Thursday, November 24, 2011

நடுத்தர மக்களின் ரத்தக் கொதிப்பு!


''போதிய நிதி இல்லை என்று மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு சொல்லிவிட்டது. மரணப் படுக்கையில் இருக்கும் மூன்று துறைகளையும் உயிர்ப்பிக்க வேண்டும். நான் என்ன செய்ய முடியும்? உங்களைத்தான் நான் நம்பி இருக்கிறேன்...'' - முதல்வர் ஜெயலலிதா உருக்கத்தின் உச்சகட்டத்துக்குச் சென்று, பால் விலை, பஸ் டிக்கெட் விலையைக் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்த்திவிட்டார்.
ஆனால், 'டிக்கெட் விலை இவ்வளவு அநியாயமா? பகல் கொள்ளையா இருக்கே?' என்று பஸ் நடத்துநர்களிடம் பயணிகள் வெடித்துக் குமுற... கூடுதல் பணம் கையில் இல்லாத ஏழை எளியவர்கள் பாதியிலேயே அம்போ என்று இறங்கி நடையைக் கட்ட... ரொம்பக் கொடுமை! நொந்துபோய் முனகும் சிலரிடம் பேசினோம்.

குப்பன், (ஆட்டோ டிரைவர், குமணன் சாவடி): ''வடபழனியில் டெய்லி சம்பளத்துக்கு ஆட்டோ ஓட்டுறேன். வீட்டில் இருந்து வேலைக்கு வர, ரெண்டு பஸ் மாற வேண்டியிருக்கும். டிக்கெட் விலை ஏத்துனதுல தினமும் 50 ரூபா செலவாகுது, மீதி 250 ரூபாயில்தான் என் குடும்பமே சாப்பிடணும். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு இப்படி ஒரு அதிர்ச்சி வரும்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. ஓட்டுப் போட்ட என்னை நானே செருப்பால அடிச்சுக்கணும். ஒரு ரூபா, ரெண்டு ரூபா ஏத்தலாம். இப்படி ரெண்டு மடங்கு விலை ஏத்துனா... பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்!''


சுதாகர், (கார்பென்டர், பூந்தமல்லி): ''ஆரம்பத்தில் கெட்ட சகவாசத்துல திருட்டு வேலைகள் பண்ணிட்டு இருந்தேன். இப்போ திருந்தி, கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ரெண்டு பசங்க இருக்காங்க. சென்ட்ரிங் வேலை செய்து மூணு வருஷமா மாசம் 3500 ரூபாயைவெச்சு குடும்பத்தை நடத்துறேன். பஸ் டிக்கெட் அதிகமானதால், வேலைக்கு எங்கு போனாலும் 30 ரூபாய்க்கு டிக்கெட் வாங்குவேன். இப்போ 50 ரூபா ஆயிடுச்சு. மாதாந்திர அட்டையை 600 ரூபாயில் இருந்து 1,000 ரூபா ஆக்கிட்டாங்க. எங்கக் கஷ்டத்தை யார்கிட்ட சொல்றது?''

செம்பியன் முத்தையா (தனியார்நிறுவன ஊழியர் மதுரை): ''2001-ல் ஏத்துன பஸ் கட்டணத்தை இப்பதான் ஏத்திருக்காங்க. அந்த வருஷத்துல டீசல் என்ன விலை? ஆளுகளுக்கு என்ன சம்பளம்? எல்லாத்தையும் பார்க்க வேண்டாமா? அம்மாவும் என்னதான் பண்ணுவாங்க?

தமிழ்ச்செல்வன், (சமோசா விற்பவர், போரூர்): ''பெரம்பலூரில் இருந்து வேலைக்கு வந்தவன் நான். தினமும் கோயம்பேடு கம்பெனிக்குப் போயி சமோசா எடுத்துக்கிட்டு வந்து, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், சின்மயா நகர்னு விற்பேன். ஒரு நாளைக்கு 400 சமோசா வித்தா, ஒரு சமோசாவுக்கு 50 பைசான்னு 200 ரூபா கிடைக்கும். இதுலதான் சாப்​பிடணும், வாடகை தரணும். பஸ் டிக்கெட் வாங்கணும். வீட்டுக்கும் பணம் அனுப்பணும். டிக்கெட் விலை ஏத்துன துல இருந்து பஸ்ல ஏறாம, நடந்து போய்த்தான் விக்கிறேன். இப்படி இருந்தா சென்னைக்குப் பொழைப்புத் தேடி வந்தவங்க கதி என்னாகும்?''
ராமதாஸ், (சித்தாள்): ''திருவாரூரில் விவசாயக் கூலி வேலை செஞ்சேன். விவசாயம் அழிஞ்சதால், சித்தாள் வேலைக்கு வந்தேன். திடீர்னு டபுள் மடங்கா பஸ் டிக்கெட்டை ஏத்துனதாலே பகீர்னு ஆயிடுச்சு. விலை​வாசி ஆகாசத்துல போய்கிட்டே இருக்கிறப்ப என்னத்தைப் பண்றது? 'ஏங்க தினமும் மூணு வேளை சாப்பிடுறீங்க? பேசாம ஒரு வேளை மட்டும் இருக்கிறதைத் தின்னுட்டு, ஈரத் துணியை வயித்துல போட்டுக்க’ன்னு அம்மா சொல்றாங்க போலிருக்கு...''
கவிதா, (மருந்து கடை சேல்ஸ் உமன், சானுரப்பட்டி,திருச்சி): ''முன்னாடி 30 ரூபாயில் திருச்சி போயிட்டு வந்துடலாம். இப்ப 60 ரூபா ஆகுது. அம்மாகிட்ட சொல்லி சீக்கிரமா விலையைக் குறைக்கச் சொல்லுங்க. இந்த பஸ் வசதி இருக்கிறதாலதான், என்னை மாதிரி கிராமத்துப் பொண்ணுக வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கோம். அதுவும் இல்லைன்னா, மோட்டுவளையைப் பார்த்துகிட்டு முடங்கிக்கிடக்க வேண்டி​யதுதான்!''
உஸ்மான் (கல்லூரி மாணவர்,வண்ணாரப்​ பேட்டை, திருநெல்வேலி): ''எங்க ஊரில் கல்லூரி இல்லை. வெளியூரில் உள்ள கல்லூரிக்குப் போயிட்டு வர முன்னால 20 ரூபாதான். இப்போ 45 ரூபா ஆகுது... இதுக்கே மாசம் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபா வேணும். யார்கிட்ட பணம் கேட்கிறது?''
சோமு (ஃபைனான்ஸ் கம்பெனி ஊழியர், கரூர்): ''ஒரு மாற்றம் வேணுன்னு மக்கள் இவங்க கையில் அதிகாரத்தைக் கொடுத்தா, ஏதேதோ சாக்கு சொல்லி மக்கள் வயித்தில் அடிக்கிறாங்களே... நிதிப் பற்றாக்குறைனு சொல்லி ஆட்சியை நடத்த முடியலைன்னா... இறங்கிப் போக வேண்டியதுதானே? பெட்ரோல், டீசல் விலை எல்லாம் உயர்தர நடுத்தர வர்க்கத்தைத்தான் நேரடியாகப் பாதிக்கும். ஆனா, இது நேரடியா எல்லாரையுமே பாதிக்கிறது.''

அம்மா பேசிய உருக்கமான வார்த்தைகள்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சாதாரண மக்களின் வார்த்தைகள் அவரது காதுகளை எட்டுமா?

No comments:

Post a Comment