இந்தியாவில் அணுமின் நிலையங்கள் உள்ள பகுதிகளில் பூகம்பம் ஏற்படாது என கூற முடியாது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத்தலைவர் ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்தார்.பிரதமர் மன்மோகன்சிங்கை தலைவராக கொண்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத்தலைவர் ஸ்ரீதர் ரெட்டி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘’இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு திருப்திகரமாக உள்ளது.
ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலையில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
புகுஷிமா சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இந்திய அணுஉலைகளின் பாதுகாப்பு பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அணுமின் உலைகள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டு உள்ளது.
அணுமின் நிலையங்களை பொறுத்தமட்டில் பூகம்பம் என்பது கவலை அளிக்கக்கூடிய ஒரு பிரச்சினை ஆகும். அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லை என்று கூற முடியாது. ஆனால் பூகம்பம் ஏற்பட்டால் கூட பாதிப்பு ஏற்படாத வகையில்தான் நம் நாட்டில் உள்ள அணுஉலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
பேரிடர் ஏற்படும் சமயங்களில் நிலைமையை சமாளிக்க மீட்பு குழுக்களை அமைக்குமாறு மாநில அரசுகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக்கொண்டது.
அதன்படி, அந்த குழுக்களை அமைத்து அவற்றுக்கு ரசாயன பாதிப்பு, கதிர்வீச்சு போன்றவற்றை சமாளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கும் பணி தொடங்கிவிட்டது.
அணுமின் நிலையங்களின் அருகே நன்கு பயிற்சி பெற்ற 2 படைப்பிரிவினரை எப்போதும் நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம். மேலும் 35 நகரங்களில் கதிர்வீச்சை கண்காணிக்கும் ஆயிரம் நடமாடும் மையங்களை அமைக்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஈடுபட்டு உள்ளது’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment