வெளியே வந்த சசிகலாவுக்கு ஷாக்!
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜரானதில் இருந்து, பெங்களூரு தனி நீதிமன்றமே பரபரப்பு வளாகமாக மாறிவிட்டது. நவம்பர் 8-ம் தேதி ஆஜராவாரா இல்லையா என்று பட்டிமன்றம் நடந்துவந்த நிலையில், மீண்டும் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராவதைத் தவிர்த்து இருக்கிறார் ஜெயலலிதா.
கடந்த 14 ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்தடித்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் கண்டிப்புக் காட்டியதால் கடந்த அக்டோபர் 20, 21 தேதிகளில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவிடம் கேட்கப்பட வேண்டிய 1,384 கேள்விகளில் அந்த இரண்டு தினங்களில் 567 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. 'அடுத்த வாரம் டெல்லியில் நேஷனல் கவுன்சிலிங் மீட்டிங் இருக்கிறது, அதனால், நவம்பர் 8-ம் தேதி மீண்டும் வருகிறேன்’ என்று ஜெயலலிதாவே மீதம் உள்ள கேள்விகளுக்குப் பதில் சொல்ல நாள் குறித்தார்.
ஆனால், தனி நீதிமன்றத்தில்நேரம் வாங்கிய கையோடு மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்குப் போனது ஜெ. தரப்பு. 'இதெல்லாம் ஒரு கேஸா?’ என ஆவேசமான ஒரு நீதிபதி, விசாரணையில் இருந்தே விலகிக்கொண்டார். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், 'அந்தத் தேதியில் ஆஜாராக முடியவில்லை என்றால், இன்னொரு தேதியில் கட்டாயம் ஆஜராக வேண்டும்’ என்று உஷ்ணமானது உச்ச நீதிமன்றம்.
நவம்பர் 8-ம் தேதி வழக்கில் ஆஜர் ஆவதற்காக சசிகலா, இளவரசி இருவரும் முதல் நாள் மாலையே பெங்களூரு வந்து பெங்களூரு பராக் ஓட்டலில் தங்கினர். சுதாகரன் 8-ம் தேதி காலை விமானம் மூலம் வந்து சேர்ந்தார். ஜெயலலிதா வராததால் பெரிதாக போலீஸ் பாதுகாப்பு இல்லை. ஆனாலும் வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர். மீடியாவையும் தூரத்தில் நிறுத்தினார்கள். காலை 10.45 மணிக்கு சசிகலா, இளவரசியும் ஒரே காரில் வந்தனர். அவர்களின் முகம் வெளியே தெரியாதபடி காரில் இருந்த கறுப்புக் கண்ணாடி மறைக்கவே, படம் எடுக்க முடியாமல் புகைப்படக் கலைஞர்கள் அவஸ்தைப்பட்டார்கள். அவர்களைத் தொடர்ந்து, சுதாகரன் தனது வழக்கறிஞர்களுடன் தோரணையாக நுழைந்தார். 10 நிமிடங்கள் முன்கூட்டியே வந்துவிட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் கோர்ட் வளாகத்தில் இருந்த விசிட்டர் ஹாலில் அமர்ந்து சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
சரியாக 11 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கியது. ஜெயலலிதா தரப்பு வக்கீல் பி.குமார், ''ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால், ஏற்கெனவே திட்டமிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும் தமிழகத்தில் பலத்த மழை காரணமாக சேதங்கள் ஏற்பட்டு இருப்பதால், வெள்ள நிவாரணப் பணிகள், கலெக்டர் மீட்டிங் இருக்கின்றன. அதனால் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி அவருக்கு வசதியான ஒரு தேதியில் மீதம் இருக்கும் கேள்விகளைக் கேட்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார். ''எந்தத் தேதி என்பதை நீங்களே சொல்லுங்கள்...'' என நீதிபதி கேட்டார்.
''
இன்னும் நிறையக் கேள்விகள் கேட்க இருப்பதால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் வர வேண்டியிருக்கும். இந்த மாதம் முழுக்கவே நிறைய வேலை இருப்பதால் டிசம்பரில்...'' என்று தயங்கித் தயங்கி தேதி கேட்டார்.
''நோ. அவ்வளவு நாட்கள் முடியாது. நவம்பர் 17 ஆஜராக முடியுமா?’ என்று நீதிபதி கேட்க, ''வெள்ள நிவாரணப் பணிகளை அவர் பார்க்க வேண்டும். ஒருவேளை 17-ம் தேதி ஆஜராகி மறுநாளும் விசாரணை தொடர்ந்தால் அவரால் பெங்களூரு வர முடியாமல் போகலாம். எனவே 22-ம் தேதி அனுமதித்தால் அதனைத் தொடர்ந்து அடுத்த நாளும் விசாரணையில் பங்கேற்க ஏதுவாக இருக்கும்'' என்று பி.குமார் கூற, அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா ஆட்சேபம் தெரிவிக்காததால், ''வரும் 22-ம் தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா கோர்ட்டில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்'' என்று மல்லிகார்ஜூனையா உத்தரவு இட்டார்.
சசிகலா உள்ளிட்டோரிடம் அன்று எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்தார்கள். வெளியே வந்த சசிகலாவுக்கு ஷாக். ஏனென்றால் காலையில் பார்த்ததைவிட ஏராளமான போலீஸ் நின்றது. என்னவென்று கேட்க, 'நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த எடியூரப்பா இன்று ஜாமீனில் வருகிறார். அவருக்காகத்தான் இந்த ஏற்பாடு’ என சொல்லப்படவே, பெருமூச்சுவிட்டுக் கிளம்பினார்கள். சசிகலா, இளவரசி இருவரும் அடுத்த விமானத்திலேயே சென்னை திரும்ப, சுதாகரன் தன் காரில் சென்னை திரும்பினார்.
No comments:
Post a Comment