Tuesday, November 29, 2011

கோட்டையாகிறது கொடநாடு?

jaya_2011-aaவேகமாக வந்து அமர்ந்த அலெக்ஸ், ‘‘ஹாட் வாட்டர் ப்ளீஸ்...’’ என்றார்.


‘‘என்ன, கோல்ட் வாட்டர் தானே கேட்பீங்க? இப்ப என்ன திடீர்னு ஹாட்?’’ என்றார் அர்ச்சனா.


‘‘ஊரெல்லாம், கடுமையான உடல் அலுப்புடன் கூடிய டைபாயிடு ஜூரம் பரவிகிட்டு இருக்காம். ஆஸ்பத்திரிகள் தோறும் கூட்டம். எனக்கும் உடம்பு கொஞ்சம் அனத்துது. அதான், முன்னெச்சரிக்கையா டாக்டரை பார்த்துட்டு வந்துட்டேன். சில மாத்திரைகளைச் சாப்பிடச் சொல்லியிருக்காரு. கூடவே, சுட வைத்து வடிகட்டின தண்ணீரையும் குடிக்கச் சொல்லி ஆலோசனை சொல்லியிருக்காரு. அதனால்தான் ஹாட் வாட்டர் கேட்டேன்...’’ என்று பொறுப்பாக பதில் சொன்னார் அலெக்ஸ்.


ஹாட் வாட்டர் கொடுக்கப்பட, அதை வைத்து மாத்திரைகளை விழுங்கிவிட்டு, அரசியல் ஜூர செய்திகளுக்குப் போனார் அலெக்ஸ்.


‘‘கனிமொழி கவலையில் இருக்கும் கலைஞர், கடந்த 21-ம் தேதி காலையிலேயே துரைமுருகன் உள்ளிட்ட கட்சிக்காரர்கள் பலரையும் அழைத்து, ‘உடனடியாக டெல்லிக்குப் போங்க. அங்கே, கனிமொழி பாட்டியாலா கோர்ட்டுக்கு வரும்போது, பார்த்து பேசுங்க. ஆறுதலா இருக்கும்...’னு சொல்ல, இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் உடனடியாக டெல்லிக்குப் புறப்பட்டுப் போனார்களாம்.’’


‘‘ஸ்டாலின் கூட டெல்லி போனாரே?’’


‘‘அவரையும்கூட டெல்லிக்கு அனுப்பி வைத்தது கலைஞர்தானாம். ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் வழக்குத் தொடர்பாக கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர்களான அல்தாப் அகமது, ராம் ஜேத்மலானி போன்றவர்களின் வாதங்கள் கோர்ட்டில் இதுநாள் வரையில் எடுபடாததால், தி.மு.க. தரப்பு ரொம்பவே அப்செட் ஆகி இருக்கிறதாம். அதற்காக வேறு சில பிரபலமான வழக்கறிஞர்களை அணுகி வழக்கை கனிமொழிக்காக நடத்தச் சொல்லலாம் என்று கலைஞர் முடிவெடுத்துச் சொன்னாராம்.


அந்தப் பணிக்காகத்தான் ஸ்டாலினை அவசர அவசரமாக டெல்லிக்கு அனுப்பி வைத்தாராம் கலைஞர்.’’


‘‘வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து விட்டார்களா?’’


‘‘தி.மு.க. தரப்பு எதிர்பார்ப்பது போல, அவ்வளவு எளிதாக பிரபல வழக்கறிஞர்கள் யாரும் கனிமொழிக்காக வாதாட முன்வர மாட்டேங்கறாங்களாம். ‘இந்தியாவிலேயே பெருந் தொகைக்கு நடந்த ஊழலாக அடையாளம் காட்டப்பட்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழிக்காக ஆஜரானால்... அது தங்களுடைய இமேஜை எதிர்காலத்தில் பாதிக்கலாம்’ என்று கருதியே பிரபல வழக்கறிஞர்கள் பலரும் கனிமொழிக்காக ஆஜராக மறுத்து விட்டார்களாம்.’’


‘‘அப்படியா?’’Kanimozhi-_20110223


‘‘ம்... இருந்தாலும், டெல்லியில் இருந்தபோது ஸ்டாலின் தரப்பில் பலமான முயற்சிகள் எடுக்கப்பட்டு, பல வழக்கறிஞர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்களாம் ஸ்டாலினுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர்கள்...’’


‘‘அருண் ஜேட்லியைக் கூட தி.மு.க. தரப்பில் அணுகினார்களாமே?’’


‘‘டெல்லியில் பிரபல வழக்கறிஞராக இருக்கும் அவரை அழைத்து வந்து வாதாட வைக்கலாம் என்று ஸ்டாலினுக்கு தி.மு.க.விலேயே சிலர் யோசனை சொன்னார்களாம். ஆனால், அவர் பி.ஜே.பி.யில் முக்கியமான தலைவராக இருப்பதோடு, இந்த ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் பி.ஜே.பி., தி.மு.க.வுக்கு நேர் எதிரான மனநிலையில் இருந்து, ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, காங்கிரஸுக்கும் மத்திய அரசுக்கும் கடுமையான நெருக்கடியை உண்டு பண்ண வேண்டும் என்கிற முனைப்பிலும் செயல்பட்டது.


இந்நிலையில், அருண் ஜேட்லி, கனிமொழிக்காக ஆஜரானால், அது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால், அருண் ஜேட்லியை தவிர்த்து விட்டார்களாம்...’’


‘‘அப்ப டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணையின்போது யார் தான் வழக்கறிஞராக வருவாராம்?’’


‘‘அனேகமாக அந்தி அர்ஜுனாவாக இருக்கக் கூடும் என்பதுதான் தி.மு.க. தரப்புச் செய்தி. இருந்தாலும் அது கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதுதானாம். ஒரு விஷயம் மட்டும் தெளிவாகச் சொல்ல முடியும். அந்தி அர்ஜுனா அளவுக்கு கிரிமினல் சட்டத்தில் கரைத்துக் குடித்திருக்கும் டெல்லியின் சீனியர் வழக்கறிஞர் ஒருவர் கனிமொழிக்காக வாதாட டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வருவாராம்...’’


‘‘ஓ...’’


‘‘டெல்லிக்குப் போனவர்கள் சென்னைக்குத் திரும்பி விட்டார்களா?’’


‘‘ஸ்டாலின் அன்றைய தினமே திரும்பி விட்டார். இதில் என்ன வேடிக்கை என்றால், முன்கூட்டியே டெல்லிக்குப் போயிருந்த ராசாத்தியம்மாளும் ஸ்டாலினுடன் ஒரே விமானத்திலேயே சென்னைக்குத் திரும்பினாராம். இரவு எட்டரை மணிக்கு டெல்லியில் புறப்பட்ட விமானம், பதினொன்றே கால் மணிக்கு சென்னைக்கு வந்து சேர்ந்ததாம். விமான நிலையத்தில் காலடி எடுத்து வைத்ததுமே, ‘கலைஞருக்கு உடல்நிலை சரியில்லை. அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்...’ என்ற தகவல் வர, ராசாத்தியம்மாளும் ஸ்டாலினும் பதற்றத்தில் ஆடிப் போய்விட்டார்களாம்...’’


stalin-14

‘‘அப்புறம் என்னாச்சு?’’


‘‘இரண்டு பேருமே விமான நிலையத்தில் இருந்து, நேராக அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று கலைஞரைப் பார்த்து பேசிய பிறகுதான், பதற்றத்தைக் குறைத்துக் கொண்டார்களாம். சிறுநீர் பாதையில் தொற்று இருந்து, அது உடலில் சில உபாதைகளை ஏற்படுத்தியதற்காகவே அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞரை, இருவரும் சேர்ந்து மருத்துவர்களிடம் பேசி, இரவே டிஸ்சார்ஜ் செய்துகொண்டு கூட்டிப்போய் விட்டார்களாம்.’’


‘‘சரி, கலைஞர் எப்படி இருக்கிறார்?’’


‘‘சிறுநீர் தொற்று பிரச்னை சரியாகி விட, இயல்பான மனிதராகவே வீடு வந்து சேர்ந்தாராம்...’’


‘‘அப்புறம்?’’


‘‘டெல்லியில் நடந்ததையெல்லாம் ஸ்டாலின் ஒன்று விடாமல் கலைஞரிடம் ஒப்புவித்தாராம். அப்போது, ‘வரும் டிசம்பர் 1-ம் தேதி கனிமொழிக்கு எப்படியும் பெயில் கிடைத்து விடும்’ என்று டெல்லி கோர்ட் வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவல் சொல்கின்றன...’ என்ற செய்தியையும் சேஃப்டியாகவே சொன்னாராம் ஸ்டாலின். இதைக் கேட்டு ரொம்பவே சந்தோஷமடைந்திருக்கிறார் கலைஞர். முன்னதாக அவர் வீட்டில் இருப்பவர்களை ரொம்பவும் கலக்கமடைய வைத்துத்தான், அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றாராம்...’’


‘‘ஏன், என்னாச்சு?’’


‘‘கடந்த 21&ம் தேதி மாலை தனக்கு லேசாக வயிற்று வலியும் இடுப்பு வலியும் இருப்பதாகச் சொன்னவர், இரவு 9 மணி வாக்கில் மயக்கமாக இருப்பதாகச் சொல்லி சரிந்து விட்டாராம். அதன்பிறகுதான், அவசர அவசரமாக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்களான தேவராஜனும், அருணும், ‘பயப்படும்படி ஒன்றுமில்லை. கலைஞருக்கு சிறுநீர் தொற்று நோய்தான். பரிசோதித்து விட்டோம்...’ என்று சொல்லி வைத்தியம் பார்த்தார்களாம். அதன்பிறகு, ‘கலைஞர் நன்றாக இருக்கிறார்...’ என்று சொல்லி டிஸ்சார்ஜ் செய்து விட்டார்களாம்.’’


‘‘ஓ...’’


‘‘இதற்கிடையில், கலைஞருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவர் உணர்ந்ததும், அவருக்கு கூடவே இருந்து உதவிட இரண்டாம்கட்டத் தலைவர்கள் யாரும் அருகில் இல்லாமல் இருந்தது, கலைஞருக்கு பெரிய சங்கடத்தை உருவாக்கி விட்டதாம். இதனால், ஒரு நாள் கழித்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோரையெல்லாம் உடனே சென்னை திரும்ப உத்தரவிட்டுவிட்டார் கலைஞர். அதைத் தொடர்ந்து அவர்களும் சென்னைக்குத் திரும்பி விட்டார்கள்...’’


‘‘கலைஞருக்கு உதவியாக இருக்கட்டும்...’’karuna-rajathi


‘‘இதற்கெல்லாம் முன்பாக இன்னொரு விஷயமும் சத்தமில்லாமல் நடந்திருக்கிறது. கனிமொழி விஷயத்தில் எகனை மொகனையாக நின்றுகொண்டிருந்த கலைஞர் குடும்பத்தினரை மெல்ல ஒன்றுபடுத்தும் முயற்சியில் இறங்கிய கலைஞர் வெற்றியும் கண்டு விட்டாராம். அதன் விளைவுதான், ஸ்டாலின் திடுமென டெல்லிக்குச் சென்று கனிமொழியை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு திரும்பியதாம். கூடவே, ராசாத்தியம்மாளிடமும் அவர் மனம் விட்டு பேசியதன் பின்னணியும்கூட இதுதானாம்...’’


‘‘சுவாரஸ்யமான பின்னணியா இருக்கே?’’


‘‘இன்னொரு சுவாரஸ்யம்கூட உண்டு. கனிமொழி பெயிலில் வந்ததும், அவரை கட்சிக்குள் முக்கியத்துவப்படுத்த வேண்டும் என்கிற கலைஞரின் எண்ணத்துக்கு உரமூட்டும் வகையில் பல்வேறு சம்பவங்களும் நடந்திருக்கின்றன...’’ ‘‘என்ன அது?’’


‘‘ஏற்கனவே துரைமுருகன் கட்சியில் வகித்த பதவியான தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் என்கிற பதவியை கனிமொழியிடம் கொடுக்க வேண்டும் என்று கலைஞர் ஆசைப்பட்டு, அதற்கான சம்மதத்தையெல்லாம் ஸ்டாலின், அழகிரி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனிடமும் பெற்று விட்டாராம்.’’


‘‘தற்போது அந்தப் பதவியில் இருப்பது ஆற்காடு வீராசாமி இல்லையா?’’


‘‘ஆமாம். அவர்தான் இருக்கிறார். அதற்காகத்தானே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அவர் வகித்த தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆற்காட்டாரை விலகிக் கொள்ள சொல்லிவிட்டார்கள். அவரும்கூட தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கலைஞருக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் அறிவாலயத்துக்குள் இருந்து தகவல்கள் கசிகின்றன. ‘உடல்நிலை சரியில்லாத நிலையில் ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்ய முடியாத நிலையில் இருக்கும் நான், கட்சியின் சாதாரண உறுப்பினராகவே இருந்து விடுகிறேன்...’ என்று சொல்லியே ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார் ஆற்காட்டார் என்றும் சொல்கிறார்கள்...’’


‘‘ஆற்காட்டார்தான், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வெகுநாட்களாகிறதே...’’


‘‘ஆமாம். அதைத்தானே அவரும் கடிதத்தில் சொல்லியிருக்கிறார்’’ என்ற அலெக்ஸ், சட்டென ஜெயலலிதா செய்திக்குள் புகுந்தார்.


‘‘பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள், சாட்சியங்கள், ஆதாரங்களையெல்லாம் வைத்து தனக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களையெல்லாம் களைவதற்காக, ஏற்கனவே ஆயிரத்துக்கும் அதிகமான கேள்விகளை இரண்டு நாட்கள் கேட்டு முடித்த நீதிபதி மல்லிகார்ஜுனா, மேற்கொண்டு கேட்டு பதிவு செய்ய வேண்டிய கேள்விகள் இருக்கின்றன என்று சொல்லி, மீண்டும் ஜெயலலிதாவை கோர்ட்டுக்கு வர உத்தரவிட்டார். அந்த அடிப்படையில்தான், கடந்த 22&ம் தேதியும் பெங்களூருவுக்குச் சென்றார் முதல்வர் ஜெயலலிதா...’’


‘‘பெங்களூரு நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அ.தி.மு.க. கரைவேட்டிகளால் நிறைந்திருந்ததாமே?’’


‘‘மொத்த அமைச்சரவையும் ஒருநாள் முன்னதாகவே பெங்களூருவுக்குச் சென்று தங்கி விட்டது. கூடவே, அம்மாவிடம் முகம் காட்ட வேண்டும் என்பதற்காக கட்சிக்காரர்கள் பலரும்கூட பெங்களூருவுக்குப் போய்விட்டார்கள். வழக்கம்போல, அரசுத் தரப்பு சொல்லியிருக்கும் விஷயங்களை வைத்து நிறைய கேள்விகளைக் கேட்டாராம் நீதிபதி.’’


‘‘முதல்வர் ஜெயலலிதா என்ன பதில் சொன்னாராம்?’’


‘‘வழக்கம்போலத்தான் பல கேள்விகளுக்குத் தெரியாது என்பதுதான் பதிலாக இருந்ததாம். ஆனால், இம்முறை மாற்றி மாற்றி கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதில்கள் மாற்றி மாற்றிச் சொல்லப்பட்டதையெல்லாம் நீதிபதி பதிவு செய்து கொண்டு விட்டாராம். இதனால், அரசு தரப்பு வழக்கறிஞரான ஆச்சாரியா, ‘வழக்கு ஸ்ட்ராங்காகிக் கொண்டிருக்கிறது...’ என்று மதிய இடைவேளையில் கருத்துச் சொன்னதாக, பெங்களூரு கோர்ட் வட்டாரத்தில் செய்தி பரவ, அதைக் கேள்விப்பட்ட அ.தி.மு.க. பெரும் தலைகள் சிலர் கவலையடைந்தார்களாம்...’’


‘‘அடுத்து என்ன ஆகும்?’’


‘‘ ‘ஒன்றும் ஆகப் போவதில்லை...’ என்பதுதான் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. ‘அடுத்து நடக்கப் போகும் சாட்சிகளின் குறுக்கு விசாரணை மற்றும் வாதங்களில் அரசுத் தரப்பு என்னமாய் தவிடுபொடி ஆகப் போகிறது என்பதை மட்டும் பாருங்கள்.’ என்று ஆணித்தரமாகக் கருத்துச் சொல்கிறார்கள்.’’


‘‘பார்ப்போம், என்னதான் நடக்குதுன்னு...’’


‘‘அதிருக்கட்டும்... பெங்களூருவில் இருந்து கோர்ட் நடைமுறைகளை முடித்துவிட்டு சென்னை திரும்பும் முதல்வர் ஜெயலலிதா, அடுத்த சில நாட்களிலேயே கொடநாடு சென்று ஓய்வெடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். இம்முறை அவர் கொடநாடு சென்றால், பதினைந்து நாள் முதல் ஒரு மாத காலம் வரையில் அங்கேயே தங்கியிருந்து ஓய்வெடுப்பாராம்...’’


‘‘என்ன திடீர்னு கொடநாடு பயணத் திட்டம்?’’


‘‘அவருக்கு முதுகு மற்றும் மூட்டு வலி கடுமையாக இருக்கிறதாம். அதற்கு ட்ரீட்மென்ட் எடுப்பதற்காகத்தான் கொடநாடு செல்லத் திட்டமிட்டிருக்கிறாராம். ஆயுர்வேத மூலிகைகள் கொண்டு சிகிச்சைகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம். இதற்காக கேரளாவில் இருந்து சித்த மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்கள் பலரும் கொடநாட்டுக்கு வரப் போகிறார்களாம்.’’


‘‘அப்ப அந்த ஒரு மாத காலமும் முதல்வர் பணி?’’


‘‘அதென்ன பெரிய பிரமாதம்? கொடநாடு என்ன அமெரிக்காவிலா இருக்கிறது? தேவையென்றால், ஒரு எட்டு கொடநாட்டுக்கே போய்விட்டு திரும்பி விட்டால் போச்சு. முக்கியமான ஃபைல்கள் என்றால், பிளைட்டில் போய் வந்துவிடப் போகிறது...’’ என்று சொன்ன அலெக்ஸ், அதிர்ச்சித் தகவல் ஒன்றைச் சொன்னார்.


‘‘ஏற்கனவே கேரளாவில் அச்சுதானந்தன் முதல்வராக இருந்த போது முல்லைப் பெரியாறு அணை உடைவது போல சி.டி.க்களெல்லாம் வெளியிடப்பட்டு பரபரப்பை உண்டு பண்ணியது. இப்போது காங்கிரஸின் உம்மன்சாண்டி முதல்வராக வந்த பிறகு, கேரளாக்காரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டுடன் சேர்ந்து ‘டேம் 999’ என்று ஒரு திரைப்படம் தயாரித்து இருக்கிறார்கள். அதிலும் முல்லைப் பெரியாறு அணை உடைவதுதான் பிரதான அம்சமாக இருக்கிறதாம்...’’


‘‘தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படுமே?’’


‘‘ஏற்பட்டு விட்டது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் அந்தப் படம் சம்பந்தப்பட்ட பெட்டி இருப்பது தெரிந்து, அங்கே திரண்டு விட்ட ம.தி.மு.க.வினர், அந்த திரைப்படப் பெட்டியை அங்கிருந்து எடுத்துச் செல்லக் கூடாது என்று சொல்லி முற்றுகைப் போராட்டமே நடத்தியிருக்கிறார்கள். இருந்தாலும், அந்தத் திரைப்படத்தை வெளியிட்டு, கேரளாவில் மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு அங்கிருக்கும் அரசாங்கத்தில் இருக்கும் பெரும்தலைகளே முனைப்பாக இருக்கிறதாம்...’’


‘‘அதன்மூலம் கேரளாக்காரர்கள் சாதிக்க விழைவதுதான் என்ன?’’


‘‘தற்போது இருக்கும் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டால்தானே புதிய அணையைக் கட்ட முடியும்? அப்படி கட்ட வேண்டும் என்பதுதானே கேரளாவின் விருப்பமும். அதற்கேற்றபடியே முல்லைப் பெரியாறு அணை உடையப் போவதாக பீதி கிளப்பினால், புதிய அணைக்கு தானாக வித்திடப்பட்டுவிடும் என்பதுதான் அவர்கள் கணக்கு...’’


‘‘சரிதான்...’’


‘‘இருந்தாலும், இதற்கெல்லாம் மறைமுக ஆதரவாக இருக்கும் உம்மன்சாண்டியும் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து இருக்கிறது என்று சொல்லி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உணரப்பட்டிருக்கும் நில நடுக்கத்தை காரணமாக காட்டியிருக்கும் அவர், ‘இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு காத்திருக்கிறது. மத்திய அரசு உடனே உதவிட வேண்டும்...’ என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார்.’’


‘‘என்னமா ஆடறாங்கப்பா டிராமா?’’


‘‘ ‘இதுதான் கேரளாக்காரர்களின் பலமான மூளையாக்கும். இதற்கு தமிழர்கள் பலியாகிவிடக் கூடாது...’ என்று தமிழகத்துக்கு தலைவர்கள் சிலர் சொல்லும் கருத்துக்களில்தான் எத்தனை சமூக அக்கறை ஒளிந்து கிடக்கிறது?’’ என்று வியந்தபடியே, அரசியல் செய்திகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் அலெக்ஸ்.


நன்றி: தமிழக அரசியல்

No comments:

Post a Comment