Wednesday, November 30, 2011

BRAI... இன்னுமொரு கறுப்புச் சட்டம்!


'ஜி.எம். விதைகள்' எனப்படும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளை, எப்பாடுபட்டாவது இந்தியாவில் விதைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கின்றன பன்னாட்டு விதை நிறுவனங்கள். அந்த நிறுவனங்களுக்கு கைகட்டி சேவகம் செய்து கொண்டிருக்கும் இந்திய அதிகார வர்க்கமோ... நரித்தந்திர வேலைகளில்
இறங்கி, 'உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம்’ (BRAI -Bio Technology Regulatory Authority of India Bill) எனும் சட்டத்தை நீட்டுவதற்கு தயாராகி வருகின்றது!

இந்நிலையில், 'மரபணு மாற்றுப் பயிர்களுக்கு எதிர்ப்பே இல்லாமல் செய்வதற்காகவே, உயிரித் தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையச் சட்டம் என்ற பெயரில் மிரட்டல் வேலையை ஆரம்பித்துள்ளது மத்திய அரசு. இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை' என்கிறபடி நாடு முழுக்கவே ஆங்காங்கே போராட்டங்கள் சூடுபிடித்து வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, நவம்பர் 11-ம் தேதியன்று சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. விவசாயிகள், பத்திரிகையாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்தனர்.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்கு எதிரானப் போரில் முன்னிலையில் இருக்கும் சென்டர் ஃபார் சஸ்டைனபல் அக்ரிகல்ச்சர் (Centre for Sustainable Agriculture) அமைப்பின் ஆலோசகர் கவிதா குர்கந்தி பேசும்போது, ''மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்துக்காக இங்கே செயல்படும் 'மரபணு மாற்று அங்கீகாரக் குழு'வின் (GEAC -Genetic Engineering Approval Committee)செயல்பாடுகள், சந்தேகத்துக்கு இடமானதாகவே உள்ளன. பி.டி கத்திரிக்காய் பிரச்னையின்போது, அறிவியல்பூர்வமான முறைகளை மேற்கொள்ளாமல், நம்பகத்தன்மையற்ற முறைகளில், சுதந்திரமான ஆய்வுகளுக்கு இடம் கொடுக்காமல் இக்குழு செயல்பட்டது.


'மரபணு மாற்றுத் தொழில்நுட்பம்' இந்தியாவில் வலுவாக காலுன்றிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், மத்திய அரசு அவ்வப்போது சட்டங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிடவே மத்திய அரசு நினைக்கிறது. இப்போதுகூட இந்த புதிய சட்ட முன்வரைவு அறிமுகம் செய்யப்பட்டதுமே... பீகார், மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா, கர்நாடகா ஆகிய 7 மாநிலங்கள் மரபணு மாற்றுப் பயிர் கள ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்துள்ளன. ஆனால், அதையெல்லாம் அலட்சியம் செய்யவே நினைக்கிறது மத்திய அரசு.

இந்தச் சட்டம் நிறைவேறினால்... மாநில அரசுகளின் அதிகாரம் பறிபோய்விடும் என்பதே உண்மை. 'மாநில உயிரித் தொழில்நுட்பக் கட்டுப்பாடு ஆலோசனைக் குழு’ மூலம், ஆலோசனைகளை மட்டும்தான் மாநில அரசால் வழங்க முடியும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும்போது, இதற்கு எதிராக, மாநில அரசு உருவாக்கிய எல்லா சட்டங்களும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும்.

உயிரின வளத்தைப் பாதுகாப்பதற்கான பன்னாட்டு மாநாட்டில் உருவான விதிகளின்படி, 'மரபணு மாற்று உயிரினங்கள் குறித்தவற்றில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பொதுமக்களின் பங்கேற்பு இருக்க வேண்டும்’ என்கிறது. ஆனால், புதிய சட்டத்தில் இதற்கான வழிமுறைகள் இல்லை.


இச்சட்டத்தின்படி, மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் உயிரினங்கள் மீது செய்த ஆய்வு விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு எட்டாமல் ரகசியமாக வைத்திருக்க முடியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக்கூட தகவல் பெற முடியாது. தவிர, இந்த ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எந்த நீதிமன்றமும் தடைவிதிக்க முடியாது.

சிவில் நீதிமன்றங்கள் தலையிடவும் முடியாது. அதனால், பாதிக்கப்பட்ட எவரும் நீதிமன்றத்துக்கே போக முடியாது. இப்படிப் பல பிரிவுகள் அரசுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் துணை போகின்றனவே தவிர... பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ உதவக்கூடியவைகளாக இல்லை'' என்ற கவிதா,

''மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது அடிப்படையில் ஆபத்தான ஒன்று. நவீன உயிரித் தொழில்நுட்பத்திடமிருந்து எல்லா உயிரினங்களின் ஆரோக்கியத்தையும்... இந்தியாவின் இயற்கை வளப் பாதுகாப்பையும் நாம் உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக நாம் எதிர்பார்ப்பது... 'தேசிய உயிரினப் பாதுகாப்பு ஆணையம்’ (National Bio safety Protection Authority)என்கிற அமைப்பைத்தான்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்.

அரசு புரிந்து கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment