Wednesday, November 30, 2011

அடுத்தடுத்து ரிலீஸாகும் அழகிரி ஆதரவாளர்கள். அதிமுக அதிர்ச்சி


ழகிரியின் ஆதரவாளர்கள் எவ்வளவு வேகமாக உள்ளே சென்றார்களோ... அதே வேகத்தில் விடுதலையாகிக் கொண்டிருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிர்ச்சி கடிதங்களாக மாறி, கட்சித் தலைமைக்குப் பறந்து கொண்டிருப்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுபவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவர முடியாது. ஓராண்டு சிறையில் இருக்க வேண்டியதிருக்கும்..



அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அழகிரிக்கு நெருக்கமானவர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு, மிரட்டல், மோசடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அழகிரிக்கு நெருக்கமான பொட்டு சுரேஷ், பகுதிக் கழகச் செயலாளர்கள் ஜெயராமன் மற்றும் ஒச்சுபாலு, முன்னாள் மண்டலத் தலைவர் வி.கே.குருசாமி, வேளாண் விற்பனைக் குழு முன்னாள் தலைவர் அட்டாக் பாண்டி உள்ளிட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மதுரை தி.மு.க.வில் பரபரப்பாகச் செயல்படக்கூடிய இவர்கள், ஜெயிலுக்குச் சென்றதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சோர்ந்து போனது. தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என இவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

முதலில் பொட்டு சுரேஷ் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் வெளியே வந்தார். இதுவே மதுரை அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை அளித்தது. அடுத்து ஜெயராமன் மீதான குண்டர் சட்டம் கடந்த வியாழனன்று ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அட்டாக் பாண்டி, ஒச்சுபாலு, வி.கே. குருசாமி ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை வெள்ளிக்கிழமை உத் தரவிட்டது.

இப்படி, தி.மு.க.வினர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதும் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவர்களுக்கு தொடர்ந்து ஜாமீன் கிடைப்பதும் அ.தி.மு.க. வட்டார த்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும் போது, “தி.மு.க. ஆட்சியில் மதுரையில் அழகிரியுடன் இருந்து நாட்டாமை செய்தவர்களில் ஐந்து பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. என்ன காரணத்துக்காக அவர்கள் கைதாகவில்லை? அதுமட்டுமல்ல, கைதானவர்களும் மளமளவென இப்போது வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வெளியே வந்ததால் மதுரையில் அடக்கி வாசிக்கும் தி.மு.க.வினர் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விடுவார்கள். போலீஸார் சரியான ஆதாரங்களை அளிக்காமல் மேம்போக்காக நடந்து கொண்டதுதான் இதற்குக் காரணமா என்பதையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளோம்’’ என்றார்.

“குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர்கள் தொடர்ந்து விடுதலை ஆவது குறித்து மதுரை வழக்கறிஞர் காந்தியிடம் கேட்டோம்.

“குண்டர் சட்டம் என்பது ஒரு கடுமையான சட்டம். இதைத் தவிர்க்கமுடியாத பட்சத்தில் தான் பயன்படுத்த வேண்டும். ஜெயிலில் இருக்கும் நபர் வெளியே வந்தால் அவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதற்கான போதுமான காரணங்கள் இருந்தால், அவர் மீது குண்டர் சட்டத்தை பிரயோகப்படுத்தலாம்.

சிவில் வழக்குகள் தொடர்பாக ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதும் இப்போது வழக்கமாக இருக்கிறது. அப்படிச் செய்தால் சட்டத்திலுள்ள ஓட்டையைப் பய ன்படுத்தி அவர் தப்பிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஒருவர் மீது குண்டர் சட்ட கைது உத்தரவு பிறப்பிக்கும் முன், சட்ட நிபுணர்களின் ஆலோசனையை போலீஸார் பெறுவது அவசியம்.

குண்டர் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க கலெக்டர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி. ஆகியோருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, குண்டர் சட்டம் தொடர்பாக அவ்வப்போது வரும் உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.

கைதாகி ஜெயிலில் இருப்பவர் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டருக்கும் காவல்துறைக்கும் அரசுக்கும் மனு செய்வார். அந்த அதிகாரிகள் காலதாமதமின்றி அந்த மனு மீது ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது, அவர் மீது குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அல்லது ரத்து செய்யமுடியாததற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், நடைமுறையில் அந்த மனு மீது அதிகாரிகள் நீண்டகாலமாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பார்கள். அந்தச் சூழலில் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யுமாறு கைதானவர் வழக்குத் தொடருவது வழக்கமானதுதான். அப்படி வழக்குத் தொடரும்போது, ‘அவர்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் ஏற்பட்டது’ என நீதிமன்றம் எழுப்பும் கேள்விக்கு அதிகாரிகளிடம் இருந்து சரியான பதில் இல்லாமல் போய்விடுகிறது.

இந்த ஒரு ‘டெக்னிக்கல்’ காரணத்தை வைத்தே பலர் வெளியே வந்துவிடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அதிகாரிகள்தான்’’ என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் வழக்கறிஞர் காந்தி.

தி.மு.க.வினர் மீதான குண்டர் சட்டம் தகர்வது குறித்து தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், “பொய்யான புகார்களின் பேரில் தி.மு.க.வினரை அ.தி.மு.க. .அரசு கைது செய்து வருகிறது. ரவுடிகள் மீது ஏவப்படும் குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க.வினர் கைது செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சி மீது வழக்குப் போடுங்கள் என ஆளும்கட் சியினர் நிர்ப்பந்திப்பதால் குண்டர் சட்ட நடைமுறையைப் பின்பற்றுவதில் அதிகாரிகள் கோட்டை விட்டுவிடுகின்றனர். இதனால்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட் டவர்கள் நீதிமன்றம் மூலம் வெளியே வந்து விடுகிறார்கள்’’ என்றார்.

No comments:

Post a Comment