தவர்களும் கலைத் துறையில் இருப்பதால் அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்’ என்று விளக்கம் அளித்தார்.
ஸ்டேட் பேங்க் அக்கவுன்ட், கனரா பேங்க் அக்கவுன்ட், இந்தியன் பேங்க் அக்கவுன்ட்களில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் பற்றிய கேள்விகளுக்கு, 'என் அக்கவுன்ட்டில் நடந்த பரிவர்த்தனைகள் பற்றி மட்டும் எனக்குத் தெரியும். சசிகலா, இளவரசி, சுதாகரனின் கணக்குகளில் நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது என்றார். அதே போன்று சிக்னோ என்டர்பிரைசஸ், சசி என்டர்பிரைசஸ், ஜெ.ஜெ. என்டர்பிரைசஸ் ஆகிய கம்பெனிகளில் ஷேர் வாங்கியது, முதலீடு செய்தது போன்ற கேள்விகளுக்கும், 'நான் அதில் வெறும் சைலன்ட் பார்ட்னர். அதனால் அந்த நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்றார். கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் அளித்து முடித்த நிலையில் நீதிபதி, 'உங்கள் மீது சாட்டப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’ எனக் கேட்டார். உடனே தன் கைப்பட அங்கேயே அமர்ந்து இரண்டு பக்க ஸ்டேட்மென்ட் எழுதி ஸ்பெஷல் மனுவாக தாக்கல் செய்தார்.
அதில், '1991 - 96 காலத்தில் எனது தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடந்தது. அதன் பிறகு 1997-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், எனது பேருக்கும் ஆட்சிக்கும் களங்கம் விளைவிக்க பல்வேறு வழிகளில் முயற்சித்தது. அந்த சமயத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக என் மீது தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறையில் ஒரு புகார் அளித்திருந்தார். அப்போதைய தி.மு.க. சட்ட அமைச்சர் மாதவன், ஆற்காடு வீராசாமி இருவரும் திட்டமிட்டு ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடுவை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு என் மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் புனைந்தனர். நல்லம்ம நாயுடு எங்கிருந்தோ கொண்டுவந்த பொருட்களை, நகைகளை எல்லாம் என் வீட்டில் எடுத்ததாகப் பொய் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல், தமிழ் உட்படப் பல மொழிகளில் நான் பிரபல நடிகையாக 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். திரைப்படக் காட்சிகளுக்கு ஏற்ப புடவைகள், துணிகள், வாட்சுகள், காலணிகள் வாங்குவது வழக்கம். அப்படி நான் படங்களில் பயன்படுத்திய பொருட்களை ஷூட்டிங் முடிந்த பிறகு, என் மீதுள்ள அன்பால், எனக்கே திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அவ்வாறு நான் நினைவுப் பொருட்களாக வைத்திருந்தவற்றையும் எனது சொத்துக் கணக்கில் சேர்த்துள்ளனர். எனது அறையில் இருந்த பெர்சனல் ஆல்பத்தை தி.மு.க-வின் குடும்பத் தொலைக்காட்சியில் காட்டி, என் பேருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவித்து உள்ளனர். நான் முதல்வராக பதவியேற்ற பிறகு எனது சம்பளத்தில் எதனையும் வாங்கவில்லை. வருமான வரித் துறையில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, போயஸ் கார்டனில் உள்ள '31ஏ’ எண் வீட்டை மட்டுமே வாங்கினேன். சசிகலா, இளவரசி, சுதாகரன் வாங்கிய சொத்துகளுக்கும் எனக்கும் ஒரு துளியும் சம்பந்தம் இல்லை. எனவே அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் என்னைப் பழிவாங்கவே தி.மு.க. பொய்யாக வழக்கு தொடர்ந்து உள்ளது’ என ஆணித்தரமாக குறிப்பிட்டு இருந்தார்'' என்று உள்ளே நடந்தவற்றை விவரிக்கிறார்கள் உள்விவரங்கள் அறிந்தவர்கள்.
ஜெயலலிதாவின் 1,339 கேள்விகளும் 3.10 மணியுடன் முடிந்துவிட்டதால், பதில்களுக்கு ஒப்புதல் கையெழுத்து இட்டார். இதனைத் தொடர்ந்து சசிகலாவின் வழக்கறிஞர் சந்தானகோபாலன், ''சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அவரிடம் ஆங்கிலத்தில் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. எனவே, தமிழில் கேட்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். அதற்குப் பதில் சொல்லாமல் நீதிபதி மல்லிகார்ஜூனையா, வழக்கை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 'இனி இந்த வழக்கு, வழக்கம் போல பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடைபெறும்’ என்றும் உத்தரவிட்டார்.
விசாரணை முடிந்து வெளியே வந்த ஆச்சார்யா, ''ஜெயலலிதாவிடம் பதில்கள் பெறப்பட்டுவிட்டதால், இனி வழக்கு வேகமாகப் பயணிக்கும்'' என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறிப் பறந்தார்.
No comments:
Post a Comment