தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள 6 பேர் மற்றும் 399 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலுத்தாமல் நிலுவையில் உள்ள தொலைபேசிக் கட்டணம் ரூ.7.30 கோடி! அந்த 6 எம்.பி.க்களில் 5 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். இந்த காங்கிரஸ் எம்.பி.க்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம். கிருஷ்ணசாமியின் பங்கு ரூ.13.19 லட்சம்.
இந்த விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை. சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு இந்த விவரங்களை மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனம் அளித்துள்ளது. இவர்கள் மீது விதிப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஆனால், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் எந்த அரசு நிறுவனமும் எதற்காகவும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இரண்டு தொலைபேசி இணைப்புகளை மத்திய அரசு வாடகை இல்லாமல் வழங்குகிறது. ஒன்று, அவரது தில்லி இல்லத்துக்கு. மற்றோர் இணைப்பு அவரது சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு! இந்த இரண்டு தொலைபேசிகளிலும் ஆண்டுக்கு 50,000 அழைப்புகள் இலவசம். இதற்கும் மேலாக பேசப்படும் அழைப்புகளுக்கு மட்டுமே மகாநகர் டெலிபோன் நிகாம் கட்டணம் வசூலிக்கிறது. அந்தக் கட்டணத்தையும்கூட இவர்கள் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதுமட்டுமல்ல, முன்னாள் எம்.பி.க்கள் சிலர் தங்களுக்கு அரசு ஒதுக்கிய வீடுகளுக்கான வாடகையையும் செலுத்தியதில்லை. பதவிக்காலம் முடிந்த பிறகு வீட்டைக் காலி செய்யாதவர்களும் உள்ளனர். மக்களவைத் தலைவர் மீரா குமார், தனது தந்தை ஜெகஜீவன்ராம் வீட்டில் வசித்து வந்ததற்காக ரூ.1.98 கோடி நிலுவை. ஆனால், தான் இந்த வீட்டிலிருந்து 2002-ம் ஆண்டிலேயே வெளியேறிவிட்டதாக மீரா குமார் அலுவலகக் குறிப்பு சொல்கிறதே தவிர, இந்தத் தகவல் தவறு என்று தைரியமாக அறிவிக்க முடியவில்லை. மக்களவைத் தலைவர் மீராகுமார் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை தர மறந்ததில் வியப்பில்லை. அவரது தந்தை பாபு ஜகஜீவன் ராம் வருமான வரி கட்ட மறந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் கூசாமல் தன்னிலை விளக்கம் கொடுத்தவர்தான் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறோம்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் எம்.பி.க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் தேர்தல் மனுக்களை ஏன் தேர்தல் ஆணையம் நிராகரிக்கக்கூடாது அல்லது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன், தற்போதைய உறுப்பினர்கள் என்றால் அவர்களது சம்பளத்தில் இத்தகைய நிலுவைத் தொகையை அரசு ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? சட்டத்தை உருவாக்குபவர்கள் (லா மேக்கர்ஸ்) சட்டத்தை முறிப்பவர்களாக (லா பிரேக்கர்ஸ்) மாறுவதை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது?
சென்ற ஆகஸ்ட் மாதம்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அலுவலகச் செலவினத்துக்காக மாதம் ரூ.25 ஆயிரம், தொகுதிப் படி ரூ.25 ஆயிரம் வழங்கப்படுவதுடன், இந்த ரூ.50 ஆயிரத்துக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. கார் வாங்குவதற்காக ரூ.4 லட்சம் வட்டியில்லாக் கடன் பெறலாம். இதைத் தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பென்ஷன் ரூ.8,000-லிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
அரசுப் பணியில் பல ஆண்டுகள் பணியாற்றி, தனது சம்பளத்தில் ஓய்வூதியத்துக்காக ஒரு சிறு தொகையைச் சந்தாவாகச் செலுத்தி வரும் ஊழியருக்கு ஓய்வூதியம் என்பது நியாயம். அதையேகூட இப்போது ஓய்வு ஊதிய வைப்பு நிதியில் அன்னிய முதலீடு என்கிற பெயரில் முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
ஆனால், 90 விழுக்காடு எம்.பி.க்கள் வெறும் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே இப்பதவியை வகிப்பவராக இருக்கிறார்கள். ஆண்டுக்கு அதிகபட்சம் 180 நாள்கள் மட்டுமே நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எம்.பி.க்கள்- மாநிலங்களவை, மக்களவை இரண்டிலும்- அமளி ஒத்திவைப்பு நீங்கலாக ""பணியாற்றும்'' நேரம் ஒரு நாளைக்குச் சராசரியாக இரண்டு மணி நேரமாக இருக்கலாம். இதற்கும்கூட அவர் நாடாளுமன்றத்துக்கு வரும் நாள்களுக்குப் படி வழங்கப்படுகிறது. இலவச ரயில் பயணம் உள்ளது. பிறகு எதற்காக ஒரு எம்.பி.க்கு மாதம் ரூ.20 ஆயிரம் பென்ஷன் தர வேண்டும் என்கிற கேள்விக்கு யாரும் பதில் சொல்லத் தயாராக இல்லை.
ஐந்தாண்டு என்பது ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சியில் இருக்கும் அதிகபட்ச நாள்கள் தானே ஒழிய, மக்கள் மன்றத்தால் அளிக்கப்பட்டிருக்கும் ஐந்தாண்டுக் குத்தகை அல்ல. உலகளாவிய அளவில் மக்கள் விழிப்புணர்வு அடைந்துவரும் நேரம் இது. "ஊழலுக்கு எதிராகப் போராட்டம்' என்று அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது மக்கள் மன்றத்தில் ஏற்பட்ட எழுச்சி, எந்த அளவுக்கு மக்கள் அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்தால் மனதிற்குள் கொதித்துப் போய் இருக்கிறார்கள் என்பதைப் படம்பிடித்துக் காட்டியது.
ஒருவர், இருவர் என்று தொடங்கி ஒரு லட்சம் பத்து லட்சமாகி மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டால், ஆட்சியில் இருப்பவர்களின் கதி அதோகதிதான் என்பதை உணர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் நடந்து கொண்டால் நல்லது.
பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால், மக்கள் பொறுமை இழப்பார்கள். இந்தியாவில் மக்களுக்குப் பஞ்சமில்லை, ஜாக்கிரதை!
No comments:
Post a Comment