ஒருவழியாக தங்கபாலு நீக்கப்பட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் ஞானதேசிகன். ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர். சால்வை, பூங்கொத்து, வாழ்த்துக்களில் திளைத்துக்கொண்டு இருந்தவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.
''தேர்தல் மூலம் தேர்வு செய்யாமல், நியமன முறையில் தலைவரை அமர்த்தும் கலாசாரம் உங்கள் கட்சியில் எப்போது ஒழியும்?''
''இப்போதும் பல மாநிலங்களில் தேர்தல் மூலமே நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். கட்சித் தேர்தலை நடத்துவதற்கு என்றே, தனி அமைப்பைக் கட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறோம். இதற்காக கட்சியின் விதிகளில் மாற்றமும் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒரு சில காரணங்களால் தேர்தல் நடத்த முடியவில்லை. விரைவில் இங்கும் மாற்றம் வரும்.''
''உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸைக் கழற்றிவிட்டு தி.மு.க. தனித்துப் போட்டியிட்டது. இது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸோடு தி.மு.க-வுக்கு உரசல்கள் இருப்பதைத்தானே காட்டுகிறது?''
'
'மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. அது இப்போதும் தொடர்கிறது. இதற்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் தொடர்பே இல்லை. சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடக்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் காங்கிரஸ் அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. கனிமொழிக்கு ஜாமீன் கொடுப்பதுபற்றி நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும். இந்த விஷயத்தில் மத்திய அரசு எதுவுமே செய்ய முடியாது.''
''எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் ஜெயலலிதாவைச் சந்தித்தது கிடையாது. ஆனால், உங்கள் மகன் திருமணத்தை முன்னிட்டு இரண்டு மாதங்கள் முன்பு அவரை நீங்கள் சந்தித்தீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வதற்கு வசதியாகத்தான் உங்களை நியமனம் செய்திருப்பதாகப் பேசப்படுகிறதே?''
''என் நியமனத்துக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமே இல்லை. விருப்பமானவர்களுக்கு திருமணப் பத்திரிகை கொடுப்பது, அரசியலைத் தாண்டிய விஷயம். அது என் தனிப்பட்ட விருப்பம். இதில் அரசியலைக் கலக்க கூடாது. தமிழகத்தில் எல்லா விஷயங்களையும் அரசியலோடு முடிச்சுப் போடுவது வாடிக்கையாகிவிட்டது. அறிவாலயத்திற்குப் போய் கலைஞரை சந்தித்தால், உடனே தி.மு.க. ஆதரவாளர் என்று முத்திரை குத்துகிறார்கள். எல்லாவற்றையும் அரசியல் கண் கொண்டு பார்க்கும் நிலை தமிழகத்தில் மாற வேண்டும்.''
''ஜெயலலிதாவை சந்திக்க யாருக்குமே வாய்ப்பு கிடைக்காதபோது, உங்களுக்கு மட்டும் தனி மரியாதை எப்படி?''
''காங்கிரஸில் இருந்து பலரும் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கேட்டு இருக்கலாம். அது எனக்குத் தெரியாது. என் மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும், வரச் சொன்னார்கள். அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தேன்.
அங்கே அரசியல் எதுவும் பேசப்படவில்லை. என்னை மட்டும் அவர் சந்தித்ததை தனி மரியாதை என்று கருதவில்லை. அப்படி ஒரு தனித்துவம் எனக்கு இருக்கிறது என்று நீங்கள் கருதினால் மகிழ்ச்சிதான்.''
''மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ், அண்ணா நூலகம் இடம் மாற்றம் என்று அதிரடி கிளப்பும் தமிழக அரசைப்பற்றி..?''
''காங்கிரஸ் கட்சித் தலைவராக நான் இன்னும் பதவி ஏற்கவில்லை. முறைப்படி அது நடந்த பிறகுதான், என்னுடைய கருத்தைச் சொல்ல முடியும். அதற்கு சில நாட்கள் காத்திருங்கள். நல்லாட்சி யார் நடத்தினாலும் அதை வரவேற்பதும், தவறுகள் செய்யும்போது தட்டிக்கேட்பதும் எதிர்க் கட்சிகளின் கடமை. அதை காங்கிரஸ் நிச்சயம் செய்யும்.''
''நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கும்?''
''(ஜாலியாக...) தேர்தலுக்கு இன்னும் 1,000 நாட்கள் இருக்கின்றன. 999-வது நாளில்தான் கூட்டணி யாருடன் என்பது அறிவிக்கப்படும். அதுவரை சஸ்பென்ஸ் நீடிக்கட்டும்...''
''முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தமிழகத்தில் கிளம்பியிருக்கும் எழுச்சி பற்றி..?''
''நீதிமன்றமே குற்றவாளிகள் என்று சொல்லிய பிறகு, 'அவர்கள் நிரபராதிகள்’ என்று வைகோ போன் றவர்கள் எப்படிச் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. அவர்கள் நிரபராதிகள் என்றால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதையும் வைகோ சொல்ல வேண்டும். தூக்குத் தண்டனை என்று நீதிமன்றம் சொல்லி, அதை ஜனாதிபதியும் உறுதி செய்த பிறகு இப்படிக் கருத்து சொல்வது அழகு அல்ல.''
''அடிக்கடி அடிதடி நடக்கும் வன்முறைக் களமாக சத்தியமூர்த்தி பவன் காட்சி அளிக்கிறதே..?''
''அப்படி ஒரு நிலை இனி ஏற்படாத அளவுக்கு என்னுடைய பணிகள் இருக்கும். கட்சியின் தலைமை அலுவலகம் கோயில் மாதிரி. கோயிலின் புனிதத்தன்மையைக் காப்பாற்றுவது போல, சத்தியமூர்த்தி பவன் காப்பாற்றப்படும்.''
''சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சரிவுதானே...?''
''வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தில் சகஜம். இதனை ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கவேண்டும். எந்த சீமான் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது. சீமான் நன்றாகப் பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கட்டும்...''
''தங்கபாலு நீக்கத்திற்கு என்னதான் காரணம்? தமிழக காங்கிரஸ் தலைவராக நீங்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால், ஜி.கே.வாசனின் கை ஓங்கியதாகத் தெரிகிறதே?''
''தங்கபாலு ராஜினாமா கடிதம் கொடுத்து இருந்தார். அது, ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றபடி அவர் நீக்கப் படவில்லை. காங்கிரஸின் சின்னம் 'கை’ எப்போதும் ஓங்கிதான் இருக்கும்!''
No comments:
Post a Comment